ஜெ,
ஞானிக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட விவாதத்தில் நான் கலந்துகொள்ளலாமா என்று தெரியவில்லை.இருந்தாலும் சில ஐயங்கள். ஏராளமாக வாசிக்கும் ஞானியைப்போன்றரொருவரால் மதம் சார்ந்து ஆப்ரிக்காவில் உருவாக்கப்பட்ட பேரழிவுகளும் சிதைவுகளும் ஏன் கண்ணில் படவில்லை?
தெற்கு கொரியாவில் கடந்த ஐம்பதாண்டுகளாக பௌத்தம் அழிவை நோக்கி தள்ளபப்ட்டது. விளைவாக பௌத்த பாரம்பரியத்தின் புராதன பண்பாட்டுச்சின்னங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. கிறித்தவபோதகர்கள் இந்தியாவிலேயே பௌத்தம் ஒரு செத்த மதம் என்று சொல்லி அந்தக் கலாச்சார அழிவை நியாயபப்டுத்துகிறார்கள். இன்று 85 சதவீதம் கெற்றியர்கள் கிறித்தவர்கள். ஏன் இபப்டி நடந்தது என்றால் கம்யூனிசம் பரவுவதை தடுக்க ஏகாதிபத்தியம் கிறித்தவத்துக்கு நிதியளித்து உதவிசெய்தது. அதாவது அரசியல் காரணங்களால் பண்பாடுகள் அழிக்கபப்டுகின்றன. இதையெல்லாம் ஞானி ஆதரிக்கிறாரா என்ன? இத்தனை பெரும் செல்வம் அள்ளியிறைக்கப்படும்போது இதெல்லம் ஏசுவின் சொற்களை பரப்புவதற்காக மட்டுமே என எப்படி நம்புவது?
மேலைநாட்டில் அங்குள்ள ஏழைகளை எப்படி கிறிஸ்தவம் மீட்டது? உண்மையில் மேலைநாட்டில் இடதுசாரி தொழிற்சங்க இயக்கமும் சமூக அரசியலியக்கங்களும் உருவான பிறகே அங்குள்ள ஏழைகள் உரிமையும் வாழ்க்கையும் பெற்றார்கள் என்பதே வரலாறு. சேவை என்ற பேரில் கிறித்தவர்கள் மூன்றாமுலகுக்குக் கொண்டுவந்த கருத்துக்கள் அனைத்துமே இடதுசாரிகளால் உருவாக்கப்பாட்டு இவர்களால் கடன்வாங்கபப்ட்டவை மட்டும்தான். ஐரோப்பியவரலாற்றை எடுத்துப்பார்த்தால் கிறித்தவம் அங்குள்ள பண்பாட்டுப்பன்மையை அழித்தது. அந்த அழிவின் முகங்கள் பற்பல.
நம் நாட்டில் ஏழைகளின் மீட்பைப்பற்றி பேசவேண்டுமென்றால் அதை சமூக- பொருளியல் அடிப்படையில் பேசுவோம். அந்த தளத்து இயக்கங்களே உண்மையான தீர்வைக் கொண்டுவர முடியும். மதம் மூலம் அல்ல. தான் பிறந்த இடத்திலேயே சமூக பொருளியல் அமைப்பை மாற்றமுடியாமல் தோற்றுப்போன ஒரு நிறுவனம் எப்படி நம்முடைய சமூக பொருளியல் அமைப்பை மாற்றமுடியும் என நாம் வாதிடுகிறோம்?
ஞானி போன்ற அறிஞர்கள் தவறும் ஒரு இடம் உண்டு. உங்கள் ஆய்வுகளினால் நீங்கள் உத்தேசிக்கும் நன்மை என்ன? உங்கள் ஆய்வின் நோக்கம் என்ன? சமூக பொருளியல் இயக்கங்களின் சிக்கலான உள்ளியக்கங்களைப் புரிந்துகொள்ளும் கருவிகள் உங்களிடம் உள்ளனவா என்ன? அர்த்தமில்லாமல் அவரலாற்றை ஆராய்வதன்வழியாக எனன் நடக்கவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழியம் என்பதெல்லாம் இம்மாதிரி அவசரக்கோலமாக சாதிய வெறுப்பை உள்ளடக்கமாகக் கொண்டு எழுதிவைக்கவேண்டிய விஷயங்கள் அல்ல, இன்று உலக அளவில் தமிழைப்பற்றிப் பேசுபவர்கள் அனைவருடைய பங்களிப்பையும் கருத்தில்கொண்டுதான் பேசுகிறார்கள். அந்த முதிர்ச்சியை நாம் ஞானி போன்றவர்களிடம் எதிர்பார்க்கலாமா
இளங்கோ கல்லானை
**
ஐயா,
திரு. ஞானி அவர்களுடனான உங்கள் கருத்துப்பரிமாற்றங்களை படித்தேன்.
இந்தியா States of Nation ஆ அல்லது Nation of States ஆ என்ற குழப்பம் பலரையும் பலவிதத்தில் பாதித்துவிடுகிறது. தேசத்திற்கும் நாட்டிற்குமுண்டான வித்யாசம் குறித்த புரிதலிலேயே தொடங்குகிறது இவ்விவாதங்கள். இந்தியா என்றொரு தேசம்,ஆங்கிலேயர் உருவாக்கித்தந்த ஒரு படிமம் என்ற விதத்திலேயே அனைவரும் யோசிக்கத்துவங்கிவிட்டனர் என்றே தோன்றுகிறது.பாரதம் என்ற பெயரை மூடி இப்போதெல்லாம் இந்தியா என்ற பெயராலே குறிப்பிடப்பட்டு, இந்த மண் சார்ந்த வரலாற்றுடன் இந்நாட்டிற்குண்டன தொடர்பை அறுத்துவிட்டதிலிருந்து துவங்குகிறது என்றே சொல்லலாம். இந்தியா என்றழைக்கப்படும் இந்நாடு முன்பிருந்தே, கலசார ரீதியான ஒற்றுமையும், கடவுள் நம்பிக்கை சார்ந்த சிந்தனைகளாலும், தத்துவம் சார்ந்த முனைப்புகளாலும் எப்போதும் ஒரு தேசமாகவே இருந்துவருவதாக நினைக்கிறேன். பல நாடுகள் இருந்திருந்தபோதிலும், பாரதம் ஒரு ஒருமித்த தேசமாகத்தான் இருந்திருக்கிறது. இத்தேசத்தையும், மக்களையும், இதன் கலாசாரத்திலிருந்து பிரித்துப்பார்ப்பது என்பது இயலாது என்று நினைக்கிறேன். அதே சமயம் இன்னமும், ஆரியம், திராவிடம்
என்று புலம்பிக்கொண்டிருப்பதும் பிரிவினை பேசுவதும் எவ்விதத்திலும் நன்மைதருவதும் அல்ல. யாரிடம் இருந்து வருகிறது என்பதைவிட என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்பதிலேயே நாம் உண்மையை கண்டறியமுடியும் அல்லவா?
இப்போதெல்லாம் இனம் என்ற சொல் பத்திரிக்கைகளிலும், பற்றாளர்களாலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறது. Racism பேசும் அளவு நாம் தரம் தாழ்ந்திருப்பதையும், பயத்தையும் காட்டுவதாக இருக்கிறது. ஏதேனும் ஒன்றால் தான் மிகவும் தனித்துவம் உள்ளவனாகவோ அல்லது சிறப்பானதாகவோ காட்டிக்கொள்ள ஏதேனும் ஒன்றுடன் அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் இருப்பதாகப்பட்டது. அந்த அடையாளத்தை விடமுடியாமல், குழந்தைகளின் கரடி பொம்மை போல வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை நான் என் நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பெயர் என்பதே ஒரு அடையாளம்தான். அதை களைவது சாத்தியமில்லாமல் போய்விட்டது நமது துரத்ருஷ்டம் தான் என்று. உங்கள் மின்னஞ்சல் முகவரி குறித்து சொல்லும்போதுகூட சொன்னேன், ஜெயமோகன் என்றாலே அனைவருக்கும் தெரியும், ஏன் எழுத்தாளர் என்று அடைபட்டுக்கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை, ஒருவேளை அவர் பெயர் மட்டுமிருக்கும் மின்னஞ்சல் முகவரி கிடைத்திருக்காது என்று.
ஒரு மொழி, இனம், மதம் சார்ந்த சிந்தனைகளை நான் விரும்புவதில்லை. ஆயினும் அது வெறுப்பாக வளராமலிருக்க நாம் உள்ளூர வளரவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனாலும், அது ஒரு எதிர்க்காலத்திற்கான சிந்தனையாக மட்டுமே தெரிகிறது. ரியாலிடியை பார்க்காமல் அனைவரும் சமம், அனைத்து மதமும் இனமும் நம் சகோதர சகோதரிகள் என்று சொல்லிக்கொண்டிருப்பது, இயலாமையின் அல்லது புறக்கணிப்பின் பயமா அல்லது இவ்விதத்தில் அடையாளப்படுத்தப்படுவதை ஏற்கிறோமா என்று புரியவிலை. இப்போதெல்லாம் முடிந்தவரை யாரையும் மதிப்பீடு செய்யாமல் இருக்க முயன்று வருகிறேன். ஏனெனில் அடுத்தவரை மதிப்பிடும் போது என்னைத்தான் மதிப்பிடுகிறேன் என்று தோன்றுகிறது. இருப்பினும், ஞானி அவர்களின் கருத்துகளோடு சுத்தமான என்னால் ஒத்துப்போக முடியவில்லை. அவரை பாசிஸ்ட் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தது எனக்கு வருத்தத்தையே அளித்தது. உண்மையில் அவர் ஒரு ரேஸிஸ்ட் என்பதே சரியாக இருக்கமுடியும். கம்யூனிச சிந்தனையும் பாசிசமும் ஒரே இடத்தில் இருக்கமுடியாதல்லவா? இதுகுறித்த உங்கள் மற்ற கருத்துக்களுடன் முழுவதும் ஒத்துப்போகிறேன் என்பதைத்தவிர என்ன சொல்லிவிடப்போகிறேன்.
எப்படியிருப்பினும், எதிர்காலத்தை பற்றிய கனவுகளுடன், எதிர்ப்பார்ப்புகளுடன், நிகழ்காலத்தை தொலைத்த பலரோடு நானும் இருந்துவிட்டுப் போவது நலம் என்றே தோன்றுகிறது. குறைந்தபட்சம் யாருடனும் வெறுப்பை வளர்க்காமல் இருக்கமுடியும் அல்லவா? ஒருவன் எப்போது ஒரு தனிமனிதனால் முழுவதும் வெறுக்கப்படுகிறானோ அப்போதே அவன் இறந்துவிட்டான் என்பதுதானே நிஜம்.
வணக்கத்துடன்
ராம்
அன்புள்ள ராம்,
நீங்கள் சொல்லும் சொற்களை நான் வேறு சொற்களில் சொல்கிறேன். மனித சிந்தனை வெறுப்பை ஒட்டி சிந்திக்கும்போது கொள்ளும் வேகத்தை ஒற்றுமையை ஒட்டி சிந்திக்கும்போது அடைவதே இல்லை. ஆனால் ஒற்றுமையைப்பற்றி நினைக்கும்போது வரும் விரிவையும் கனிவையும் அது அந்த வேகம் மூலம் அடைய முடியாது. நம்மில் பலர் எளிய நடுத்தரவற்க வாழ்க்கையை வாழ்கிறோம். விறுவிறுப்பு இல்லாத வாழ்க்கை. ஆகவே ஒருவர் அதி தீவிரமாக பேசினால், கொந்தளித்தால் நமக்கு பிடிக்கிறது. சூடாகவும் சுவையாகவும் இருக்கிறது. நிதானமும் கருணையும் கன்வும் கொன்ட சிந்தனைகள் நமக்குக் கசக்கின்றன. பிரிவினை வன்முறை எல்லாம் பரபரப்பான வரவேற்பு பெறுவது இப்படித்தான். நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்க ஃபாசிசம் என்பது நடுத்தர வற்கத்துக்கு உகப்பானதாகவே இருக்கிறது. அவர்கள்தான் அதை தொடங்கிவைக்கிறார்கள். நடுத்தரவற்கத்து அறிவுஜீவிகளே வன்முறையை தூண்டுகிறார்கள். அழிவது எளிய மக்கள், அவவ்ளவுதான்
ஜெ
நேற்று என் அண்டை வீட்டினரின் ஒரு கல்யாணக் கடிதம் பார்க்கக் கிடைத்தது. வீட்டில் கன்னடம் மட்டுமே பேசுபவர்கள் அவர்கள். அந்தக் கல்யாணப் பத்திரிகையை ஆண்டாள் திருப்பாவையோடு ஆரம்பித்திருந்தார்கள்.
எந்த அளவீட்டில் பார்த்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தமிழராயிருக்கும் வம்சத்தில் வந்தவன் நான். ஆனால் எங்கள் வீட்டுப் பத்திரிக்கைகளில் ஒரு திருக்குறள் கூட இடம் பெறுவது அரிது.
சமீபத்தில் நான் நேரில் கண்ட இரு சென்னை வாழ் தமிழ்ச் சிறுவர்களில் உரையாடல்:
தம்பி: இருபத்தஞ்சு-னா என்னண்ணே?
அண்ணன்: twenty five
பிற மொழிகளை வெறுக்கச் செலவிடும் சக்தியில் 10-ல் ஒரு பங்கை தமிழை வளர்க்கச் செலவிட்டாலே போதும்… தமிழன்னை தலை நிமிர்வாள்…
அன்புடன்
ரத்தன்
அன்புள்ள ரத்தன்
ஜெ