ஜெமோ,
பயணித்துக் கொண்டிருக்கும் வண்டி திடீரென்று நிறுத்தப்படும்போது, அதில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணி திடுக்கிட்டு எழுவது போல் தான் இருந்தது நீங்கள் மலேசியாவில் ஆற்றிய உரையை கேட்ட பிறகு.
எழுதுவதற்கு பரந்த மற்றும் ஆழ்ந்த வாசிப்பு தேவை என்பதை மீண்டும் மூர்க்கமாக நிறுவியிருக்கிறீர்கள். மரபிலக்கியங்களில் உள்ள குறைகளான பிறதுறை தொடர்பில்லாத ஒற்றைப்படைத் தன்மையை சுட்டிக்காட்டி நவீன இலக்கியத்தின் பன்முகத்தன்மையை உணர்த்தியுள்ளீர்கள்.
ஆனால், என்னைப்போல எழுதும் வாயிலுக்கு உங்களின் எழுத்தால் இழுத்து வரப்பட்டவர்களுக்கு அந்த அளவுகோல்கள் தொடுவானமாய் தெரிந்தாலும், அவை கலங்கரை விளக்கமும் கூட.
இந்த அளவுகோல்களை நீங்கள் மூர்க்கமாக வைக்காவிடில், நீங்கள் சொல்வது போல் அரைவேக்காட்டுப் படைப்புகள் நவீன முலாம் பூசிக்கொண்டிருப்பது வாசகர்களுக்கு தங்கமாகவே இருந்திருக்கும்.
அன்புடன்
முத்து
***
அன்புள்ள முத்து,
அது எவ்வகையிலும் ஒரு சோர்வுறுத்தும் முயற்சி அல்ல. ஓர் அறைகூவல். நாம் ஒவ்வொருவருக்கும்தான். செல்லக்கூடும் தொலைவு மிகுதி. அதைத்தான் சொல்லவந்தேன்.
ஜெ
***
அன்புநிறை ஜெ,
கிளம்பும்போது விடைபெற்றுக் கொள்ள முடியவில்லை. கண்களின் வலியும் சிரமமும் பொறுத்துக்கொண்டு ஒவ்வொரு நிகழ்விலும் தீவிரம் சற்றும் குறையாது உரையாற்றி, அனைவரோடும் உற்சாகமாக உரையாடிக் கொண்டு, வினோதமான மனிதர்களின் எதிர்வினைகளையும் எதிர்கொண்டு,
இடைப்பட்ட நேரங்களில் எல்லாம் வெண்முரசு!!
கண்களின் வேதனை தற்போது குறைந்திருக்குமென நம்புகிறேன்.
அரங்கிலும் வெளியிலும் அறையிலும் உடனிருந்த, பேசிய தருணங்களைப் பேசிப் பேசி மீட்டிக் கொண்டிருக்கிறோம்.
மிகத் துல்லியமாக போர்வையை விரித்து ஒரு புறத்துக் கட்டிலில் நாஞ்சில்நாடும், அதனதன் இயற்கையான ஒழுங்கின்மையில் வேணாடு இன்னொரு பக்கத்திலுமாக என்று எண்ணும்போது உதட்டில் ஒவ்வொரு முறையும் புன்னகை வந்தமர்கிறது.
வளையாத கோதண்டத்தின் இராமாயணம் ஒரு புறமும் ஊழிச்சுழியென வளையும்
மகாபாரதம் ஒருபுறமும் ஒரே அறையில் என்றும் சொல்லலாம் .
இனிமையான நினைவுகள். நிகழ்ச்சிக்குப் பின்னர் கணேஷ் கதைக்கு மேல் கதையென கனவிலும் கதைக்கருக்களில் உலவிக்கொண்டிருக்கிறார். குணமாகுமா எனத் தெரியவில்லை.
சில புகைப்படங்கள்.
பொதிகை நாடக தருணம் போல நீங்கள் ஒருபறம் படுத்திருக்க, கணேஷ் நாஞ்சில் அவர்களிடம் கைநீட்டிப் பேசும் புகைப்படமும், ஆலமர்ந்த ஆசிரியன் அடியில் நீங்கள் அபய முத்திரை காட்டும் புகைப்படமும் மனதுக்கு நெருக்கமானவை.
மிக்க அன்புடன்,
சுபா
***
அன்புள்ள சுபா,
இனிய நினைவுகள். கொஞ்சம் காலம் கடந்தால் அவஸ்தையும் இனிமையே.
கண் பயங்கரமாக உறுத்திக் கொண்டிருந்தது. கண்ணீர் வழிதல். கூடவே இலக்கியம். அரட்டை. வெண்முரசு. திரும்பி வந்தபின்னர்தான் 12 நாட்கள் சென்றதே தெரிந்தது.
இப்போதும் கண் முழுக்க குணமாகவில்லை. நன்றாக இருந்தது. திடீரென்று பயணம், தூசு. அதிகமாகிவிட்டது. இன்றுதான் சற்று குறைந்துள்ளது. இதையே ஒற்றைக்கண்ணை ஈரத்துணியால் மூடியபடித்தான் எழுதுகிறேன்.
நலம்தானே? உங்கள் கருப்புக்கண்ணாடி அது. உலகமே கொஞ்சம் குளுமையாக ஆகிவிட்டது
ஜெ