வேதங்கள், மந்திரங்கள் என்றாலே அது எனக்கானது இல்லை , வேறு யாருக்கோ என்ற மனநிலையில் இருந்தேன். இக்கட்டுரை படித்த பிறகு வேதங்களில் மந்திரங்களில் பொதிந்துள்ள பொக்கிஷங்களை தேடி செல்ல மனம் விரும்புகிறது. இப்பொழுதெல்லாம் ஒரு கதையோ, கவிதையோ, கட்டுரையோ படிக்கையில், அதன் மொத்த சாராம்சத்தை உள்ளடக்கிய ஒரு சொல் அதனுள் இருக்கிறதா என்று மனம் துழாவுகிறது. சமீபத்தில் அறம் தொகுதியில் உள்ள “மத்துறு தயிர்” சிறுகதையை மீண்டும் படிக்க நேர்ந்தது.
முதல் வாசிப்பில் இந்த சிறுகதை குரு சிஷ்யன் பற்றிய கதை என்று நினைக்க, இரண்டாம் வாசிப்பில் ‘ராஜபிளவை’ எனும் சொல் மேலும் மேலும் பிளந்து பிளந்து , விரிந்து விரிந்து பல பிரபஞ்சங்களை திறந்தது. குரு-சிஷ்யன் பிரிவு, காதலன்-காதலி பிரிவு, கணவன் (ராமன்) – மனைவி (சீதை) பிரிவு, மேய்ப்பனை பிரிந்த ஆட்டுக்குட்டி, பரமாத்மாவை பிரிந்து தத்தளிக்கும் ஆத்மா என்று பிரிவின் துயரத்தின் பல்வேறு பரிமாணங்களை , ஆழங்களை, அகலங்களை காண்பிக்கிறது “மத்துறு தயிர்”.
பால் தயிராக வேண்டும் என்றால் சிறிதளவு தயிர்/உறை மோர் எடுத்து பாலில் விடுகிறோம். அது போல் குருவின் சிறு பகுதி சிஷ்யனுக்குள் நுழைந்த பிறகு பல மாற்றங்கள் நிகழ்கிறது. பால்->தயிர்->நெய்->தீபம்->ஒளி எனும் அற்புத பயணம் சில சமயம் ஊழ்வினையால் முழுமை அடையாமல், பயணத்தின் திசை மாறி இருளில் முடிந்து விடுகிறது. கதையின் நாயகன் கடைசி வரியில் குருவை மானசீகமாய் வணங்கி விட்டு இருளில் சென்று மறைகிறார். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி “இருளிலிருந்து ஒளிக்கு” என்கிற “அமிர்த சொல்” மட்டுமே என்று நம்புகிறேன்.
நன்றி.
அன்புடன்,
ராஜா,
சென்னை.
***
அன்புள்ள ராஜா,
ஒரு குறிப்பிட்ட மனநிலை அமைவதுவரை சில விஷயங்கள் திறந்துகொள்வதில்லை. அதற்காகக் காத்திருக்கவேண்டியதுதான். தொடங்குக
ஜெ
***
அன்புள்ள ஜெ
அமுதமாகும் சொல் சுருக்கமான அழகான கட்டுரை. விரிவான கட்டுரைகளை எழுதுபவர் நீங்கள் என்கிறார்கள்.குறைவான சொற்களில் ஒரு விஷயத்தை முழுமையாகவே விளக்கும் செறிவான கட்டுரைகள் பலவற்றை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். காந்தியம் என்றால் என்ன என்ற சுருக்கமான கட்டுரை, தமிழ் தி ஹிந்துவில் வெளிவந்தது, அத்தகைய கட்டுரை. தடம் இதழில் வெளிவந்த உணர்கொம்புகள் கட்டுரையும் அப்படிப்பட்டது. ஆனால் அமுதமாகும் சொல் ஒரு கிளாஸிக் உதாரணம். மிகச்சுருக்கமான கட்டுரை இது. ஆனால் சொல்லவேண்டிய எல்லாமே சொல்லப்பட்டுள்ளது. சொல் எப்படி மந்திரமாக ஆகும் என்றும் அது நவீன வாழ்க்கையில் எப்படி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்லி இரண்டுவகையான மந்திரங்களையும் விளக்குகிறீர்கள். முக்கியமான திறப்பு அது
ராமச்சந்திரன்
***