தோன்றாத்துணை:மேலும்கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் தோன்றாத்துணையை படித்தேன் நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய கட்டுரை. நான் பத்து வருடங்களுக்கு முன்பு தீவிர ஏமாற்றத்தில், மனவுளைச்சலில் இருந்தபோது ஆறு மாதங்களாக தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் இருந்தேன். எப்படி செய்து கொள்ளலாம் என்ற தேடுதலிலும் இருந்தேன். அதை ஒரு project ஆக செய்வது போன்ற மனநிலையில் நிதானமாகவும் ஆகிவிட்டிருந்தேன். எழுத்தாளர் சுஜாதாவிடமும் இணையத்தில் “எளிதாக தற்கொலை செய்துகொள்வது எப்படி என்று கேள்வியும் கேட்டிருந்தேன் அப்போது. அதற்க்கு அவர் “இனி  புதிதாய் பிறந்தேன்” என்று யாரோ எழுதிய கவிதை வரிகளை பதிலாய் தந்து அந்த மனநிலைக்கு வரும்படி கூறியதாக ஞாபகம்.
அந்த மனநிலையில் ஒருநாள் ஹைதராபதிலிருந்து கிளம்பி திருச்சி வந்து அறை எடுத்து அன்று இரவே முயற்சிசெய்தேன். உத்தரத்தில் வேஷ்டியை முடிச்சிட்டு அது ஸ்திரமாக இருக்கிறதா இன்று கைகளால் பிடித்து தொங்கி சோதித்து அனைத்தும் சரியாகத்தான் இருந்தது. ஆனால் கழுத்துல் மாட்டி தொங்கியவுடன் அது முடிச்சவிழ்ந்து கீழே விழுந்தேன். கீழே விழுந்தவுடன் அதுவரை இல்லாத பயம் வந்து கவ்விக்கொண்டது. அந்த நடு இரவே மதுரையிலிருந்த நண்பனுக்கு போன் செய்து அழைத்து விஷயத்தை கூறி அவனும் உடனே வந்து…….

இந்த விஷயங்கள் எல்லாம் உங்களின் கட்டுரையை படித்தபின் மீண்டும் துல்லியமாக நினைவுக்கு வந்தன. கீழே விழுவதற்குமுன் வரை இருந்த செயல் நிதானம், உறுதி விழுந்தவுடன் எங்கே சென்றது என்று தெரியவில்லை. இன்று இப்போது நினைத்தாலும் அந்த கணம் வரை என்னில் இருந்த உறுதியையும் நிதானத்தையும் நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.

பிரேம் குமார்

 

அன்புள்ள பிரேம் குமார்

தற்கொலையை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. தாங்கமுடியாத நம்பிக்கை இழப்புடன் செய்துகொள்ளும் தற்கொலைகள் உண்டு. அளவிலாத நம்பிக்கையுடன் செய்துகொள்ளும் தற்கொலைகளும் உண்டு. உலகை வெறுத்தும் உலகை நேசித்தும் தற்கொலைகள் செய்துகொள்ளப்படுகின்றன.

ரிச்சர்ட் ரீஸ்டாக் என்பவர் எழுதிய ‘உங்கள் மூளைக்கும் மனம் உள்ளது ‘என்ற நூலில் தற்கொலைசெய்துகொணடவர்களின் மூளைகளை ஆராயும்போது இருமூளைப்பருப்புகளுக்கும் நடுவே உள்ள இணைப்புநரம்புகள் ஏற்கனவே சீர்கெட்டிருப்பதை கண்டடைந்திருப்பதாகச் சொல்கிறார். அதாவது சீர்கெட்டுவிட்ட மூளை தன்னை இனிமேல் சரிசெய்ய முடியாதென எண்ணி தானே அழிய விரும்புகிறது. ஆகவே அதற்கான ரசாயனங்களை அது உருவாக்கிக் கொள்கிறது. அந்த ரசாயனங்களால் அந்த மனத்தில் எதிர்ம்றை எண்ணங்கள் உருவாகின்றன. தற்கொலைக்கான காரணங்களை அது யோசித்து கண்டுபிடிக்கிறது.

என்னால் அதை ஏற்க முடியவில்லை. அது ஒரு நரம்பியல் குறைத்தல் வாதம் மட்டுமே. ஆனாலும் அது முக்கியமான ஒரு தரப்பே. பெரும்பாலான தற்கொலைகள் மனச்சிக்கல்கள் அல்லது மனநோய்களின் விளைவுகளே. தற்கொலைசெய்யும் ஒருவருக்கு தற்கொலையே உலகில் மிக அர்த்த முள்ள ஒன்றாக தோன்றலாம். மனதின் விசித்திரங்களுக்கு அர்த்தமே இல்லை. இளமையில் ஒரு பெண் அல்லது ஒரு கருத்து மட்டுமே வாழ்க்கையில் அர்த்தம் உள்ளது பிற எதுவுமே பொருட்டல்ல என்று நமத்துத் தோன்றுகின்றன அல்லவா? பிறகு யோசித்து நாம் புன்னகைசெய்கிறோம். மனம் நாம் விரும்புவதையே நமக்குக் காட்டும் முடிவில்லாத மாயாவி. நம் மனதை நாமே பார்க்கும் பார்வை மட்டுமே நம் மனதிலிருந்து நம்மைக் காக்கும்.
ஜெ

அன்புள்ள ஜெ

நலம்தானே? தற்கொலையைப்பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். அதற்குவந்த கடிதங்களையும் வாசித்தேன். வாழ்க்கையில் நிறையபேர் தற்கொலை என்ற முனைவரைக்கும் சென்றுவிட்டு திரும்பியிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பெருக்கிக்கொள்ள நாம் அதை மரணத்தின் முன் நிறுத்தவேண்டியிருக்கிறது– இது உங்கள் வரி. கன்யாகுமரி நாவலில் வருகிறது  நினைக்கிறேன். காதலர்கள் தற்கொலைப்பாறை மீது ஏறி நின்றுகொண்டு தங்கள் காதலைச் சொல்கிறார்கள் என்று அந்நாவலில் வரும்.

நானும் அதேபோல தற்கொலை வரைக்கும்சென்றிருக்கிரேன். ஒரு காதல்தான். ஆனால் இளம்பெண்ணிடம் அல்ல. நான் ஒரு பெண்ணை விரும்பினேன். அந்தப்பெண் வீட்டுக்கு அடிக்கடிச் செல்வேன். அதற்காக அவள் அம்மாவிடம் நான் நெருக்கமான நட்புறவை வைத்துக்கொண்டேன். அந்தப்பெண்ணும் என்னிடம் பழகினாள். நாங்கள் மெல்லமெல்ல நெருங்கினோம். பேசுவதும் லேசாக தொட்டுக்கொள்வதும் மட்டும்தான் வழக்கம். அவளுக்கு முத்தமிடுவதிலே ஆர்வம் இருந்தது. ஒருமுறை அந்த அம்மாள் நாங்கள் முத்தவிடுவதைப் பார்த்துவிட்டாள்.  என்னை தனிமையில் கூப்பிட்டு மிரட்டினாள். நான் அழுதேன். உடனே அவள் என்னை சமாதானப்படுத்தினாள். என் தலையை தன் தோளில் சாய்த்துக்கொண்டாள். அந்த அணைப்பை அப்படியே கொண்டுபோய் என்னை அவளிட்ம் உடலுறவுகொள்ளச் செய்துவிட்டாள்.

அந்த உறவு ஒருவருடம் நீடித்தது. கிட்டத்தட்ட என்னை மிரட்டியே அந்த அம்மாள் என்னை அவளுடன் உடலுறவுகொள்ளச் செய்தாள். உடலுறவில் அவளுக்கு மிதமிஞ்சிய ஆசை இருந்தது. அந்த விஷயம் அந்தப்பெண்ணுக்கு தெரியாமல் இருக்க நான் பலவாறாக முயற்சிசெய்தேன். அடிக்கடிஅந்தப்பெண்ணை முத்தமிடுவதும் அணைப்பதும் உண்டு. உடல் உறவு அவளுக்கு பிடிக்கவில்லை. மகளை விட்டு விலக நான் எவ்வளவோ முயற்சிசெய்தேன். விலக முயன்றால் அவள் மேலும் தீவிரமாக என்னை நோக்கி வந்தாள். பெண்களின் குணம் அது என உங்களுக்கு தெரியுமே. ஒருநாள் நானும் அந்த அம்மாவும் உடலுறவுகொள்வதை அந்தப்பெண் பார்த்துவிட்டாள். அதாவது மூடியகதவுக்கு வெளியே நின்று ஊகித்துவிட்டாள். என்னைக் காறித்துப்பி விரட்டினாள். நான் வீட்டைவிட்டு ஓடிப்போய் கேரளத்தில் பலநாட்கள் இருந்தேன். அங்கே கொல்லத்தில் என் மாமா இருந்தார். அதற்குள் அந்தப்பெண் ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டாள். அவளுக்கு கல்யாணமும் நிச்சயம்செய்தார்கள். அந்த நிச்சய தினத்தன்றுகூட அந்த அம்மாவுடன் நான் உறவு வைத்துக்கொண்டேன். என்னுடைய காமமும் பலவீனமும் பயமும் எல்லாம்தான் அதற்குக் காரணம்

அப்போதுதான் எனக்கு பெரும் மனசோர்வு வந்தது. தற்கொலைசெய்வதைப்பற்றி நினைத்துக்கொண்டே பலநாட்கள் இருந்தேன். பிறகு ஊட்டிக்குப் போய் ஒரு அறை எடுத்து தங்கினேன். அங்கே விஷம் குடித்தேன். விஷம் குடிப்பதற்கு முன் நான்குநாட்கள் ஊட்டி அறையிலேயே முடங்கி கிடந்தேன். ஆனால் நான் விஷம் குடித்தது உடனே எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. விஷம் என் தொண்டையை எரித்தது. அதனால் நான் அலறி துடித்தேன். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். அங்கே உயிர் பிழைத்தேன். என்பெற்றோர் என்னை கேரளத்துக்கு அனுப்பினார்கள். கேரளத்தில்தான் நான் எம் ஏ படித்தேன். இப்போதும் எனக்கு சரியாகப்பேசமுடியாது. என் இரைப்பை அன்று புண்ணானது இதுவரை சரியாகவே இல்லை. இப்போது ஏதோ வாழ்கிறேன். திருமணம்செய்துகொள்ளும் நோக்கமே இல்லை. பத்துவருடங்களாக நான் ஊருக்கே செல்லவில்லை.

இதில் ஒரு முக்கியமான சிக்கல் என்னவென்றால் நான் இப்போது அந்தப்பெண்ணை மறந்துவிட்டேன். அந்தப்பெண்ணின் அம்மாவை நினைத்து சுய இன்பம் அடைவதே என் வாழ்க்கையாக உள்ளது. ஊருக்குச்சென்றால் அந்த அம்மையாரின் அடிமையாக ஆகிவிடுவேன் என்று பயப்படுகிறேன். இந்த கதையை நீங்கள் எழுதவேண்டும்.

அன்புடன்
கெ.
கோழிக்கோடு
[மிக நீளமான காகிதக்கடிதம். சுருக்கி எழுதப்பட்டிருகிறது]

அன்புள்ள கெ,

முக்கியமான விஷயம் உங்கள் கதை அப்படியே அச்சு அசலாக சு.வேணுகோபாலால் ஒரு நல்ல குறுநாவலாக எழுதப்பட்டுவிட்டது ‘கூந்தப்பனை ‘ என்ற சிறுகதை தொகுப்பில் இந்தக்கதை உள்ளது. கடைசியில் அந்தப்பையன் தற்கொலைசெய்துகொள்கிறான்.

உங்கள் சிக்கல் மிக எளிமையானது, உங்கள் மனம் மீது உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. நீங்கள் குற்றவுணர்ச்சி கொள்வதாக உணர்வது மேலோட்டமானது. உள்ளூர அந்தக்குற்ற உணர்ச்சியை உங்கள் காமத்தின் ஒரு பகுதியாக எண்ணி நீங்கள் ரசிக்கிறீர்கள். உங்கள் மனதை நீங்களே கூர்ந்து பாருங்கள். உங்களுக்கு என்ன தேவை என்று பாருங்கள். நீங்களே போட்டுக்கொள்ளும் பாவனைகளைக் கவனியுங்கள். ஒருவன் தன் மனதைக் கவனிக்க ஆரம்பித்தாலே போதும் மனசிக்கல்களில் இருந்து விடுபட்டுவிடலாம்.
ஜெ

88

அன்புள்ள ஜெ,
நலமா?
இப்போதெல்லாம் என் மனதில் உடுக்கை, ஆப்ரிக்கா மேள சப்தமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்கள் எழுத்தை வாசிக்கும் போது அது மேலும் வலுப்பெறுகிறது. கண்கள் ஈரம் ஆகிறது. மனம் உருகுகிறது.   இப்போதெல்லாம் “காளி” தான் எனக்கு பிடிக்கிறது. பாரதியாரை நேரில் சந்தித்த ஒருவரை பற்றி s. ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையை வாசித்தேன்.   இப்போதெல்லாம் பாரதியாரை பற்றிய எண்ணம் அடிக்கடி வருகிறது.   ஒரு வெறி என்னுள் உருவாகிறது. இது என்ன நிலை? ஒரு எழுத்தாளர் என்பதை விட, வாழ்வில் ஓர் சீனியர் இடம், பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன்.
தங்கள் நேரத்திற்கு நன்றி
எம்.

அன்புள்ள எம்,

மனம் பல சமயங்களில் பலவிதமான பாவனைகளை மேற்கொள்கிறது. இந்தப்பாவனைகள் வழியாக அது தன்னுடைய சிக்கல்களை தீர்த்துக்கொள்கிறது. தன்னுடைய சக்திகளை ஒருங்கிணைத்து புதிய இடங்களை அடைகிறது. தன் எடை அதிகமாக ஆகும்போது ஒரு பொருள் உடைந்து சிதறிப்போவதுபோல மனம் தன்னை பலவாகப்பகுதுக் கொண்டு பல வடிவங்களை அடைந்து தன்னுடைய இக்கட்டுகளை தீர்த்துக்கொள்கிறது.

இவை ஒவ்வொன்றும் நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். உபநிடதத்தில் ‘ மரக்கிளையில் இரு அழகிய பறவைகள்.ஒருபறவை பழம் தின்கிறது, இன்னொன்று அதை வேடிக்கை பார்க்கிறது’ என்ற ஒரு சுலோகம் உண்டு. அதுவே மனம். படைப்பியக்கம், தியானம் உட்பட மனம் தன்னிச்சையாக நகரும் எல்லா தருணங்களிலும் அந்த கண்காணிக்கும் பறவை விழிப்புடன் இருந்தாக வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் ஒன்றும் சிக்கல் இல்லை. இத்தகைய மனநிலைகள் நமக்கு பலவிதமான புதிய இடங்களைக் காட்டக்கூடும். நம்முடைய புதிய சாத்தியங்களை திறக்கக் கூடும். மனம் என்பது நூற்றுக்கணக்கான ஆழ்படிமங்களால் ஆனது. அந்த ஆழ்படிமங்களில் ஒன்று கொள்ளும் வளர்ச்சி அல்லது தீவிரம் என்று மட்டுமே உங்கள் மனநிலையை அறிவியல் ரீதியாகச் சொல்ல முடியும். அதன் தனிப்பட்ட பயன்கள் என்ன என்பதை நீங்கள் மட்டுமே உணர முடியும்
ஜெ

தோன்றாத்துணை:கடிதங்கள்

தோன்றாத்துணை http://jeyamohan.in/?p=775

முந்தைய கட்டுரைகடவல்லூர் அன்யோனியம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபூதம்,முதற்சுவை:கடிதங்கள்