‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 45

44. நாத்தழல்

flowerஅடுமனையின் பின்பக்கம் நீள்வட்ட வடிவில் குளம் ஒன்று வெட்டப்பட்டிருந்தது. அடுமனையிலிருந்து அங்கு செல்வதற்குரிய சற்று சரிவான கல் பதிக்கப்பட்ட பாதையினூடாக உணவொழிந்த பெருங்கலங்களை அடுமனைப் பணியாளர்கள் உருட்டிக்கொண்டு வந்து நீருக்குள் இறக்கினர். சம்பவன் அடுமனைத் தோழனாகிய மேகனுடன் இணைந்து நிலவாய் ஒன்றை இரு காதுகளிலும் கயிறுகள் கட்டி தோளில் மாட்டி தூக்கிக்கொண்டு இறங்கினான்.

நீருக்குள் முதலைகள் போலவும் எருமைகள் போலவும் கரி படிந்த அடிக்குவைகள் தெரிய உருளிகளும் அண்டாக்களும் பாதி மூழ்கிக் கிடந்தன. குளத்தைச் சுற்றி கல்லடுக்கி எல்லா பக்கமிருந்தும் இறங்கும்படியாக மிகச்சரிவாக கரை அமைக்கப்பட்டிருந்தது. கோதையின் கிளையாறாகிய சபரியிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்ட கால்வாய் அதில் நீரை நிரப்பி மறுபக்கம் எழுந்து வழிந்து சென்று அங்கிருந்த காய்கறித் தோட்டத்துக்குள் மறைந்தது.

அடுமனையாளர்கள் உரத்த குரலில் ஒருவரை ஒருவர் அழைத்துப் பேசியும், ஆணைகளை இட்டும், சிரித்து நகையாடியும்  பணியாற்றிக்கொண்டிருந்தனர். நிலவாயை நீருக்குள் இறக்கியபின் கைதூக்கி சோம்பல் முறித்து சம்பவன் மேகனிடம் “இனி அங்கிருப்பவையெல்லாம் சிறிய கலங்கள். அவற்றை அவர்களே கொண்டு வந்துவிடுவார்கள்” என்றான். மேகன் அங்கிருந்த வேர்ப்புடைப்பொன்றில் அமர்ந்து கைகளை விரித்து உடலை ஒடுக்கி “அடுமனைப்பணி ஒப்பு நோக்க எளிது. கலங்களைக் கழுவுவதுபோல் கடினமானது பிறிதில்லை” என்றான். சம்பவன் அவனுக்கெதிராக அமர்ந்து இடையில் அமைந்த பொதியிலிருந்து பாக்கொன்றை எடுத்தான். இயல்பாக மேகன் கைநீட்ட துணியை வைத்து அப்பாக்கை கடித்து இரண்டாக உடைத்து பாதியை அவனிடம் கொடுத்தான்.

அதை வாயில் போட்டு சற்று மென்று அதன் துவர்ப்பூறலை வாயில் நிறையவிட்டு எச்சில் வழியாதிருக்க வாயை சற்று தூக்கி இலக்கிலாமல் நோக்கியபடி சுவையுணர்ந்து அமர்ந்திருந்தான் மேகன். பாக்கு அவன் நரம்புகளில் ஊறி உடலில் பரவியிருந்த இறுக்கத்தை மெல்ல மெல்ல தணிக்கத் தொடங்கியது. துயில் வந்து மூடுவதைப்போல கண்கள் இமை சரிந்தன. சம்பவன் “இன்று கலங்கள் இருமடங்கு. உண்பவர்கள் குறைவென்றாலும் வறுக்கும் உணவு மிகுதி என்றால் கலம் சேர்ந்துவிடுகிறது” என்றான்.

மேகன் இரு விரல்களை வாயில் அழுத்தி நீட்டி மரத்தடியில் துப்பிவிட்டு “இங்கு அடுமனைப்பணிக்கு வரும் எவருக்கும் முதலில் அளிக்கப்படுவது கலம் கழுவும் வேலைதான். தோள் வலிமை உடையவர்கள் செய்ய வேண்டியது. நான் வந்து இரண்டாண்டுகளாகி விட்டன. இதுவரை அடுமனைப்பணியில் பெரும்பாலும் நான் செய்தது இதுதான்” என்றான். “நானும் கலம் கழுவுவதிலேயே தொடங்கினேன்” என்று சம்பவன் சொன்னான். மேகன் “ஆனால் நீ அடுமனைத் தொழிலை கற்றுத் தேர்ந்தவன் என்றனர் உன் குடியினர். வலவர் கலம் கழுவுவதற்கு உன்னை அனுப்பியது விந்தையாகத் தோன்றியது. உனது ஆசிரியர் உனது திறனில் மதிப்பு கொள்ளவில்லை போலும்” என்றான்.

சம்பவன் புன்னகைத்து “அத்தனை எளிதாக ஒருவர்மேல் மதிப்பு கொள்ளும் ஒருவர் நான் இத்தனை தவமிருந்து தேடி அணுகும் தகுதியுடையவராக இருக்க வாய்ப்பில்லை அல்லவா?” என்றான். மேகன் சிரித்து “இது மானுட உள்ளங்களின் இயல்பு. ஒருவர்மேல் பற்று கொண்டுவிட்டால் பின்னர் குற்றமும் குறையும் கண்ணுக்குப் படுவதேயில்லை. சொல்பவர்மேல் சினம் வரும்” என்றான். சம்பவன் “அத்தகைய பெரும்பற்று இல்லாமல் காதல் கொள்ள முடியாது, மைந்தரை வளர்க்க இயலாது, எதையும் கற்றுக்கொள்வதும் நடவாது” என்றான். “அவர் நம்மேல் கனியவில்லை என்றால்? நம்மை அவர் அறிந்துகொள்ளவில்லை என்றால்?” சம்பவன் “நீ கேட்ட இரு வினாக்களிலும் உள்ள நான் என்னும் சொல் மிகப் பெரிய தடை, அன்பு கொள்வதக்கும் பணிவதற்கும். அச்சொல்லே இல்லா நெஞ்சுடன் அணுகுபவர்களே அதை அடையமுடியும்” என்றான்.

“அங்கென்ன செய்கிறீர்கள்? கலங்கள் ஊறிக் காத்துக்கிடக்கின்றன. இன்று முழுக்க கழுவினாலும் பொழுது விடிவதற்குள் முடிக்க முடியாது போலிருக்கிறது” என்று கீழிருந்து அவர்களின் குழுத்தலைவனாகிய பிரமோதன் அழைத்தான். எழுந்து மீண்டும் துப்பிவிட்டு பாக்கை கன்னத்தில் அதக்கியபடி “வா” என்று மேகன் சரிவிலிறங்கி நடந்தான். இருவரும் இடையளவு நீரிலிறங்கி அங்கு ஊறி மூழ்கிக்கிடந்த பெரிய உருளியொன்றைத் தூக்கி கரைநோக்கி இழுத்தனர். எருமைக்கன்றுபோல அது நழுவி அடம்பிடித்தது. அதன் காதுகளைப்பற்றி இழுத்து கரை கொண்டுவந்து ஓரிடத்தில் அதன் விளிம்பை காலால் மிதித்து உள்ளிருந்த நீரை சரித்து,  தரைக்கல்லில் வைத்து மும்முறை சுழற்றி கரையேற்றி வைத்தான் சம்பவன்.

மேகன் புன்னகையுடன் “இதிலும் ஒரு கலை உள்ளது. இத்தனை எளிதாக இப்பெருங்கலத்தை கரை ஏற்றும் ஒருவரை நான் பார்த்ததில்லை” என்றான். சம்பவன் “பணியென்று எதைச் செய்தாலும் அதில் நுட்பத்தை கண்டடைய முடியும் அந்நுட்பத்தை மட்டும் கையாள்பவன் அதை கலையென்றாக்குகிறான்” என்றான். “நீ நூல் கற்றிருக்கிறாய்” என்றான் மேகன். “இல்லை, நான் கற்றவை எல்லாம் என் ஆசிரியரின் சொற்களென என்னை வந்தடைந்தவை மட்டுமே” என்றான் சம்பவன். “உன் ஆசிரியர் பாண்டவராகிய பீமசேனர். அவர் இறந்துவிட்டார் என்கிறார்கள்” என்று மேகன் சொன்னான். “அவர் இறக்கவில்லை. வலவன் அவரே” என்றான் சம்பவன். “என்ன சொல்கிறாய்?” என்றான் மேகன். “மெய்யறிந்தோர் தங்கள் வழித்தோன்றல்களில் வாழ்கிறார்கள். வலவன் அவருடைய வடிவம் என்றே எனக்குத் தெரிகிறார்.” மேகன் “ஆம், அவருடைய தோள்கள் கீசகரின் தோள்களைவிடப் பெரியவை” என்றான்.

“இத்தனை தொழில் கற்ற பின்னரும் உன்னை இப்பணிக்கு அனுப்பிய வலவரை எண்ணி வியக்கிறேன். உன் கையில் அன்று நீ கற்றவை வெளிப்படவில்லையா என்ன?” என்றான் மேகன். “முதல்நாள் அவர் கேட்டபோது  நான் காய்ச்சிய புளிக்காய்ச்சலை நீ உண்டாயல்லவா? நீ என்ன நினைக்கிறாய்?” என்றான் சம்பவன். “உண்மையாகவே சொல்கிறேன் சற்று முன்வரை இந்த அடுமனையில் நான் உண்ட உணவுகளில் மிகச் சிறந்த ஒன்று அந்தப் புளிக்காய்ச்சல். இந்த அடுமனையில் இன்று வலவர் அன்றி எவரும் அதற்கிணையான ஒரு புளிக்காய்ச்சலை செய்துவிட முடியாது. உன்னை அப்படியே அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக்கொள்வார் என்று எண்ணினேன். அவர் ஒரு சொல்லும் உரைக்காமல் இங்கனுப்பியது பெருவிந்தையென எனக்குத் தோன்றியது. எனக்கு எண்ண எண்ண ஆறாமலிருப்பதும் அதனால்தான்” என்றான். சம்பவன் புன்னகை செய்தான்.

flowerவிராடபுரியில் நுழைந்த முதல்நாள் அந்தி இருளில் அவர்களின் குழு அடுமனையை நோக்கி வந்தபோது எதிரே இரு உதவியாளர்கள் தொடர்ந்து வர பெருந்தோள் மல்லர் ஒருவர் வருவதைக் கண்டு விகிர்தர் கைகூப்பி நின்றுவிட்டார். சம்பவன் முதலில் பின்னால் அடுமனை முகப்பில் எரிந்த பந்த ஒளியில் ஒரு மனிதனின்  நிழல் விரிந்த தோற்றம் என்றே எண்ணினான். அருகணைந்தபோது அம்மனிதன் மார்புக்கூட்டுக்குள் தன் மொத்த உடலும் ஒடுங்கிவிடும் என உணர்ந்தான். இரு கைகளும் இரு துணைவர் என மருங்கமைந்தன. விகிர்தர் இரு கைகளையும் தலைமேல் கூப்பியபடி அணுகி “அடுமனைத் தொழில் அறிந்தவர் நாங்கள். கலிங்கத்துச் சூதர். இங்கு அத்தொழிலுக்கு சூதர்கள் தேவை என்பதை அறிந்து வந்துள்ளோம்” என்றார்.

தோள்மேல் விரிந்த குழலும் அடர்வற்ற கூர்மீசையும் மென்புல்போல் தாடியும் கொண்டிருந்த அகன்ற மஞ்சள் முகத்தில் விரிந்த புன்னகை சிறுவனுக்குரியது என சம்பவன் நினைத்தான். அப்பெருமானுடன் அவர்களை ஒருகணம் ஒருமுறை நோக்கியபின் “வந்து அமர்ந்து உணவருந்துங்கள். பிற அனைத்தும் பின்னர்… வருக!” என்றான். “நாங்கள் பணி கோரி வந்தோம்” என்றார் விகிர்தர். “இனி எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. உணவருந்தலாம்” என்று சொல்லி அவன் தன் பெரிய கையை சம்பவனின் தோளில் வைத்து “நீ அடுமனையாளனா?” என்றான். “ஆம், தொழில் கற்றிருக்கிறேன்” என்று சம்பவன் சொன்னான். “எவரிடம்?” என்று பேருடலன் கேட்டான்.

“நானே கற்றேன். நான் இளைய பாண்டவர் பீமனை என் ஆசிரியனாகக் கொண்டேன். அவரைக் குறித்த செய்திகள் வழியாக என்னை வளர்த்துக்கொண்டேன்” என்றான். புன்னகையுடன் “நன்று! அடுமனைத் தொழிலை கைப்பழக்கமாகவே செய்ய முடியும். ஒருபோதும் குறையாத சுவையொன்றை அது அளிக்கும். அடுதொழில் செய்பவர்களில் பல்லாயிரத்தில் ஒருவரே அதற்கு உளம் அளிப்பவர்கள். அகம் அளிக்கத் தொடங்கினால் அது முடிவிலாது விரிவடைவதை அறிவாய். எந்த மெய்யறிவையும்போல அதுவும் மானுடனை பிரம்மத்திடம் இட்டுச் செல்லும்” என்றான்.

வலவனின் கைகளின் எடையால் முதுகு வளைந்து எலும்புகள் வலிக்க தோள் தொய்ய “ஆம், அடுமனைத் தொழிலை கலையென்று பயிலவும் யோகமென்று இயற்றவும் நான் விழைகிறேன்” என்றான். “வருக” என்று புன்னகையுடன் சொன்னபடி அவர்களை ஊண்கூடம் நோக்கி அழைத்துச் சென்றான். அவன் நீராடியிருந்தாலும் பேருடலர்களுக்குரிய மெல்லிய வியர்வைமணம் இருந்தது. நீணாள் முன் உயிர்நீத்த தந்தையின் நினைவை அது சம்பவன் உள்ளத்தில் எழுப்பியது. முதிய சூதர்  சுந்தரர்  “நாங்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து வந்திருக்கிறோம். இன்னும் நீராடவில்லை” என்றார். அவன் உரத்த குரலில் “நீராடாமல் உணவுண்ணும்படி நான் ஆணையிடுகிறேன்” என்றான்.

அவர் “நாங்கள்…” என்று தொடங்க “ஆணைகளை மீறுவதை நான் விரும்புவதில்லை” என்றான் வலவன். “அவ்வாறே” என்று  சுந்தரர் சொன்னார். “என் பெயர் வலவன். நான் ஷத்ரியன். இந்த அடுமனையில் முதன்மைப் பொறுப்பில் இருக்கிறேன்” என்றான். மிருகி “நீ எங்கள் வயிற்றை முதலில் பார்த்தாய், மைந்தா. பசித்து நடைதளர்ந்திருக்கிறோம்” என்றாள். வலவன் புன்னகையுடன் “பசி நல்லது. அடுமனையாளர்கள் போற்றும் தெய்வம் அது” என்றான். “நாங்கள் அங்கு சென்று தாங்கள் சொன்னதாகச் சொல்லி உணவுண்கிறோம்” என்றார் குடித்தலைவர். “வேண்டாம். முதல் உணவை என் கைகளாலேயே விளம்புகிறேன். முட்டப்பசித்தவருக்கு அன்னம் பரிமாறும் பேரின்பத்தை ஒருபோதும் நான் இழப்பதில்லை” என்று வலவன் சொன்னான்.

உணவுக்கூடத்தின் முன் அவர்கள் அனைவரும் பெட்டிகளையும் பொதிகளையும் வைத்துவிட்டு கைகளை உதறி மூச்சுவிட்டு இளைப்பாறினர். சிறுவர்களும் சிறுமியரும் அவனைப் பார்த்ததுமே சொல்லடங்கி விழிகள் கனவிலென வெறிக்க நடந்தனர்.  பெரிய மரத்தொட்டியிலிருந்த நீரைச்சுட்டி “கைகால் கழுவிவிட்டு வந்தமருங்கள்” என்றான் வலவன். “இது இடைப்பொழுது. இரவுணவுக்கான பந்திகள் தொடங்க நெடுநேரமாகும் அல்லவா?” என்று சம்பவன் கேட்டான். “ஆம், இன்னும் நான்கு நாழிகை உள்ளது” என்று சொல்லி வலவன் உள்ளே சென்றான். அவனைத் தொடர்ந்து சென்ற சம்பவன்  “விளம்புவதற்கு நானும் உதவுகிறேன்” என்றான். “நீ சென்று அமர்ந்து உண். பசித்திருக்கிறாய்” என்றான் வலவன்.

சிறுவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளியபடி ஓடிச்சென்று அமர்ந்தனர். அவர்கள் சூதர்களுக்குரிய முறையில் கால்களை நிலைமடித்து  அரைவட்டமாக அப்பெருங்கூடத்தின் மூலையில் அமர்ந்துகொண்டனர். பெண்கள் ஒருகால் நீட்டி மறுகால் நிலைமடித்து அமர்ந்தனர். வலவனும் உதவியாளர்களும் தலைவாழை இலைகளை கொண்டுவந்து அவர்கள் முன் பரப்பினர். சம்பவனின் அருகே இருந்த சுந்தரர் “உச்சிப்பொழுது உணவு எஞ்சியதைத்தான் அளிக்கப்போகிறார்கள். அதற்கு தலைவாழை இலை எதற்கு?” என்றார். விகிர்தர் “மிஞ்சியிருக்கும்” என்றார். அதற்குள் அடுமனைக்குள்ளிருந்து புதிய உணவின் நறுமணம் எழுந்தது. “அடுமனையில் புதிய உணவு ஒருங்குகிறது. சற்று பசிபொறுத்திருந்தால் அதையே உண்டிருக்கலாம்” என்றார்.

வலவன் இரு கைகளிலும் பிடிகலங்களில் உணவை எடுத்துக்கொண்டு வந்தான். அவனுக்குப் பின்னால் ஏவலர்கள் அப்பங்களும் குழம்புகளும் கனிச்சாறுகளும் கொண்டு வந்தனர். “புதிய உணவு இன்னும் எவரும் உண்டிருக்க வாய்ப்பில்லை” என்றான் அஸ்வகன். உணவை வைத்து திரும்பிய வலவன் கருவுற்ற வயிற்றை தரையமையச் சரித்து கால் மடித்து அமர்ந்திருந்த சவிதையை பார்த்தான். அவளருகே சென்று  “சற்று விலகிச்சென்று அங்கு அமர்ந்துகொள்” என்றான். அவள் வியர்வைபூத்த மேலுதடுகளும் வெளுத்த கண்களுமாக மேலே நோக்கி “நான் களைத்திருக்கிறேன்… என் உடல்…” என்று சொல்ல அவன் ஒருகையால் அவள் வலத்தோளையும் பிறிதொரு கையால் அவள் இடக்காலையும் பற்றி குழவியைப்போல தூக்கி மறுபக்கம் சுவர் சாய்ந்து அமரவைத்தான்.

அவளுக்கு முன் முதலில் இலையிட்டு ஊன்கொழுப்பில் வெந்த அப்பத்தை வைத்தான். அவள் கைநீட்டித் தடுத்து “என்னால்  உணவுண்ண முடியவில்லை, மூத்தவரே…” என்றாள்.  “நீ உண்பாய். அதற்கு முன் உனக்கு நான் ஒரு மருந்து தருகிறேன்” என்று சொன்ன வலவன் எழுந்து அடுமனைக்குள் சென்று இரு கைகளிலும் எதையோ எடுத்து வந்தான். அவர்கள் அதில் இஞ்சியும் கிராம்பும் வெந்தயமும் மணப்பதை உணர்ந்தனர். “வாயை திற!” என்றான். சவிதை வாயை திறக்க ஒரு கையால் அதை நன்கு பிழிந்து அச்சாற்றை அவள் வாயிலிட்டான். “விழுங்கு” என்றான். அவள் விழுங்கி உடல் உலுக்கினாள் மறுகையிலிருந்த பொருட்களைக் கசக்கி “வாய் திற” என்று சொல்லி அச்சாற்றை அவள் வாயில் விட்டான். எரியும் பச்சிலை மணம் எழுந்தது.

அவள் உடல் கசப்பில் உலுக்கிக் கொண்டது. “விழுங்கு” என்றான். இருமுறை குமட்டியபின் அதையும் விழுங்கினாள். “வெந்நீர் சிறிது அருந்து. உன் முன் இலையிலிருக்கும் இந்த ஊன்சோற்றைப் பார்த்தபடி இவர்கள் உணவுண்டு முடிப்பதுவரை அமர்ந்திரு. அதன் பிறகு நான் அளிக்க அளிக்க நீ உண்ண முடியும்” என்றான். கடுங்கசப்பில் விழிகள் நிறைய அவள் தலையசைத்தாள். “உன்னுள் ஓநாய் ஒன்று எழுவதை நீயே உணர்வாய்” என்றபின்  மலையஜையை நோக்கி “நீயே உண்பாய் அல்லவா?” என்றான். அவள் “ஆம்” என்றாள்.  அவன் கையசைத்து ஆணையிட்டுவிட்டு பிறருக்கு பரிமாறலானான்.

சிறுவர்களும் சிறுமியரும் அதுவரை விழிவிரித்து வலவனை நோக்கிக்கொண்டிருந்தனர். “உண்க!” என்று அவன் சொன்னதும் தயங்கியபடி கைநீட்டி உணவை எடுத்து வாயில் வைத்தனர். சுவை அவர்களை முற்றிலும் உணவை மட்டுமே உணர்பவர்களாக ஆக்கியது. அவர்களின்  விழிகள் சுவையில் கூர்ந்தன. உடல் நீர்ப்புழு என சுவையில் திளைக்கலாயிற்று. விகிர்தர் “வலவரே, இது இரவு விருந்துக்கான புதிய உணவு என்று தோன்றுகிறது” என்றார். “ஆம், இன்னும் அடுப்பிலிருந்து இறங்கவில்லை” என்றான் வலவன். “அதை முதலில் சூதர்களுக்கு அளிப்பதென்றால்…” என்றார். “இங்கு என் சொல்லுக்கு மாற்றுச்சொல் எவரும் எடுப்பதில்லை” என்றான் வலவன். “பசித்திருப்போர் உண்டு நிறைந்து வாழ்த்திய  உணவு அவிமிச்சம் போன்றது. தேவர்களால் தூய்மைப்படுத்தப்பட்டது. உண்ணுக!” என்றான்.

அவர்கள் தயங்கி மெல்ல ஒருவரை ஒருவர் நோக்கினர். மிருகி ஆவலுடன் அள்ளி உண்ண பிறரும் உண்ணத்தொடங்கினர். பதற்றத்தில் அள்ளி உண்டு பசியை காட்டிக்கொள்ளகூடாதென்று ஒவ்வொருவரும் முன்னரே முடிவு செய்திருந்தனர். ஆனால் சுவை மிக விரைவில் அனைத்தையும் மறக்க வைத்தது. சூழல், தருணம் அனைத்தையும் கடந்தவர்களாக ஒவ்வொன்றையும் எடுத்து எடுத்து சுவைத்தனர். வாயூற, உளம் நிலைமறக்க, முகம் மலர்ந்திருக்க அள்ளி அள்ளி உண்டனர். உறிஞ்சினர், மென்றனர்,  தலையாட்டினர், மெய்மறந்து சிலகணங்கள் அமைந்தனர். மீண்டும் கைநீட்டி “மேலும்…” என்றனர். அவற்றை கொண்டுவருவதற்குள்  “இங்கு! இங்கு!” என்று தவித்தனர்.

அங்கு அவர்கள் அனைவர் உடலையும் விறகென ஆக்கி எரித்து எழுந்தது தொன்மையான வேள்வித்தீ ஒன்று. மூவெரி முன் அமர்ந்தவர்கள் என விரைவுடனும் பணிவுடனும் அள்ளி அள்ளி விளம்பினர் வலவனும் அவன் உதவியாளரும். மெல்ல தீ அணைந்து உடல் தளர்ந்து அவர்கள் நிறைந்தனர். ஒவ்வொரு உறுப்பும் உணவை நிறைத்துக்கொண்டதுபோல் எடை மிகுந்து நிலம்படிந்தது. “போதும்” என்று ஒருவர் சொன்னபோதுதான் அவ்வண்ணம் ஒரு சொல்லிருப்பதை பிறர் உணர்ந்தனர். “போதும்! நிறைந்தோம்! முழுமை அடைந்தோம்” என்று பரிமாற வந்தவர்களை கைநீட்டி மறுத்தனர். “இன்னும் சிறிது… இன்னும் ஒரு வாய்” என்று அவர்கள் வற்புறுத்த “போதும்… இதற்குமேல் உண்டால் உணவுச்சுவையை மறந்துவிடுவோம்” என்றார் விகிர்தர்.

சம்பவன் உண்டு முடித்து இலையை மடிக்காமல் ஊழ்கத்திலென அமர்ந்திருந்தான். முதிய சூதரான சுந்தரர்  “உண்டு முடித்தோர் எழுக!” என்று கைகாட்டினார். அனைவரும் ஓரிரு அசைவுகளுடன் எழுந்தனர். ஒரு சொல்கூட பேசிக்கொள்ளாமல் நடந்து நீர்த்தொட்டி அருகே சென்று கை கழுவினர். எவர் உள்ளத்திலும் சொல்லென ஏதும் இருக்கவில்லை. அதுவரை சுவை என்று அறியப்பட்ட ஒன்று அப்போது நிறைவு என்ற முற்றிலும் பிறிதொன்றாக மாறிவிட்டிருந்தது. எந்தத் தருணத்தில் அந்த மாறுதல் நிகழ்ந்ததென்று உணரமுடியவில்லை.

அவர்கள் திரும்பி வந்தபோது சவிதையின் அருகே வலவன் குறுபீடம் ஒன்றை இட்டு அமர்ந்து “நான் அளிக்கிறேன். உண்ணமுடியுமா என்று பார்” என்றான். சவிதை  நாவால் உதட்டை வருடியபடி “ஆம், இதுவரை அறியாத பசி என்னுள் எழுகிறது” என்றாள். “உன் உதடுகளே சொல்கின்றன. அவை முன்பு உலர்ந்திருந்தன” என்றான் வலவன். “உன்னுள் வளரும் அந்த மாமல்லனுக்கு என் பசியில் ஒரு பகுதியை அளித்திருக்கிறேன். இனி நீ அவனுக்காகவே  உண்ணவேண்டும்” என்றான்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அடக்க முயன்று மீறி வந்த விம்மல்களுடன் தலைகுனிந்து மேலாடையால் முகத்தை மூடிக்கொண்டாள். வலவன் அவள் தோள்களில் கைவைத்து “என்ன?” என்றான். “இல்லை” என்றாள். “சொல்” என்றான். “வழியில் ஓர் அன்னை என்னிடம் சொன்னாள், என்னை காக்கும் தெய்வத்தை நான் இங்கு காண்பேன் என்று” என்றாள். அவளால் பேசமுடியவில்லை. நெஞ்சு உலைய தோள்கள் அதிர்ந்தன. அவன் அவள் தலையை வருடி “உண். இனி எதைப்பற்றியும் அச்சம் கொள்ளாமலிரு” என்றான்.

“இல்லை, இனி நான் அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்றாள் அவள். “நிழலுருவாக தாங்கள் வந்தபோது நான் கண்டது என்ன தெரியுமா?” “என்ன?” என்று வலவன் கேட்டான். “மாமல்லரே, விண்ணளாவிய உருவம்கொண்டு அஞ்சனைமைந்தர் ஹனுமான் வந்ததுபோல நான்  கண்டேன். விழிமாயம் அல்ல, நான் அத்தனை தெளிவாக கண்டேன். இரு கைகளையும் கூப்பி என் தேவா உன் கால்பொடி என் தலையில் விழவேண்டும். ஒருபோதும் அச்சமெனும் நோய் இனி என்னை பற்றலாகாது என்று வேண்டினேன். அப்போதுதான் யாரோ ஏதோ கேட்டதற்கு தாங்கள் ஆம் என்றீர்கள். இப்பிறவியில் எனக்கு அச்சொல் ஒன்று போதும். பிறிதொரு தெய்வம் வேண்டியதில்லை” என்றாள்.

வலவன் அவள் தலையை தன் கையால் உருட்டினான். அவன் ஐந்துவிரல் விரிவுக்கு உள்ளே அடங்குமளவுக்கு இருந்தது அவள் தலை. அவள் செவிகளைப்பற்றி மெல்ல உலுக்கி “இந்த விழிநீர் இனி எப்போதும் விழலாகாது. உணவுக்குமுன் முகம் மலரவேண்டும். பிறிதொரு உணர்வை  பார்க்க அன்னத்தை ஆளும் அன்னைதெய்வங்கள் விரும்புவதில்லை” என்றான். “ஆம்” என்றாள். “உண்க!” என்றபின் அவன் அந்த ஊன்அப்பங்களில் ஒரு துண்டைப் பிய்த்து அவள் வாயில் வைத்து “இது என் கொடை உனக்கு” என்றான். அவள் அதை வாயால் வாங்கி புன்னகையும் நாணமும் விழிநீருமாக மென்றாள்.

அப்பால் நோக்கி நின்றிருந்த சூதர்குழுவினர் அனைவருமே விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தனர். விசும்பல்களும் அடக்கிய விம்மல்களுமாக தன்னைச் சூழ்ந்திருப்பதை சம்பவன் உணர்ந்தான். தொட்டபோது அவன் கண்களிலும் விழிநீர் நிறைந்திருந்தது. வலவன் எழுந்து அவர்கள் அருகே வந்தபோது ஒவ்வொருவரும் தங்கள் கண்களை துடைத்தபின் தலைகுனிந்து விழிகள் நோக்கு விலக  நின்றனர்.  வலவன் அவர்களை அணுகி “நீங்கள் இங்கு தங்கலாம். உங்கள் விழைவுக்கும் தகுதிக்கும் தக்க பணிகள் இங்குள்ளன” என்றான்.

அறியாது எழுந்த ஓர் உந்துதலால் சம்பவன் முழந்தாளிட்டு அவன் காலடியில் அமர்ந்து தலையை அக்காலடிகளில் வைத்து “நல்லாசிரியரே, தாங்கள் யாரென்று நான் அறிந்தேன். அவ்வெளிய பெண் பார்த்ததை என் ஆணவத்தால் இத்தனை பொழுதுகடந்து நான் உணர்கிறேன். என்னை ஆட்கொள்ளுங்கள். சுவையென எழுந்த தெய்வங்களுக்கு முன் படையலுடன் நிற்கும் எளியவனாக என்னை ஆக்குங்கள்” என்றான். வலவன் குனிந்து அவனை இரு தோள்களைப்பற்றி தூக்கிநிறுத்தி “நன்று. நீ என்னுடன் பரிமாற வந்ததே உன்னை காட்டியது” என்றான்.

“நான் நன்கு சமைப்பேன்…” என்றான் சம்பவன். வலவன் புன்னகையுடன் “சரி, உன் அடுமனைத் திறனை காட்டு” என்றான். “என்ன சமைக்க வேண்டும்? ஆணையிடுங்கள், இப்போதே செய்கிறேன்” என்றான். “மிக எளிது என ஒன்றை செய்” என்றபின் அவன் தோளைத் தட்டி “ஓரு புளியுப்புக் கரைசல் காய்ச்சு” என்றான். “இதோ…” என்றான் சம்பவன். “புளிக்காய்களும் உப்பும் அங்குள்ளன.” சம்பவனின் கைகள் பரபரத்தன. சில கணங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிட்டுக்குருவிபோல அங்குமிங்கும் உடல் பரபரத்தது. பின்னர் பாய்ந்து சென்று உப்பை எடுத்தான். திகைத்து அதை போட்டுவிட்டு மூச்சிரைத்தான்.

தன்னை திரட்டிக்கொண்டான். சில கணங்கள் விழிமூடி அத்தருணத்தில் தன்னை குவித்து பின் திறந்தபோது உடல் அமைதிகொண்டிருந்தது. உள்ளம் அந்த அமைதியை வாங்கி அலையவிந்தது. சிறிய மண்கலத்தில் புளிக்காய்களை எடுத்து உடைத்து உப்பும் மிளகும் சேர்த்து நீர் ஊற்றாமல் அடுப்பில் வைத்தான். கலம் சூடாகி புளியின் பச்சைமணம் எழுந்தது. மெல்ல ஓசை எழுந்து புளி வேகும் மணம் வந்தபோது எடுத்து இறக்கிவைத்து ஒரு கரண்டி நல்லெண்ணையை அதில் ஊற்றி மூடிவைத்தான். அடுப்புநெருப்பை அணைத்துவிட்டு “நோக்குக, ஆசிரியரே” என்றான்.

வலவன் “திற” என்றான். அவன் மூடியைத் திறந்தபோது அங்கிருந்த அனைவரையும் வாயூறச்செய்யும் புளிக்காய்ச்சலின் மணம் எழுந்தது.  வலவன் உதவியாளனிடம் “நோக்குக!” என்றான். அவன் “மணம் சுவை நிகழ்ந்ததை காட்டுகிறது” என்றபடி குனிந்து அதில் ஒரு சொட்டு எடுத்து நாக்கில் விட்டு “இனி ஒரு புளிக்காய்ச்சலைச் செய்ய தங்களால் மட்டுமே முடியும், வலவரே” என்றான். வலவன் புன்னகையுடன் “கொடு” என்றான். சம்பவன் மரக்கரண்டியில் புளிக்காய்ச்சலில் சிறிது எடுத்து நீட்டினான். அதை நாவில் விட்டபின் “நன்று” என்றான் வலவன். சம்பவன் கைகூப்பினான்.

“நீ என்னுடன் இரு. என்ன செய்யவேண்டும் என்று இவனிடம் சொல்கிறேன்” என்றபின் வலவன் சிறுவர்களைப் பார்த்து கைவிரித்து கண்சிமிட்டினான். அதுவரை அவனை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவர்கள் முகம் மலர்ந்து ஒருவரை ஒருவர் நோக்கினர். இளையவன் பாய்ந்து சென்று தாவி அவன் மேல் தொற்றிக்கொள்ள மற்ற குழந்தைகளும் கூச்சலிட்டபடி அவன் உடலில் சென்று விழுந்து பற்றி மேலேறின. தோள்களிலும் தலையிலும் இடையிலும் குழந்தைகளுடன் அவன் சிரித்தபடி உள்ளே சென்றான்.

முந்தைய கட்டுரைகாடு பூத்த தமிழ்நிலம்
அடுத்த கட்டுரைபச்சைக்கனவு கடிதங்கள் 2