அன்புள்ள ஜெமோ
மலேசியாவில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி குருகுலத்தைப்பற்றி எழுதும்போது மலேசியாவில் சுவாமி பிரம்மானந்தா அனைவராலும் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படுபவர். அவருடைய குருமரபு நீண்ட வரலாறுள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி என அவருடைய தொடர்ச்சியைச் சொல்லமுடியும் என எழுதியிருந்தீர்கள். அந்த குருகுலத்திலிருந்த படத்திலும் அதைக்காண முடிந்தது. அந்த தொடர்ச்சி என்ன என்று எனக்குப்புரியவில்லை. அதை ஓர் ஐயமாக முன்வைக்கிறேன்
ராமநாதன்
***
அன்புள்ள ராமநாதன்,
எனக்குச் சொல்லப்பட்டதுதான். சுவாமி சிவானந்தரின் ஆசிரியர் விஸ்வானந்த சரஸ்வதி ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமரபில் வந்தவர். சுவாமி சின்மயானந்தர் சுவாமி சிவானந்தரின் மாணவர். சின்மயானந்தரின் மாணவர்தான் தயானந்த சரஸ்வதி. அவரது மாணவர் மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர். அதையே நான் குறிப்பிட்டேன்.
ஜெ
*
பொ.வேல்சாமி விஷ்ணுபுரம் நூலைப்பற்றி எழுதியிருக்கும் ஒரு குறிப்பை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். அதை தகவல்கள் தவறான ‘ஆதாரமில்லாத’ நூல் என்கிறார். அதைப்பாராட்டி உங்கள் அடிப்பொடியினர் கூட்டம் போட்டபோது அவர் வந்து எதிர்த்தார் என்கிறார். உங்கள் கருத்து என்ன என அறிய விரும்புகிறேன்
ராஜ்
***
அன்புள்ள ராஜ்,
பொ.வேல்சாமி பயங்கரமாக உண்மை பேசுபவர். அவர் சொல்லும் அந்தக்கூட்டம் அ.மார்க்ஸின் அணுக்கர்களால் கூட்டப்பட்டது. அந்நூலை அக்காலத்தில் பாராட்டியவர்கள் அனைவருமே இலக்கிய முன்னோடிகள்.சில கிழட்டுப்பறவைகள் உங்கள் தோளில் வந்தமர்ந்திருக்கின்றன என அதை அ,மார்க்ஸ் அந்தக்கூட்டத்தில் குமுறலுடன் சொன்னார்.
அதற்கு எதிர்வினையாக கூட்டப்பட்ட அக்கூட்டத்தில் அன்று பேசியவர்களில் எவரும் அந்நூலை பாராட்டவில்லை. அ.மார்க்ஸ், அ.மங்கை, அதியமான் என அனைவரும் அதைக் கடுமையாக இகழ்ந்தே பேசினர்.
அக்கூட்டத்தில் ‘நான் ‘இங்கு ஏன் வந்தேன் என்றால் நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் என்று பார்க்கத்தான். விஷ்ணுபுரத்திற்கு கண்ணேறு கழிந்தது’ என்று சற்று கிண்டலுடன் நான் பேச அ.மார்க்ஸ் கொதித்து அதைப்பற்றி மேலும் வசைபாடினார்.
அக்கூட்டத்தில் பொ.வேல்சாமி ஒரு கட்டுரைவாசித்தார். அவருடைய துரதிருஷ்டம் அது முன்னரே பிரசுரமும் ஆகியிருந்தது. அந்நாவலின் காலக்குழப்பங்கள் பற்றியது அக்கட்டுரை. என்ன பிரச்சினை என்றால் அந்நாவலின் கால ஒழுங்கு ஆ,அ,இ என்னும் வரிசையில் மாற்றப்பட்டிருப்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. அ.,ஆ,இ என நேர்கோட்டு வரிசையில் அப்பாவித்தனமாக வாசித்து ’அம்புட்டும் தப்பு’ என எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை இப்போதும் கிடைக்குமென நினைக்கிறேன்
கூட்டம்முடிந்தபின் நான் அந்த மாபெரும் பிழையை பொ.வேல்சாமிக்குச் சுட்டிக்காட்டியபோது ‘ஆமாம் நான் சரியாக வாசிக்கவில்லை. திருத்திக்கொள்கிறேன்’ என்றார். ஆனால் அதே பழைய கட்டுரையை மீண்டும் ஒரு ஆசாமி அப்படியே இணையத்தில் ஏற்றினார்.
அதன்பின் நெடுங்காலம் எங்களுக்குள் ஒருவகை நட்பே நிலவியது. சரியான தகவல்களைச் சுட்டி அவர் எழுதியதாகச் சொல்லிக்கொள்ளும் அந்த நூலை எழுதும் காலகட்டத்தில் பலமுறை அதைப்பற்றிய செய்திகளை என்னிடம் பேசியிருக்கிறார். அவருடைய இல்லத்திற்குச் சென்று விவாதித்திருக்கிறேன். ஆனால் நூலை வாசித்தபின் அவருடைய ‘ஆய்வுநூலுக்கு’ எந்த வகை ஆய்வுமதிப்பும் இல்லை என்று அவரிடம் நான் சொல்லியிருக்கிறேன்.
நானறிந்தது அத்தகைய ஆய்வுநூலை எழுதத்தேவையான வாசிப்பு அவருக்கு இல்லை என்பதே. கல்வெட்டுகளையோ ஆவணங்களையோ வாசிக்கும் பயிற்சி இல்லை. இத்தளத்தில் எழுதப்பட்டுள்ள ஆங்கிலநூல்களை வாசிக்கும் மொழிப்பயிற்சியும் இல்லை. அவருடைய விருப்பக்கற்பனைக்கு ஆய்வுத்தளத்தில் எந்த மதிப்பும் இல்லை என நட்புடன் சொல்லியிருக்கிறேன். பலபத்தாண்டுகளுக்கு முன். இப்போது முகநூலில் ஏன் குமுறுகிறார் தெரியவில்லை. அதற்கும் அங்கே பத்துபேர் வந்து நிற்பார்கள் என நினைக்கிறேன்
பொ.வேல்சாமி ஆய்வாளரோ இலக்கியவாதியோ அல்ல. இரண்டிலும் ஆசை இருக்கிறது. ஆய்வாளருக்குரிய முறைமையும் நடுநிலைமையும் அவரிடம் இல்லை. இலக்கியவாதிக்குரிய ரசனையும் இல்லை.அவருடைய ஆய்வுகளனைத்துமே நாயக்கர் ஆதிக்கத்தை பிராமண ஆதிக்கத்தின் முன் நிறுத்தி வெள்ளைபூசும் பரிதாபகரமான முயற்சிகள் மட்டுமே. இத்தகைய சாதிய ஆய்வுகள் நாளைக்கு நாற்பதென்று இங்கே வெளிவந்து கொண்டிருக்கின்றன
ஒருவகையில் பாவம்தான். ஆனால் முகநூலில் ஒருமாதிரி ஜொலிக்க இதெல்லாமே போதுமென நினைக்கிறேன். வாழ்க
ஜெ
***
அன்புள்ள ஜெ
அ.மார்க்ஸ் நீங்கள் திமுக பாஜக இணைப்புக்காக திட்டமிட்டு ‘ஒற்றை இந்துத்துவா கருத்தரங்கை’ லட்சுமி மணிவண்ணன் உதவியிடன் நடத்தியிருப்பதாக எழுதியிருந்தார். வாசிப்புக்காக…
செல்வராஜ்
***
அன்புள்ள செல்வராஜ்,
அந்தப்பயம் எப்போதும் இருக்கவேண்டும். நாங்கள்லாம் யாரு! தமிழக அரசியலையே தீர்மானிப்போம்ல!
சரி, வழியே ஒரு அபிப்பிராயம். நான் இப்போதைக்கு ஸ்டாலின் மட்டுமே தமிழகத்தின் மீட்பு என நினைக்கிறேன். திமுக விரைவில் ஆட்சிக்கு வரும் என்றும் கணிக்கிறேன்
ஜெ