39. நிலைக்கல்
“ஒவ்வொரு தருணத்திலும் வாள்முனையில் குருதித்துளி என வரலாறு ததும்பி திரண்டு காத்திருக்கிறது. ஓர் அசைவு, ஒரு காற்று போதும்” என்று விறலி சொன்னாள். “அவ்வாறு நிகழ்ந்தது அந்த ஊண்மனைக் கொலை. நளன் வாள்தாழ்த்திய பின்னரே என்ன நிகழ்ந்தது என உணர்ந்துகொண்டார். மேலும் முன்னகர்வதே வழி என அவர் வாள் அவரிடம் சொன்னது. அவர் ஆணைக்கேற்ப காளகக்குடியினர் உணவை அள்ளி வாயிலிட்டு உண்ணத் தொடங்கினர். பெரும்பாலானவர்களுக்கு அன்னம் இறங்கவில்லை. மூச்சு திணறினர், இருமினர். நீரை எடுத்துக் குடித்து அதையும் விழுங்க முடியாது குமட்டல் கொண்டனர்.”
அகத்தளத்தின் சிற்றவையிலமர்ந்து சுதேஷ்ணையும் திரௌபதியும் விறலியின் கதையை கேட்டுக்கொண்டிருந்தனர். “அன்று பந்தியிலிருந்து எழுந்து சென்றவர்கள் பலரும் நடக்கமுடியாமல் படிகளில் கால்தளர்ந்து அமர்ந்தனர். சிலர் வெளியே வாயுமிழ்ந்தனர். சிலர் தேரிலேறி அமர்ந்ததும் கண்கலங்கி அழத்தொடங்கினர். செய்தி நகரெங்கும் பரவியதும் குடிகள் அனைவருமே நளனுக்கும் தமயந்திக்கும் எதிராகத் திரும்பினர். ஆனால் படைகளின் வாள்நிழலில் சொல்லெடுக்க எவராலும் இயலவில்லை. குடிக்கூடல்களில் முணுமுணுப்புகளாக, உறுமல்களாக எதிர்ப்புகள் எழுந்தன” என்றாள் விறலி.
புஷ்கரன் தன் அரண்மனைக்குச் சென்றதுமே கருணாகரர் சென்று அவனை வயப்படுத்த முயன்றார். மூத்தவனுக்கும் இளையவனுக்குமான பூசலை முடிந்தவரை சீரமைக்க எண்ணினார். ஆனால் புஷ்கரன் எவ்வகையிலும் செவிகொடுக்க சித்தமாக இருக்கவில்லை. குடித்தலைவரின் இறப்பு நிகழ்ந்த அந்நாளில் மணமங்கலம் நிகழமுடியாது என்று அவன் சொன்னான். காளகக்குடி மூத்தவர் எழுவர் சென்று தன் அகத்தளத்து அவையில் அவர்களை சந்தித்த தமயந்தியிடம் சீர்ஷரின் உடலை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரினர். அவள் அவரை அரசமுறைப்படி சிதையேற்ற தானும் உடன் வருவதாக சொன்னாள். அவர்கள் அதற்கு ஒப்பாமல் அந்த உடலை தாங்களே தங்கள் குலமுறைப்படி சிதையேற்றுவதாக சொன்னார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் விழிதொட்டுக்கொள்ளவே இல்லை.
“அவர் குடித்தலைவர். அவருடைய உடல் அரசச்செங்கோல் தாழாமல் சிதையேற முடியாது” என்றாள் அரசி. “இங்கே தெற்கு மயானத்தில் அவரை சிதையேற்றுவோம். அனைத்து ஏற்பாடுகளும் செய்யவேண்டும் என்று நான் கருணாகரருக்கு ஆணையிடுகிறேன். அரசியென நான் வந்து சிதைமுன் முடிதாழ்த்துகிறேன்.” அவர்கள் சொல்லில்லா முகத்துடன் நின்றனர். “குடியவை கூடுக! அரசுமேல் எத்தகைய பழிநிகரை அவர்கள் ஆணையிட்டாலும் அதை ஏற்கிறேன்” என்றாள். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். கருணாகரர் “ஏதேனும் ஒரு வழியை நாம் கண்டடைந்தே ஆகவேண்டும், குடித்தலைவர்களே” என்றார். “அதன்பொருட்டு எதற்கும் நான் ஒருக்கமே” என்று தமயந்தி சொன்னாள்.
அவர்களில் மூத்தவரான சுநீதர் “அதை நாங்கள் கூடிப் பேசி முடிவெடுத்து சொல்கிறோம். அதற்குமுன் சீர்ஷரின் உடலை எங்களிடம் அளிக்க ஆணையிடுக! அவரை நாங்கள் எங்கள் குடிமண்டபத்திற்கு கொண்டுசென்று வைத்து பிழைநிகர் செய்யவேண்டும். அதற்கு பன்னிரண்டு நிலை சடங்குகள் உள்ளன என்கிறார்கள். அதன் பின்னர் நாளை புலரியில் சிதையேற்றம் நிகழட்டும்” என்றார். “ஆம், உங்கள் குடியவை கூடி ஆவன செய்யட்டும். அது ஆணையிடும் எச்செயலுக்கும் அரசு ஒருக்கமாகவே உள்ளது” என்றாள் தமயந்தி. அவர்கள் அதை ஏற்று பிறவற்றை பின்னர் உரைப்பதாக உறுதியளித்து திரும்பிச்சென்றார்கள்.
சீர்ஷரின் உடலில் வெட்டுண்ட தலையை சேர்த்துப்பொருத்தி தையலிட்டனர் மருத்துவர். அதை கஸ்தூரியும் புனுகும் சவ்வாதும் பூசி சந்தனப்பேழையில் நிறைத்த நறுமணநீற்றில் வைத்து ஏற்றி காளகக்குடிகளின் குடிமண்டபத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அரசின் சார்பில் நளனின் உடைவாளை ஏந்தி சிம்மவக்த்ரன் செல்ல மணிமுடியின் இறகொன்றை தன் தலையில் சூடியபடி நாகசேனர் உடன் சென்றார். சீர்ஷரின் உடல் அரண்மனை வளைவை விட்டு பெருஞ்சாலையை அடைந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் குறுமுழவுகளையும் துடிகளையும் முழக்கி பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். காளகக்குடியினர் நெஞ்சில் அறைந்து அழுதபடி தேருக்குப் பின்னால் ஓடினர்.
கருணாகரரை அழைத்த அரசி “அங்கே குடியவை கூடட்டும். அதற்கு நானே மணிமுடியும் செங்கோலுமாகச் சென்று அவை நிற்கிறேன். அவர்கள் என்னை எச்சொல்லால் பழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். இத்தருணத்தை நாம் கடந்துசென்றே ஆகவேண்டும், அமைச்சரே” என்றாள். “ஆம், ஆனால் உடல் அங்கு சென்றதும் குடிகளின் உணர்ச்சிப்பெருக்கு சற்று நேரம் அலையடிக்கும். அது சற்று அடங்கட்டும். மூத்தார் அவையமர்ந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்ததும் தாங்கள் கிளம்பலாம்” என்றார்.
“அவர்கள் அரசர் வந்து பிழைபொறுக்கக் கோரவேண்டுமென விரும்புவார்கள். அரசரிடம் பேசி அழைத்துவருகிறோம் என்போம். அதற்கு நமக்கு இரண்டு நாட்கள் பொழுது கிடைத்தால் போதும். இப்போதுள்ள உணர்வெழுச்சிகள் இரண்டு நாட்களுக்குள் நுரையடங்குமென நினைக்கிறேன்.” தமயந்தி பெருமூச்சுவிட்டு “எண்ணிப் பார்க்கையில் அச்சம் சூழ்கிறது. நாமறியா ஏதோ தீயூழ் சூழ்வதுபோல” என்றாள். கருணாகரர் வெறுமனே தலைவணங்கினார்.
ஆனால் சீர்ஷரின் உடலை அவர்கள் குடிமண்டபத்தில் மக்கள் முன் வைக்கவில்லை. அரசப்படைகளிடமிருந்து அதை பெற்றுக்கொண்டு அப்படியே தட்டுத்தேர் ஒன்றில் ஏற்றிக்கொண்டு நகரைவிட்டு வெளியேறினர். அவர்களுடன் காளகக்குடிகளின் பெருந்திரள் சூழ்ந்து வெறிக்கூச்சலும் போர்விளியும் முழக்கியபடி சென்றது. சிம்மவக்த்ரன் புரவியில் திரும்பி வந்து தன் அறையில் நிலையழிந்து காத்திருந்த தமயந்தியிடம் செய்தியை சொன்னான். கருணாகரர் “மிகச் சிறந்த சூழ்ச்சி. அவ்வுடலுடன் அவர்கள் விஜயபுரிக்கு திரும்பிச் செல்வார்கள் என்றால் செல்லும் வழியெங்கும் காளகர் அவர்களுக்குப்பின் திரள்வார்கள். பிற குடியினரும் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றன. இறந்த உடல்போல மிகச் சிறந்த படைக்கொடி பிறிதில்லை” என்றார். “அவர்களை தடுத்து நிறுத்துவோம்” என்றார் நாகசேனர். “இல்லை, இத்தனை பெருங்கூட்டம் உடன்செல்கையில் அதை செய்ய முடியாது” என்றான் சிம்மவக்த்ரன்.
நாகசேனர் “இந்த எண்ணம் எவர் உள்ளத்தில் எழுந்தது? இத்தனை தெளிவாக திட்டமிட அங்கு எவருமில்லையே?” என்றார். “அது கலிங்க இளவரசியின் திட்டம்” என்றார் கருணாகரர். “அவளை கலிங்க அரசவையில் நான் முதலில் கண்டபோது அந்தச் சூழ்ச்சி எதையும் உணரமுடியாத மெல்லியள் என்று எண்ணினேன். அவள் அவையில் எழுந்து நின்று நீர்படர்ந்த விழிகளுடன் புஷ்கரரை அவளுக்குத் தெரியாது என்று சொன்னபோது பிறிதொன்றாக அது இருக்கவியலாதென்றே எண்ணினேன். பதினேழு அகவை முடிந்ததும் எந்தை என்னை அமைச்சுப்பணிக்குள் கொண்டுவந்தார். இங்கே அமைச்சனாக ஆகி நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் நான் கண்ட முகங்கள் பல ஆயிரம். என் கணிப்பு முற்றிலும் பிழையானது இவளிடம்தான்.”
தமயந்தி கசப்பான புன்னகையுடன் “அவள் இதை வகுக்கவில்லை, அமைச்சரே” என்றாள். கருணாகரர் “அரசி, அவள்…” என சொல்லத்தொடங்க “அவளால் சிறிய அடுமனை சூழ்ச்சிகளை மட்டுமே எண்ண முடியும். இத்தனை விரிவாக அரசசூழ்ச்சிகளை வகுக்க முடியாது. அதற்கு நிஷதகுடிகளின் அடுக்குகளை, அவர்களின் உணர்வுகளை, இங்குள்ள அரசியல் தருணத்தை நன்கறிந்திருக்கவேண்டும். அவளுக்கு நூலாயும் வழக்கமே இல்லை” என்றாள் தமயந்தி. “அவளுடன் பிறிதொருவன் இருக்கிறான். ரிஷபன் என்பது அவன் பெயர். அவன் வகுத்தது இது.” கருணாகரர் தயக்கத்துடன் “அவனா? அவனைப்பற்றி…” என்றார். “ஒற்றர்செய்திகள் எனக்கும் வந்தன. அவளுடைய கரவுக்காதலன். ஆனால் அது மட்டுமல்ல அவன் பணி. அவன் அவளை அருகிருந்து இயக்குகிறான்” என்று தமயந்தி சொன்னாள்.
“அவ்வண்ணமென்றால் நாம் இனிமேல் அவனுடன்தான் கருநீக்கி களமாடவிருக்கிறோம்” என்றார் நாகசேனர். “யாரென்று அறியாத ஒருவனுடன். அவன் எதற்கு இதை செய்யவேண்டும்? மாலினிதேவியின் கொழுநனாக அவனால் முடிசூட்டிக்கொள்ளமுடியுமா என்ன? அவனை காளகர் ஏற்பார்களா?” தமயந்தி “அவளை ஏற்கலாமே? புஷ்கரன் போரில் இறந்தார் என்றால் முதிராமைந்தன் ஒருவனை முடிசூட வைத்து அவள் அரசாளலாமே?” என்றாள்.
கருணாகரர் “அவன் கலிங்க மன்னர் சூரியதேவருக்கு அவருடைய முதிய அகவையில் நாகர்குலத்து இளவரசி ஒருத்தியில் பிறந்த மைந்தன் என்கிறார்கள் ஒற்றர். அவன் பானுதேவரிடம் அணுக்கனாக இளமையிலேயே வந்து சேர்ந்துகொண்டிருக்கிறான். அரண்மனையில் அவருடைய மைந்தன் போலவே வளர்ந்திருக்கிறான். அப்போதுதான் அவனுக்கும் மாலினிதேவிக்கும் உறவு அமைந்திருக்கிறது. அது உடன்பிறந்தார் உறவு என்றே அரண்மனையினர்கூட எண்ணுகிறார்கள். பானுதேவருக்கே அதை குறித்து சரியாகத் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் அங்கே அவருடைய அரசின் முதன்மை அரசுசூழ்வோனாக அவனே திகழ்ந்தான்” என்றார்.
“புஷ்கரனை வென்றெடுக்கும் சூழ்ச்சியேகூட அவனிடமிருந்து தொடங்கியிருக்கலாம் என்கின்றனர் நம் ஒற்றர். அவனுக்கு மகதம், வங்கம், அவந்தி, மாளவம் என அனைத்து அரசர்களுடனும் நேரடித்தொடர்பு உள்ளது. அவர்களின் ஒற்றர்களை அவன் நாள்தோறும் சந்தித்துக்கொண்டிருந்தான் எனத் தெரிகிறது” என்று கருணாகரர் சொன்னார். தமயந்தி “அவனைப் பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்துவர ஒற்றர்களை அனுப்பியிருக்கிறேன். அந்த நாககுலத்து அரசி என்பவர் யார் என்று அறிந்துவர தலைமை ஒற்றர் சமதரே சென்றிருக்கிறார்” என்றாள்.
செல்லும் வழியெங்கும் சீர்ஷரின் உடல் மன்றுவைக்கப்பட்டு காளகக்குடிகளால் அரிசியிடப்பட்டு வணங்கப்பட்டது. செல்லச்செல்ல அனைத்து நிஷதகுடிகளும் திரளலாயின. அவருடைய இறப்பைப்பற்றிய கதைகள் ஒன்றிலிருந்து ஒன்றெனக் கிளைத்து வளர்ந்தன. அனைத்து கதைகளிலும் எதிரியாக தமயந்தியே இருந்தாள். அவர் ஊண்நிரையில் தமயந்தியால் உரிய பீடம் அளிக்கப்படாது சிறுமைப்படுத்தப்பட்டார் என்றும் அதை எதிர்த்துப் பேசியபோது நளனால் கழுத்து வெட்டப்பட்டார் என்றும் எளிய கதையே முதலில் சொல்லப்பட்டது. அவர் கலிக்கு ஒரு பிடி அன்னம் எடுத்துப் படைத்து வணங்கியபின் உண்டதைக் கண்டு தமயந்தி சினந்து எழுந்து அவர் தலையை வெட்ட ஆணையிட்டாள் என்று அக்கதை உருமாறியது.
உணவுக்குமுன் அனைவரும் இந்திரனை வணங்கி அவன் மிச்சில் என எண்ணி அன்னத்தை எடுக்கவேண்டும் என்று புஷ்கரன் அறிவித்தபோது சீர்ஷர் மட்டும் வாளாவிருந்ததாகவும், அதைக் கண்ட புஷ்கரன் அவர் ஏன் இந்திரனை வணங்கவில்லை என்று கேட்டபோது கலியின் காலடிகளை அன்றி பிறிதொரு தெய்வத்தை அவர் வணங்குவதில்லை என்று அறிவித்ததாகவும், இந்திரனை அவர் வணங்கியாகவேண்டும் அது அரசாணை என புஷ்கரன் சொன்னதாகவும் ஒரு கதை சொன்னது. “என் தெய்வம் கரிநிறக் கலி. என் கொடி காகம். பிறிதொரு தெய்வமும் இல்லை. தலைக்குமேல் மற்றொரு கொடியும் இல்லை” என்று சீர்ஷர் சொன்னார். சினந்தெழுந்த தமயந்தி அவர் இந்திரனை வணங்காவிட்டால் அவர் தலை அப்போதே வெட்டி உருட்டப்படும் என அறிவித்தாள்.
“என் தலை உருளும், வணங்காது” என்றார் சீர்ஷர். அவருடைய தலையை வெட்ட அரசி ஆணையிட்டாள். வீரர்கள் எவரும் வாள் உருவவில்லை. நளனிடம் வெட்டும்படி சொன்னாள். அவன் திகைத்து நின்றான். “நீர் என் குழந்தைக்குத் தந்தை என்றால் வெட்டுக” என்று அரசி தன் மகன் தலைமேல் கைவைத்து ஆணையிட்டாள். “இல்லையேல் இக்கணமே இவனுக்கு நீர் தந்தை அல்ல என்று சொல்லிடுவேன்” என்றாள். நளன் வாளை உருவி சீர்ஷரை வெட்டினான். அவர் முகத்திலிருந்த புன்னகை வெட்டுண்ட தலையிலும் இருந்தது. அவர் உடல் அசையாமல் அப்படியே நின்றது.
அரசி அதை உதைத்துத் தள்ளும்படி நளனிடம் சொன்னாள். நளன் ஏழு முறை உதைத்த பின்னரே உடல் நிலத்தில் விழுந்தது. நளன் தலையை எடுத்து அரசியின் காலடியில் வைத்தான். அவள் அதை தன் கால்களால் தொட்டு உருட்ட அவள் பாதங்கள் குருதியால் சிவந்தன. “இந்திரனை வணங்கி அனைவரும் அன்னம் கொள்க!” என்று அரசி ஆணையிட்டாள். ஆனால் காளகக்குடித் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் “கலிதேவனே வாழ்க” என்று உரைத்து அவ்வுணவை எடுத்து உண்டார்கள். அதைக் கண்டு அரசி சினத்துடன் கூச்சலிட்டபடி எழுந்தாள். ஆனால் பிற குடிகளும் அதைப்போல கலியை வணங்கியபடி உண்ணத்தொடங்க அவளால் அங்கே நிற்கமுடியவில்லை. வெறிகொண்டு தன் ஆடையை கிழித்துவீசியபடி, அலறிக்கூச்சலிட்டபடி அவள் வெளியே ஓடினாள்.
அரண்மனை இடைநாழிக்கு ஓடி அவள் அங்கிருந்த வீரர்களிடம் “கலியை வணங்கும் அனைவரையும் கொல்லுங்கள்! அவர்களின் தலைகளை கொண்டுவாருங்கள்!” என்றாள். சிம்மவக்த்ரன் “கொல்லுங்கள். கலிவழிபாடு செய்பவர்களை கொன்று குவியுங்கள்” என வாளை உருவி ஆணையிட்டான். ஆனால் நிஷதவீரர்கள் அனைவரும் அசையாமல் நோக்கி நின்றனர். அரசி ஓசை கேட்டு ஓடிச்சென்று சாளரம் வழியாக நோக்கினாள். நகரில் உணவுண்ணக் குவிந்திருந்த பல்லாயிரம் குடிகள் ஒரே குரலில் “எங்கள் குலமாளும் தேவா, காகக்கொடி கொண்டவனே, கலிவீரனே வாழ்க!” என முழங்கி அன்னம் எடுத்து உண்ட ஓசை பெருமுரசுகளின் முழக்கமென எழுந்து அவளை சூழ்ந்தது.
தன் தலைமயிரைப் பிடித்து இழுத்து அவள் கூச்சலிட்டாள். தூண்களை ஓங்கி ஓங்கி உதைத்தாள். “எவரையும் விடப்போவதில்லை. கலிவணக்கம் செய்பவர் அனைவரையும் வேருடன் அழிப்பேன்” எனக் கூவினாள். அப்போது அவள் நிழலாக பின்பக்கச் சுவரில் ஒரு பேருருவம் எழுந்தது. அதைக் கண்டு அஞ்சி அவள் திரும்பி ஓடினாள். படிகளில் ஏறமுடியாமல் மயங்கி விழுந்தாள். “அவளை தூக்கிச்சென்றவர்கள் அந்த நிழல் சுவரில் அப்படியே ஓர் ஓவியமெனப் பதிந்து நின்றிருப்பதைக் கண்டு அஞ்சி ஓலமிட்டனர்” என்றாள் அக்கதையைச் சொன்ன முதிய விறலி. அதைக் கேட்டு நின்றவர்கள் கைகளைத் தூக்கி ஒரே குரலில் “குடிகாக்கும் கலிதேவனே, வாழ்க!” என கூவி வாழ்த்தினர்.
விஜயபுரிக்கான வழியில் சரபபதம் என்னும் ஊரில் சீர்ஷரின் உடல் வைக்கப்பட்டபோது வெறியாட்டு கொண்டெழுந்த முதிய பூசகர் ஒருவரில் சீர்ஷர் தோன்றினார். “என் குடி இந்நாநிலத்தை ஆளும். அதன்பொருட்டு முதற்பலியாவதற்காகவே நான் மண்ணில் எழுந்தேன். என் கடனை நான் விரும்பிச்சென்று முடித்தேன். என் குடிகளே, அஞ்சற்க! ஒருங்கு கூடுக! இனி நம் மூதாதையருக்கு மலரும் நீரும் தேவையில்லை. இனி படைக்கலமே உங்கள் வழிபாட்டுப்பொருளென்றாகுக! இனி நீங்கள் படைக்கும் அன்னம் எதிரிகளின் குருதி கலந்ததாக அமைக! இனி நிகழும் அத்தனை களத்திலும் என் குருதி உங்கள் காவல்தெய்வமென நின்றிருக்கும்” என்றார்.
நெஞ்சிலறைந்து அழுதனர் பெண்கள். ஆண்கள் வாள்களையும் வேல்களையும் தலைக்குமேல் தூக்கி போர்க்கூச்சலிட்டனர். அவை நடுவே நின்றிருந்த புஷ்கரன் தன் வாளை மும்முறை தலைக்குமேல் தூக்கி ஆட்ட அங்கிருந்த அத்தனை குடிகளும் கைகளையும் படைக்கலங்களையும் தூக்கி “நிஷதகுடி வெல்க! கலி வெல்க!” என்று முழக்கமிட்டனர். “இனி போர்! போர் மட்டுமே” என்றான் புஷ்கரன். “ஆம் ஆம் ஆம்” என்று அக்கூட்டம் அலைக்கொந்தளிப்பு கொண்டது. சீர்ஷருக்குப்பின் கோல்கொண்ட சுநீதர் தன் கைகளைத் தூக்கி “நம் குடி வெல்லும்! முதற்பலியைக் கொண்டது நம் குலதெய்வமே” என்றார்.
பன்னிரண்டாம்நாள் சீர்ஷரின் உடல் விஜயபுரியை சென்றடைந்தது. அதை மலைத்தேனிலிட்டு பதம் செய்து கொண்டுசென்றனர். அங்கே தெற்குக் காட்டில் அமைக்கப்பட்ட சிதையில் அவர் உடலை வைத்து நிஷதகுடிகளின் அத்தனை தலைவர்களும் வந்து வணங்கி கோல்தாழ்த்தினர். சுநீதர் தலைமையில் காளகக்குடியின் ஏழு முதியவர்கள் அவருக்கு நீரும் மலருமிட்டு வணங்க புஷ்கரனே அவர் மைந்தன் என்று அமைந்து அரிசியிட்டு அடிமலர் அணிவித்து துளைப்பானையால் சூழ்நீரூற்றி சடங்குகள் செய்தான். முடிமழித்து நீராடி வந்து எரியூட்டினான். எரியெழுந்ததை புகையினூடாகவே அறியும் அளவுக்கு நகரின் திறந்த வெளியெங்கும் நிஷதகுடிகள் செறிந்திருந்தார்கள். அவர்கள் எழுப்பிய வாழ்த்தொலி நெடுநேரம் எழுந்து அடங்கி அலையெனச் சூழ்ந்துகொண்டிருந்தது.
சீர்ஷரின் இறப்பு பதினாறுநாள் துயராட்டாக விஜயபுரியில் நிகழ்ந்தது. பெண்கள் வண்ண ஆடையும் அணியும் ஒழிந்து மலர்முடியாது ஒரு பொழுதுண்டு நோன்பிருந்தனர். ஆண்கள் முதற்புலரியில் எழுந்து நீராடி மலர் கொண்டுசென்று சீர்ஷரின் எரிகுழியிலிட்டு வணங்கினர். அவரைப் பற்றிய கதைகளும் பாடல்களும் பகலெல்லாம் அங்காடிமுனைகளிலும் தெருக்களிலும் திண்ணைகளிலும் அகத்தளங்களிலும் ஒலித்தன. அவற்றைக் கேட்டு அவர்கள் கண்கலங்கி நெஞ்சுபற்றி விம்மியழுதனர். சில தருணங்களில் அவர்களின் முதுபெண்டிரில் மூதன்னையர் வெறிகொண்டெழுந்து “குருதி! குருதி அளித்து தொழுக! கொடுஞ்சினம் கொண்டிருக்கிறோம்! குருதிவிடாய் கொண்டிருக்கிறோம்! குலமூத்தாரை பழி கொண்டவர்களின் குருதியுடன் எழுக நம் குலங்கள்!” என்று நின்றாடினர்.
ஒவ்வொரு நாளும் விஜயபுரியைச் சூழ்ந்திருந்த நிஷாதர்களின் ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் நிரைநிரையாக கிளம்பி வந்து நகரின் அனைத்து வெளிகளையும் நிறைத்தனர். முன்னரே வந்தவர்கள் கோட்டைக்கு வெளியே மலையடிவாரம் வரை விரிந்திருந்த புதர்க்காடுகளை அழித்து குடிலமைத்து தங்க, அங்கே ஒரு நகரமே உருவாகிவந்தது. அந்நகரம் பெருகிச்சென்று மலைச்சரிவை தொட்டது. பகலில் கோட்டைமேல் நின்று நோக்குகையில் அங்கே ஒரு பெரும்படை பாடிவீடமைத்திருப்பதுபோலத் தோன்றியது. இரவில் காட்டுத்தீ பற்றி சூழ்ந்திருப்பதுபோல விழிமயக்கியது. இரவும் பகலும் அதன் அவியா முழக்கம் கோட்டை அலையாழியால் சூழப்பட்டிருப்பதுபோல் எண்ணச் செய்தது. அவர்களுக்குரிய உணவுப்பொருட்களுடன் வந்த வண்டிகள் ஒவ்வொருநாளும் இருமடங்காயின. அவற்றை விற்கும் சந்தைகள் உருவாயின. அவர்கள் வழிபட சிற்றாலயங்கள் எழுந்தன. அன்னநிலைகளும் அறச்சாவடிகளும் அமைந்தன. அந்த மக்கள்திரள் நகரமென்றே ஆகி அவ்வாறே நிலைகொள்ளுமென விழியுண்மையாகத் தெரிந்தது.
பதினாறாம் நாள் சீர்ஷரின் எலும்புகளை ஈமச்சடங்கு செய்யும் பூசகர் வழிகாட்ட புஷ்கரன் எடுத்து பசும்பாலில் கழுவி சிறு கலத்திலிட்டு அரண்மனையின் தென்மேற்கு மூலையில் அமைக்கப்பட்ட சிறு பீடத்தில் கொண்டுவந்து வைத்தான். அதன் அருகே அணையா விளக்கு பொருத்தப்பட்டது. நகரை நிறைத்திருந்த நிஷதகுடிகளிலிருந்து பெண்கள் தாலங்களில் அரிசியும் மலரும் நெய்விளக்கும் ஏந்தி பலநூறு நிரைகளாக அரண்மனை முற்றம் நோக்கி வந்தனர். அவர்கள் அரிமலரிட்டு வணங்கி மீள்வதற்காக நூற்றெட்டு பீடங்கள் அமைக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் அங்கே நிஷாதர்களின் குடித்தெய்வங்கள் வெறியாட்டென எழுந்தன. “போர்! போர்!” என அவை அறைகூவின.
நாற்பத்தோராம் நாள் புஷ்கரன் சுநீதர் வழிகாட்ட, குடிப்பூசகர் உடன் வர நீராடி உடலில் ஈரம் சொட்ட வெண்ணிற ஆடை அணிந்து சீர்ஷரின் எலும்புகள் அமைந்த கலத்தை தலைமேல் ஏந்தியபடி பத்ரை நதிக்கு நடந்துசென்றான். அவனைச் சூழ்ந்து வெண்ணிறத் துணியை சுவரெனப் பற்றியபடி பூசகர்கள் சென்றனர். முழவுகளை இசைத்தபடி சாவுச்சூதர் உடன்செல்ல காவல்நிலைகள் அனைத்திலும் அரசமுரசுகளும் கொம்புகளும் முழக்கமிட்டன. செல்லும் வழியெங்கும் அவன் கால் தரையில் படாமல் துணிகளால் வழிப்பாவாடை விரித்தனர். அவன் செல்வதை இருமருங்கும் திரண்டு நின்று நோக்கிய நிஷதகுடிகள் நெஞ்சிலறைந்து அழுதனர். “எந்தையே! மூதாதையே! விண்நிகழ்பவரே!” என குரல்கள் எழுந்தன. அவன் கோட்டைக்கு வெளியே சென்றபோது அவனுக்குப்பின் அக்கோட்டை இடியோசை எழுப்பி முழங்கியது.
சீர்ஷரின் எலும்புகளை புஷ்கரன் பத்ரையின் பெருக்கில் இறங்கி நின்று மூழ்கி கரைக்கையில் அதன் இரு கரைகளும் மானுடர்களால் ஆன மலைகள் போலிருந்தன. அவர்கள் எழுப்பிய வாழ்த்தொலிகள் நீரில் அலைகளை எழுப்பின என்று தோன்றியது. புதுக் கலத்தில் பத்ரையின் நீரை அள்ளி தலையில் வைத்து ஆடையிலும் குழலிலும் நீர் சொட்ட எழுந்து கரைமீண்ட புஷ்கரன் “எந்தையே, சென்றுவருக! உங்கள் குருதி முளைத்தெழுக!” என்றபோது நெடுநேரம் ஐம்புலன்களையும் மூடி கண்களுக்கு நடுவே ஒளியலைகளை எழுப்பிய ஒலிக்கொந்தளிப்பு அங்கே நிலவியது. தலையில் பத்ரையில் அள்ளிய நீருடன் நகருக்குள் நுழைந்தபோது நகரம் அன்னையை கன்றென ஓலமிட்டு அவனை எதிரேற்றது.
புஷ்கரன் காளகக்குடி மூத்தாரும், பூசகரும், அமைச்சரும், அகம்படியினரும் சூழ தலையில் நீர்க்கலத்துடன் தென்றிசை மயானக்காட்டுக்குள் சென்றான். சுநீதர் குடிக்கோல் ஏந்தி முன்னால் நடந்தார். பூசகர் சீர்ஷர் எரிந்த சிதைக்குழியை பத்ரையின் நீரை ஊற்றி மலரும் அரிசியும் இட்டு மூடினர். அதன்மேல் சிறிய மேடென மண்குவிக்கப்பட்டு கனிமரம் ஒன்று நடப்பட்டது. அருகே ஓர் ஆள் ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் குடிமூத்தவர்களுக்குரிய நிலைக்கல்லை பன்னிரு பணியாளர்கள் இழுத்துவந்து அழுத்தி நட்டனர். நீரூற்றி இறுக்கி கல்லிட்டு நிறுத்தப்பட்ட நிலைக்கல்லுக்கு சிவப்பு ஆடை கட்டி மஞ்சளும் செந்தூரமும் பூசி மலர்மாலை சூட்டினர். அதன்முன் விரிக்கப்பட்ட காம்புடன் கூடிய முழு வாழையிலையில் பச்சை ஊனும், அப்பங்களும், நுரைக்கும் கள்ளும் படைக்கப்பட்டன. குடிமூத்தாரும் புஷ்கரனும் மலரும் நீரும் படைத்து நடுகல்லை வணங்கினர்.
அப்போது நகர் முழுக்க அனைத்து மணிகளும் முழக்கப்பட்டன. இல்லங்களில் இருந்த கைமணிகளையும் தட்டுமணிகளையும் தெருக்களில் கொண்டுவந்து ஒலித்தனர். நகரம் மணியோசையின் சரடால் நூறாயிரம் முறை என சுற்றிக் கட்டப்பட்டது. ஓசை அவிந்த பின்னரும் நெடுநேரம் அந்த மீட்டல் அவர்களின் செவிகளில் எஞ்சியிருந்தது. அன்றிரவு நகரில் எவரும் உணவுண்ணலாகாதென்று நெறி இருந்தது. அன்று நகரிலுள்ள அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டன. கரிய இருள் வந்து நகரை முழுமையாக மூடியது. இல்லையென்றே ஆகி இரவில் புதைந்தன கோட்டைகளும் காவல்கோட்டங்களும் மாளிகைகளும் மரங்களும். விழியென ஏதுமில்லை முகத்தில் என மயங்கிய சிறுவர் அழுதபடி அன்னையரை அணைத்துக்கொண்டனர். இருளுக்குள் அந்த மணியோசையின் கார்வை அலைகளாக எஞ்சியிருந்தது. தலைக்குள் தேனீ சுழல்வதுபோல ஓயாதொலித்தது. புலரிக்கதிர் எழுவதுவரை அவர்களனைவரையும் கரிய பட்டுநூலால் ஒன்றெனக் கட்டி வைத்திருந்தது.
நாற்பத்தொன்றாம்நாள் இரவு முழுத் துயில்நீப்புக்குப்பின் மறுநாள் புலரியில் ஏழு வகை இனிப்புகளும் ஐவகை கனிகளும் மூன்று வகை ஊனுமாக திரள்விருந்து நிகழ்ந்தது. மூன்று நாட்களாகவே அவ்விருந்தை ரிஷபனின் தலைமையில் விஜயபுரியின் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் ஒருங்கமைத்துவந்தனர். அன்றுவரை இருந்த துயரை அழுக்கு ஆடையை என கழற்றி வீசிவிட்டு உண்டாட்டில் திளைத்தனர் நிஷாதர். கூச்சலிட்டும் ஆர்ப்பரித்தும் ஒருவருக்கொருவர் உணவுப்பொருட்களை எடுத்து வீசியும் உண்டனர். உண்ணுதல் உணவின் மிகையால் ஊண்விளையாட்டென்று ஆகியது. உணவை அள்ளி ஒருவர்மேல் ஒருவர் வீசினர். உணவிலாடி உணவில் வழுக்கி விழுந்து உணவில் புரண்டனர். நகரம் புழு நிறைந்த உணவுக்கலம்போல மானுட உடல்களால் அலைநெளிபட்டது.
பின்னர் கள்மயக்கிலும் ஊண்மயக்கிலும் கால்தளர்ந்து கண்சரிந்த இடங்களிலேயே விழுந்து துயின்றனர். மறுநாள் முதலிருளில் அவர்களுக்குமேல் மென்மழைச் சாரல் ஒன்று பொழிந்தது. அதை குளிர்ந்த பட்டாடை ஒன்றின் வருடல் என, இறகுகளால் மூடும் பெரிய அன்னைப்பறவை என கனவுக்குள் கண்டு திகைத்து விழித்தெழுந்தனர். பின்னர் இடமும் காலமும் தெளிவுற களைத்துத் துவண்ட கால்களுடன் சென்று தங்கள் இல்லங்களுக்குள் படுத்துக்கொண்டனர். மறுநாள் பொழுது விடியவேயில்லை. வானைமூடி செறிந்த கருமுகில்களில் இருந்து தடித்த பட்டுச்சரடுகள்போல இறங்கிய மழை விழுதுகளென மண்ணில் ஊன்றி அசையாமல் நின்றது.
மழைபெருகி தெருக்கள் ஆறுகளென்றாயின. நகரெங்கும் குவிந்திருந்த மிச்சிலும் குப்பையும் கழுவிக்கொண்டுசெல்லப்பட்டன. அடுமனைக் கலங்கள் அனைத்தும் ஊறி தாங்களே தங்களை கழுவிக்கொண்டன. கூரைவிளிம்புகள் வெள்ளித் திரைகளென நின்று பொழிந்த நீர்ப்பரப்பை சூடியிருந்தன. தலைக்குமேல் மழையின் நில்லா பேரொலி. நீர்ப்பரப்பென்றான வானுக்குள் இடி மின்னி நீரை அனலென்றாக்கி அணைந்துகொண்டிருந்தது. இல்லங்களுக்குள் மரவுரிகளாலும் கம்பளிகளாலும் உடல்போர்த்தி அமர்ந்து விழிகள் மட்டுமே உயிருடன் எஞ்சியவர்கள்போல மழையை நோக்கிக்கொண்டிருக்கையில் அவர்கள் முன்பு நிகழ்ந்த அனைத்தையும் முற்றிலும் மறந்தவர்கள்போலத் தோன்றினர்.