அன்புள்ள ஜெ
உதயகுமாரின் பிராமண எதிர்ப்பு பற்றி வாசித்தேன். பிராமணர்களின் சாதிவெறியை நீங்கள் பார்ப்பதே இல்லையா? சமூகவலைத்தளங்களில் உலவுங்கள், தெரியும். முடைநாற்றமெடுக்கும் சாதிவெறியை, எந்த அடிப்படை அறமும் இல்லாத கீழ்மையை, கணிசமான பிராமணர்கள் நேரடியாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் பேசுவதுண்டா?
செந்தில்
அன்புள்ள செந்தில்,
அந்தச் சாதிவெறியை நானும் நிறையவே சந்தித்திருக்கிறேன், சந்தித்துக்கொண்டும் இருக்கிறேன். மிகநெருக்கமானவர்களாக இருந்தவர்கள்கூட தருணம் கிடைக்கையில் சாதிய நச்சுப்பற்களுடன் எழுவதைக் காணும் அனுபவம் அடிக்கடி வந்துவிட்டது. அதன்பின் நட்பு, நேர்மை எதுவும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவும் இல்லை.எல்லா சாதி, மதவெறியர்களையும்போல அவர்களின் பேச்சுக்களும் தங்களவர் அல்லாத அனைவரும் அயோக்கியர்கள் என்பதாகவே உள்ளது
ஆனால் நான் எப்போதும் கேட்டுக்கொள்ளும் வினா இது. இந்தச்சாதிவெறிக்கு எதிர்வினையாகவா பெரியாரியச் சாதிவெறி எழுந்தது? இல்லை. பெரியாரிய இனக்காழ்ப்பே இன்றைய இச்சாதிவெறியை உருவாக்கியிருக்கிறது.
இந்தியாவின் பிற சாதியினரைப்போலவே பிராமணர்களும் தங்கள் குறுகலான குடியிருப்புகளில் பிறசாதியினருடன் ஒட்டும் உறவும் இல்லாமல் வாழ்ந்தவர்கள்தான். பிறசாதியினரைப்பற்றிய உளவிலக்கமும் கசப்புகளும் எள்ளல்களும் கொண்டவர்கள்தான். பிறரைப்போலவே சென்ற நூற்றாண்டில்தான் நவீனக் கல்விபெற்று மெல்ல அதிலிருந்து அவர்கள் மீண்டு வரத்தொடங்கினர்.பிறரைப்போலவே அவர்களின் குடும்பச்சூழல் இன்னமும்கூட சாதிய முன்முடிவுகளும் காழ்ப்புகளும் நிறைந்ததே.
பிறரைவிட அவர்களுக்கு நவீனமாதலில் சிக்கல்கள் அதிகம். காரணம் அவர்கள் மதச்சடங்குகள், ஆலயங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்கள். பிராமணர்கள் இந்துப்பண்பாட்டில் நிலைச்சக்திகள். பண்பாட்டின் அடிப்படைகளைப் பேணவேண்டிய கடமைகொண்டவர்கள். அந்தப்பொறுப்பை சென்ற ஈராயிரமாண்டுகளாக உலகுக்கே முன்மாதிரி எனக்கொள்ளத்தக்கவகையில் நிறைவேற்றியவர்கள்
ஆகவே எளிதில் மரபை முற்றாக உதறிவிட்டு வெளியேற முடியாது. மேற்கிலிருந்து வந்த சில நம்பிக்கைகளையோ கொள்கைகளையோ உடனே ஏற்றுக்கொண்டு அவர்கள் நேர் தலைகீழாகத் திரும்பவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு பண்பாட்டு வரலாறு தெரியாது. அப்படி அவர்கள் திரும்பியிருந்தால் இந்தியாவில் இன்றுநாம் காணும் இந்து மரபு எஞ்சியிருக்காது
அவர்களிடம் சிலரால் குறையெனக் கருதப்படும் பழமைப்பிடிவாதம் எகிப்தின் பூசகர்களுக்கோ ஜரதுஷ்டிர மதகுருக்களுக்கோ இருந்திருந்தால் எகிப்தும் ஈரானும் கொண்டிருந்த தொன்மையான பண்பாடுகள் எஞ்சியிருந்திருக்கும்
ஆகவே எதை உதறுவது, எதை தக்கவைத்துக்கொள்வது, எதுவரை என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல். அந்த விவாதம் இருநூறாண்டுகளாக நம் பண்பாட்டுவெளியில் நிகழ்கிறது… நூற்றைம்பதாண்டுகளுக்கு முன் அந்த விவாதம் தொடங்கிய சித்திரத்தை தாகூரின் ’கோரா’ நாவலில் வாசிக்கலாம். பாரதியின் ’ஆவணி அவிட்டம்’ போன்ற சிலகட்டுரைகளில் பார்க்கலாம்
பிராமணர்களின் இந்தமாபெரும் பண்பாட்டுவிவாதத்தில் பலவகையான தரப்புக்கள் உண்டு அதில் மரபை மாறாமல் தக்கவைக்க விரும்பும் ஒரு பழைமைவாத நோக்கு உண்டு. அது என்றும் இருக்கும். மறுஎல்லை புதுயுகசிந்தனைகளை பெரும் ஆர்வத்துடன் தழுவிக்கொண்டு அவற்றை முன்னெடுத்துப் பரப்பியவர்களின் தரப்பு. டி..டி. கோசாம்பி, விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய, சிவராம காரந்த், ஈ.எம்.எஸ், மகாவைத்யநாத அய்யர், க.நா.சு, சி.சு.செல்லப்பா, எஸ்.என்.நாகராசன், சுந்தர ராமசாமி என அந்த நவீனவாதிகள் இல்லாமல் இந்திய நவீனச் சிந்தனையே இல்லை.
நான் ஆசிரியர் எனக்கொள்பவர்களில் அவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிது. ஒருநாளில் ஒருமுறையாவது அவர்களைப் பேசாமல் சிந்தனை கடந்து செல்வதில்லை. நான் முன்வைக்க விரும்பும் பிராமணர்கள் தங்கள் மரபை உள்வாங்கி நவீன உலகம் நோக்கி எழுந்தவர்கள் மட்டுமே.
ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது. அதற்கு கல்வியில் நம்பிக்கை இல்லை. தர்க்கசிந்தனை இல்லை. ஏன் செவிகளே இல்லை. சும்மா தேடிப்பாருங்கள், இ.எம்.எஸ் சுந்தர ராமசாமி எவரைப்பற்றியானாலும் அவர்களை பார்ப்பனச் சதிகாரர் என பழிக்கும் சொற்களே உங்களுக்குக் கிடைக்கும்.
அதன் இறுதிவிளைவாக இன்று உருவாகி வந்திருப்பதே நீங்கள் சொல்லும் பிராமண அடிப்படைவாதம்.அவர்களில் எழுந்துவந்த நவீனச் சிந்தனையாளர்கள்கூட பொதுவெளியில் சிறுமைசெய்யப்படுவதை அவர்கள் காண்கிறார்கள். அவர்களில் மிகச்சிலர் மட்டுமே மெய்த்தேடலால் ஈர்க்கப்பட்டு அந்த நவீனச்சிந்தனையாளர்களை நோக்கி வருகிறார்கள். பிறர் அந்த நவீனச்சிந்தனையாளர்களை தங்கள் சாதிக்குத் துரோகம் செய்தவர்களாகவே பார்க்கிறார்கள்.
ஆகவே இன்று பிராமணத்தரப்பாக ஒலிப்பது காழ்ப்பும் கசப்பும் கொண்ட குரல்கள்.அவர்கள் தங்கள் மேல் பாயும் வெறுப்பைச் சுட்டிக்காட்டி தாங்களும் அதேபோல் ஆனால் என்ன தப்பு என்கிறார்கள். நான் அவர்களை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்வதுமில்லை. அவர்களை ஆதரிக்காவிட்டால் அவர்கள் நம்மை பிராமணவிரோதி என்று பெரியார் பக்கம் தள்ளிவிடுவார்கள். காழ்ப்புக்கு எந்ததரப்பானாலும் ஒரே மொழிதான்.
நான் மேலே சொன்ன பட்டியலில் உள்ளவர்களை பிராமணர்களும் பழிப்பதை நீங்கள் காணலாம். அவர்களுக்கு தங்கள் சாதிக்காக கூச்சலிடும் அடிப்படைவாதிகளும் சென்ற நூற்றாண்டுகளில் வாழும் ஆசாரவாதிகளும்தான் முன்னுதாரணங்கள்
பெரியாரியர்களால் நம் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கும் இனக்காழ்ப்பின் விளைவாக பிராமணர்கள் கசப்படைகிறார்கள். கசப்பு உருவாக்கும் வீம்பு ஆன்மிகமான அகம் அற்ற எளிய பிராமணர்களை ‘ஆமா இப்ப என்ன?’ என்ற மனநிலைக்குத் தள்ளுகிறது. அவர்கள் அந்நிலை எடுக்கும்போது இவர்களுக்கும் எல்லாம் எளிதாக ஆகிவிடுகிறது. இதுதான் இன்றைய சூழல்.
ஆம், பிராமணர்களும் சமூக அதிகாரம் பொருளியல் அதிகாரத்துக்காக போராடுகிறார்கள். அனைத்துவகையிலும் முட்டி மோதுகிறார்கள். அதற்காக ஒருங்கு கூடுகிறார்கள். ஆனால் அதைச் செய்யாத சாதி எது? அவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை. அதற்கு தயாரானவர்கள் வேறு யார்?
நான் பிராமணர்களிடம் உள்ள சாதிய அடிப்படைவாதத்தை கண்டிக்கிறேன். ஒரு பிராமணன் தன் சாதிசார்ந்த வாழ்க்கை அளித்த உளக்குறுகலையும், மூடநம்பிக்கைகளையும், மனிதவிரோதத் தன்மைகொண்ட பழைமையான ஆசாரங்களையும் விமர்சிக்கவேண்டும். உதறிமுன்னெழவேண்டும். கூடவே தன் மரபின் சிறப்புகளை, தன் குலத்தின் பல்லாயிரமாண்டுக்கால வரலாறு அளித்த பண்பாட்டுக்கொடைகளை பேணிக்கொள்ளவும் வேண்டும்.
அவ்வாறு ஒரு அறிவார்ந்த நோக்கு இல்லாமல் வெறுமே பிராமணனாகப் பிறந்தமையாலேயே அசட்டுமேட்டிமை நோக்கு கொண்டிருப்பவர்களை புறக்கணிக்கிறேன்.அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்றால், சிந்தனைத் தரப்பாக அதை முன்வைத்தால் கண்டிக்கிறேன்.
ஆனால், அதே சமயம் வேளாளர், முதலியார், செட்டியார், கவுண்டர் ,நாடார்,தேவர் போன்றவர்களின் சாதிவெறி அதற்குச் சற்றும் குறைந்தது அல்ல என்றே சொல்லவிரும்புகிறேன். அவர்களையும் அதே அளவுகோலைக்கொண்டே பார்க்கிறேன். நம் சூழலில் உள்ள அதே சாதிப்பற்றும் மேட்டிமைநோக்கும்தான் பிராமணர்களிடமும் உள்ளது. அவர்கள் மட்டும் ஏதோ தனியாக ஒரு அடிப்படைவாதம் பேசவில்லை
பிராமணர்களுக்காகவது மீறி எழுந்த மாமனிதர்களின் நீண்ட பட்டியல் உண்டு. அவர்கள் பழைமைபேசினாலும் பேணி நமக்களித்த பண்பாடு காரணமாக அவர்களின் அடிப்படைவாதத்தை ஓரளவு மன்னிக்கலாம். தன் சாதியின் நீண்ட பண்பாட்டை முற்றாக இழந்து நின்றிருக்கும் பிறருக்கு அந்தச் சலுகையும் இல்லை என்கிறேன்.
மற்றசாதியினர் தங்கள் சாதியின் அறிஞர்களையும் ஆன்மீகவாதிகளையும் புறக்கணித்து முண்டாமுறுக்கி நிற்கும் ரவுடிகளை தங்கள் முகங்களாக முன்வைக்கும் காலம் இது. அவர்களுக்கு பிராமணச்சாதியை விமர்சிக்க என்ன தகுதி?
ஆகவே நான் உட்பட பிறசாதியினர் முதலில் சுயவிமர்சனம் செய்வோம். மேலே செல்வோம். பிராமணக்காழ்ப்பு நம்மை எதிர்மறை மனநிலைகொண்டவர்களாக, நம் கீழ்மைகளை மறைப்பவர்களாக மட்டுமே ஆக்கும்..
ஜெ