கடிதங்கள்

nanjil me

அன்புள்ள ஜெ,

நலமா!  நான் உங்களின் ஆரம்ப நிலை வாசகன் ,  நான் உங்களின் வாசகன் ஆவதற்கு மூல காரணம் தங்களின் தனிமனித அறமும் அது சார்ந்து இயங்கும் உங்கள் வாழ்வும் எழுத்தும், ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே உங்கள் வலை பக்கத்தை தொடர்ந்து வசிக்கும் ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்,காரணம் அணைத்து கட்டுரைகளிலும் வெளிப்படுவது அறம்சார்ந்த உணர்வும் , லட்சியவாத நோக்கும் போலித்தனமற்ற உண்மையும். குறிப்பாக உங்களின் அறம் சிறுகதையில் நீங்கள் முடிவாக வைக்க கூடிய அந்த சொல் “ஆமா அறம்தான். ஆனா அது அவகிட்ட இல்ல இருந்தது “என்று முடித்திருப்பீர்கள் ஆமாம் உண்மைதான் அறம் மேண்மையானதுதான் அனால் அது அனைவரிடமும் இருப்பதில்லை.முடங்கிப்போன இந்த வாழ்வின் மறந்துபோன அறத்தை மட்டும் உங்கள் கதைகள் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. அறம் சார்ந்த சொல்லையும் பொருளையும் நானும் பின் தொடருகிறேன்.மேலும் உங்களின்  வணங்கான், நூறு நாற்காலிகள்,

ஓலைசிலுவை இவை அனைத்தும் லட்சியவாதத்தை விதைக்கிறது.உங்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது, மேலும் வாசிப்பேன்.தங்களின் எழுத்து பனி தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ந முரளி .

***

அன்புள்ள முரளி,

தொடர்ந்து வாசியுங்கள். என் எழுத்துக்களை வாசிப்பதென்பது என்னுடன் நீண்ட உரையாடல் ஒன்றை தொடங்குவதுதான்.

ஜெ

***

ஜெ அவர்களுக்கு

வணக்கம்..

உங்களுக்கு அஞ்சல் அனுப்பினால், இது பிரசுரத்திற்கு அல்ல என்று ஒரு வரி சேர்க்க வேண்டுமா??

இப்படியா ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே போடுவீர்கள்..

குறுந்தொகை உரை கேட்டேன்…

மிக அழகாய் மலர்கள் பற்றி கூறினீர்கள்…

ஒரு புதுமண ஜோடியைப் பார்த்தது பற்றி கூறினீர்களே… என்ன அழகாய், அப்பெண் அவன் மேல் ஒரு சால்வையைப்போல் இருந்தாள் என்றீர்கள்..

குறுந்தொகை படிக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் உரை..

நன்றி

பவித்ரா

***

அன்புள்ள பவித்ரா

பொதுவாக கடிதங்களை ஓர் உரையாடலின் பகுதியாகவே நான் எண்ணுகிறேன். ஆகவே அவை வெளியிடப்படவேண்டாம் என்று சொல்லப்படாவிட்டால் வெளியாகிவிடும்

ஏனென்றால் எழுதுவோர் சிலர். எழுத நினைப்பவர்கள் பலர். எழுதாதவர்கள் கடிதங்களின் தங்கள் குரலை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்

ஜெ

***

வணக்கம்

அவ்வப்போது உங்கள் எழுத்துக்களைப் படிப்பேன்.

ஆதிகேசவப்பெருமாள் தொடங்கி அறத்தைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பது அருமை.

உங்களைப்போன்ற சிந்தனாவாதிகள் ஆரோக்யத்துடன் பல ஆண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

வாசுதேவன்  எஸ்

***

அன்புள்ள வாசுதேவன்

நன்றி.

எழுத்தினூடாக எதையும் சொல்லவில்லை, தேடுகிறேன் என்றே உணர்கிறேன்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36
அடுத்த கட்டுரைவெளி