பெருமதிபெற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
தங்களது கட்டுரை ஒன்றில் மலையாளம் டைப் செய்ய வராது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கீழே ஒரு லிங்க் கொடுத்துள்ளேன். அதன்மூலம் மலையாளம் இங்கிலீஷ் கீபோர்ட் கொண்டு மலையாளம் டைப் செய்ய முடியும்.
https://www.youtube.com/watch?v=J9hSNiIP3po
மேலும், மொபைலில் தகவல் பரிமாறிக்கொள்ள Gboard என்றொரு ஆப் இருக்கிறது. அதன்மூலம் வாட்சப்பின் வழியாக மலையாளத்தில் தகவல் பரிமாறிக்கொள்ளவும் முடியும்.
மேலே உள்ள தகவல்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் தங்களது பொன்னான நேரத்தை விரயம் செய்தமைக்கு மன்னிக்கவும்.
தங்களது கருத்துக்கள் எங்கும் பரவி நன்மை பயக்கவேண்டும் என்று கருதியே இதனை அனுப்பினேன்.
நன்றி
குருநாதன்
***
அன்புள்ள குருநாதன்
என் பிரச்சினை மலையாளத்தில் விரைவாகத் தட்டச்சு செய்ய முடியாது என்பதே. என் கை தமிழுக்குப் பழகிவிட்டிருக்கிறது. அதுதான் தடை. பார்த்துப்பார்த்து அடிக்கலாம். அது மிகப்பெரிய உளத்தடை. அதை மீறி ஒரு கதையை ஒன்றிப்போய் எழுதமுடியாது.
ஜெ
***
அன்புள்ள ஜெ
மலையாளத்தில் யானை டாக்டர் வந்திருப்பதை செய்தியாக வாசித்தேன். பாஷாபோஷ்ணி ஆண்டுமலரில் அட்டையில் படம்போட்டு . பல இடங்களில் போஸ்டரும் பார்த்தேன். சிலநாட்களிலேயே தீர்ந்துபோய்விட்டது என்றும் காப்பிரைட் இல்லை என்பதனால் பலர் பதிப்பிக்கப்போகிறார்கள் என்றும் சொன்னார்கள். வாழ்த்துக்கள்.
என் மலையாள நண்பர் வாசித்துவிட்டு நூறுசிம்ஹாசனங்களைவிட முக்கியமான படைப்பு என்றார். மலையாளத்தில் நான் அறிந்த நிறையப்பேர் படித்துவிட்டனர். யானைகளின் அழிவு, யானைடாக்டரின் தியாகம் என்பதைவிடவும் புழு = யானை என்ற உருவகம்தான் நிறைய பேசப்பட்டது. பலர் உணர்ச்சிகரமான பாராட்டுக்களை தெரிவித்தார்கள்
அருண்குமார்
***
அன்புள்ள அருண்,
நன்றி
ஆம், யானை டாக்டர் நூறு சிம்ஹாசனங்களைவிடவும் அலையை உருவாக்கியிருக்கிறது. ஒன்பது பதிப்பகங்கள் வெளியிடுகின்றன
ஜெ
***