அன்புள்ள ஜெ.,
நலமாயிருக்கிறோம்.
தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி.
கடந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று.
ஏப்ரல் இறுதியில் ”காடு” படித்தேன். இன்னமும் அந்த ‘வறனுறல் அறியாச் சோலை’யை விட்டு நான் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக என் மனத்தையே ஒரு பெருங்காடாக விரித்துக் கொடுத்த வியத்தகு பனுவல் அது. அதன் பாயிரம் சொல்வது போல் நீர் தமிழீன்ற ’ராட்சஸக் குழந்தை’தான்.
மே மாத நடுவில் பன்னிரு நாட்களில் ”விஷ்ணுபுரம்” வாசித்து முடித்தேன். இன்னொரு பரிமாணத்தில் ஓர் அகப்பயண அனுபவமாயிற்று. அது முன்வைக்கும் சமய விவாதங்களின் முடிவு தர்க்க வழியிற் செயல்படும் தத்துவச் சிந்தனையின் போதாமையை அஜிதன் உணர்ந்து காட்டுக்குள் சென்று மிருகநயனியின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய கொள்ளும் முயற்சி ஆகியவற்றை ஒருபக்கமும், விஷ்ணுபுரத்தின் இறுதி ஞானியாகச் சிலை வடிக்கப்பட்டிருந்த, புதினத்தில் ஒரு சொல்லும் பேசாத, பித்தனைப் போல் குழந்தையைப் போல் தோன்றுகின்ற, இயற்கையில் முற்றும் இயைந்து வாழுகின்ற (பெருவெள்ளம் அவனை மூழ்கடித்து அழிக்கவில்லையே, ஒரு தவளை போல் தாவிப் பாறைமீது ஏறிவிடுகிறானே!) தேவதத்தனைக் குறியீடாக மறுபக்கமும் வைத்து ஒப்பிட்டு நோக்கும்போது தத்துவ விவாதங்களில் வெல்பவர் தோற்பவர் இருவரிடமுமே சமயத்தன்மை இல்லை என்று சுட்டிக்காட்டுவதும் தத்துவத்திலிருந்து தியானத்திற்கு, பௌத்தத்திலிருந்து ஜென்னுக்கு என்னும் தாவலும் இருப்பதாகப் புரிந்துகொண்டேன். இதை நான் சொல்வது விஷ்ணுபுரத்தின் தத்துவப் பகுதிகளை எல்லாம் முழுமையாய் விளங்கிவிட்டேன் என்று சொல்வதற்கல்ல. அப்படிச் சொன்னால் அது பொய். ஆனால் தத்துவங்களை விளங்கிக்கொள்ளப் மூளையைக் கசக்கிப் பிரயத்தனம் செய்யும் பண்பு என்னிடம் இல்லை. அவை தாமாகத் திறந்துகொடுக்க வேண்டும். அதற்காக மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டுமானால் செய்வேன். அவரவர்க்கு ஒவ்வொரு நிலையில் விளங்கட்டுமே, தவறென்ன?
2010-இல் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வாங்கிப் படித்தேன். இப்போது விஷ்ணுபுரத்தைப் படித்தபோது அதன் “கௌஸ்துபம்” பகுதிக்காக நீங்கள் செய்த ஹொம் ஒர்க்கின் பதிவாக அந்நூல் படுகிறது. புனைவிலக்கியம் எத்தனைப் பெரிய தயாரிப்புக்களைக் கோருகிறது என்பதற்கான சிறந்த சான்றாக இதனைக் காண்கிறேன்.
காடும் விஷ்ணுபுரமும் என் மனைவி எனக்கு அன்பளிப்பாகத் தந்தவை. அதே காலத்தில் அவ்விரு நூற்களையும் என் தோழர், உடன்பிறவா அண்ணன் கரிகாலன் (தமிழ் உதவிப்பேராசிரியர், அரசுக் கல்லூரி, அரியலூர்) அவர்களுக்கு நான் அன்பளிப்புச் செய்தேன்.
இவ்விரு நூற்களுக்கு இடையில் ‘அனல் காற்று’ வாசித்தேன். ஏற்கனவே உங்களின் சிறுகதைகளை முழுமையாக வாசித்திருக்கிறேன். (என் மாணவர் ஒருவருக்கு “ஜெயமோகன் சிறுகதைத் திறன்” என்னும் தலைப்பை முனைவர் பட்ட ஆய்வுக்குக் கொடுத்திருக்கிறேன். இனிமேல்தான் ஆய்வுப் பணியைத் தொடங்க இருக்கிறார். ஓர் எச்சரிக்கையாக, முன்கூட்டி இப்போதே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்!) கட்டுரை நூற்களும் வாசித்திருக்கிறேன். நவீன இலக்கியம் பற்றிய உங்கள் நூலை எம்.ஃபில். தாளொன்றுக்குப் பாடமாக வைத்திருக்கிறேன். ஒரு வகையில் நீங்கள் எனக்கொரு முதுபேராசிரியர்.
விஷ்ணுபுரம் முடித்த சில நாட்கள் கழித்து “நிலம் பூத்து மலர்ந்த நாள்” வாசித்தேன். அதைப் பற்றி “காடு பூத்த தமிழ் நிலத்தில்…” என்னும் தலைப்பிலொரு பின்னூட்டக் கட்டுரை எழுதி எனது வலைப்பூவில் (pirapanjakkudil.blogspot) பதிவிட்டேன் (20 மே, 2017). அதனைப் படித்துப் பார்த்துவிட்டு ஓரிரு வரிகள் பதில் எழுதுமாறு கேட்டுத் திருமதி கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். சுத்தம்.
அடுத்து “கொற்றவை” வாசிக்க நாடியுள்ளேன்.
நீங்களும் தமிழுக்குக் கிடைத்தவொரு ”வறனுறல் அறியாச் சோலை”தான்.
மீண்டும் நன்றிகள்.
ரசிகன்,
ரமீஸ் பிலாலி.
***
அன்புள்ள ரமீஸ் அவர்களுக்கு,
அந்தக்கட்டுரையை நானும் தவறவிட்டுவிட்டேன். நல்ல கட்டுரை. இணைப்பு அளித்திருக்கிறேன். முக்கியமான நூல், பரவலாக இன்னமும் கவனிக்கப்படவில்லை. உட்குறிப்புகள் வழியாகச் செயல்படுவது. இன்றைய முகநூல் சூழலில் செறிவான உரைநடையை வாசிக்கும் மனநிலையை கணிசமானவர்கள் இழந்துவிட்டார்களோ என்ற ஐயமும் எழுகிறது
*
விஷ்ணுபுரத்தைப் பொறுத்தவரை அதில் தத்துவங்கள் அல்ல, அவைபற்றிய குறியீடுகளே பெரிதும் கையாளப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாகத் தெரிந்துகொண்டு அதை உணரவேண்டும் என்பதில்லை. தத்துவம் அதன் உச்சத்தில் அடையும் ஒருவகை அசைவின்மையை, வெறுமையை உணரமுடிந்தால்போதும்.
தத்துவம் தத்துவத்திற்கு அப்பாலுள்ள தர்க்கமற்ற ஓர் உண்மையை நோக்கி கைநீட்டும்போதே பொருள் உடையதாகிறது. தத்துவத்தின் நோக்கமே தத்துவப்படுத்திக்கொண்டு சென்று ஓர் அருவமான உண்மையை தொட்டுவிடுவதுதான். அந்த அருவமான உண்மை ஒரு மாயையாக இருக்கலாம். பொய்ப்பிக்கப்படலாம். ஆனால் தத்துவம் தொடர்ந்து அதைச் செய்தபடியேதான் இருக்கும்
முழுமுதல் உண்மை, அப்சல்யூட் ட்ரூத் என்ற ஒன்றுக்கான தவிப்பே தத்துவத்தை உருவாக்கியது. தொகுத்துத்தொகுத்துச் சென்று, பொதுமைப்படுத்தியபடியே சென்று, அருவமாக்கியபடியே சென்று, அது அந்த முழுமுதல் உண்மையை தொட்டுவிட முயல்கிறது. பலசமயம் தோற்கிறது. அரிதாக வெல்கிறது. ஆனால் முழுமுதல் உண்மை என்பது எப்போதுமே தத்துவத்தின் இலக்கு, கனவு.
நடுவே புறவயத்தர்க்கவாதிகள்[ லாஜிக்கல் பாஸிட்டிவிஸ்டுகள்] அதை இல்லாமலாக்க முயன்றனர். எது புறவயமான உண்மையோ அதுவே பயனுள்ள உண்மை என்றனர். எஞ்சியவை எல்லாமே வெறும் மனமயக்கங்கள் என்றனர். அதிகார உருவாக்கத்துக்கான சூழ்ச்சிகள் என்றும் சொல்லத்தலைப்பட்டனர். முப்பதுகள் முதல் முப்பதாண்டுக்காலம் ஐரோப்பிய- அமெரிக்க பல்கலைகளில் அந்த பார்வை கோலோச்சியது.
நடராஜகுருவும் நித்யாவும் அதற்கு எதிரானவர்கள். அவர்களின் ஆசிரியர்கள் அதற்கு எதிரானவர்கள். அந்தக்கோட்டை ஹென்றி பெர்க்ஸன், ஆல்பிரட் நாத் வைட்ஹெட் வரை பின்னால் கொண்டுசெல்ல முடியும். விஷ்ணுபுரத்தில் இருப்பது அருவமான மெய்மையை, முதல்முழுமையை, தர்க்கமற்ற உண்மையை நோக்கி எழமுயலும் தத்துவத்தின் கொந்தளிப்புதான்.
சமீபத்தில் என் மகன் சொல்லி பிபிஸியின் தத்துவம் பற்றிய டாகுமெண்டரி ஒன்றைப்பார்த்தேன். அதில் அறுபதுகளில் logical positivism சார்ந்து நடந்த அதியுக்கிரமான தத்துவமோதல்களைப்பற்றி பேசப்படுகிறது. அன்று அதன் முகமாக அறியப்பட்ட ஏ.ஜி.அயர் சற்றே கசப்புடன் சிரித்தபடி “நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” என்கிறார்
”தன்னையே உடைக்கும் தருக்கம், தர்க்கம் மட்டுமான தர்க்கம்’ என்று விஷ்ணுபுரத்தின் சுடுகாட்டுச் சித்தன் சொல்கிறான். அதைத்தான் நினைவுகூர்ந்தேன். தொடர்ந்து மேலைச்சிந்தனையில் இந்த இடிப்புதான் நடந்துகொண்டிருக்கிறது. எஞ்சும் வெறுமை மிக மிக படைப்பூக்கம் கொண்டது. அதிலிருந்து அடுத்தது முளைக்கிறது
ஜெ.
***
இசையும் மொழி