கலையும் அல்லதும்- ஒருகடிதம்

rias

 ஜெ,

சமீபமாக ஒரு கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. எது ஒரு படைப்பை கலையாக மாற்றுகிறது? அந்த ‘எது’வை வரையறைக்கு உட்படுத்த முடியுமா? இலக்கியம், திரைப்படங்களைக் கூட ஒரு வரையறைக்கு உட்படுத்த முடியும். அதையும் கூட திட்டவட்டமாக வரையறுக்க முடியாது என்று தோன்றுகிறது. ஆனால் இசை போன்ற அரூபமா கலைகளில் அதன் கலைத்தன்மையை எவ்வாறு வரையறை செய்வது. நுண்ணுணர்வால் மட்டுமே அணுகக்கூடிய கலை தானே அது. அவற்றை எவ்வாறு தர்க்கப்படுத்த முடியும்?

சிற்பக்கலைக்கு வந்தால், எது ஒரு சிற்பத்தை கலைத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது? அதிலுள்ள நுணுக்கங்கள் மட்டும் அதனை கலைப்படைப்பாக மாற்றி இருக்காது. அதிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சிற்பத்தை விட ஒரு எளிமையான சிற்பம் நம்மை பரவசத்தில் அழ்த்தக்கூடியதாக இருக்கும். அந்த எளிமையான சிற்பத்தில் காணப்படும் ஜீவன் தான் அதனை கலைத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது. அந்த ஜீவனை எவ்வாறு வரையறுப்பது?

இவ்வாறே கேட்டுக்கொண்டு போனால் ஒரு கட்டத்தில் கலை என்பதே நுண்ணுணர்வால் உணரக்கூடிய ஒன்று என்பதே பதிலாக கிடைக்கிறது. அது அவ்வாறுதனா?

என்னுடைய புரிதலுக்காக சில திரைப்படங்களைக் கொண்டு அது எதனால் கலைத்தன்மையை அடையவில்லை, எதனால் அது கலையாகிறது என்பதை முயற்சித்து பார்த்திருக்கிறேன்.

கலையற்றதிலிந்து கலைக்கு

எது ஒரு படைப்பை கலைப்படைப்பாக மாற்றுகிறது? ஒரு படைப்பு எவ்வளவு தூரம் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறதோ அந்தளவிற்கு அது கலைத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இங்கு உண்மை என சுட்டப்படுவது ஆழ்மன உண்மையை. அழ்மன உண்மை என்பது, ஒருவர் தன் வாழ்நாளில் அதுவரை எதிர் கொண்டிராத ஒரு சூழ்நிலையை, ஒரு படைப்பில் காணும்போது, அப்படைப்பு கடத்தும் உணர்வு, அந்நபரே அந்த சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது அடையும் உணர்வாக இருப்பதாக உணர முடியும்.

உண்மையினை ஒற்றை தன்மையினதாக கருத முடியாது. அது பல கோணங்களைக் கொண்டிருக்கும். அவ்வுண்மையை நோக்கிய பயணத்தின் பாதையை துல்லியமாக பதிவு செய்யும் படைப்புகளே காலத்தினால் அழியாத கலைப்படைப்பாக ஆகுகிறது. அந்த உண்மைகளை ஒருவர் அதுவரை அறிந்திராமல் இருந்திருந்தாலும் கூட ஒரு படைப்பு அந்த உணமையை முன்வைக்கும் போது அது அந்நபரால் உணரக்கூடியதாக இருக்கும்.

வணிக கேளிக்கை படைப்புகள்

திருப்பாச்சி, பொல்லாதவன், ஜெயம்கொண்டான்

திருப்பாச்சி படத்தில் நாயகன் அவனுடைய தங்கையைக் காண ஒரு மாநகரத்திற்கு வருகிறான். அம்மாநகரம் ரவுடிகளின் பிடியில் இருப்பதை அறிகிறான். தன் தங்கை வாழும் சூழல் பயமற்றதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக அதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த ரவுடிகளை அந்நாயகன் அழிக்கும் செயல்கள் தான் அந்தப் படத்தின் கரு. அந்நாயகனின் நோக்கம் எதார்த்தமானது தான். பிறகு ஏன் அப்படம் ஒரு வணிக கேளிக்கை படம் என்ற வகைபாட்டிற்கினுள் அடக்கப்படுகிறது. ஏனென்றால் அப்படத்தில் அந்நாயகனின்நோக்கம் எதார்த்தமானது என்றாலும் அந்நோக்கத்தை நிறைவேற்ற அந்நாயகன் மேற்கொள்ளும் முயற்சிகள் எதார்த்தத்திலிருந்து விலகியது. எதார்த்தத்தில் ஒருவரால், தனி நபராக எவ்வித தயக்கமுமின்றி ரவுடிகளை எதிர்த்து நிற்க முடியாது. அவ்வாறு ரவுடிகளை எதிர்கொள்ளும் போது அந்நபர் உணரும் உணர்சிகளை நெருக்கமாக பதிவு செய்யவேண்டும். (ஆற்றாமை, ஆற்றாமையை கடந்து வருதல், பயம், பயத்தை வெல்லுதல்) இவை போன்ற உணர்வுகளை பதிவு செய்யாமல் நாயகனை மனித மனத்தின் இயல்பான குணநலன்களை கொண்டவனாக அல்லாமல் அதி பிறவி போல் காட்சி படுத்துவது தான் அப்படைப்பை கலையற்றாதக ஆக்குகிறது. எதார்த்தத்தை ஒரு புள்ளியாக கொண்டால் திருப்பாச்சி எதார்த்ததிலிருந்து நீண்ட தூரம் விலகி நிற்கிறது. அந்த தூரமே அப்படைப்பை கலையற்றதாக ஆக்குகிறது.

ஜெயம்கொண்டான் படத்தில் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் ரவுடி ஒருவன் குறுக்கிடுகிறான். அதன் பிறகு அந்த சாமானியன் எதிர் கொள்ளும் சிக்கல்கள் தான் படத்தின் கரு. திருப்பாச்சி படத்தினை போல் அல்லாமல் இப்படத்தில் நாயகனின் மன ஓட்டமும், செயல்களும் எதார்த்தத்திற்கு ஓரளவிற்கு நெருக்கமாக இருக்கிறது. ரவுடியின் பாதையில் குறுகிட்டதும், நாயகன் அதன் பின்விளைவுகளை நினைத்து அச்சம் கொள்கிறான். ரவுடியிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயற்சிக்கிறான். எதார்த்தத்தில் பெரும்பாலான மக்களின் எண்ண ஓட்டம் அவ்வாறாகவே இருக்கும. அந்த வகையில், திருப்பாச்சியுடன் ஒப்பிடும் போது ஜெயம் கொண்டான் எதார்த்ததை நெருங்க முயற்சிப்பததை உணரமுடியும்.

பொல்லாதவன் படத்தின் கருவும் ஏறத்தாள ஜெயம்கொண்டான் படத்தின் கருவுடன் ஒப்பிட தகுந்ததுதான். கதாபாத்திரங்களின் நடிப்பும், காட்சியமைப்புகளும் படத்தினை எதார்த்தத்தின் அருகில் கொண்டு செல்கிறது. படத்தில் ஒரு காட்சியில், நாயகன் வில்லனை பகைத்துக்கொண்டதும், நாயகனின் தங்கை பள்ளிக்கு செல்லுவது காண்பிக்கப்படும். அந்த காட்சியின் தொனி நாயகனின் தங்கைக்கு வில்லன்களால் இடையுறு எற்படுத்தப்படலாம் என்பது போல் இருக்கும். இறுதியில் அது சாதாரண கட்சியாக முடிந்து விடும். அந்தக் காட்சி, பார்வையாளர்களின் பரபரப்பை அதிகரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் நாயகனின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு சராசரி இளைஞன் ஒரு ரவுடியுடன் பகைமை கொள்ளும்போது அவனுடைய பயம் அவனுடைய குடும்பத்தை பற்றியதாக இருக்கும். அவனுக்குட்பட்ட சக்தியின் மூலமே அவனால் அவனுடைய எதிரியை எதிர்கொள்ள முடியும். அந்த எல்லையின் வரையறையை உணர்ந்து அமைக்கப்படும் காட்சிகளே படத்தினை உண்மைக்கு நெருக்கமாக இட்டுச்செல்லும்.

திருப்பாச்சி, ஜெயம்கொண்டான், பொல்லாதவன் ஆகிய மூன்று திரைப்படங்களும் அதன் கதைக்கருவின் அடிப்படையில் ஒரே தளத்தினை சார்ந்தவைகளாக இருந்தாலும், காட்சிப்படுத்தலில் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகிறது. அம்மாறுபாடுகளின் அளவே அப்படைப்பின் கலைத்தன்மையை தரப்படுத்துகிறது. திருப்பாச்சி முற்றிலும் எதார்த்தத்திலிருந்து விலகியபடமாகவும், ஜெயம்கொண்டான் எதார்த்தத்தை நோக்கிய தூரத்தின் அளவினை குறைத்த படமாகவும், பொல்லாதவன், ஜெயம்கொண்டானுடன் ஒப்பிடும்போது எதார்த்தத்திற்கு கூடுதல் நெருக்கமாக உள்ள படமாகவும் இருக்கிறது. அதே சமயம் ஜெயம்கொண்டான், பொல்லாதவன் படத்தில் காணப்படும் எதார்த்தத்தின் எல்லையை விட்டு விலகிய பிற அம்சங்கள் அப்படங்களை முழு கலைப்படைப்பாக மாற்றாமல் வணிக கேளிக்கை வகைமைக்குள் தள்ளி விடுகிறது.

இடைநிலை படைப்புகள்

The Shawshank Redemption, The Pursuit of Happiness

இடைநிலை படைப்புகள் எதார்த்தத்தை பிரதிபலிப்பதாகத் தோன்றும். ஆனால் அப்படைப்புகள் பிரதிபலிக்கும் எதார்த்தம் ஆழ்மன உண்மையாக இல்லாமல் மேம்பூச்சாக, ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட உணர்வாக இருக்கும். உண்மைக்கு முகம் கொடுக்காமல், அந்த உண்மையின் தீவிரத்தை மழுங்கச் செய்து, புதியதொரு உண்மையை நிறுவ முயலும்.

The Shawshank Redemption படத்தில் நாயகன் அவன் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருபது வருடங்கள் சிறையிலேயே கழிக்கிறான். இருபது வருடங்களும் அவன் சிறையிலிருந்து தப்பிப்பதற்கு முயச்சி செய்கிறான். இறுதியில் தப்பித்தும் விடுகிறான். அவனுடைய தப்பித்தல் பார்வையாளர்களை ஆசுவாசப்படுத்துகிறது. அவர்களை லேசாக இதமாக உணரச் செய்கிறது. இப்படத்தின் நோக்கம் பார்வையாளர்களிடம், வாழ்கை மீதான நம்பிக்கை கீற்றை ஏற்ப்படுத்த முயல்வது ஆகும். அந்நோக்கத்தினை அடைவதற்காக மேற்கொள்ளும் சமரசமே இவ்வகை படைப்புகளை முழு கலைப்படைப்பாக மாற்றமல் இடைநிலை படைப்பாக ஆக்குகிறது. இருபது வருடங்கள் முயற்சி செய்து சிறையிலிருந்து தப்பிப்பது எதார்த்தத்தை மீறியது அல்ல என்றாலும், அத்தப்பித்தலை அணுகிய விதம், நம்பிக்கை என்ற உணர்வை முன்னிருத்துவதற்காக வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கிறது.

The Pursuit of Happiness படமும் The Shawshank Redemption படத்தினைப் போல வாழ்க்கையின் மீதான நம்பிக்கை கீற்றை பார்வையாளர்களை உணர செய்வதை நோக்கமாக கொண்ட ஒரு படம். நாயகனின் பொருளாதார நிலைமையை காரணம் காட்டி, நாயகனின் மனைவி அவனைப் பிரிகிறாள். நாயகன் அவனுடைய மகனுடன் தனித்து விடப்படுகிறான். நிலையான வேலை ஒன்றினைத் தேடி நாயகன் அலைகிறான். இறுதியில் வேலை கிடைத்து விடுகிறது. மனைவியும் அவனுடன் இணைகிறாள். அவர்கள் நிம்மதியான வாழ்வினை தொடர்வது போல் படம் முடிகிறது. நாயகன் வேலை தேடி அலையும் போது எதிர்கொள்ளும் இன்னல்களும், இறுதியில் வேலை கிடைப்பதும் எதார்த்தமான நிகழ்வுகள் தான் என்றாலும் அங்கு காட்சிப்படுத்தப்படும் நிகழ்வுகள், மனித வாழ்வில் தன்னிச்சையாக நிகழும் நிகழ்வாக காட்சிப்படுத்தபடாமல் படைப்பின் நோக்கத்தினை அடைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட நிகழ்வுகளின் மீதும் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இருக்கிறது.

இடைநிலைப் படைப்புகளை இன்னும் சுருக்கமாக வரையறுக்க வேண்டுமென்றால், இடைநிலை படைப்பு என்பது நல்லவன் வாழ்வான் கேட்டவன் வீழ்வான் என்ற தத்துவத்தினை நிரூபிப்பதற்காக நல்லவன் வாழ்வதற்கான வழிகளையும் கேட்டவன் வீழ்வதற்கான வழிகளையும் வலிந்து ஏற்படுத்திக் கொடுப்பது. அதாவது, எதார்த்தத்தை மழுங்கச் செய்து ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட வழிகளை, படைப்பின் நோக்கத்தினை அடைவதற்காக தேர்வுசெய்வது.

வடிவ நேர்த்தி கொண்ட பிரமாண்டமான படைப்புகள்

Inception, prestige

சில படைப்புகள் அதன் வடிவ ரீதியிலும், அது இயங்கும் தளத்தில் பிரமண்டமாகவும், அழகியல் கூறுகளில் அதுவரை அடைந்திராத உச்சத்தையும், நேர்த்தியையும் கொண்டிருக்கும். ஆனால் அது அடைந்திருக்கும் உச்சமே, அதன் பாடுபொருளின் தீவிரத் தன்மையை குறைக்கக் கூடியதாக இருக்கும்.

Inception, prestige படங்களின் கருப்பொருள் எதார்த்தத்தை ஒட்டியதாக இருந்தாலும், அந்த எதார்த்தத்திணை காட்சிப்படுத்தலில் ஏற்பட்ட மிதமிஞ்சிய அழகியல் தன்மைகள், படத்தின் கருப்பொருளுடன் சமநிலை கொள்வதற்கு பதிலாக தன்னை மட்டும் முன்னிறுத்துவதாக அமைந்து விடுகிறது.

 எளிய படைப்புகள்

மகாநதி, The Hunt

சில படைப்புகள் உணர்வு தளத்தினை மட்டும் மையமாக கொண்டு செயல்படும். அவ்வகை படைப்புகளை எளிய படைப்புகள் என்ற வகைமைக்குள் கொண்டு வர இயலும். அது எவ்வித வெளி அழகியல் அமசங்களை நம்பியிராது, தான் பேசும் விசயத்தின் மூலமே அழகியல் தன்மையை அளிக்கக்கூடியதாக இருக்கும். இவ்வகைப் படைப்புகள் தான் பேசும் தளத்தின் மூலம் மட்டுமே பிரமாண்டத்தை உணரச் செய்யும்.

மகாநதி படத்தில், மனைவியை இழந்த நாயகன் அவனுடைய இளம் பிள்ளைகளுடன் வாழ்கிறான். ஒருகட்டத்தில் பணம் விசயத்தில் சிக்கி, ஏமாற்றப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுகிறான். அதனைத் தொடர்ந்து அவனுடைய மகள் விபசார தொழிலுக்கும், அவனுடைய மகன் கலைக் கூத்தாடி குழுவுடனும் சேர்கிறார்கள். சிறை தண்டனைக்கு பிறகு வெளிய வரும் நாயகன், அவனுடைய மகளையும், மகனையும் தேடி அலைந்து இறுதியில் அவர்களை அடைந்தும் விடுகிறான். இப்படம் முழுவதும் உணர்வுநிலையை தளமாகக் கொண்டது. ஒரு மனிதன் இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது அவனுடைய உணர்வு நிலை எவ்வாறு இறக்குமோ அதனை அதன் துல்லியத்துடன் காட்சி படுத்தப்பட்டிருப்பதின் மூலம் இப்படம் கலையின் உச்ச நிலையை அடைகிறது.

The Hunt படத்தில் நாயகன் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராக இருக்கிறான். அதில் ஒரு குழந்தை, நாயகனிடம் பாலியல் சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. நாயகன் அறிவுரையின் மூலம் சிறுமியின் அச்செயலைக் கடந்து செல்கிறான். சிறுமி தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறது. அதன்பிறகான அச்சிறுமியின் அமைதியினைக் கண்டு பள்ளியின் முதல்வர் அச்சிறுமியிடம், யாராவது தவறாக நடந்தார்களா என்று கேட்கிறார். அச்சிறுமி, குழந்தைகளுக்கே உரித்தான மொழியுடன் நாயகனை சுட்டுகிறாள். நாயகன் அதன் பிறகு எதிர்கொள்ளும் சூழ்நிலையாக படம் இருக்கிறது. இப்படத்தில் அச்சிறுமிக்கு வயது ஐந்துக்கும் குறைவாக இருக்கும், இயல்பு வாழ்க்கையில், ஒரு ஐந்து வயது குழந்தையின் செயல்பாடு இவ்வாறாக இருப்பதற்க்கான சாத்தியப்பாடுகளை கற்பனை கூட செய்திடாத ஒருவர், அப்படத்தில் அச்சிறுமியின் செயல்பாடுகளை காணும்போது, எவ்வித தர்க்கத்தின் துணையின்றி, தன் நுண்ணுணர்வால் அதன் உண்மைத் தன்மையை அமோதிப்பார். அதுவே அப்படைப்பினை கலைப்படைப்பாக மாற்றுகிறது.

முகம்மது ரியாஸ்

***

முந்தைய கட்டுரைவெற்றி- என் சொற்கள்
அடுத்த கட்டுரைகலையும் அல்லதும் –ஒரு பதில்