ஒற்றைவரிக் கதைகள்

heminfg
ஹெமிங்வே

அன்புள்ள ஜெ,

இன்று உங்கள் வலைத்தளத்தில், கு மாரிமுத்து என்ற வாசகரின், மு வ பற்றிய உங்களின் நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு நீங்கள் அளித்திருந்த பதிலை (விவாதத்தை) படித்தேன். ‘எது இலக்கியம்’ என்று குழம்பும் என்னைப் போன்ற வாசகனுக்கு மிக நிறைவனா பதில் சொல்லும் கட்டுரை (விவாதம்). நான் இதை புக் மார்க் செய்து வைத்துக்கொண்டேன்.

http://www.jeyamohan.in/8739

‘எது இலக்கியம்’ என்று பேசும் இதே சமயம், உங்களிடம் நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைக்கும் கேள்விகளில் ஒன்றைக் கேட்கிறேன். எர்னஸ்ட் ஹெமிங்வே-யைப் (“For sale: baby shoes, never worn.”) பின்பற்றி ஆங்கிலத்தில் ஆறு வார்த்தைகளில் கதைகள் எழுதுபவர்கள் உண்டு. நானும் சில ஆறு வார்த்தைகள் கதைகளை தமிழில் முயற்சி செய்து நண்பர்களிடம் பகிர்வது உண்டு. உதாரணத்திற்கு கீழே பெண்ணை சமூகம் அவளைக் காணும் நிலையில் வைத்து எழுதியவைகள். அதற்கு மிகுந்த வரவேற்பும் உண்டு. ஒரு பக்கக் கதைகளையும் குமுதம், விகடன் பாணி கதைகளையும் பற்றிய உங்களின் மதிப்பீட்டை வாசித்திருக்கிறேன். அதை வைத்து நானாக ஒரு பதிலை அனுமானிக்காமல் உங்களின் நேரடி பதிலை எதிர்பார்க்கிறேன். எப்பொழுது உங்களுக்கு நேரம் இருக்கிறதோ அப்பொழுது பதில் சொல்லவும்.

***

வீட்டிலும் வேலை. அலுவலகத்திலும் வேலை. ஊதியம்தான் குறைவு.

***

எனக்குத் தேவை தோழன். சுற்றிலும் காதலர்கள்.

***

மணமகள் தேவைக்குள், ஒளிந்திருக்கிறது வேலைக்கு ஆள்.

***

விமானம் ஓட்டவும் தயார். எதிரில் நிற்பவர் நீங்கள்.

***

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

***

kafka

காஃப்கா

அன்புள்ள சௌந்தரராஜன்,

புனைவின் சாத்தியங்களை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையில் சோதனைசெய்து பார்த்திருக்கிறார்கள். குறுங்கதைகள் மட்டுமல்லாமல் ஒருவரிக்கதைகளும் உரைநடைப்புனைவு உருவான தொடக்க காலகட்டத்திலேயே உருவாகிவிட்டன. இக்குறுங்கதைகளுக்கான வாய்ப்புகளும் எல்லைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன

வாய்ப்பு என்னவென்றால் ஒருகணத்தை நோக்கி திறக்கும் ஓர் உள எழுச்சியை இவை புனைவாக ஆக்கமுடியும் என்பதுதான். அந்தக்கணத்தை வரலாற்றில், வாழ்க்கையின் ஒட்டுமொத்தப் பின்புலத்தில் பொருத்த வேண்டியதில்லை. அதற்கு முன்னும் பின்னும் எதுவும் நீளவேண்டியதில்லை. அது ஒரு ‘வடிவஒத்திசைவு’க்காகக் காத்திருக்க வேண்டியதில்லை

எல்லை என்னவென்றால் இவை கவிதையின் எல்லைக்குள் செல்கின்றனவே ஒழிய கதையாக நிற்பதில்லை. கதை என்பது ஒரு நிகர்வாழ்க்கை. கற்பனையால் நாம் அங்கே சென்று மெய்யான வாழ்க்கைக்கு நிகரான ஒன்றை, ஆனால் மேலும் ஒத்திசைவும் இலக்கும் உடைய ஒன்றை, வாழ்கிறோம். அவ்வாறு சென்றுவாழும் புனைவுவெளியாக இக்கதைகள் விரிய முடிவதில்லை. ஆகவே வாசகன் அடைவது ‘வாழ்ந்தறியும்’ அனுபவத்தை அல்ல. மாறாக ‘தெரிந்துகொள்ளும்’ அனுபவத்தை மட்டுமே.

ஆகவே இவ்வகைக் கதைகளில் ஒருவிதமான புத்திசாலித்தனம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். கதை கூர்மையாகும் தோறும் அது மேலும் வெளிப்படும். நல்ல கதையில் ஆசிரியன் முக்கியமல்ல, அப்புனைவுவெளி நாம் உருவாக்குவது. இத்தகைய கதைகளில் அவ்வரிகள் ஆசிரியன் கூற்றாகவே எப்போதும் நம் உள்ளத்தில் நின்றுகொண்டிருக்கின்றன.

இவை கவிதையின் சாத்தியக்கூறை கையிலெடுத்துக் கொள்கின்றன என்றேன். கவிதைக்கு மொழியொருமை ஒன்று உண்டு. அது அச்சொல்லிணைவாகவே நினைவில் நின்றிருக்கக் கூடியது.இவை பலசமயம் அவ்வாறு நினைவில் நின்றிருக்காமல் அந்த ‘கருத்தா’கவே நினைவில் எழுபவை. ஆகவே இவற்றை மாற்றுக்குறைவான கவிதைகள் என விமர்சகர் கூறியிருக்கிறார்கள்

கணிசமான கவிஞர்களின் உலகில் இத்தகைய கதைவரிகள் உண்டு

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்?
ஒரு காப்பி சாப்பிடலாம் வா

என்ற தேவதேவனின் வரி நினைவுக்கு வருகிறது. ஆனால் இவ்வரியாகவே நினைவிலெழுமளவுக்கு ஓசையொழுங்கு ஒன்றை அடைந்திருக்கிறார்

இவ்வகை வரிகளை ஹெமிங்வே முதல் ஜான் அப்டைக் வரை பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் எண்பதுகளில் நான் வாசித்த பலநூறு கதைவரிகளில் மிகப்பெரும்பாலானவை இன்று சுத்தமாக மறந்துவிட்டன. என் வாழ்க்கையில் பிறிதொருமுறை நினைவுகூராத ஆனால் வாசித்தபோது ஆகா என்ற கூர்வரிகள் பல. அவை என்னை எவ்வகையிலும் பாதிக்கவில்லை என உணர்கிறேன்

ஆனால் தத்துவஞானிகளின் பல வரிகள், கவிதைவரிகள் இன்றளவும் நாளுமென உடன்வருகின்றன. நடராஜ குருவின் There is a lurking paradox in the heart of absolute என்னும் வரி ‘Waves are nothing but water. So is the sea.’ என்ற ஆத்மானந்தரின் வரி. ‘அறிவுக்கு அதிருண்டு எதிருண்டு, அறிவில்லாய்மைக்கு ரண்டுமில்ல’ [அறிவுக்கு எல்லையுண்டு, எதிர்ப்பக்கமும் உண்டு. அறியாமைக்கு இரண்டுமில்லை] என்னும் நாராயணகுருவின் வரி. Logic takes care of itself என்ற விட்கென்ஸ்டீனின் வரி Seek simplicity but distrust it என்ற ஏ.என்.வைட்ஹெட்டின் வரி என எப்படியும் நூறு வரிகளைச் சொல்வேன். பலவற்றை நான் சொல்லிக்கொண்டே இருப்பதைக் காணலாம்.

அந்த அளவுக்கு நினைவில் நின்ற ஒற்றைவரிப் புனைவுகள் என்றால் காஃப்காவுடையதுதான். குறிப்பாக ”For we are like tree trunks in the snow. In appearance they lie sleekly and a little push should be enough to set them rolling. No, it can’t be done, for they are firmly wedded to the ground. But see, even that is only appearance” அதை நான் மேற்கோள்காட்டுவதுண்டு, எனக்கே உரிய சின்னச்சின்ன மாற்றங்களுடன் மற்றபடி ஹெமிங்வே வகையறாக்களின் ஒரு வரி கூட நினைவில் எழுவதில்லை. எவரேனும் சொன்னால் நினைவுக்குவரும், அவ்வளவுதான்

குட்டிக்கதை புத்திசாலித்தனத்தால், அதையொட்டி எழும் ஒருவகையான தர்க்கப்பார்வையால், அல்லது விகட உணர்வால் உருவாக்கப்பட்டால் அதன் மதிப்பு சொல்நகை [wit] என்ற அளவில் மட்டுமே. அது இரண்டுவகையிலேயே முக்கியமானதாக ஆகமுடியும். ஒன்று ஓர் உண்மையான காட்சியில், அனுபவத்தில் நிகழ்ந்த உண்மையான திறப்பு அத்தருணத்திலேயே மொழியைச் சென்று தொட்டுவிடுவது. அது ஒரு ஸென் வெளிப்பாடு.

அல்லது காஃப்கா போல அந்த எழுத்தாளனின் ஒட்டுமொத்த இலக்கியப்பரப்பின் பின்புலத்தில், அவன் வாழ்க்கையின் பின்புலத்தில் அர்த்தப்படுவது.

ஜெ

 

முந்தைய கட்டுரைஷண்முகவேல் ஓவியங்கள்- காப்புரிமை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64