கண்பிரச்சினை, வெண்முரசு, மழை, வெக்கை என நாட்கள் சென்று கொண்டிருந்தாலும் பொதுவெளிச் செயல்பாடுகள் சென்று கொண்டுதான் இருக்கின்றன. கண் ஒவ்வாமை அனேகமாகச் சரியாகிவிட்டது. மீண்டும் வராமல் இரண்டு வாரம் கவனமாக இருக்கும்படி டாக்டரின் ஆலோசனை. மழை வந்துவிட்டதனால் இனி தூசுப்பிரச்சினை இருக்காதென்று நினைக்கிறேன்.
சென்ற மே 25-ஆம் தேதி தொடங்கியது. ஐந்துநாட்கள் தொடர்ச்சியாக கண்ணுக்கு ஓய்வு கொடுத்திருந்தால் விரைவிலேயே சரியாகிவிட்டிருக்கும் என்று டாக்டர் சொன்னார். ஒருநாளும் ஓய்வு கொடுக்கவில்லை. விமானத்தில்கூட. வேறுவழியில்லை. பொதுவாக உடலைக் கவனித்துக்கொள்ளும்படி எனக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வருவதுண்டு. நானும் அளிப்பதுண்டு. உடலை உதாசீனம் செய்வதில்லை. ஆனால் உடலை ஓம்பி வளர்ப்பதற்காக இங்கே வரவில்லை அல்லவா?
23 ஆம் தேதி தக்கலையில் அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மூன்றுநூல்கள் வெளியீட்டு – விவாத நிகழ்ச்சி. எச்.ஜி.ரசூலின் குறுங்கதைத் தொகுதி [போர்ஹேயின் வேதாளம்] எஸ்.ஜே..சிவசங்கரின் சிறுகதைத் தொகுதி [சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை], நட சிவக்குமாரின் கவிதைத்தொகுதி [தம்புராட்டியின் பரியங்கம்]. கறுப்புக்கண்ணாடியுடன் காரில் சென்றிறங்கிய என்னை ஒரு வட்டச்செயலாளர் என பலர் நினைப்பது தெரிந்தது.
இடதுசாரிகளுக்கே உரிய எளிய நிகழ்ச்சி. அரங்கம் 1917ல் கட்டப்பட்டது. ஓடுபோட்டு உள்ளே மரம் வேய்ந்தகூரை. செங்குத்தான கம்பிகள் கொண்ட பெரிய ஜன்னல்கள். இடிந்த தரை
சங்ககாலத்தில் கொல்லனும் கணியனும் கவிதை எழுதினர். சங்ககாலத்திற்குப் பின் நவீன இலக்கியத்தின் யுகம் வரை அடித்தளத்திலிருந்து நேரடியாக இலக்கியக்குரல் எழுந்து வருவதைக் காணமுடியாது. காரணம் இலக்கியவாதி என்னும் தொழில்முறையாளன் உருவாகிவிட்டிருந்தமை, இந்த ஒரு அம்சத்தாலேயே நவீன இலக்கியத்தில் அடித்தள வாழ்க்கையில் இருந்து எழுந்துவரும் நேரடிக்குரல்கள் பெரும் முக்கியத்துவம் கொண்டவை. அவற்றை வழக்கமான இலக்கிய அளவுகோல்களைக் கொண்டு அளப்பதோ வழிநடத்த முயல்வதோ பிழை. அவை தன்னிச்சையாக வெளிப்படுவதை கவனிப்பதும் ஆராய்ந்து மதிப்பிடுவதுமே நாம் செய்யக்கூடுவது.
நட.சிவக்குமாரின் கவிதைகளில் பெரும்பாலும் நேரடியான கோபமும் சீற்றமும் புழக்கமொழியில் வெளிப்படுகின்றன. அந்த உணர்வுகளின் நேர்மை அவற்றை படைப்புக்களாக ஆக்குகிறது. அத்தளத்திலிருந்து எழுந்து மேலும் அடுக்குகள் கொண்ட கவிதைகளை எழுதுகையில் முக்கியமான கவியுலகம் ஒன்றை அவர் உருவாக்குகிறார். நான் இருபதுநிமிடம் சுருக்கமாகப்பேசினேன்
எச்.ஜி.ரசூலின் நூலைப்பற்றி மீனான் மைதீன் பேசினார். பிரேம்குமார் சிவசங்கரின் தொகுதியைப் பற்றிப் பேசினார். விழாவில் நோன்புக்கஞ்சி அளிக்கப்பட்டது. மேலும் பலர் பேசியிருக்கக் கூடும். நெடுங்காலமாக பார்க்காமலிருந்த ஜி.எஸ்.தயாளன்,சொக்கலிங்கம், ஹாமீம் முஸ்தபா, பென்னி போன்றவர்களைப் பார்க்கமுடிந்தது. ஆனால் எனக்கு உள்ளூர கண் ஒவ்வாமை பற்றிய பதற்றம். உடனே கிளம்பி வீடுவந்து சொட்டுமருந்து போட்டுக்கொண்டேன். நல்லவேளையாக ஒன்றும் ஆகவில்லை
25 ஆம் தேதி கன்யாகுமரியில் உலக வெண்புள்ளிகள் நாளை ஒட்டிய ஒரு நிகழ்ச்சி. உலக அளவில் பெரிய நோயாக கருதப்படாதது வெண்புள்ளிகள். நிறமித்திசுக்களின் அழிவால் உருவாகும் ஒரு வண்ண வேறுபாடு அது.ஆனால் பலவகையான மனத்தடைகளும் சமூகத்தடைகளும் நிறைந்த இந்தியாவில் அது ஒரு பெரிய சமூகப்பிரச்சினை. தமிழகத்தில் பல லட்சம்பேர் அச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கணிசமானவர்களுக்கு இயல்பாகவே சரியாகியும்விடும்.
வெண்புள்ளிகள் சிக்கலை வெண்குஷ்டம் என்னும் வார்த்தையால் அடையாளப்படுத்தும் நம்முடைய மரபு மருத்துவர்கள் மிகப்பெரிய தீங்கை அதை அடைந்தவர்களுக்குச் செய்திருக்கிறார்கள். இருபதாண்டுகளுக்கு முன்பெல்லாம் உணவகங்களிலும் திரையரங்குகளிலும் சிலசமயம் பேருந்துகளிலும்கூட அவர்களை அனுமதிப்பதில்லை. கூசிச்சுருங்கி வாழ்க்கையை ஒடுக்கிக்கொள்பவர்களே அதிகம்
வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்ட டாக்டர். உமாபதி அந்த மனத்தடைகளுக்கு எதிரான ஒரு போராட்டமாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அதை விளக்க நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான விழிப்புணர்வுக்கூட்டங்களை நடத்திவருகிறார். அவர் ஒருங்கமைத்த நிகழ்ச்சி கன்யாகுமரியில் நடந்தது. கூட்டு ஓவியம் ஒன்று வரைவது நிகழ்ச்சியின் மக்கள்பங்கேற்பு நிகழ்ச்சி. நான் அதை தொடங்கிவைத்தேன்.அ.கா.பெருமாள், நாஞ்சில்நாடன், மலர்வதி ஆகியோர் பேசினார்கள்.
சரஸ்வதி என்னும் முன்னோடியான முற்போக்கு இதழை நடத்தி சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் ஆகிய மூவரையுமே அறிமுகம் செய்த இதழாளரான வ.விஜயபாஸ்கரன் வெண்புள்ளிகளால் சோர்வுற்று எங்கிருக்கிறார் என நண்பர்களுக்கே தெரியாமல் இருபதாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததைச் சொல்லி பேச்சைத் தொடங்கினேன். நீண்டநாளுக்குப்பின் அவர் பொதுவெளிக்கு வந்தபோது அச்செய்தியைக் கேட்டு சுந்தர ராமசாமி கண்கள்கலங்க ‘என்ன இது? என்ன இது?” என்று கேட்டுக்கொண்டிருந்தார். அந்நாளையச் சூழல் அது
வெண்புள்ளிகள் சார்ந்து அரசாணை ஒன்றைப் பெறுவதில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சென்னை வெற்றிபெற்றுள்ளது. அதன் முக்கியமான கூறுகள் இவை. வெண்குஷ்டம் என்னும் சொல் தவிர்க்கப்படவேண்டியது. அது மருத்துவரீதியாகப் பிழையானது. அதைப் பயன்படுத்துவது சட்டபூர்வமாகக் குற்றம். அவமதிப்பு உட்பட வழக்குகளுக்கு ஆளாகநேரும், வெண்புள்ளிகள் உடையவருக்கு எந்த இடத்திலும் நுழைவு அனுமதி மறுப்பதோ பிற வகையில் ஒதுக்கிவைப்பதோ சட்டப்படி குற்றம்.
வெண்புள்ளிகள் தொற்றுபவை அல்ல. மரபணுச்சிக்கலால் எழுபவை அல்ல. பாரம்பரியமாக வருபவை அல்ல. பெரும்பாலான குறைபாடுகள் தானாக சரியாகக்க்கூடியவை. இவற்றை முன்வைத்துப்பேசிய டாக்டர். உமாபதி இன்றும் முக்கியமான கல்விநிலையங்களில்கூட தொடரும் அவமதிப்புகளை, ஒதுக்கிவைத்தல்களைப்பற்றிச் சொன்னார்
விழாவுக்கு நண்பர்கள் போகன், அனீஷ்குமாரன் நாயர் ஆகியோருடன் சென்றிருந்தேன். திரும்பி வருகையில் மருத்துவாழ்மலைக்குச் சென்றோம். கடற்காற்று ஒவ்வாமலாகக்கூடும் என்று டாக்டர் எச்சரித்திருந்தார். ஆகவில்லை.
*
டாக்டர். உமாபதியை தொடர்புகொண்டு இவ்விழிப்புணர்வுநிகழ்ச்சியை தங்கள் ஊர்களிலும் கல்விநிலைகளிலும் நண்பர்கள் ஒருங்கிணைக்கலாமென நினைக்கிறேன்.
டாக்டர்.கே. உமாபதி
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா
எண் 4/8 தெய்வநகர் முதல்தெரு பட்டேல் தெரு
மேற்குத்தாம்பரம் சென்னை 600045
தொலைபேசி எண் 044 22265507- 22265508.
*