அன்பான ஜெயமோகன்,
இன்று Republic TV கூடன்களம் உதயகுமார் பற்றின sting feature ஒளிபரப்பியதை அறிந்திருப்பீர்கள்.
அந்த வீடியோவும், அர்னப் கோஸ்வாமி உதயகுமாருடன் நடத்திய தொலைபேசி உரையாடலையும் இரண்டு முறைக்கு மேல் பார்த்தாயிற்று. இரண்டாவது வீடியோவில் உதயகுமார் வெகுவாகவே நிதானம் இழக்கிறார்.
உதயகுமாரை சந்தேகிக்கவா அல்லது இது ஒரு Media Hype என்று விட்டு விடலாமா.?
அன்புடன்
குமார் SR
https://www.facebook.com/RepublicWorld/videos/1338562252924318/
***
அன்புள்ள ஆசிரியருக்கு,
இன்று ஐயா உதயகுமார் பற்றி அர்னாப் டிவி பரப்பிய காணொளியை நண்பர்கள் கட்டினார்கள். காணொளியில் உதயகுமார் பேசுவதை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து மிகவும் செயற்கையாக இதை மிக பெரிய அளவில் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் உதயகுமார் பேசும்போது குரலை உயர்த்தி பேசி பேசி தன் கருத்தை திணிக்க முயற்சி செயகிறார். இதை பார்த்துவிட்டு நம் ஊர் அரைவேக்காட்டுகள் குதிக்கின்றன.
மிகவும் மனஉளைச்சலோடு எழுதுகிறேன். ஏன் இப்படி சேற்றை வரி நம் முகத்தில் இறைக்கிறார்கள்.
-திருமலை
***
அன்புள்ள குமார், திருமலை,
நான் உதயகுமாரை 1998ல் முதல்முறையாகச் சந்தித்தேன். என்னை என் வீட்டில் வந்து சந்தித்து அவரது கனவுகளைப்பற்றிப் பேசினார்
கடைசியாக பவா செல்லத்துரை நாகர்கோயில் வந்தபோது சென்ற ஏப்ரல் மாதம் சந்தித்தேன். ஓர் இரவுணவை சேர்ந்து உண்டோம். மறுநாள் நாகர்கோயிலில் பவாவின் நூல்வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்
அவரைப்பற்றி நான் இன்றும் உறுதியாகச் சொல்லத்தக்க செய்தி அவர் எளிய, நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழ்பவர் என்பதுதான். பணத்தின் மேல் இன்றும் அமராதவர். அவருடைய தனிப்பட்ட நேர்மைக்கு எனக்கு எந்த தொலைக்காட்சியின் சான்றும் தேவையில்லை.என் சொந்த மூத்த சகோததரரைப்பற்றி கூறுவதற்கு நிகராக இதைச் சொல்கிறேன்.
அவருடைய பலகருத்துக்களுடன் எனக்கு முரண்பாடு உண்டு என்றாலும் அவர் மேல் நான் மதிப்பு கொண்டிருக்க இதுவே காரணம்.அணு உலைகள் மீது எனக்கு அவநம்பிக்கை உண்டு. அணு உலைகளுக்கு எதிரான சூழியல்போராட்டங்களில் 1986 முதலே பங்குகொண்டிருக்கிறேன். நான் கூடங்குளத்தில் உதயகுமார் தலைமையில் நிகழ்ந்த போராட்டத்தை ஆதரித்தமைக்கு இதுவே காரணம். என் ஆதரவை, அதற்கான நியாயங்களை விரிவாகவே எழுதியிருக்கிறேன்.
அப்போராட்டத்திற்கு பின்துணையாக சர்ச் இருந்தது வெளிப்படை. சர்ச் வளாகத்தில்தான் போராட்டமே நடந்தது. அந்த ஆதரவுக்கு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் மக்கள் என்பதே காரணம். அங்கிகளுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அதை அனைத்து ஊடகங்களிலும் திரும்பத்திரும்பச் சொன்னார்கள். ஆதரவளிக்காமல் இருக்க சர்ச்சால் முடியாது என்பதே உண்மை. அதன் பின்னரும் அவர்கள்மேல் மக்களுக்கு புகார்கள்தான் என்பது நடைமுறை யதார்த்தம்.
அப்போராட்டத்திற்கு உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம் . அது எவ்வகை நன்கொடை என்பதே முக்கியம்.உலகமெங்கும் சூழியல் போர்களுக்கு நிதியுதவிசெய்யும் தனியாரும்,. அறக்கட்டளைகளும் ஏராளமாக உள்ளன. அவற்றிடமிருந்து உதயகுமார் நன்கொடை பெற்றிருக்கலாம். அன்னிய அரசு, அல்லது தனியார்த்தொழில்துறை சார்ந்த உதவிகளை பெற்று அப்போராட்டத்தை நடத்தினார் என நிறுவப்பட்டிருந்தால் அது வேறு
ரிபப்ளிக் டிவியின் அந்த உரையாடலிலும் முன்பு வெஸ்டர்ன் யூனியன் வழியாக சட்டபூர்வமாக நன்கொடை பெற்றதாகவே சொல்கிறார். கண்காணிப்புகளும் வழக்குகளும் இருப்பதனால் கட்சி வழியாக அளிக்கும்படிச் சொல்கிறார். அதில் என்ன பிழை? அவர் நன்கொடைகள் பெற்றதில்லை என்று சொல்லியிருக்கிறாரா? நானே அவருக்கு நன்கொடை கொண்டு கொடுத்தேன். நேரில், கையில்
இந்தக் கண்காணிப்பு வழியாக எதை நிறுவியிருக்கிறார்கள் என உண்மையிலேயே புரியவில்லை. உதயகுமார் கூடங்குளம் போராட்டத்திற்கு ஒரு பேராசிரியர் சூழியல் செயல்பாடுகளில் ஈடுபாடு காரணமாக நன்கொடை அளிக்கச் சித்தமாக இருக்கிறார் என்றால் அதை கட்சி வழியாக சட்டபூர்வமாகப் பெற தயாராக இருக்கிறார் என்றுதானே?
எனக்கு கொஞ்சம் அரசியல் அறிவு கம்மி., அவர் சட்டவிரோதமாக வாங்கியிருக்கவேண்டும் என்கிறார்களா?
ஜெ
***