வம்பும் விமர்சனமும்

C360_2016-05-06-12-37-25-417

இனிய ஜெயம்,

ஒப்பீடுகளின் அழகியல் பதிவில்,  நீங்கள் என்னை எரிச்சல் பட்டு கடிந்து கொண்டதற்காக [அப்படி எண்ணிக்கொண்டு] , ஒய் , வாட் ஹேப்பண் , என்றெல்லாம் கேட்டு உள்வட்ட நண்பர்கள் அனுப்பிய  குறுஞ்செய்தி தாங்கி காலையில் நிரம்பி வழிந்தது எனது மொபைல்.  நண்பர்களுக்கு என் அன்பு.

கிராமங்களில் இருந்து கிளம்பி வாசிப்பிற்குள் வந்த பல நண்பர்கள் எனக்குண்டு. வாசிப்பு செத்த கடலூர் எல்லையில் வாசிக்கும் மனநிலை கொண்ட எவரையும் எனது உரையாடலில் இருந்து விலகுவதில்லை .

இங்கே வளவதுரையன் அவர்கள் நெடுங்காலமாக இலக்கியம் எனும் உரையாடலை பல சாதக பாதகங்களுடன் ஆர்வம் குன்றாமல் முன்னெடுத்து வருகிறார். [இம்முறை புதுவை வெண்முரசு கூடுகைக்கு மற்றும் கடலூர் நற்றிணை கூடுகைக்கு அவரது முன்னெடுப்பே  துவக்கம்]  எனது நடுவீரப்பட்டு நண்பர்கள் கடலூரில் மாதம் நான்காம் ஞாயிரு நடத்தும் நற்றிணை இலக்கிய கூடல் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

ஜி கனிமொழி, அவர்களும் யாழி கிரிதரன் அவர்களும் ஆம்பல் இலக்கியக் கூடல் எனும் நிகழ்வை கடலூரில் துவங்கி இருக்கிறார்கள்.  மனுஷ்ய புத்ரன், ஜி முருகன், கௌதம சன்னா, பிரபஞ்சன் என தொடர்ந்து வாசகர்கள் எழுத்தாளர்களுடனான உரையாடலை ஆம்பல் முன்னெடுத்து வருகிறது.

இந்த உரையாடல் துவங்கும் சூழலிலேயே, இங்கே உருவாகி வரும் ஆகப்பெரிய இடர், [மேம்போக்காக வாசித்துவிட்டு] இளம் நண்பர்கள்  நிகழ்த்த விரும்பும் முகநூல் அரட்டையை ஒத்த விவாதம்.  கடந்த முறை விவாதம் ஒன்றினில் ஒரு நண்பர் சாதி படிநிலையை உருவாக்கிய இந்து மதத்தை சாடினார். நான் அம்பேத்கரின்  சூத்ரன் என்போர் யார் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் பேசினேன்.  விவாதத்தின் எல்லை விரிவடையாமல் மனுவின் நால்வர்ண சதியிலேயே மீண்டும் மீண்டும் முட்டிக்கொண்டு இருந்தது. நான் சொன்னேன் ”நண்பரே உங்களது வாசிப்பு குறைபட்டது. அல்லது நீங்கள் வாசிக்கவே இல்லை , அம்பேத்கரின் ஆசிரியர் ஒரு பிராமணர், அம்பேத்கரின் புரவலர் ஒரு சமஸ்தான ராஜா [சத்ரியன்]  நீங்கள் விரும்பும் இந்த சதி கோட்பாடுகள் அவ்வாறானது அல்ல ” என்றேன். நண்பர்  நான் அவரை வாசிக்காதவர் என்று சொல்லி விட்டதாக புண்பட்டு விட்டார்.

இங்கு கடலூரில் உருவாகிவரும் தீவிர அரசியல்,சமூக,இலக்கிய உரையாடல் எல்லாம்  தீவிரமோ ,சாரமோ ஆற்ற  வெற்று முகநூல் அரட்டைகளின் கழிவுகளாக மாறும் நிலை இருக்கிறது. ”இங்கே தம்பி இதெல்லாம் இலக்கியம் இல்ல, மொதல்ல போய் வாசிக்கிற வழிய பாரு ”  என்று சொல்லும் வலுவான இலக்கிய ஆசிரியனின் குரல் தேவை.

உங்களது பதிவை [இன்றைய வாசிப்பு சூழல் மொத்தத்துக்குமே தேவையான பதிவு அது]  நிச்சயம் இங்குள்ள நண்பர்கள் வாசிப்பார்கள். யார் வாசகனாக மிஞ்சப் போகிறார்கள், யார் வெறும் முகநூலர்களாக   உதிரப்போகிறார்கள் என அந்தப் பதிவைக் கண்டு சில நண்பர்களெனும் உள்ளே அந்தரங்கமாக சிந்திப்பார்கள் என நம்புகிறேன்.

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு,

முதலில் அது உங்கள்மீதான எரிச்சல் அல்ல. அது பொதுவான வம்புப்பேச்சுக்கள் மீதான எரிச்சல் மட்டுமே. உங்களை எனக்குத்தெரியும். எரிச்சலிருந்தால் அதைச் சொல்லுமளவுக்கு உரிமையும் உங்களிடம் எனக்கு உண்டு. ஒன்றை கவனித்திருப்பீர்கள். இன்று பலவகை மனக்கசப்புகள் கொண்டு – குறிப்பாக சாதிசார்ந்த, அரசியல்சார்ந்த வேறுபாடுகள் அடைந்து – விலகிச்சென்று வசைகளில் ஈடுபடும் நம் முன்னாள் நண்பர்களிடம் நான் ஒருபோதும் சினமோ எரிச்சலோ கொண்டதில்லை. மிகச்சிறிய அளவில்கூட அவர்களின் கருத்துக்களை கடிந்து மறுத்ததோ திருத்தியதோ இல்லை. ஒருமுறைகூட. ஒரு பாவனையாகக்கூட. ஏனென்றால் அவர்களையும் நான் நன்கறிந்திருந்தேன். அது அணுக்கமான நண்பர்களுக்கும் தெரியும்.

நான் எவ்வகையிலேனும் கடிந்துரைத்திருக்கிறேன் என்றால் அவர்கள் என் நம்பிக்கைக்கு உரியவர்கள். நான் மிகவும் எதிர்பார்ப்பவர்கள். அவர்கள் நான் கடிந்துரைத்ததை கண்டு சினம்கொண்டு விலகிச்சென்றாலும் எனக்குக் கவலை இல்லை. அவர்களின் பங்களிப்பே எனக்கு முக்கியம். ஒரு தருணத்திலும் அவர்களை நான் உளம் விட்டு விலகுவதில்லை.  அவர்கள் எழுதும் அனைத்தையும் வாசிக்காமலிருக்க என்னால் இயல்வதில்லை.

இலக்கிய வம்புப்பேச்சுக்கள் இயல்பானவை. அவை நிகழாமலிருக்க நாமெல்லாம் முனிவர்கள் அல்ல. ஆனால் கூடுமானவரை நம் விவாதங்களை வாசிப்புப் பலத்துடன் முடிந்தவரை கூரிய மொழியில் முன்வைக்கவே முயலவேண்டும். நான் சொல்லவருவது அவ்வளவே

ஜெ

***

முந்தைய கட்டுரைஒரு பதிவு
அடுத்த கட்டுரைகூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி