பாவைக்களியாட்டம்

p.l.samy
பி. எல்.சாமி

தமிழ் புதுக்கவிதைக்குள் வலுவான இருப்பை உணர்த்திய இடதுசாரிக் கவிஞர் என்று சுகுமாரனைத்தான் சொல்லவேண்டும். இடதுசாரி இயக்கங்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தார். சுகுமாரனுடைய பாதிப்பு தொடர்ச்சியாக நவீனக் கவிதையில் ஒரு இடதுசாரிக் குரலை நிறுவியது. சுகுமாரனின் முன்னோடிகள்  மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை, கே. சச்சிதானந்தன் போன்றவர்கள். கூடவே  பாப்லோ நெரூதா, மயகோவ்ஸ்கி , பெடோல்ட் பிரெக்ட் என மேலைநாட்டு இடதுசாரிகள். கூரிய நேரடியான சொற்களில் அரசியலுணர்வை வெளிப்படுத்தும் சுகுமாரனின் கவிதைகளின் எரியும் படிமங்கள் ஒருதலைமுறை செல்வாக்கை உருவாக்கின  ஆனால் மிக விரைவிலேயே தடத்திலிருந்து விலகிச்சென்று ஆழ்மன அவசங்களையும் காமத்தின் தடுமாற்றங்களையும் எழுதத்தொடங்கினார்.

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நான் பி.எல்.சாமி எழுதிய ‘தமிழகத்தில் பாவைநோன்பு’ என்னும் நூலை முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் எடுத்து வாசித்தேன். அன்று எனக்கு ஆய்வுநூல்களை வாசிக்கும் வழக்கம் ஆரம்பித்திருக்கவில்லை. பி.எல்.சாமியின் நூல்களில் நான் முதன்முதலாக வாசித்ததும் அதுதான். பின்னர் அவருடைய அனைத்து நூல்களையும் தேடித்தேடி வாசித்தேன். அவருடைய தமிழகத்தில் தாய்த் தெய்வ வழிபாடு என் சிந்தனையில் ஆழமான பாதிப்பை உருவாக்கிய நூல்.

பி.எல்.சாமி என்ற பேரில் ஆய்வுநூல்களை எழுதிய பி.லூர்துசாமி ராமநாதபுரம் சிவகங்கை பகுதியை பூர்விகமாகக் கொண்டவர். கத்தோலிக்கக் குடும்பத்தினர். இவருடைய தந்தையார் கோவைப்புலவர் பெரியநாயகம் திருச்சபையின் வரலாற்றை தமிழில் எழுதியவர். தாயார் மரிய மதலேன். எட்டாவது மகனாக 1925 அக்டோபர் 2 அன்று பிறந்தார். கடலூர் மஞ்சக்குப்பத்தில் பள்ளியிறுதியை முடித்தபின் திருச்சி வளனார் கல்லூரியில் தாவரவியலில் இளங்கலைப் படிப்பை முடித்தார்

திருச்சி வளனார் கல்லூரியிலேயே இவர் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பாண்டிச்சேரி சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெற்றவர் பாண்டிச்சேரியின் விடுதலைக்குப்பின் விலியனூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக ஆனார். மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்வு எழுதி வென்று ஆட்சியராகவும் செயலராகவும் உயர்பதவிகளை வகித்தார்.

பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை அவர்களுடன் கொண்ட உறவால் தமிழாய்வுக்கு வந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ்ச்செல்வி இதழில் முக்கியமான கட்டுரைகளை எழுதினார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இவரது நூல்களை தொடர்ச்சியாக வெளியிட்டது

தமிழிலக்கியத்தை அறிவியல் ஆய்வுமுறைமைகளுடன் அணுகுவது இவருடைய வழிமுறை. தமிழிலக்கியங்களில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பயன்பாட்டுப்பொருட்கள் ஆகியவற்றை பற்றிய இவருடைய விரிவான ஆய்வுகள் பழந்ததமிழக வாழ்க்கையைப்பற்றிய புதிய வெளிச்சங்களை அளித்தவை. சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், சங்க இலக்கியத்தில் மீன்கள், சங்க இலக்கியத்தில் மணிகள், இலக்கியத்தில் அறிவியல் போன்ற பலநூல்கள் இவரால் எழுதப்பட்டவை.

தமிழிலக்கியம் காட்டும் செய்திகளின்படி பாவை என்பது முதன்மையாக ஓவியம்தான்.நீரில் காணப்படும் பிம்பமும் கண்ணாடியில் தெரியும் தோற்றமும் கூட பாவை என்றே குறிப்பிடப்பட்டன. குகைகளில் வரையப்பட்ட ஓவியங்களை வழிபடும் முறை தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கத்தில் இருந்துள்ளது. பின்னர் தரையிலும் சுவர்களிலும் வரையப்பட்ட ஓவியங்கள் வழிபடப்பட்டன. இதுவே பாவை வழிபாட்டின் தொடக்கம்.

இன்றும் தென்கேரளத்தில் இவ்வழக்கம் உள்ளது. இங்கு கொற்றவை சுவரோவியமாக வழிபடப்படுகிறாள். களமெழுத்துபாட்டு என்னும் கலை புள்ளுவர் என்னும் தொல்குடிப்பூசகர்களால் வண்ணப்பொடிகளால் தரையில் தெய்வ உருவங்களை வரைந்து வழிபடுவது.

கன்னியரையும் பெண்களையும் தெய்வங்களாக உருவணிவித்து வழிபடுவது இவ்வழிபாட்டின் தொடர்ச்சி. இதுவும் பாவை வழிபாடு என்றே சொல்லப்பட்டன. சிலப்பதிகாரம் சிறுமி ஒருத்தியை கொற்றவைபோல தோற்றம் அணிவித்து எயினர் வழிபடுவதை சித்தரிக்கிறது. வடகேரளத்தில் உள்ள தொன்மையான கலையான தெய்யாட்டம் என்பது மனிதர்கள் தெய்வ வடிவத்தில் வந்து வழிபடப்படுவது

அதன் தொடர்ச்சியாகவே சைவ வைணவ மதங்களில் பாவை வழிபாடு உருவானது. காலப்போக்கில் பாவை என்பது சிறிய சிலையை குறிப்பதாக ஆகியது. அதை பெண்கள் புலரியில் எழுந்து ஆற்றுக்குக் கொண்டுசென்று நீராட்டி மலர்சூட்டி வழிபடுவதே பாவை வழிபாடு. பின்னர் அது ஆலயவழிபாடாக மாறியது. ஒரு வகை நோன்பாக மட்டும் எஞ்சியது.

ஆனாலும் வழிபாட்டின் மனநிலை பெரிதும் மாறவில்லை. பெண்கள் நோன்பிருப்பதும் புலரியில் எழுந்து ஒருவரை ஒருவர் அழைத்து சேர்த்துக்கொண்டு நீராடச்செல்வதும் ஆண்டாளால் திருப்பாவையில் பாடப்படுகின்றது. பிற பெண்களை எழுப்புவதற்காக சிறிய பறைகளை அடித்தபடி விடியற்காலை இருட்டில் அவர்கள் செல்கிறார்கள்.

thay

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

சைவ மரபில் பாவை நோன்பிருந்ததை மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடலில் இருந்து அறிகிறோம்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!

தமிழகத்தில் அனேகமாக எங்குமே இந்த நோன்பும் சடங்கும் இன்றில்லை. ஆனால் என் இளமையில் எங்களூரில் இருந்தது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு ஒன்பதுநாள் முன்னர் இது தொடங்கும். பெயர் திருவாதிரப்பாவ நோன்பு. பெண்கள் ஒருபொழுது உண்டு வண்ண ஆடைகள் அணியாமல் மலர்சூடாமல் நோன்பிருப்பார்கள்.

விடியற்காலையில் மூன்றுமணிக்கே பெண்கள் குளிக்கக் கிளம்பிவிடுவார்கள். அவர்களின்பொருட்டு ஒரு ஊர்க்கட்டுப்பாடு இருந்தது. நோன்பு முடித்து அவர்கள் சிவன் கோயிலில் பூசை செய்து வீடுதிரும்புவது வரை ஆண்கள் எவரும் எதன்பொருட்டும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன்னரே கோயிலுக்கு வந்து வணங்கிவிட்டு வீடுதிரும்பிவிடுவார்கள். அதன்பின்னர் கோயில்மணி அடிக்கும். ஓ என ஊர் எழும் ஓசை கேட்கும்

அக்காக்களுக்கெல்லாம் அது பெரிய கொண்டாட்டம். அன்றெல்லாம் நாயர் , வேளாளர், செட்டியார், ஆசாரி, நாடார் சாதிப் பெண்களுக்கு இற்செறிப்பு உண்டு. கன்னியாக ஆனபின்னர் சாதாரணமாக வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாது . எங்கே போனாலும் உடன் ஆண்களோ அன்னையரோ இருப்பார்கள்.. திருவாதிரை நோன்பு மிகப்பெரிய விடுதலை.

கருக்கிருட்டிலேயே தென்னையோலைச் சருகை பந்தமாகக் கொளுத்தி சுழற்றியபடி சிறிய இடைவழிகளினூடாகச் செல்வார்கள். “பூஹேய்! பூஹேய்!” என்ற கூச்சல் கேட்டு ஒவ்வொருவராகச் சென்று சேர்ந்துகொள்வார்கள். குளிப்பதற்காக ஆற்றுக்குச் செல்வதாக பாவனை. சுற்றிவளைத்து சென்றுசேர நெடுநேரமாகும். குளித்துக்கரையேற மேலும் பொழுதாகும். அந்தச் சுதந்திரத்திற்காகவே விடியற்காலை இரண்டுமணிக்கெல்லாம் எழுந்து வெளியே செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். சிரிப்பு நக்கல். நினைத்ததை எல்லாம் செய்யலாம்.

என் அம்மா அந்தக்காலத்தில் பெரிய சண்டிராணி. ஆற்றில் சாய்ந்து நின்றிருக்கும் தென்னைமேல் ஏறி ஆடி அங்கிருந்து நீரில் குதிப்பாள். யக்‌ஷி ஆலயத்தின் மேலேறி நின்று நடனமிடுவாள். நான் சின்னப்பையனாக இருக்கையில் அம்பிகா அக்கா ஒரு ராஜநாகத்தையே கவண் குச்சியால் பிடித்து விட்டாள் என்றார்கள். நினைக்க முடியாததை எல்லாம் செய்வார்கள். அது பெண்களுக்கு மட்டுமேயான ஒரு கொண்டாட்ட காலம்

கடைசியில் திருவாதிரை நாள் வரும். அன்று நோன்பிருந்தவர்கள் வண்ண ஆடை அணிந்து பூச்சூடி வந்து ஏற்றிவைக்கப்பட்ட குத்துவிளக்கைச் சுற்றிச்சுற்றிவந்து ஆடுவார்கள். பெரும்பாலும் ஆனந்தபைரவியில் அமைந்த திருவாதிரைப்பாடல் சிவபார்வதி காதலைப்பற்றியதாக இருக்கும். திருவாதிரை நோன்பிருந்த பெண்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமையும் என்பது அக்கால நம்பிக்கை.

மலையாளப்படங்களில் திருவாதிரகளி நிறையவே பதிவாகியிருக்கிறது. ஆச்சரியமாக ஒரு பழைய படத்தில் நோன்புக்கு குளிக்கச்செல்வதே வருவதை பார்த்தேன். பழையநினைவுகள். அந்த அக்காக்களில் பெரும்பாலானவர்கள் இன்று அந்நினைவுகளுடன் முதுமையில் இருப்பார்கள். அல்லது மறைந்துவிட்டிருப்பார்கள்.

தனுமாசத்தே திருவாதிர திருநொயம்பின் நாளாணல்லோ

திருவைக்கம் கோயிலில் எழுந்நெள்ளத்து

திருவேதப்புரையிலும் எழுந்நெள்ளத்து

 

பி எல் சாமி அவர்களின் வாழ்க்கை. முனைவர் மு. இளங்கோவன்

முந்தைய கட்டுரைபெண்வெறுப்பும் பாரதியும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32