அன்பு ஜெ.,
”நான் எண்ணும் பொழுது…” – எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல். குறிப்பாக, பயணங்களில் கேட்பேன். அப்பாடலின் மூலப் பிரதியாக ஹிந்தியில் வந்த “நா ஜியா லாகே நா”-வைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால அதற்குமான மூலப் பிரதி ’சலீல்தா’வின் தாய்மொழியான வங்காளத்தில் (அதே லதா பாடியது) “நா மொனோ லாகே நா” என்பதாகும். சலீல்தா அமைத்த மெட்டுக்களில் மிக ஆத்மார்த்தமான ஒன்றாக இப்பாடலை, அதிலும் அதன் பல்லவியை உணர்கிறேன். இத்தகவலைச் சுட்டிக்காட்டுவதன் பின்னணி, என்னதான் இசைக்கலைஞன் மொழிகளைக் கடந்தவொரு பிரபஞ்ச மொழியில் இயங்குபவனாக இருந்தாலும் அவனது தாய்மொழி சார்ந்து இயங்குகையில்தான் அந்த இசை என்னும் மீமொழி அவனில் பேரழகு கொள்கிறது என்று படுகிறது. ’நமது’ இசைஞானி நல்ல சான்று அல்லவா? அதற்காகத்தான் இத்தகவலை எழுதத் தோன்றிற்று. மேலும், ஹிந்தி திரையுலகின் இசைத்துறையில் கணிசமாக வங்காளிகளே பங்களிப்புச் செய்திருக்கிறார்கள் என்பதன் காரணிகள் பற்றியும் இங்கே யோசிக்கத் தூண்டுகிறது. (தந்தையும் தனயனுமான எஸ்.டி.பர்மன் மற்றும் ஆர்.டி.பர்மன், தனயனின் பல அற்புதமான பாடல்களுக்குக் குரல் நல்கிய கிஷோர் குமார் ஆகியோர் ஒரு பொற்காலத்தையே உருவாக்கியவர்கள் அல்லவா?).
ரமீஸ் பிலாலி
திருச்சி.
அன்புள்ள ரமீஸ் பிலாலி அவர்களுக்கு,
நலம்தானே? பிரபஞ்சக்குடிலில் [பிரபஞ்சக்குடில்] சாரா பற்றிய கட்டுரை வாசித்தேன். நல்ல கட்டுரை
நீங்கள் சொல்வதை நாம் வெவ்வேறு தளங்களில் பார்க்கவேண்டியிருக்கிறது. உலக இசைமேதைகள் அப்படி மொழி எல்லைக்குள் இயங்கியவர்களா? இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது
ஆனால் திரையிசைக்கு மொழி முக்கியமா? ஆம், முக்கியம் என்று தோன்றுகிறது. இது சலீல்தாவின் பெரும்பாலான பாடல்களைக் கேட்கும்போது தோன்றுவது. அவருடைய அற்புதமான பல பாடல்களில் இசையில் வரிகள் அமையவில்லை. அந்த வரிகளின் உணர்வுகளுக்கும் இசைக்குமிடையே ஒரு விலகல் இருந்துகொண்டே இருக்கிறது. [இதைச்சொன்னால் என் நண்பரும் சலீல்தாவின் பக்தருமான ஷாஜி சென்னை சங்கைக்கடிக்க வருவார்.]
சலீல்தா மலையாள மொழியை கற்றுக்கொள்ளவில்லை. அதன் நுட்பங்களுக்குள் அவர் செல்லவில்லை. ஆகவே மிக நல்ல வரிகள் கூட சம்பந்தமில்லாத இசையை அணிந்திருக்கின்றன. நான் என்னும் பொழுது பாடலில்கூட இசை சரியாக சொற்பொருளில் அமையவில்லை. ”நான் எண்ணும்பொழுது” என தொடங்கும் வரிகளில் உள்ள கடந்தகால ஏக்கம் அல்ல அந்த மெட்டு அளிப்பது
உண்மையில் நான் நெடுங்காலம் ‘நான் என்னும் பொழுது’ என்ற பொருளில் ‘நான் எனப்படும் தற்காலம்’ என்று இவ்வரிகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கவித்துவமாக இருப்பதாகக்கூட தோன்றியது.
ஜெ
***
இனிய உரையாடல். அதை நிறைவுறுத்த இசையுடன் இசைந்த சலீல்தாவின் பாடல்
***
https://www.youtube.com/watch?v=iMkNxLicB1g