29. சுவைத்தருணம்
பீமன் ஒவ்வொரு அடுகலமாக நடந்து ஒருகணம் நின்று மணம் பெற்று அவற்றின் சுவையை கணித்து தலையாட்டி சரி என்றான். மிகச்சிலவற்றில் மேலும் சற்று அனலெரிய வேண்டும் என்றான். சிலவற்றை சற்று கிளறும்படி கைகாட்டினான். சிலவற்றில் உடனடியாக எரியணைத்து கனலை பின்னிழுக்கும்படி ஆணையிட்டான். ஒரு சொல்லும் எழவில்லை. சொல் அவன் உள்ளை கலைக்குமென்பதுபோல. கனவில் என அவன் முகம் வேறெங்கிருந்தோ உணர்வுகளை பெற்றுக்கொண்டிருந்தது. உடலெங்கும் மெல்லிய மயிர்ப்பு பரவியிருப்பது பிறர் விழிகளுக்கே தெரிந்தது. அஞ்சி ஓடுவதற்கு முந்தைய கணத்திலிருக்கும் புரவிபோல ஒரு விதிர்ப்புக்கு முந்தைய உணர்வுநிலை.
அனைத்துக் கலங்களையும் பார்த்து முடித்து அவன் திரும்பி வந்தான். அவன் உடலிலிருந்து அதுவரை இருந்த ஒரு தேவன் விலகிச்செல்வதை பூர்ணர் கண்டார். நீள்மூச்சுடன் அவன் மீண்டு அவரை நோக்கியபோது விழிகள் நெடுநேரம் நீராடி எழுந்ததுபோல் சிவந்திருந்தன. புன்னகையுடன் “நன்று! இன்று உணவுகள் அனைத்தும் அமைந்துவிட்டன” என்றான்.
பூர்ணர் புன்னகையுடன் “எப்போதாவது அது அமையாது சென்றிருக்கிறதா, வீரரே?” என்றார். “எண்ணியதை எய்தாமல் இருந்த தருணங்கள் பல. என் உணவு சுவையற்றதென்று எவரும் சொல்லி இதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் நான் சமைப்பது ஒவ்வொரு முறையும் அதுவரை சென்றிராத ஓர் இடத்தை அடையும் பொருட்டே. இன்று ஒரு கணு மேலேறியிருக்கிறேன்” என்றான் பீமன்.
அப்பாலிருந்த ஒருவன் “இன்னும் சில கணுக்களுக்கு அப்பால் தேவர்கள் குனிந்து நோக்கி ஆவலுடன் நின்றிருக்கிறார்கள். அவர்களின் நாச்சொட்டு கீழே உதிர்கிறது” என்றான். பீமன் புன்னகைத்தபின் “இதில் என் திறன் உள்ளதென்பதை மறுக்கவில்லை. அதைவிட இத்தருணத்தின் ஒருமை உள்ளது. மூத்தவரே, இங்கு நாம் புவியின் பல்வேறு பகுதிகளில் முளைத்தெழுந்து விளைந்து கனிந்த மாறுபட்ட உயிர்ப்பொருட்களிலிருந்து எடுத்தவற்றை ஒன்று கலக்கிறோம். ஒவ்வொன்றும் ஓர் இயல்பு கொண்டது. அவ்வியல்பு ஒவ்வொரு முறையும் மாறுபடுவது. ஒவ்வொரு தருணத்திலும் வளர்ந்து கொண்டிருப்பது. ஆகவே ஒவ்வொரு முறை சமைக்கையிலும் முன்பொருபோதும் இப்புவியில் நிகழ்ந்திராத ஒன்று உருவாகி வருகிறது. பின்பொருமுறையும் நிகழாதபடி எப்போதைக்குமாக மறைந்து போகிறது. சமையல் இப்புவி நிகழும் அதே விந்தையை தானும் கொண்டுள்ளது. ஒருமுறை உருவான சுவை மீண்டும் இங்கு எழுவதேயில்லை” என்றான்.
வெளியே இருந்த சம்பவர் உள்ளே வந்து “அடுமனை பொலிந்துவிட்டதா? வெளியே உணவுதேடி மக்கள் வந்து குழுமத்தொடங்கிவிட்டனர்” என்றார். குரல் தாழ்த்தி “விந்தை என்னவென்றால் இம்முறை இளவரசர் முன்னரே வந்துவிட்டார்” என்றார். பூர்ணர் “என்ன இது? உச்சிப்பொழுது உணவுக்கு இன்னும் இரு நாழிகை இருக்கிறதே?” என்றார். “ஆம், ஆனால் அடுமனைப்புகை அனைவரையும் அறைகூவிவிட்டது. நமது பதாகைபோல் இக்கூரைக்கு மேல் அது நின்றிருக்கிறது” என்றார் சம்பவர். “தாழ்வில்லை. முதற்பந்தியை அறிவித்துவிடலாம். நம்மவர்கள் பந்தி விளம்ப சித்தமாக இருக்கிறார்களா என்று மட்டும் ஒருமுறை பார்த்துவிடுங்கள்” என்றான் பீமன். பூர்ணர் “இங்கு பந்தி விளம்புபவர்கள் வேறு. சமைப்பவர்கள் விளம்பலாகாது என்பது நளன் அளித்த நெறிகளில் ஒன்று” என்றார். “ஏன்?” என்று பீமன் கேட்டான்.
“சமைப்பவன் தான் அடைந்துவிட்டேன் என்னும் பெருமிதத்திலிருப்பான். உண்பவன் அதை அறியவேண்டுமென்பதில்லை. அவன் தன் பசியாலும் சுவையாலும் இயக்கப்படுபவன். அவை ஆளுக்கொரு வகை. தருணத்திற்கொரு தன்மை. ஒருவேளை தன் நுண்மைகளை உணராது உண்பவனை நோக்கி சமைப்பவன் சினம் கொள்ளக்கூடும். அச்சினம் தகுதியானதே எனினும் விளம்புகையில் முகம் கோண எவருக்கும் உரிமையில்லை” என்றார்.
சூரர் “அதைவிட ஒன்று தோன்றுகிறது. சமைப்பவர் உணவுப்பொருட்களில் ஏதேனும் சிலவற்றை அவரே சமைத்திருப்பார். அனைத்தையும் சமைப்பவர் எவருமில்லை. பால்ஹிக பெருவீரரும் கூட இங்கு சிலவற்றை சமைக்கவில்லை. தான் சமைத்தவற்றுக்கு முன்கை அளிக்க பரிமாறுபவர் முயலக்கூடும். பரிமாறுபவன் அனைத்தையும் தான் சமைத்ததென்றே எண்ணி பரிமாற முடியும்” என்றார். “அவரது சுவை அங்கே வெளிப்படத்தான் செய்யும். ஆனால் அது பரிவென்று நிகழ்ந்தால் நன்றே” என்றார் பூர்ணர்.
சம்பவர் பூர்ணரிடம் “மூத்தவரே, விளம்புபவர்கள் நீராடி வந்துவிட்டனர். பந்தி அமர்த்தலாம் என்று நான் சென்று சொல்கிறேன். தாங்கள் ஒருமுறை பந்திக்கூடத்தை எட்டிப்பார்த்துவிடுங்கள்” என்றார். பூர்ணர் கைநீட்ட சூரர் அவர் கைபற்றி மெல்ல எழுப்பினார். முதிய எலும்புகள் நீர்த்துளிகள் உடைவதுபோல மெல்ல ஓசையிட அவர் நடந்து சென்று சிறு சாளரத்தினூடாக பந்தி மண்டபத்தை பார்த்தார். பதினாறு நீண்ட நிரைகளாக மணைப்பலகைகள் இடப்பட்டு இலைகளும் தொன்னைகளும் விரிக்கப்பட்டிருந்தன.
“முதலமர்வில் ஆயிரம் பேர். பத்து அமர்வுகள் தேவைப்படும்” என்றார் சம்பவர். “ஆம், ஒருவேளை இந்நகரில் இதுவரை அளிக்கப்பட்ட பெருவிருந்தாக இருக்கக்கூடும்” என்றார் சூரர். “நீர் சென்று ஊணறிவிப்பை எழுப்பும்” என்று பூர்ணர் சொன்னார். “தொன்னைகளில் நீரும் எளிய தொடுகறிகளும் மட்டும் முதலில் பரிமாறப்பட்டால் போதும். இம்முறை பொரித்தவற்றை ஊணோர் அமர்ந்தபின் வைக்கலாம்” என்றார்.
முதுமையில் ஒடிந்ததுபோல வளைந்த இடையைப்பற்றி நிமிர்த்தியபடி மெல்ல அவர் திரும்பி வந்தபோது கொல்லையில் நின்றிருந்த அத்திமரத்தின் கிளையினூடாக முதிர்ந்த பெரிய குரங்கொன்று இறங்கி வருவதை பார்த்தார். ஒருகணம் திகைத்து அதை நோக்கி நின்றபின் வியப்பொலி எழுப்பி பின்னால் வந்தார். சூரர் “என்ன? என்ன?” என்றார். “குரங்கு” என்றார் பூர்ணர். “குரங்கா? இங்கா?” என சூரர் வேறெங்கோ பார்த்தார். “ஆம், குரங்கு. இதுவரை இங்கு குரங்குகள் வந்ததே இல்லையே” என்றார் சம்பவர். அச்சத்துடன் “பெருங்குரங்கு” என்ற சிருங்கர் “அதோ பிறிதொன்று” என்றார்.
இடையில் சிவந்த முடிகொண்ட தளிர்மகவை அணைத்தபடி முலைக்கொத்து வெளுத்துத் தொங்கிய பெருத்த அன்னைக்குரங்கொன்று இறங்கிவந்தது. அதற்குப் பின்னால் மேலும் ஒரு குட்டி சிலிர்த்த மென்தலையும் சிவந்த நீர்த்துளி விழிகளும் ஆவலுடன் நெளியும் அழகிய நீண்ட வாலுமாக வந்தது. சூரர் உள்ளே நோக்கி “ஒரு குரங்குக் குடும்பம்! எப்படி வந்ததென்று தெரியவில்லை” என்றார்.
பீமன் உள்ளிருந்து பெரிய மரத்தாலமொன்றை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான். அங்கு சமைக்கப்பட்ட அனைத்து உணவுகளும் அதில் சிறிது பரிமாறப்பட்டிருந்தன. அப்பமும் அன்னமும் காய்களும் கனிகளும் மிகுதியாக இருந்தன. “குரங்குக்கா?” என்றார் பூர்ணர். “ஆம், இது என் வழக்கம்” என்று பீமன் சொன்னான். “முதல் உணவை தெய்வங்களுக்கு படைப்பதுதானே முறை?” என்றார் பூர்ணர். “நான் குரங்குகளை தெய்வமென எண்ணுபவன்” என்றபடி பீமன் பணிந்து அவ்வுணவை வைத்தான்.
“முன்னரே எடுத்து ஆறவைத்திருந்தீர்களா?” என்றார் சூரர். “ஆம்” என்றான் பீமன். “இவை வருமென்று உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று பூர்ணர் கேட்டார். அவன் திரும்பி “இதுவரை ஒருமுறையேனும் வராமல் இருந்ததில்லை” என்றான். இயல்பாக அவன் விழிகளை சந்தித்த பூர்ணர் மெல்லிய சிலிர்ப்பொன்றை அடைந்து “தெய்வங்களே” என்றார். அறியாது கைகூப்பி “தாங்களா?” என்று முணுமுணுத்தார். பீமன் விழிகளை திருப்பிக்கொண்டான். “என்ன சொல்கிறீர்?” என்றார் சூரர். “ஒன்றுமில்லை” என்றார் பூர்ணர். கூப்பிய கைகள் நடுங்கிக்கொண்டிருக்க கால் தளர்ந்து கைதுழாவி சுவரைத் தொட்டு அப்படியே கால் மடித்து நிலத்தில் அமர்ந்தார்.
தந்தைக்குரங்கு உணவை நோக்கியபின் குனிந்து மோப்பம் பிடித்தது. பீமனை நோக்கியபோது அதன் கண்கள் மின்னி மின்னி மூடித்திறந்தன. பின்னர் அது அன்னைக்குரங்கை நோக்கி கைகாட்ட அன்னை அவ்வுணவுகளனைத்தையும் மெல்ல தொட்டு நோக்கி இறுதியாக இருந்த இன்சோறை ஒரு பிடி அள்ளி தன் வாயிலிட்டது. சுவையை உறுதி செய்த பின் பிறிதொரு வாயள்ளி தன் குட்டியின் வாயில் வைக்கப் போனது. அதற்குள் குட்டி பாய்ந்து அன்னையின் தோள்மேல் கால் வைத்து எம்பி அதன் வாயை இரு கைகளாலும் பற்றித் திறந்து அன்னை தன்வாய்க்குள் மென்று கொண்டிருந்த இன்சோறை தன் சிறுகைகளால் தோண்டி எடுத்து தன் வாயிலிட்டு சப்பி சுவையில் முகம் விரிய கண் சிமிட்டி வாலை நெளித்தது.
அன்னை அதன் தலையை மெல்ல வருடியபின் தான் அள்ளிய உணவை அதற்கு ஊட்டியது. அவ்வுணவை இரு கைகளாலும் அன்னையின் கையைப்பற்றியபடி குனிந்து உண்டு இரு கடைவாய்களிலும் சிதற துப்பி ர்ர் என்றது குட்டி. பின்னர் கீழே பாய்ந்து உணவுக்கு முன் அமர்ந்து இரு கைகளால் இருவேறு உணவுகளை அள்ளி எடுத்தது. மாறி மாறி வாயில் வைத்தபின் ரீக் என ஒலி எழுப்பி அதை உதறிவிட்டு அன்னை மடியில் தாவி ஏறி சூழ நின்றவர்களை முறைத்து நோக்கி சிறிய வெண்பற்களைக் காட்டியது. சங்குபுஷ்பம் போன்ற செவி ஒளி ஊடுருவ தெரிந்தது. கையை விரித்து சிறிய நாக்கை நீட்டி நக்கியபின் அன்னையை தழுவிக்கொண்டு ஏதோ சொன்னது. அன்னை முனகலாக மறுமொழி உரைத்தது.
தந்தையின் அருகே சென்ற மூத்த மைந்தன் அதன் தோளை ஒட்டி நின்று உணவை கைநீட்டி எடுக்க முயன்றது. தந்தை இன்னுணவை அள்ளி அதன் கைகளில் வைக்க அது தன் வாய்க்குள் கொண்டு போவதற்குள் சிறுகுட்டி பாய்ந்து அந்தக் கையைப்பற்றி இழுத்து மலர்த்தி அதிலிருந்ததை தான் உண்ண முயன்றது. பெரிய குட்டி கிரீச் என்ற ஒலி எழுப்பி அதை உந்திவிட்டது. அன்னை சிறுகுட்டியின் வாலைப்பற்றி இழுத்து தன் மடியில் அமரவைத்து மீண்டும் அள்ளி ஊட்டியது. மூத்தவன் மறுபக்கம் வந்து தந்தையின் தொடை மேலேறி அமர்ந்தபின் உணவை எடுத்து இரு கைகளாலும் வாயிலிட்டு உண்ணத்தொடங்கியது. தந்தை அதன் பின்னரே பெரிய கவளம் ஒன்றை எடுத்து உண்ணலாயிற்று. சுவையில் அதன் முகம் மலர பீமனை நோக்கி ர்ர்ர் என்றது.
அடுமனையாளர் அனைவரும் வெளியே வந்து குரங்குகள் உண்பதை பார்த்து நின்றனர். எவரோ “இவை இங்கு இதற்குமுன் வந்ததே இல்லை” என்றார். “அடுமனைப்புகையை மணம் கொண்டிருக்கின்றன” என்றார் பிறிதொருவர். “இனிய குடும்பம்” என்று இளைஞனொருவன் சொன்னான். “சிவபார்வதி எழுந்தருளியதுபோல.” குரங்குகள் சுவைத்து தலையசைத்து மென்றன. அவற்றின் வால்நெளிவில் சுவை தெரிந்தது. சுவைக்கென அவ்வப்போது நிறுத்தி விழிமூடி மயங்கி பின் மீண்டும் உண்டன.
குட்டிகள் தாவி தாலத்தின் வெவ்வேறு பகுதிகளில் அமர்ந்து கைகளால் அள்ளி வாயிலிட்டு மென்றும் இரு கைகளையும் ஊன்றி வாயால் கவ்வி உறிஞ்சியும் உண்டன. சிறிய குட்டி ஆர்வமிழந்து உணவைக்கடந்து தாவி வந்து பீமனைப்பார்த்து எழுந்து நின்றது. பீமன் அதை நோக்கி புன்னகைத்ததும் க்ரீச் என்ற ஒலியெழுப்பி துள்ளி திரும்பிச் சென்று தன் அன்னையின் மடியில் அமர்ந்து அவனை பார்த்தது. இருமுறை கண்களை சிமிட்டியபின் திரும்பி அன்னையின் முலைக்கண்ணை தன் வாயில் வைத்து சப்பியது. ‘நான் சின்னக்குழந்தை’ என்று அது பீமனிடம் சொல்வதுபோலிருந்தது.
முலையில் பால் ஏதும் வரவில்லை என தெரிந்தது. ஓரக்கண்ணால் பீமனையே நோக்கிக்கொண்டு சப்பியபின் மீண்டும் இறங்கி வந்து ஒரு அப்பத்தை எடுத்து நுனியை கரம்பி உண்டது. மீண்டும் அருகே வந்து பீமனைப் பார்த்தபின் எழுந்து நின்று அப்பத்தை அவனுக்காக நீட்டியது. அவன் கைநீட்டியதும் அப்படியே போட்டுவிட்டு திரும்ப ஓடி அன்னை மடியில் ஏறி அமர்ந்து அன்னையின் முகத்தைப் பற்றி திருப்பி அதனிடம் ஏதோ சொன்னது. அன்னை பீமனைப் பார்த்து பற்களைக் காட்டியபின் மீண்டும் அப்பம் ஒன்றை எடுத்து தின்னத் துவங்கியது.
“அவர்கள் தங்களை நன்கறிந்திருக்கிறார்கள், வீரரே” என்றார் சூரர். பீமன் “ஆம்” என்றான். “புலரியில் நீங்கள் அனல் எழுப்பியபோது மென்காற்றென வந்ததும் இவர்களே என்றொரு எண்ணம் எனக்கெழுகிறது” என்றார் சங்கதர். பீமன் அதை கேட்டதாகத் தோன்றவில்லை. ஊண்மணியின் ஓசை முழங்கத் தொடங்கியது. கூடி நின்ற மக்களிடமிருந்து எழுந்த முழக்கம் பரவி நெடுந்தொலைவுக்குச் செல்வது தெரிந்தது.
சிருங்கர் “அமரத் தொடங்குகிறார்கள்” என்றார். “இங்குள்ள முறைப்படி பரிமாறுங்கள்” என்று பீமன் சொன்னான். உணவுக்கான அழைப்புகள் சிறு கொம்பொலிகளாக எழுந்தன. அவை ஒவ்வொரு குலத்தையும் குடியையும் முறைப்படி தனித்தனியாக அழைத்தன. உணவு சமைக்கப்பட்டு எடுத்து வைக்கப்பட்ட கலவறையின் பதினாறு வாயில்களும் திறந்தன. பரிமாறுபவர்களின் தலைவனான சுப்ரதன் உள்ளே வந்து கைகூப்பி அன்னத்தை வணங்கும் அவர்களின் குலவாழ்த்தை சொன்னான். பின்னர் ஒரு பிடி அன்னத்தை எடுத்து உருட்டி பிள்ளையாராக ஆக்கி ஈசானமூலையில் இலைவிரித்து அதில் நிறுவினான். இன்னொரு பிடி அன்னத்தை உருட்டி அதற்குப் படைத்து வணங்கினான். “எழுக… அன்னம் நாம் அளிக்க அளிக்க பெருகுக!” என ஆணையிட்டான்.
சிறு சாளரத்தினூடாக அப்பால் உணவுக்கூடத்தில் பந்தி நிரைகள் நிறைந்து கொண்டிருப்பதை பீமன் நோக்கிக்கொண்டிருந்தான். மடை திறந்து நீர் புகுந்து கழனி நிறைவதுபோல் மக்கள் வந்து இறுதி மணையிலிருந்து அமர்ந்து கூடத்தை முழுமித்தனர். அவர்கள் முன் பரிமாறப்பட்டிருந்த சிறு தொடுகறிகளைக் கண்டு ஒவ்வொன்றையும் அது என்ன என்று விழிகளால் தொட்டறிந்தனர். ஒருவரோடொருவர் சிறுசொற்களில் பேசி பரிமாறுபவர்கள் வரும் திசையை அவ்வப்போது ஓரக்கண்ணால் நோக்கி காத்திருந்தனர்.
ஒற்றைச் சகடங்கள் கொண்ட சிறிய பித்தளை வண்டிகளில் உணவுக்கலங்களை ஏற்றி வைத்து ஒருவர் தள்ளி வர பிறிதொருவர் அதை பற்றிக்கொண்டு மறு கையால் அகப்பையை ஏந்தி இலைகள்தோறும் பரிமாறிக்கொண்டு வந்தார். கொட்டாங்கச்சிகளாலும் பனங்கொட்டைகளாலும் சுரைக்குடுவைகளாலும் செய்யப்பட்ட புதிய அகப்பைகள். ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு வகை அளவும் அமைப்பும் கொண்டவை.
உணவு பரிமாறி முடித்ததும் அவர்கள் அனைவரும் விலக குறைவனவற்றை நிறைக்கும் அடுத்த நிரை விளம்பர்கள் சிறு கலங்களில் உணவுடன் தோன்றினர். ஒவ்வொரு கறியும் அப்பமும் கனியும் முறையே பரிமாறப்பட இலைநிரை தூரிகை வண்ணம் தொட்டுத் தொட்டு வைக்க விரிந்தெழும் ஓவியப்பரப்பென தோற்றம் மாறிக்கொண்டே இருந்தது.
பரிமாறி முடிந்ததும் மூத்த விளம்பன் கைகளைக்கூப்பி அன்ன சூக்தத்தின் முதல் ஏழு வரிகளை உரக்க சொன்னான். “ஓம் ஓம் ஓம்” என்று அமர்ந்திருந்தவர்கள் ஒலியெழுப்பினார்கள். பின்னர் பரபரப்பின்றி உண்ணலாயினர். முறைப்படி முதலில் உப்பை தொட்டு நாவில் வைத்தனர். பின்னர் கசப்பையும் அதன் பின் இனிப்பையும் நாவுணர்ந்தபின் அப்பங்களையும் பருப்பையும் குழைத்து உண்ணத்தொடங்கினர். மெல்லும் ஓசைகள் காட்டுக்கிளைகளிலிருந்து பனித்துளிகள் சருகுமேல் உதிரும் ஒலிபோல கேட்டன.
ஒவ்வொரு பந்தியமர்வாக மாற்றமிலாது நிகழ்ந்து கொண்டிருந்தது. மீண்டும் அதே உணவுப்பந்தி அதே முகங்கள் என தோன்றியது. ஆனால் ஒவ்வொரு பந்தியும் ஒருவகையில் உண்டது. அந்தணர் பந்திகளில் மெல்லிய சலிப்போசையும் ஒருவரோடொருவர் நகையாடிக்கொண்ட பேச்சும் கலந்தொலித்தது. வைசியர் பொருள் நிறுத்து விற்பவர்கள் போலவும் அரும்பொருள் எதையோ விலை பேசி வாங்குபவர்கள் போலவும் முகம் கொண்டிருந்தனர். ஷத்ரியர் பிறிதெங்கோ உளம் நிலைத்திருப்பவர்கள் போன்ற அமைதியுடன் உண்டனர். வேளிர் குடிகளும் ஆயர்களும் கைவினைஞர்களும் சிரித்தும் சுவைத்தும் சுவைகுறித்து பிறிதொருவரிடம் சொல்லியும் உணவை களியாட்டென மாற்றிக்கொண்டனர்.
ஒவ்வொரு முகமும் ஒருவகையில் சுவையை அறிந்தது. முற்றிலும் சுவைக்கு தன்னை அளித்தவர்கள் இளங்குழவிகள் மட்டுமே. சுவையை நினைவென மீட்டினர் முதியோர். சுவைப்பரப்பில் தன் நாவுக்குப் பிடித்த சுவையை மீண்டும் மீண்டும் உண்டனர் இளையோர். பெண்கள் இனிப்பை நாட காரத்தை நோக்கி நீண்டன ஆண்களின் கைகள். விழிகள் மேலேறி உடல் சுவையில் மெல்ல தளர ஒருவர். விழி சுழல தனக்குத்தானே ஆமென தலையாட்டும் ஒருவர். விரல்கள் வாயில் பட நா வந்து தொட்டுச்செல்ல தான் என மட்டுமே அமர்ந்து உண்ணும் ஒருவர்.
உண்ணும் ஒவ்வொரு சுவையையும் தன்னருகே அமர்ந்திருக்கும் சுற்றத்திற்கு அளிக்கவேண்டும் என்று இருபுறமும் திரும்பி எடுத்தளித்தும் அள்ளி ஊட்டியும் உண்டனர் அன்னையர் சிலர். ஒவ்வொரு உணவை உண்ணும்போதும் அடுத்த உணவின் சுவையை எண்ணி தாவிக்கொண்டே இருந்தனர் சிலர். சுவையை உணர பொறுமையின்றி அனைத்தையும் மாறிமாறி எடுத்தனர் சிலர்.
பீமன் இறுதிநிரை உண்டெழுவதுவரை அச்சாளரத்திலிருந்து அசையவில்லை. அவனருகே வந்து நின்ற சூரர் “மூத்தவர் தங்களை அழைக்கிறார், வீரரே” என்றார். “ஆம்” என்று விழித்துக்கொண்டு கைதூக்கி சோம்பல் முறித்தபடி அவன் பூர்ணரை நோக்கி வந்தான். அடுமனையின் பின்புறத்திலிருந்த தாழ்ந்த ஈச்சையோலை கூரையிடப்பட்ட சிறு கொட்டகையில் இனிய காற்று வீசிக்கொண்டிருக்க சிறுபீடத்தில் சாய்ந்து அமர்ந்து சுரைக் குவளையில் அன்னநீர் அருந்திக்கொண்டிருந்த பூர்ணர் “வருக, வீரரே!” என்றார்.
பீமன் “பந்தி முடியவிருக்கிறது. இனி அரண்மனை ஏவலர் மட்டுமே” என்றான். “ஆம், அவர்கள் நல்லுணவுக்கு சலித்தவர்கள். தாங்கள் உண்பதை ஒருபொருட்டென எண்ணவில்லை என தங்களுக்கே காட்டிக்கொள்ள விழைபவர்கள்” என்றார் சங்கதர். “தாங்கள் சொன்னது மெய், வீரரே. பெருமளவில் சமைக்கையில் ஒவ்வொன்றும் பிறிதொன்றாகின்றன” என்றார் பூர்ணர். சம்பவர் “அவ்வேறுபாட்டை நானும் உணர்ந்தேன். அதை எங்ஙனம் சொல்வதென்று தெரியவில்லை” என்றார். பூர்ணர் பற்கள் உதிர்ந்த வாயைத் திறந்து சிறு குழவிபோல் முகம் இழுபட்டு சுருங்க சிரித்தபடி “நான் சொல்கிறேன்” என்றார். “மானுடனால் காதலிக்கப்படும் கன்னிக்கும் தெய்வத்தால் காதலிக்கப்படும் கன்னிக்கும் உள்ள வேறுபாடு.”
“ஆம், மெய்” என்று சூரர் நகைக்க சூழ்ந்திருந்த அடுமனையாளர்கள் சேர்ந்துகொண்டனர். சிறிய நாணத்துடன் பீமன் “அனைத்தும் ஆசிரியர்களின் அருள்” என்று சொன்னான். “உமது ஆசிரியர் யார்?” என்று பூர்ணர் கேட்டார். “இளமையில் அடுதொழில் பயிற்றுவித்தவர் கச்சர். உணவென்பது வேள்வியென்றும் சமைப்பது யோகமென்றும் எனக்கு கற்பித்தவர் மந்தரர்” என்று பீமன் சொன்னான். “நூற்றியிருபதாண்டுகாலம் வாழ்ந்து மறைந்தவர். என் நோக்கில் மாமுனிவர் என்பவர் அவரே. நான் ஞானநோக்கில் அவருடைய குருமுறையில் வந்தவன்.”
“ஆம், அவர் முழுமையடைந்திருப்பார். அத்திசை நோக்கி வணங்குகிறேன்” என்றார் பூர்ணர். அவர் திரும்பிப்பார்க்க அன்னநீரை மேலும் சற்று ஊற்றினான் இளைய அடுமனையாளன். “தாங்கள் உணவருந்தலாமே? பொழுது பிந்திவிட்டதே?” என்று பீமன் சொன்னான். “அனைத்துப் பந்தியும் முடிந்த பிறகன்றி அடுமனையாளர் எவரும் இங்கு உணவருந்தும் வழக்கம் இல்லை” என்றார் பூர்ணர். “நளன் வகுத்த நெறிகளில் இதுவும் ஒன்று. உணவருந்திவிட்டால் உணவிலிருந்து நாம் விலகிவிடுவோம். விலக்கம் மெல்லிய வெறுப்பையும் உருவாக்கிவிடும். அடுமனையாளருக்கும் அதில் விலக்கில்லை. உணவு அனைவருக்கும் சென்றாகவேண்டும் என்பதற்காக விலங்குகளின் உள்ளத்தை அவ்வாறு அமைத்திருக்கின்றன தெய்வங்கள். இன்று இத்தனை பேச்சுக்கு நடுவிலும் நம் அனைவர் செவிகளும் அப்பால் ஒலிக்கும் பந்தியில்தான் உள்ளன. நாம் உணவுண்டுவிட்டிருந்தால் அவ்வினிய ஓசை ஒவ்வாதொலிக்கும்.”
புன்னகையுடன் மெல்ல அசைந்தமர்ந்து “ஆனால் முதுமை பசி தாள முடியாமல் செய்கிறது. சற்றே அன்னம் கலந்த நீரை சிறிதளவாக அருந்திக்கொண்டிருந்தால் என்னால் காத்திருக்க முடியும்” என்றார் பூர்ணர். “அமர்க!” என்றார் சிருங்கர். பீமன் பிறிதொரு பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டான். “புலரியில் அடுப்பு மூட்டியபோது தாங்கள் நிற்கத்தொடங்கினீர்கள். இப்போதுதான் அமர்கிறீர்கள்” என்றார் சூரர். “அடுமனையில் அமர்வது வேள்வியில் நிற்பதற்கு நிகர் என்பார் எனது ஆசிரியர்” என்றான் பீமன். “ஆம், மிகச் சரியான சொல்லாட்சி” என்றார் சிருங்கர்.
பூர்ணர் “ஒன்று நோக்கியிருக்கிறீர்களா? எத்துறையிலாயினும் அதில் பெருந்திறன் கொண்டவர்கள் சரியான மொழியாளுமையும் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தங்கள் அகம் அடைவதையும் கை வனைவதையும் மொழியில் காட்ட அவர்களால் இயலும்” என்றார். பீமன் “தங்கள் செயலை அவர்கள் உள்ளத்தால் கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பார்கள். தங்களுக்கே என பல நூறு முறை வகுத்துரைத்திருப்பார்கள்” என்றான்.
சூரர் “இங்கிருந்து அதற்குள் இளவரசருக்கு செய்தி போயிருக்கிறது. முதலுணவு குரங்குகளுக்கு வைக்கப்பட்டதென்று” என்றார். “குரங்கு உண்ட மிச்சிலை இளவரசருக்கு அளித்துவிட்டார்கள் என்று அமைச்சர் கலிகர் தூண்டிப்பேசினார். கீசகர் சினந்தார். அச்சினத்தை வெளிக்காட்டினால் அடுமனையில் சமைத்த அனைத்து உணவுகளும் வீணாகிவிடும் என்று அமைச்சர் சொன்னதனால் அடங்கினார். இவர்கள் அனைவரும் உண்டு முடித்த பின் உங்களை அழைத்து ஏன் என்று கேட்கக்கூடும்.”
பீமன் “நன்று! நானே சென்று அதை சொல்கிறேன்” என்றான். “பந்தியிலும் படுகளத்திலும் மட்டுமே மானுடர் உயிர் உச்சம்கொள்ள மோதிக்கொள்கிறார்கள்” என்று பூர்ணர் சொன்னார். “புரிந்துகொள்ள முடியாததொரு விந்தை இது. இங்கல்ல, பாரதவர்ஷம் முழுக்கவே பெரும் பூசல்கள் உணவைச் சான்றாக்கியே நிகழ்ந்துள்ளன. உண்மையில் மானுடர் உளம் நெகிழ்ந்திருக்கிறார்கள். உண்டு நிறைந்தவன் உளமுவந்து பிறருக்கு உணவளிப்பான். ஆனால் ஏன் குருதிப்போர்கள் உணவுக்கூடத்தில் நிகழ்கின்றன? எந்த தெய்வங்கள் இங்கு வந்திறங்குகின்றன?”
பீமன் “அது இயல்பே. போர்க்களத்திலும் உணவுக்களத்திலும்தான் மானுடர் விலங்குகள் போலிருக்கிறார்கள். கற்றவையும் பயின்றவையும் விலக தாங்கள் எதுவோ அதுவாக எஞ்சுகிறார்கள்” என்றான். “உண்மை” என்றார் பூர்ணர். “உணவுக்களத்தில் சிலசமயம் உணவு எஞ்சாதுபோய்விடும் என பேரரசர்கள் பதறுவதை நுட்பமாக உணர்ந்திருக்கிறேன்.” சூரர் நகைத்து “ஒருவருக்கு உணவளித்து இன்னொருவருக்கு அளிக்கையில் அதை தன் உணவுடன் ஓரக்கண்ணால் நோக்கி ஒப்பிடாதவர்களாக மிகச் சிலரையே கண்டிருக்கிறேன்” என்றார்.
அடுமனையாளர்கள் எழுந்து நின்ற அசைவுகளைக் கண்டு பீமன் திரும்பியபோது வாயிலில் கீசகன் வந்து நிற்பதை கண்டான். அவன் உடலால் வாயில் முழுமையாக மூடி அறை இருண்டது. அவனுக்குப் பின்னால் அமைச்சர் கலிகரின் தலை தெரிந்தது. பீமன் எழுந்து கைகட்டி பணிந்து நிற்க சூரரால் எழுப்பப்பட்ட பூர்ணர் “வணங்குகிறேன் இளவரசே, அடுமனையாளர் கொட்டிலுக்கு தங்கள் வருகை நிகழும் பேறு பெற்றோம். என்றும் இத்தருணத்தை எண்ணியிருப்போம்” என்றார். கீசகன் பீமனையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். பீமன் அவன் விழிகளை சந்திக்கவில்லை.
“நீர்தான் இன்று சமைத்தீரோ?” என்றான் கீசகன். “ஆம், எனக்கு அவ்வாய்ப்பு அளிக்கப்பட்டது.” கீசகன் “நல்லுணவு” என்றான். பீமன் “என் நல்லூழ் இச்சொற்களை நான் கேட்க அமைந்தது” என்றான். “முதலுணவை குரங்குகளுக்குப் படைத்தீர் என அறிந்தேன்” என்றான் கீசகன். “ஆம், என் குலதெய்வம் காற்று வடிவான குரங்கு. நான் அவற்றுக்குப் படைக்காமல் எதையும் மானுடருக்கு அளித்ததில்லை.” சினத்துடன் “எதிர்த்தா பேசுகிறீர்?” என்றான். அமைச்சர் கலிகர் கீசகனுக்குப் பின்னால் நின்று “குரங்கு எச்சிலை உண்ண குறைந்துவிடவில்லை நிஷாத இளவரசர்” என்றார்.
“கன்றின் எச்சிலும் ஈயின் எச்சிலும் அமுதென கருதப்படுகின்றன” என்றான் பீமன். “வீண்சொல் எடுக்கிறாயா? என்னுடன் விளையாடுகிறாயா?” என்றான் கீசகன். இரு கைகளையும் சேர்த்து அவன் விசையுடன் அறைந்த ஓசை அங்கிருந்த அனைவரையும் திடுக்கிடச் செய்தது. நண்டுக்கொடுக்குகள்போல கைகளை விரித்தபடி பீமனை அணுகி “கிழித்து இரு துண்டுகளாக போட்டுவிடுவேன்…” என்றான்.
அஞ்சாமல் ஏறிட்டு நோக்கிய பீமன் “அதை பிறிதொரு தருணத்தில் செய்வோம், இளவரசே. நான் சமைத்த உணவு அவ்வுடலில் இப்போது ஓடுகிறது” என்றான். சிலகணங்கள் நோக்கு நிலைக்க அசைவிழந்த கீசகன் கைகள் மெல்ல தளர்ந்து தாழ “ஆம்” என்றான். பின்னர் முகம் மலர்ந்து “நல்லுணவு… நான் இப்படியொரு சுவையுணவை இதுவரை உண்டதில்லை” என்றான். இரு கைகளையும் கோத்து தசைகள் இறுகிநெளிய முறுக்கியபடி “அச்சுவைக்காக நான் உமக்கு கடன்பட்டிருக்கிறேன். உண்கையில் நான் மகிழ்ந்த அத்தருணங்கள் என்னுள் இருக்கையில் நான் உம்மை வெறுக்கமுடியாது” என்றான்.
“அது என் குருவருள்” என்றான் பீமன். “அருகே வருக! நாம் தோள்தழுவிக்கொள்வோம்…” என்றான் கீசகன். பீமன் “நான் சூதன்” என்றான். “நீர் மல்லர். அடுதொழில் வல்லுநர். அதையன்றி வேறெதையும் இத்தருணத்தில் நான் உணரவில்லை… வருக!” என்றான் கீசகன். பீமன் அருகே செல்ல அவன் தன் கைகளை விரித்து பீமனை அணைத்துக்கொண்டான். பீமனும் தயக்கம் கொண்ட கைகளுடன் அவனை தழுவினான்.
“நாம் மீண்டும் தோள்தழுவ வேண்டும். மற்களத்தில்” என்றான் கீசகன். “நீர் மாமல்லர். உம் தோள்களே சொல்கின்றன.” பீமன் “ஆம், அது நிகழ்க!” என்றான். “இப்புவியில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அறிவதுபோல எவரும் அறியமுடியாது” என்றான் கீசகன். “நாம் வாழும் உலகங்கள் வேறு. நம்மை ஆள்வன வேறு தெய்வங்கள்.” பீமன் புன்னகைத்து “ஆம்” என்றான். “எனக்கு உகந்த சுவையுணவை நீர் அனுப்பி வையும். எனக்கு எது சுவை என நீர் அன்றி எவரும் உணர முடியாது. நான்கூட” என்றான் கீசகன். “பொழுதமைகையில் நீர் என் அரண்மனைக்கு வரலாம். நாம் களிப்போர் செய்யலாம்.” பீமன் “வருகிறேன்” என்றான்.
கீசகன் பூர்ணரிடம் “இவர் தெரிவுசெய்திருப்பது அடுமனை. ஆகவே அடுமனையிலிருக்கிறார். ஆனால் இங்கிருப்பவர் என் உடன்பிறந்தார் என்று கொள்க! இவர் சொற்கள் என் ஆணைகள் என்றே திகழ்க!” என்றான். பூர்ணர் “அவ்வாறே” என்றார். கீசகன் பீமனிடம் “மீண்டும் சுவையே என்னை உவகை கொள்ளச்செய்கிறது. நா அறிந்த சுவையை உள்ளம் பெருக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் சுவைப்பதை இப்போதுதான் அறிகிறேன். உம் கைகளில் குடிகொள்ளும் தெய்வங்களை வணங்குகிறேன்” என்று பீமனின் கைகளை எடுத்து தன் தலையில் வைத்தான்.
அவன் பின்னால் நின்றிருந்த அமைச்சர் கலிகர் “செல்வோம் அரசே, அவைப் பணிகள் பல உள்ளன” என்றார். “ஆம். மீண்டும் பார்ப்போம், வலவரே” என்ற பின் கீசகன் திரும்பிச்சென்றான். அவன் வெளியேறியதுமே அடுமனையாளர்கள் உவகைக் குரலுடன் பீமனை சூழ்ந்துகொண்டனர். சங்கதர் பீமனின் கைகளை பற்றிக்கொண்டு “செங்கோலுக்கும் மேல் செல்லும் அடுமனைக்கரண்டி என இன்று கண்டேன், வீரரே” என்றார். “அதற்கு அது வேள்விக்கரண்டி என்றாகவேண்டும்” என்றார் பூர்ணர்.