விருதுகள் மதிப்பீடுகள்
இலக்கியவாதி வளர்கிறானா?
அன்புள்ள ஜெ,
கவிஞனுக்கு ‘வளர்ச்சி’ என்பது இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் மனுஷி பிற்காலத்தில் கவிதை எழுதக்கூடும் என்கிறீர்கள். முரண்படுவதற்கு கொஞ்சகால இடைவெளியை நீங்கள் எடுத்துக்கொள்ளலாமே?
சதீஷ்குமார்
***
அன்புள்ள சதீஷ்
அந்தக்காலத்தில் கருப்பையா மூப்பனார் என்ன கேட்டாலும் ‘நல்லகேள்வி’ என்று சொல்லிவிட்டுக் கடந்துசெல்வார். அதைத்தான் செய்யவேண்டியிருக்கிறது
கவிதை பற்றிய அந்த உரையில், அதைத் தொடர்ந்த விளக்கத்தில் திரும்பத்திரும்ப ஒன்றைச் சொல்லியிருக்கிறேன். கவிஞனுக்கு அவன் ’தன்னைக் கண்டடையும் காலகட்டம்\ ஒன்று உண்டு. தன் மொழியை, படிமங்களை, தரிசனங்களை அவன் அப்போது தேடிக்கொண்டிருப்பான். அக்காலகட்டத்தில் அவன் கவிஞனாக வெளிப்பட்டிருக்க மாட்டான், ஆனால் சாத்தியங்களாக வெளிப்படுவான். தேவதேவனுக்கு குளித்துக்கரையேறாத கோபியர்கள் என்னும் முதற்தொகுதிபோல என உதாரணமும் காட்டியிருந்தேன். அவர் வெளிப்பட்டது இரண்டாவது தொகுதியான ‘மின்னற்பொழுதே தூரத்தில்’தான் மனுஷியின் கவிதைகளில் எனக்கு அவர் கவிஞராக எழுவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன. போதுமா?
என் தலையெழுத்து நான் எல்லாவற்றையும் முப்பதுமுறை விளக்கவேண்டியிருக்கிறது. ஆகவே இந்தக் குறிப்பின் முதல்வரியை மீண்டும் படிக்கும்படியும் இருபத்தொன்பதுமுறை திரும்ப வாசிக்கும்படியும் அன்புடன் கோருகிறேன்
ஜெ
***