இரவு எனும் தொடக்கம்

iravu-jayamohan-tamiini-14127

வணக்கத்திற்குரிய ஜெ,
எளியவன் கோ எழுதுவது.கடந்த 2007-ல் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு தமிழ் சினிமா பாடல் கேட்டேன்.அதிகம் பிரபலம் அடையாத அந்த பாடலில் நாயகன் நாயகியைப் பார்த்து பாடும் ஒரு வரி.”ஜெயகாந்தன் ஜெயமோகன் கதையா நீ”. அப்போது தான் முதன்முறையாக தங்கள் பெயரை கேள்விபட்டேன்.ஜெயகாந்தன் என்னும் பெயரை ஏற்கனவே கேள்விபட்டிருக்கிறேன்.ஆனால் அவரை படித்ததில்லை.எனவே கிடைத்த புத்தகங்களில் எல்லாம் இருவரின் எழுத்துக்களையும் தேடினேன்.கிடைக்கவில்லை.புத்தகங்கள் என்றது பள்ளி பாடநூல்களே.அவற்றில் இருந்த கதைகள் என் தந்தை காலத்தவையாக இருந்தன.அதையும் தாண்டி வாசிப்பை விரிவுபடுத்த நினைத்தேன்.ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை அல்லது நான் அமைத்துகொள்ளவில்லை.
இந்நிலையில் 2013 டிசம்பரில் தங்களின் “இரவு” நாவல் வாசிக்க கிடைத்தது.”இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்” என்று முன்னுரை முணுமுணுக்க வைத்தது.முதல் அத்தியாயத்திலேயே நாவலுடன் ஒன்றிவிட்டேன்.காரணம் கேரளா.ஏனோ அப்பிரதேசத்தின் மீது எனக்கு அளவு கடந்த அபிமானம்.ஆர்வத்தோடு வாசிப்பை தொடர்ந்தேன்.இரவுக்குள் இத்தனை அர்ப்புதங்களா என்று அட்மிரல் மூலம் தாங்கள் பட்டியலிட மலைத்தேன்.சில அத்தியாயங்கள் கடந்த போது தான் உணர்ந்தேன்.நான் நீலிமாவோடு வாழ்ந்து கொண்டிருப்பதை.என் அறையில் நிசாகாந்தி  ஒரு மன நோயாக கூட இருக்கலாம்.அதெல்லாம் அப்போது தெரியவில்லை.அந்த 21 வயது இளைஞனுக்கு.
போகபோக இது அமானுஷ்யம் பற்றிய கதையா என்ற ஐயம் துளிர்விட்டது.சரவணன் சந்திக்கும் பல்வேறு எச்சரிக்கைகள் அந்த ஐயத்திற்கு உரமிட்டன.பேனர்ஜியின் எக்ஷி பற்றிய  விஸ்தரிப்புகள் அதற்கு நீர் பாய்ச்சின.ஆனால் கதையின் போக்கில் அது காணாமல் போனது.
சுசிலாவின் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” பாடலை தரவிறக்கம் செய்து கேட்டேன்.தமிழ் திரை இசையில் வேற்று மொழி பாடகர்களின் உச்சரிப்பு தமிழை கடுமையாக்கிவிட்டது என்பது சற்றேற குறைய உண்மைதான்.எனக்கு சுவர்ணலதா என்றால் உயிர்.தங்களின் எழுத்துக்கள் வழியே எர்ணாகுளத்தை கற்பனையில் சுற்றி வந்தேன்.அந்த சூழல் மிகவும் ரம்மியம்.குறிப்பாக தலைவன் தலைவி இருவரும் படகில் செல்லும் காட்சி மிகவும் நெருக்கமானவை.அங்கே நடைபெற்ற புராதான சடங்குகளால் அல்ல.அது நடைப்பெற்ற புறசூழலால்.
உற்சாகத்துடன் நாவலை முழுமூச்சில் முடித்தேன்.கமலா மீது ஆரம்பத்திலிருந்தே அவநம்பிக்கை கொண்டேன்.அது என் தொழிற்படிப்பின் (சட்டம்) தேவையாக இருக்கலாம்.ஆகவே அவர் முடிவில் பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை.அச்சூழலிலும் ஜோக் அடிக்கும் அட்மிரல் மாறுபட்ட மனிதர்களின் மாறுபட்ட மனநிலைக்கு சான்று.தலைவன் தலைவியை பிரியும் காட்சி ஷேக்ஸ்பியரை போல துன்பியலை தெரிவு செய்துவிட்டீர்களோ என்ற எண்ணம் தோன்றியது.கடைசியில் அதுவும் வானவிலின் வண்ணம் என்றானது.
நாவல் முடிந்ததும் எனக்கு நெருக்கமான ஒன்றென உணர்ந்தேன்.காரணத்தையும் சில நாட்களிளேயே கண்டுகொண்டேன்.அவை
*  முதலில் நான் வாசித்ததிலேயே முதல் சமகால நாவல் இது தான்.அதற்குமுன் படித்த சில நாவல்களும் சிறுகதைகளும் 30-40 ஆண்டுகள் முந்தியவை

*   அடுத்து வரிக்கு வரி கவனம் ஈர்க்கும் தங்களின் எழுத்தாற்றல்.
*    இறுதியாக விருப்பமான கதை கருவும்,கதை களமும்.
இவ்வாறு “இரவு” நமக்கிடையே வாசகன்-எழுத்தாளர் என்ற உறவை மலர செய்தது.என் எழுத்துக்களில் தங்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்று புரிந்துகொண்டேன்.உடனே உங்களுக்கு கடிதம் போட விழைந்தேன்.ஏனோ தவிர்த்துவிட்டேன்/தவறவிட்டேன்.ஆனாலும் தங்கள் படைப்புகளை தேடித்தேடி வாசித்து வருகிறேன்.
அம்பானியின் அதிரடியால் சமீபத்தில் இருந்து தங்கள் இணையதளத்தை பின்தொடர்ந்து வருகிறேன்.தங்களின் அடுத்தடுத்த படைப்புகளை பின்னர் எழுதுகிறேன்.மனதில் பட்டதை வடித்துவிட்டேன்.பிழைகள் இருந்தால் பொறுக்கவும்,எனக்கு தெரிவிக்கவும் மறக்காதீர்கள்.அடுத்த மடலில் சந்திப்போம்.
நட்புடன்,
கோவர்தனா,
திருவண்ணாமலை.

***

அன்புள்ள ஜெ

இரவு நாவலைத்தான் உங்கள் புனைவுலகில் முதல்முறையாக வாசிக்கிறேன். ஒரு வகையான பரபரப்பு வாசிப்புத்தன்மை நாவலில் இருந்தாலும் அதன் நுட்பமான இலக்கிய அமைதி கூடிவந்திருப்பது அட்மிரல் மேனன் கமலாவின் மரணத்தை எதிர்கொள்ளும் இடமும், அதில் வரும் பலவகையான கனவுகளும்தான். தமிழ்நாவல்களில் மரணம் நுட்பமாக சொல்லப்பட்ட இடங்களில் ஒன்று அது. சம்பத்தின் இடைவெளி இன்னொரு நாவல் அதேவகையில்

ராஜ்

முந்தைய கட்டுரைவல்லினம்
அடுத்த கட்டுரைசீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்