அன்புள்ள ரியாஸ்
ஒரு கலைப்படைப்பை வகுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் நவீன இலக்கியத்தில் மிக விரிவாகவே பேசப்பட்டுள்ளன. ஒவ்வொரு விமர்சகரும் அதற்கான தனி அளவுகோல்களை உருவாக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம். டி. எஸ். எலியட் காலம் முதல் ஹெரால்டு ப்ளூம் காலம் வரைக்கும் நான்கு தலைமுறை விமர்சகர்களின் அளவுகோல்கள் நம்முன் உள்ளன. இவற்றைக் கற்பது ஓரளவுக்கு நமது மதிப்பீடுகளைச் சொற்களாக மாற்றிக் கொள்வதற்கு உதவும்.
திட்டவட்டமாக சில வரையறைகளை நம்மால் சொல்ல முடியும். நாம் உணர்வதை நாமே வகுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளாக அமையும். ஆனால் கலைப்படைப்பை உணர்வதென்பது முழுக்க முழுக்க அந்தரங்கமானது. கலைப்படைப்பின் மதிப்பீடுகள் எப்போதும் தன்னிலை சார்ந்தவை. அவற்றை நூறு சதவீதம் புறவயமான அனுபவமாக ஆக்கவோ, எதிர்ப்பவர்களிடம் அறுதியாக நிறுவவோ எவராலும் இயலாது. முழுக்க முழுக்க அகவயமான இந்த மதிப்பீடு ஒட்டுமொத்தமாக, ஒரு சமூக எண்ணமாகத் திரளும்போதுதான் ஒரு புறவயத்தன்மை அடைகிறது. டால்ஸ்டாய் உலக நாவலாசிரியர்களில் முதன்மையானவர் என நான் நம்புவது என்னுடைய அந்தரங்கமான மதிப்பீடு. ஆனால் இத்தகைய பல்லாயிரம் மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டதனால் தான் புறவயமாக அவரே உலகத்தின் தலை சிறந்த நாவலாசிரியராகக் கருதப்படுகிறார்.
இதற்கு காரணம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அனுபவம் சார்ந்து, ஆளுமை சார்ந்து, சூழல் சார்ந்து தனித்தன்மைகள் பல்வேறு இருந்தாலும் கூட அடிப்படையில் மானுட உள்ளமும் எண்ணங்களும் ஆன்மீகமும் ஒன்றே என்பதுதான். இந்த முரண்பாடு எப்போதுமே இலக்கியத்தில் ஒரு பெரிய மர்மம். ஒரு தனிமனிதனின் அகவயக் கருத்து எப்படி புறவயக் கருத்தாக திரள்கிறது? ஒரு தனிக்கருத்து எப்படி பொதுக் கருத்தாக மாறுகிறது?
எல்லா இலக்கியமதிப்பீடுகளும் தனிக்கருத்துக்கள் மட்டுமே, அவை பொதுக்கருத்துக்கள் அல்ல என்று எப்போதும் ஒரு சாரார் வாதிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் இலக்கியம் செயல்படும் முறையைப்பற்றி அறியாத வெற்றுக் கோட்பாட்டாளர்களாகவோ கல்வியாளர்களாகவோ அரசியல்வாதிகளாகவோ இருப்பார்கள். அல்லது அவர்களின் குரலை எதிரொலிக்கும் சாமானியர்களாக. மிக அந்தரங்கமான ஒர் அபிப்ராயம் எப்படியோ மானுடப்பொதுவான ஒரு மதிப்பீடின் பகுதியாக மாறிவிடும் விந்தை அன்று முதல் இன்று வரை இலக்கியத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
இலக்கியத்திற்குள் நுழையும் வாசகன் இந்த திகைப்பை அடைவது இயல்பாக நிகழ்கிறது. ஒருவருக்கு பாலகுமாரன் பிடித்திருக்கிறது. ஒருவருக்கு ஜெயகாந்தன் பிடித்திருக்கிறது ஒருவருக்கு புதுமைப்பித்தன் பிடித்திருக்கிறது. இதிலென்ன பாகுபாடு? இதில் எவர் தலைசிறந்த எழுத்தாளன் என்று எப்படி சொல்வது? இது உண்மை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கியத்தின் மையத்திற்குள் புதுமைப்பித்தன் வந்து அமர்வது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதே அவனுக்கான பதில்.
*
உங்கள் கேள்விக்கு வருகிறேன். தனிக்கருத்தே பொதுக்கருத்தின் ஊற்று. ஆகவே நம்முடைய இலக்கிய மதிப்பீடுகளை முழுக்க முழுக்க அந்தரங்கமாக உருவாக்கிக் கொள்வதுதான் தலைசிறந்த வழி. அதற்கு புறவயமான கருவிகளை நாம் கண்டடையலாம். ஆனால் வாசிக்கையில் பிறர் கருத்துகளை பெருமளவுக்கு பொருட்படுத்தவேண்டியதில்லை. ஏனெனில் நாம் ஒரு படைப்புடன் அமர்ந்திருக்கையில் அங்கு வலப்பக்கம் இடப்பக்கம் விமர்சகர்களும் கோட்பாடுகளும் அமைந்திருப்பதில்லை. நமக்கும் படைப்பாளிக்கும் நடுவே அந்த அச்சுப் புத்தகம் கூட இல்லை. அத்தனை அந்தரங்கமாக அந்த உரையாடல் நிகழ்ந்தால்தான் அந்தப் புத்தகம் உண்மையில் வாசிக்கப்படுகிறது.
நாம் கொள்ளும் உணர்வெழுச்சி, சிந்தனைவிரிவு, ஆன்மீகமான கண்டடைதல் நமக்கு மட்டுமே உரியது. அதை பிற்பாடு பிற கருத்துக்களைக் கொண்டு நாம் பரிசீலித்துக் கொள்ளலாம். பிறருடைய கருத்துகளின் கோணங்களைக் கொண்டு முழுமைப்படுத்திக் கொள்ளலாம். அந்த தருணத்தில் நாம் மட்டுமேயாக இருக்கவேண்டும்.
நீங்கள் திரைப்படங்களைக் கொண்டு ஒரு கலைப்படைப்புக்கான அடையாளங்களை உருவாக்க முயல்கிறீர்கள். இது ஒரு சரியான வழிமுறை என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் நீங்கள் முதன்மையாக ஒரு திரைப்பட ரசிகர் அல்ல, இலக்கிய வாசகர். திரைப்படத்தை ரசிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் தொடர்ச்சியான திரைப்பட ரசனையும் திரைப்படத்திற்கு தன்னை முழுமையாகக் கொடுத்துக் கொள்ளும் பயிற்சியும் அவசியம். எந்த கலைக்கும் அத்தகைய பயிற்சி அவசியம்.
பிரபலமான சில உதாரணங்களைக் கொண்டு இவற்றை பேசுவதற்காக திரைப்படங்களை எடுத்துக் கொண்டீர்களென்றால் கூட அது சரியானதல்ல. உங்களை தனிப்பட்ட முறையில் பாதித்த படைப்பு பாதிக்காத படைப்புகளைக் கொண்டு இந்த அளவீடுகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும். அது அந்தப் படைப்புகளை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல் உங்களைப் புரிந்துகொள்வதற்கும் மிக அவசியமானது.
என்னளவில் இலக்கியப்படைப்புகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் சிலவற்றைக் கொண்டிருக்கிறேன். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வாசிப்பு மனநிலைகளில் நான் இருந்திருக்கிறேன். உங்கள் வயதில் உங்களைப் போலவே மூளைக்குச் சவால் விடக்கூடிய சிடுக்குகளும் சிக்கல்களும் நிறைந்த படைப்புகளை விரும்பியிருக்கிறேன். நானறியாத முற்றிலும் அயலான விஷயங்களைச் சொல்லும் படைப்புகளில் வெறியுடன் மோதி வென்றதும் நிறைவடைதிருக்கிறேன்.
பின்னர் அது எனது வெறும் ஆணவத்திலிருந்து உருவாவதென்று புரிந்துகொண்டேன். நான் வேறுபட்டவன் பிறர் எட்ட முடியாத இடங்களை எட்டுபவன் என எனக்கு நானே நிரூபித்துக் கொள்வதற்கான படைப்புகள் அவை. அன்று விதந்தோதிய பல படைப்பாளிகளை மிக எளிதாக இன்று கடந்து வந்துவிட்டேன். அன்றுமிக எளிமையானவை என்று நினைத்த பல படைப்புகள் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வரிக்கு வரி நினைவிலிருக்கும் விந்தையை இன்று கண்டுகொண்டிருக்கிறேன்.
ஏன் அவை நினைவிலிருக்கின்றன என்று யோசிக்கும்போது தெரிகிறது, அவை என்னுடைய வாழ்க்கை நோக்கை தொட்டுப்பேசின. நானறிந்த அனுபவங்களை விரிவுபடுத்தின. என்னுடைய சிந்தனைகளை ஆற்றுப்படுத்தின.
அந்த இளமைப்பருவத்தில் எத்தகைய படைப்புகள் என்னைக் கவர்ந்தன என இன்று பார்க்கையில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருந்தன என்று தோன்றுகிறது. ஒன்று, ஆண் பெண் உறவு சம்மந்தமானது. அவ்வயதின் இயல்பு அது. ஆணோ பெண்ணோ வளர்ந்துவருகையில் எதிர்பாலினத்தை அறிந்துகொள்வது முக்கியமான சவாலாக இருக்கிறது. எதிர்பாலினம் குறித்த விலக்குகள் முதலில் வந்து சேர்கின்றன. அந்த விலக்குகளுக்குள் நின்று யோசிக்கும்போது கிடைத்த அனுபவங்களையும் மிகக்குறைவான தகவல்களையும் கொண்டு பெரும்பகுதியை ஊகிக்க வேண்டியிருக்கிறது. அந்த ஊகம் கொடுக்கும் கிளர்ச்சியே எதிர்பாலினத்தைப் பற்றிய மாபெரும் பிம்பத்தை உருவாக்குகிறது. அந்தப்பிம்பத்தை வெவ்வேறு வகையில் மேலும் மேலும் அறிந்து கொள்வதற்கான துடிப்பு உருவாகிறது.
இப்போது யோசித்துப் பார்க்கையில் இரு உடல்களின் இணைவை இத்தனை விரித்து விரித்து எழுதிப்படிக்க என்னதான் இருக்கிறது என்ற சலிப்பு ஏற்படுகிறது. எத்தனை சொற்களில் எத்தனை முறை எப்படியெல்லாம் வாசித்து தள்ளியிருக்கிறேன் என்று என்னைப்பற்றி எனக்கே வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் அதை பண்பாட்டுச்சூழல் உருவாக்கிய மன அவசம் என புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் உலகம் முழுக்க அனைத்துப் பண்பாடுகளும் பாலுறவின் மீது உச்சகட்ட கட்டுப்பாடுகளையும் விலக்குகளையும் கொண்டே தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக மிக அதிகமான திரிபுகளும் அவற்றில்தான் உள்ளன. உறவுகளிலேயே மிகச் சிடுக்காக ஆக்கப்பட்டுள்ள உறவு என்பது பாலுறவுதான்.
பாலுறவை எதிர்நோக்கி நிற்கும் அந்தக் காலகட்டத்தில் அனைத்து சிந்தனைகளும் மீண்டும் மீண்டும் அதை நோக்கிச் சென்றன. அதை எழுதுபவர்கள் பெரும் கவர்ச்சியளித்தார்கள். இன்று அப்படியல்ல. அது வாழ்க்கையின் ஒரு சிறுபகுதிதான். ஒர் எல்லைக்குள் நிற்கும் சிக்கல் மட்டுமே அதில் உள்ளது என்று இன்று புரிந்துகொள்கிறேன். இன்று எனக்கு அதில் ஆர்வமில்லை என்றல்ல. அதைப்பேசாமல் இலக்கியம் இல்லை. அதன் உச்சங்களை இலக்கியம் சென்று தொட்டாகவேண்டும். ஆனால் அது பேசப்படும் அளவுக்கு பேசப்படவேண்டியதில்லை என்ற எண்ணத்திலிருக்கிறேன்.
அன்று அதைவிடவும் எனக்கு அன்று கிளர்ச்சி அளித்தது ஒட்டுமொத்த வாழ்க்கையை பொதுமைப்படுத்தி வரையறுக்கும் சிந்தனை. அவற்றை முன்வைக்கும் படைப்புகள். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மொத்த வாழ்க்கையை, மொத்த பண்பாட்டை கூறிவிடுவை மேல் எனக்கு பெரும் பரவசம் எனக்கு அன்று இருந்தது. சார்த்தரின் being and Nothingness ஐ பைபிள் போல எட்டுமாதங்கள் கொண்டு அலைந்து வாசித்தேன். வாழ்க்கையில் அனைத்துக்கும் அதில் இருந்து பதில் அளித்துவிட முடியும் என்று எண்ணினேன். சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாய்ந்தெழுந்து அதைப்பற்றி பேசினேன். சுந்தர ராமசாமி ,ஆற்றூர் ரவிவர்மா, ஞானி ,பி.கே.பாலகிருஷ்ணன் போன்ற முன்னோடி மேதைகளை எல்லாம் அந்த நூலைப் பிடித்துக்கொண்டு எதிர்த்து வாதாடி இருக்கிறேன். அந்த நூலின் வெளிச்சத்தில் ’தேறிய’ படைப்புகளாகிய இருத்தலியல் சார்ந்த படைப்புகளை வழிபட்டிருக்கிறேன்.
அதுவும் ஒர் ஆணவம்தான். இளவயதில் இந்த ஒட்டுமொத்த உலகத்தை என்னால் அறிந்துவிட முடியும், மயிலேறி உலகைச் சுற்றிவந்துவிட முடியும் என்ற நம்பிக்கை. ஏனெனில் நான் அசாதாரணமானவன்,. அறிவதற்கென்றே பிறந்தவன் எண்ணினேன். அந்த வயதில் மார்க்சியமோ இருத்தலியமோ ஏதேனும் ஒரு கோட்பாடுகளுக்குள் போனவர்கள் பெரும் பரவசத்தில் திளைப்பதற்கான காரணம் அதுவே.
இவை இரண்டிலிருந்தும் ஓரளவு விடுபட்ட பிறகே என்னால் மதிப்பீடுகளை தெளிவாக்கிக் கொள்ள முடிந்தது என்று இப்போது தோன்றுகிறது. இன்று என்னுடைய மதிப்பீடுகள் வேறு.
*
இலக்கியம் என்பது முதன்மையாக கற்பனையின் இன்பத்தை அளிப்பதென்று இன்று கருதுகிறேன். இங்கு வாழும் வாழ்க்கைக்கு நிகரான வேறு வாழ்க்கைக்கு சென்று வாழும் அனுபவத்தை அது அளிக்க வேண்டும். முழுமையான ஒரு சமான வாழ்க்கை. அனைத்துவகையிலும் முழுமையானது. உண்மையான வாழ்க்கையின் ஒத்திசைவின்மையும் இலக்கின்மையும் இல்லாதது. ஒழுங்கானது, இலக்கும் மையமும் உள்ளது. நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றே உணராத வாசிப்பே அதை அளிக்கமுடியும். மொழியால், கோட்பாடுகளால், கொள்கைகளால் எல்லாம் அந்த அனுபவம் சிதைக்கப்படக்கூடாது. வாசிப்பின்பம் என்று நான் சொல்வது அதைத்தான்.
இரண்டாவதாக இலக்கியம் வாழ்க்கையின் தருணங்களை விளங்கிக் கொள்வதற்கான உள்வெளிச்சங்களை அளிக்கவேண்டும். நான் சந்தித்த வாழ்க்கைத் தருணங்களை ஒரு புனைவு மேலும் துல்லியமாக்கிக் காட்ட வேண்டும். புனைவைப்படிக்கையில் எனது வாழ்க்கைத் தருணத்தை மறுவெளிச்சத்தில் கண்டு இதுதானா என்று வியக்க வேண்டும். எப்படி இது என்று திகைக்க வேண்டும்.
பல தருணங்களில் டால்ஸ்டாயை அன்றாடவாழ்க்கையில் திரும்ப திரும்ப கண்டு கொண்டிருக்கிறேன். உதாரணமாக நடாஷாவுக்கு பிரின்ஸ் ஆண்ட்ரூவை திருமணம் நிச்சயித்த பிறகு அவள் அனடோலுடன் ஓடிப்போக முயல்கிறாள். அதற்கு முன் தன் திருமண நிச்சய மோதிரத்தை அவள் திரும்ப அளித்திருக்கிறாள். அனடோல் ஒரு பெண் பித்தன் இழிமகன். தன்னை அவன் பொருட்டு அவள் துறந்தாள் என்பது ஆண்ட்ரூவுக்கு பெரிய அதிர்ச்சி. இச்செய்தி அறிந்த ஆண்ட்ரூவுக்கும் நடாஷா குடும்பத்துக்கும் நண்பரான பியர் அனடோலை மிரட்ட அவன் தப்பியோடிவிடுகிறான். தன் கணநேர மயக்கம் அளித்த இழிவுணர்ச்சியில் சுருண்டு படுத்திருக்கிறாள் நடாஷா. அவளை ஆறுதல் படுத்தியபிறகு ஒரு சமாதானத் தூதராக ஆண்ட்ரூவைப் பார்க்க செல்கிறான் பியர். ஆண்ட்ரூ உடைந்து போயிருப்பான், துயரத்துடனோ சினத்துடனோ இருப்பான் என எதிர்பார்க்கிறான்.
ஆனால் ராணுவ அதிகாரிகளுக்கான உணவகத்தில் நண்பர்களுடன் சிரித்துப் பேசி கும்மாளமிடும் ஆண்ட்ரூவைத்தான் அவன் பார்க்கிறான். முதலில் சற்று அதிர்ச்சி கொண்டாலும் கூட அது இயல்பென்று உடனே புரிந்துகொள்கிறான். உச்சகட்ட உளஅழுத்தத்தில் நேர் தலைகீழாகத் தன்னை திருப்பிக் கொள்ளும் இயல்பு மனதுக்கு உண்டு. சிரித்துக் கும்மாளமிடுவது நடிப்பல்ல. உண்மையிலேயே அதைச் செய்ய முடியும். பல இறந்த வீடுகளில் நெருங்கிய உறவினர்கள் சிரிப்பதையும் வேடிக்கையாக பேசுவதையும் கண்டிருந்த நான் அந்த தருணத்தில் அனைத்தையும் ஒரே கணத்தில் புரிந்து கொண்டேன். இலக்கியம் அளிக்கும் இரண்டாவது அனுபவம் அதுதான்.
அத்தகைய தருணங்கள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப் படைப்பு மேலானது. அது மிகையாக இருக்கலாகாது. அழுத்திவிடலாகாது. மிகச் சரியாக இருக்க வேண்டும். அதை அறியும்போது அது புதிதாக இருக்காது. நாம் முன்னரே அறிந்து, ஆனால் தெளிவாக உணராத ஒன்றாக இருக்கவேண்டும். இவ்விரண்டு அடிப்படைகள் இருக்குமென்றால் மட்டும் தான் ஒரு படைப்பை மேலான இலக்கியமாக எண்ண வேண்டும். அதன் பிறகே பிற அனைத்தும்.
மூன்றாவதாக, மொழி மிகச்சரியாக பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்கு முக்கியம். செயற்கையான, சிக்கலான மொழியை நான் விரும்புவதில்லை. இலக்கியப்படைப்பென்பது முக்கியமாக மொழியனுபவம் என்றே நான் எண்ணுகிறேன். துல்லியமாக வெளிப்படுத்துதல், அழகுற வெளிப்படுத்துதல், ஒலிநயத்துடன் வெளிப்படுத்துதல் இலக்கியப்படைப்புக்கு மிக முக்கியமானது. அதே சமயம் பிரபல வணிக எழுத்தாளர்களைப்போல ஒரே வகையான மொழியானது தொடர்த்தேர்ச்சி காரணமாகவே இயல்பாகப் பயன்படுத்துவதில் எனக்கு ஈர்ப்பில்லை. உதாரணமாக சுஜாதாவின் நடை எந்த வகையிலும் மாறுபடாது. ஒரு கட்டத்துக்கு மேல் சுஜாதாவின் நடை சலிப்பூட்டுகிறது. ஆனால் புளியமரத்தின் கதையிலும் ஜே.ஜே.சிலகுறிப்புகளிலும் சுந்தர ராமசாமியின் நடை முற்றிலும் வேறுபட்டது. அதுதான் ஒரு நடையிலளானின் சாதனை என்று நான் நினைக்கிறேன்.
நான்காவதாக, துல்லியமாக செதுக்கப்பட்ட கதாபாத்திரங்கள். ஒரு படைப்பை படித்து முடித்து நெடுங்காலம் ஆகியும் உண்மையான மனிதனைப்போலவே ஒரு கதாபாத்திரம் நம்முடன் இருக்குமென்றால் மட்டுமே அது நல்ல படைப்பு. வலுவான கதாபாத்திரம் இல்லாத பெரும் செவ்வியலாக்கம் இந்த உலகத்தில் உண்டு என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இலக்கியத்தின் சவால்களில் ஒன்று கதாபாத்திர உருவாக்கம் .ஏனெனில் கதாபாத்திரம் மனித ஆளுமைகளை சித்தரிக்கிறது. புனைவுலகத்துக்கு வெளியே அப்படி திட்டவட்டமான எந்த ஆளுமையும் மனிதனுக்கு கிடையாது. மனிதர்கள் ஒர் உடலுக்குள் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் உள்ளங்கள்.. ஒரு மனிதனை வாழ்வின் கடைசிவரை பார்த்தால் அவன் இயல்பு இதுவென ஒரு போதும் அறிவித்துவிட முடியாது. தொடர்ந்து மாறிக்கொண்டுதான் இருப்பான். ஆகவேதான் புனைகதையில் கதாபாத்திரம் என்பது அத்தனை முக்கியமானதாக ஆகிறது. நாம் உருவாக்கி உருவக்கி ஆடும் முடிவிலா விளையாட்டு அது.
உண்மையில் வெளியே வாழ்க்கை இப்படி எல்லைகள் இல்லாமல், வரைமுறைகள் இல்லாமல், தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதனால்தான் இலக்கியம் மாறாத, திட்டவட்டமான படிமங்களை உருவாக்க முயல்கிறது. வெளியே கதாபாத்திரம் என்று ஒன்றில்லை, ஆளுமை என்ற ஒன்றில்லை என்பதனால் தான் இலக்கிய படைப்புகள் ஆளுமையும் கதாபாத்திரமும் தேவையாக இருக்கிறது. இலியட் ஒடிசியிலிருந்து ராமாயண மகாபாரதங்களிலிருந்து நமக்கு மாபெரும் கதாபாத்திரங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மிக வலுவான கதாபாத்திரங்களை உருவாக்குவதென்பது இலக்கியப்படைப்புகளின் வெற்றிகளில் ஒன்று.
தட்டையான கதாபாத்திரம் என்பது ஒற்றை இயல்புடன் வரையறுக்கப்பட்ட ஒன்று மாறாத இயல்புடன் ஒவ்வொரு கணமும் தருணத்திற்கு ஏற்ப வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவதல்ல இலக்கியவாதியின் சவால். அந்தக் கதாபாத்திரம் மாறிக்கொண்டே இருக்கும்போதே ஆனால் அதன் அடிப்படையான ஒன்று மேலும் மேலும் வலுப்பெற்றுக் கொண்டும் இருக்கும். அதுபலவகையான உளவியல் சிக்கல்களும் ஊடுபாவுகளும் கொண்டதாக இருக்கும். ஆனால் நன்கறிந்த ஒரு புள்ளியில் நம்மிடம் அது நிலையான தொடர்பையும் கொண்டிருக்கும். அத்தகைய பெருங்கதாபாத்திரங்களை உருவாக்குபவர்களை மாபெரும் படைப்பாளிகள் என்று நினைக்கிறேன்.
இன்னொன்று, உணர்ச்சியின் உச்சத் தருணங்கள். அவை படைப்புக்கு முக்கியமானவை. வெவ்வேறு காலகட்டங்களில் உணர்ச்சித் தருணங்களின் மேல் நமக்கொரு ஒவ்வாமை உருவாகும். ஏனென்றால் நமது வாழ்க்கையில் அத்தகைய உணர்ச்சி உச்சநிலைகளை நாம் சந்திப்பதில்லை. அந்நிலை ஒருவகையான செயற்கைத்தருணம் என்றும் ஓரம்சாய்ந்தது என்றும் நாம் நினைக்கத் தலைப்படுகிறோம். அந்நிலையை அடையும் வாசகன் உண்மையில் புனைவு என்னும் அற்புதத்தை இழக்கத் தொடங்கிவிட்டவன். சாகசம் மீதான அவநம்பிக்கை நம்மை இளமையிலிருந்து விலக்குவதுபோலத்தான் அதுவும்.
சாகசம் போலத்தான் உணர்வுச்சமும். அவை புனைவுகள். ஆனால் விழுமியங்கள், வாழ்க்கைநோக்குகள் மோதிக்கொள்கையில் அவை உருவாகின்றன. நேர்வாழ்வில் அவை மிக அரிது என்பது உண்மை. ஆகவேதான் அவை புனைவுக்கு முக்கியமானவை. அவை தேர்ந்த எழுத்தாளன் உருவாக்கும் புனைவுத்தருணங்கள் என உணர்ந்து தன்னை அதற்கு ஒப்புக்கொடுக்கும் வாசகனே அவற்றை அடையமுடியும். நாம் நம்பும், ஏற்று ஒழுகும் விழுமியங்களையும் வாழ்க்கை நோக்குகளையும் ஆழமாக அறிய, பரிசீலிக்க அவை களம் அமைக்கின்றன. ஆகவேதான் அடிப்படை வினாக்களுடன் எழும் பேரிலக்கியங்கள் அனைத்தும் உணர்வுச்சம் வழியாகவே செயல்படுகின்றன.
இவையனைத்திற்கும் மேலாக இலக்கியப்படைப்பின் தகுதிகளில் ஒன்று அது உருவாக்கும் பண்பாட்டு விமர்சனம். உண்மையில் அப்பண்பாட்டு விமர்சனத்தின் பெறுமதியென்ன என்பதே ஒரு படைப்பின் சரியான மதிப்பை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். பலசமயம் உத்திப் பரிசோதனைகள் வழியாக, சமகாலத்தன்மை வழியாக, மொழியின் புதுமை காரணமாக கவன ஈர்ப்பை பெறும் படைப்புகள் உண்டு. அவற்றின் நீண்டகால மதிப்பென்பது மிகக்குறைவே. . மிகச் சிறந்த உதாரணமென்றால் ஜே ஜே சில குறிப்புகளைச் சொல்வேன். பலவகையிலும் தமிழில் மிகப்பெரிய அலையை உருவாக்கிய படைப்பு அது. ஒருகாலத்தில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பென்று அதைச் சொன்னவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று பார்க்கையில் அதன் பண்பாட்டு விமர்சனத்தின் தாக்கம் மிகக்குறைவானதென்று தோன்றுகிறது. அது மிகச்சிறிய ஓர் எழுத்துவட்டத்தை பகடி செய்கிறது. அதைவிட புளியமரத்தின் கதை மிக ஆழமான பண்பாட்டு விமர்சனம் ஒன்றை உருவாக்குகிறது. ஆகவே புளியமரத்தின் கதையின் மதிப்பு அதிகம்.
இந்திய வரலாற்றின் மீதும், இந்தியப்பண்பாட்டின்மீதும் ஒரு படைப்பு கொண்டிருக்கும் உறவென்ன என்பதை நேரடியாகவே கேட்டுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். பொய்யான பேசுதளம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு அதில் நின்றபடி தன்னை முன் வைக்கும் படைப்புகள் எவ்வகையிலும் கலைவெற்றி அடைந்தவை அல்ல. இலக்கிய எழுத்தாளனுக்கு ஒரு வரலாற்று எழுத்தாளனுக்குரிய. பண்பாட்டுச் செயல்பாட்டாளனுக்குரிய, சமூக ஆய்வாளனுக்குரிய விரிந்த அணுகுமுறையும் தனிப்பட்ட பார்வையும் தேவை. அது ‘சரியானதாக’ இருக்கவேண்டியதில்லை. அதை காலம் சொல்லவேண்டும். எழுத்தாளனுடைய அழுத்தமான அந்தரங்க ஈடுபாடு அப்படைப்பில் இருக்கவேண்டும், அவ்வளவுதான். அதன் விளைவாக உருவாகும் விமர்சனத்தன்மையே இலக்கியப்படைப்பை ஒரு அறிவுச் செயல்பாட்டின் தன்மை கொண்டதாக்குகிறது.
பல தருணங்களில் வரலாறோ பண்பாடோ சமூகச் சூழலோ அறியாத படைப்பாளிகள் இலக்கியம் எனும் மிகச்சிறிய வட்டத்தில் நின்றுகொண்டு சுழற்றிச் சுழற்றி சோதனைகளைச் செய்துவருவது உண்டு. அவ்வகை எழுத்தாளர்கள் பல காரணங்களால் முக்கியமானவர்களாக எண்ணப்படுவதுமுண்டு. மிகச்சிறந்த உதாரணம் நபக்கோவ். அவருடைய கூரிய ஆங்கிலமொழிநடை மிகச் சிலாகிக்கப்பட்ட ஒன்று. எனக்கு அவர் ஒரு முக்கியமான படைப்பாளி அல்ல. ஏனென்றால் அவருடைய பண்பாட்டுவிமர்சனத்தன்மை ஒழுக்கவியல் சார்ந்தது, ஆகவே தற்காலிகமானது.
நான் போற்றும் படைப்பாளிகள் டால்ஸ்டாய் ஆனாலும் கசன்ட் சாக்கீஸானாலும் ஹெர்மன் ஹெஸ்- ஆனாலும் கப்ரியேல் கர்சியோ மார்க்யூஸானாலும் அடிப்படையில் அவர்கள் வாழும் சமூகம். பண்பாடுச் சூழல் ஆகியவற்றுக்கான உண்மையான விமர்சன எதிர்வினையையே படைப்பென அளித்தவர்கள். . இவ்வாறு ஒரு படைப்பு ஆழமான விமர்சனத்தை முன்வைக்கையில் அது எந்த வகையான விமர்சனமென மதிப்பிடும் அளவுக்கு வாசகனுக்கு பண்பாட்டு வரலாற்றுச் சூழல் சார்ந்த பயிற்சியும் ஆர்வமும் இருந்தாகவேண்டும். அதன் உண்மையான பெருமதியையும் படைப்பில் அது புனைவாக மாறியிருக்கும் அழகையும் ரசிக்கும் நுண்ணுணர்வுயும் அவனில் இருந்தாகவேண்டும்.
இந்தியச் சூழலில் பெரும்பாலான தருணங்களில் வாசகன் அந்த தகுதி இல்லாதவனாக இருக்கிறான் என்பதைகாணமுடிகிறது இந்தியாவின் வரலாறு, பண்பாட்டுப்புலம் சார்ந்து அவனுக்கு எந்த அறிமுகமும் இருப்பதில்லை. அக்கறையும் இருப்பதில்லை. ஆகவே அவன் முன்னரே வாசித்த படைப்புகளில் இருந்து பெற்ற சில எளிய அளவுகோல்களைக்கொண்டே மீண்டும் அடுத்த படைப்புகளை மதிப்பிடுகிறான். ஒருபடைப்பிலிருந்து இன்னொரு படைப்பாளியின் எளிய வேறுபாடு மட்டுமே அவனுடைய அளவுகோலாக ஆகிறது. வாசகன் படைப்பாளியிடம் தோல்வியடையும் தருணம் இது என்று தோன்றுகிறது.
ஒரு படைப்பை மதிப்பிடுவதற்கான எனது அளவுகோல்கள் இவை என்று சொல்வேன். இவற்றை கோட்பாடுகளிலிருந்தல்ல நான் வாசித்த வெற்றிகரமான படைப்புகளிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் இவ்வாறு ஒரு அளவுகோலை உருவாக்கிக் கொள்ளலாம். அவற்றை முன்வைக்கலாம். இலக்கிய விமர்சனம் என்பது படைப்பை மதிப்பிடுவது அல்ல. நமது அளவுகோல்களை மதிப்பிட்டுக்கொள்வதே.
ஜெ
***