ஆனந்தக் குமாரசாமி – தமிழ் விக்கி
வணக்கம்..
இந்தக் கட்டுரை படித்தேன்..
மிக அழகாக, நுணுக்கமாக நாம் நம் பெருமையை திரும்பிப் பார்க்காமல், அருமை தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லி இருக்கிறீர்கள்..
இந்தியக்கலையின் தனித்தன்மையைக் குறித்த சிந்தனைகளைத் தொடங்கிவைத்த ஆனந்தக்குமாரசாமியின் சிவநடனம் ஒரு முன்னோடி நூல்
இது எனக்கு மிகவும் புதிய தகவல்.. படிக்கிறேன்..
அவர் என்னிடம் “இதைப்பற்றி இங்கு என்ன எழுதப்பட்டுள்ளது?” என்றார். நான் சொல்லத் தொடங்குகையில் “அதெல்லாம் பழையவரிகள். நவீன இலக்கியத்தில், தத்துவத்தில்?” என்றார். “இதுவரை சொல்லப்படாததாக என்ன உள்ளது?”
இதில் சொல்லும் விஷயம் எப்படிப்பட்டது என்பது பிடிபடவில்லை..
எனக்குப் புரியும்படியாக, வேறு ஏதேனும் உதாரணத்துடன் விளக்க இயலுமா..
அதாவது இது போன்ற பழமை குறித்து, வேறு எங்காவது நவீன வடிவப் பதிவு இருப்பது பற்றி..
குறிப்பு: கட்டுரையில் இருக்கும் புகைப்படச்சிற்பம் ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உள்ளது என நினைக்கிறேன்..
நன்றி
பவித்ரா.
***
ஜெமோ,
“உணர்கொம்பு”. பயணத்தின் முதல் தலைப்பே அருமையாக என்னை உள்வாங்கிக் கொண்டது. தடத்தில் என் ஆதர்ச எழுத்தாளரைக் காண்பது, தடம் மேல் நான் வைத்திருக்கும் மதிப்பை கூட்டியிருக்கிறது.
“பார்ம்பரியத்தை உதாசீனப்படுத்தும் சமூகம், நவீனத்தில் எந்தப் புதுமையையும் அடைவதில்லை. அச்சமூகம் தேங்கித்தான் போகும். மரபுகளை மீறும் சமூகத்தை விட, அதை அறியாத சமூகமே பரிதாபத்திற்குரியது”.
“நவீனத்தின் விதைகள், மரபில் தான் உள்ளன என்பதைக் கண்டுகொண்ட தேசங்கள் ஒரு முழுமையான வளர்ச்சியை எட்டிப் பிடித்தன. “
இது தான் உணர்கொம்புகளின் சாராம்சம் (எல்லாம் தங்களிடம் இருந்து கற்றுக் கொண்டது) என்று எண்ணுகிறேன்.
“தேனீக்களின் உணர்கொம்புகள் தான் பூக்கள்”, “புலிகளின் உணர்கொம்புகள் தான் காடு” என்ற வரிகள் புனைவு போல தோன்றினாலும், அத்வைதத்தை பூடகமாக உணர்த்தியுள்ளீர்கள் என்றே அவதானிக்கிறேன்.
சமீபகாலமாக இங்கு நடக்கும் விஷயங்களை உற்று நோக்கும்போது, உணர்கொம்புகள் சீவப்பட்டவர்கள் தான் களத்தில் இருப்பது போல் உள்ளது. சாதியமும் மதமும் தான் அவ்வுணர்கொம்புகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளதோ? என ஒரு ஐயம் எழுகிறது.
உணர்கொம்புகளை இழக்காதவர்கள், தங்களைப் போன்று, இலக்கியத்திற்குள் தீவிரமாக இயங்குவதில்லையோ என்ற ஐயமும் எனக்குண்டு.
அன்புடன்
முத்து
குறிப்பு: இக்கடிதத்தை தடத்திற்குதான் நேரடியாக எழுதலாம் என்றிருந்தேன். அதுதான் முறையும் கூட. ஆனால், நான் எழுதிய ஒரு எதிர்வினை( சுகுணா திவாகர் மணிரத்னத்தை பற்றி எழுதியதற்காக) அனுப்பி ஒரு வாரத்திற்கு பின்பு receiver inbox ல் இடமில்லை என்று திரும்பி வந்து விட்டது. ஆதலால் உங்கள் மின்னஞ்சலுக்கே இக்கடிதத்தை எழுதியிருக்கிறேன்.|தடத்திற்கு copyயும் செய்திருக்கிறேன்.
நத்தையின் பாதை 1
***