பச்சைப்பாம்பும் சிவப்புக்கண்ணும்

1

மலேசியாவில் சுவாமி பிரம்மானந்தா அனைவராலும் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படுபவர். அவருடைய குருமரபு நீண்ட வரலாறுள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி என அவருடைய தொடர்ச்சியைச் சொல்லமுடியும் கெடா மாநிலத்திலுள்ள கூலிம் ஊரில் அவருடைய குருகுலம் ஆன்மிகப்பணியும் சமூகப்பணியும் செய்துவருகிறது. [உடனே இந்துத்துவா என ஆரம்பிப்பவர்களுக்கு, சுவாமி அவர்களை அ.மார்க்ஸே பாராட்டியிருக்கிறார்]

கூலிம் அருகே சுவாமி கட்டியிருக்கும் புதிய குருகுலத்தில் ஓர் இலக்கிய முகாமை நடத்தலாமென அவர் கருதினார். ஆகவே கொலாலம்பூரில் இருந்து நான் நாஞ்சில்நாடனுடன் நண்பர் ராவணன் வண்டி ஓட்ட கூலிம் கிளம்பினேன். வழியில் கேமரூன் மலையையைப் பார்த்துவிட்டுச் செல்வதாகத் திட்டம்.மாலையில் மலேசிய அமைச்சர் டத்தோ சரவணனைச் சந்தித்தோம். காலையுணவு அவருடன். மலேசிய அரசியல் சூழல், அவருடைய இலக்கிய ஈடுபாடுகள் குறித்து பேசினோம்.

2

கேமரூன் மலைக்குச் செல்லும் வழியில் மலேசியப்பழங்குடிகள் மூங்கில்குருத்து போன்றவற்றை வழியோரமாக விற்பனைக்கு வைத்துவிட்டு அமர்ந்திருந்தனர். மூங்கில்குருத்து சமைத்துச்சாப்பிட்டிருக்கிறேன். தாமரைத்தண்டு போலிருக்கும். இரண்டையும் சாப்பிடாதவர்களுக்கு கவிதை ஏதாவது எழுதித்தான் விளக்கவேண்டியிருக்கும்

கேமரூன் மலை மலேசியாவில் தேயிலை பயிரிடப்படும் ஒரே இடம். 1885ல் சர் வில்லியம் கேமரூன் என்னும் நில அளவையாளரால் அது வேளாண்மைக்குரியதாகக் கண்டடையப்பட்டது. அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

3

இன்று ஊட்டியைப்போல ஒரு சுற்றுலாத்தலமாக கேமரூன்மலை மாறியிருக்கிறது. குறிப்பாக தோட்டத்தொழிலில் மிகமிக முன்னேறியிருக்கிறது. ரோஜா, ஸ்டிராபெர்ரி, மலைக்காய்கறிகள் போன்றவை மிக அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. தேயிலைத்தோட்டங்களும் உள்ளன. பெரும்பாலான கடைகள் சுற்றுலாவை நம்பியே அமைந்துள்ளன. மிதமான குளிர். அவ்வப்போது மழை.

நூறு வருடங்களுக்கு முன்னரே கேமரூன் மலையில் தமிழர்கள் குடியேறியிருக்கிறார்கள். மிகப்பெரும்பாலானவர்கள் கொங்குவேளாளக் கவுண்டர்கள். இந்த தொகுதியில் கவுண்டர்களே தேர்தலில் வெல்லமுடியும். இப்போதுகூட ஒரு கவுண்டர்தான் நாடாளுமன்ற உறுப்பினர். கொங்குமண்டலம் இட்ட முட்டை இது.

4

கவுண்டர்கள் இங்கே தோட்டம் தொழிலில் உச்சகட்ட வெற்றியை அடைந்திருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய கவுண்டர்களில் ஒருசாரார் இங்குதான் இருக்கிறார்கள். நாங்கள் சில தோட்டங்களுக்குச் சென்று சேர்ந்தோம். மொத்த தோட்டமும் பசுமைக்குடிலுக்குள் அமைந்திருந்தது. அத்தனை செடிகளும் மண்ணிலிருந்து நாலடி உயரத்தில் மரத்தூள் நிறைக்கப்பட்ட கிண்ணங்களில் வளர்ந்தன. முழுமுழுக்க சொட்டுப்பாசனம். உரம் கலந்த நீர் நேராக வேருக்குச் சென்றுவிடும். தோட்டம் என்று பெயர், மண்ணுடன் எந்த தொடர்பும் இல்லை. இங்கிருந்து காய்கறிகள் சிங்கப்பூர் பாங்காங் ஹாங்காங் என உலகமெங்கும் ஏற்றுமதியாகின்றன

unnamed

கேமரூன் மலையில் ஒருநாள் முழுக்க பேருந்தில் சுற்றிவந்து இடங்களைப் பார்த்தோம். தேனிவளர்ப்பு, தேனீர்வளர்ப்பு, மலர் வளர்ப்பு என விதவிதமான தோட்டங்கள். ஒரு தோட்டத்தில் கேமரூன் மலையின் பூச்சிகளையும் சிற்றுயிர்களையும் ஆராய்கிறார்கள். அங்கே ஒரு பச்சைப்பாம்பை தோளில் போட்டுக்கொள்ள கொடுத்தார்கள். அது என்னை நோக்கி முகத்தை நீட்டியது. சின்னவயதில் அது கண்ணைக்குத்தும் என்னும் நம்பிக்கை இருந்தது. அதற்கு அந்த உத்தேசம் இருப்பதுபோலத் தெரியவில்லை. வால் அமைதியிழந்து வளைந்தபடியே இருந்தது. கையில் எடுத்துப்பார்த்தால்கூட சருகு என்றே தோன்றும் ஒரு பெரிய பூச்சியை பூச்சி என நம்ப அரைமணிநேரம் பார்க்கவேண்டியிருந்தது

5

கொலாலம்பூரில் எனக்கு இடக்கண்ணில் சிறிய சிவப்பு இறங்கியது. கேமரூன் மலைக்குக் கிளம்பும்போது அது வலுத்தது. சொட்டுமருந்து வாங்கி கண்ணில் விட்டுக்கொண்டேன். மேலும் மேலும் உறுத்தல் வீக்கம் நீர்வழிவு.  ஈரத்துணியால் ஒற்றியபடி சுற்றிவந்தேன்.

கூலிம் சென்றுசேர்ந்தபோது இன்னும் உறுத்தல். இடதுகண் ஓரளவு சரியாகிவிட்டிருக்க வலதுகண் பெரிதாக வீங்கி கலங்கியிருந்தது. கணிப்பொறித்திரையை பார்க்கவே முடியவில்லை. 29 அளவில் எழுத்தை வைத்தால்தான் தட்டச்சு செய்யமுடிந்தது. ஒவ்வொருநாளும் வெண்முரசு எழுதியாகவேண்டும். ஈரத்துணியால் ஒற்றியபடியே செய்யவேண்டியிருந்தது. ஒருமணிநேரம் ஆனதும் அரைமணிநேரம் ஓய்வு தேவை. இல்லையேல் திரையே நெளியத்தொடங்கிவிடும்.

7

ஊரிலிருந்து ஈரோடு கிருஷ்ணன், சக்தி கிருஷ்ணன், நரேன், செல்வராணி, சந்திரசேகர், ஈஸ்வரமூர்த்தி, நாமக்கல் வரதராஜன், மகேஷ் பாரதி இளங்கோ ஆகியோர் வந்தார்கள். ஒருநாள் கொலாலம்பூரில் தங்கிவிட்டு வந்திருந்தார்கள்.

கூலிம் இலக்கியவிழா மிகச்சிறப்பாக நடந்தது. நாஞ்சில் நாடன் இலக்கியப்படைப்பாக்கத்தை தன் சொந்த அனுபவம் சார்ந்து விளக்கினார். நான் இலக்கியவிமர்சன கோணத்தில் பேசினேன். கிட்டத்தட்ட நாள்முழுக்க பேச்சு. நடுவே கூலிமில் ஒரு மருத்துவரை இருமுறை சென்று கண்டேன். அவர் கண்களில் நோய்த்தொற்று என நோய் உயிர்முறி தந்தார். ஆனால் கண்கள் மிக அதிகமாக வீங்கி சிவப்பாகி நீர்வழியத்தொடங்கின. உரைகளை கண்ணீர் வழிய வழிய நடத்தவேண்டியிருந்தது.

விழாவின் இறுதி அரங்காக மலேசியப்படைப்பாளிகள் சீ.முத்துச்சாமி, கோ.புண்ணியவான், நவீன், யுவராஜன் ஆகியோரை அமரச்செய்து இந்திய வாசகர்கள் வினாக்கள் தொடுக்கும் ஒர் உரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மலேய இலக்கியம் பற்றிய ஒரு ஆய்வு அரங்காக அது அமைந்தது.

8
குமாரசாமி, புண்ணியவான், சுவாமி பிரம்மானந்தா

மறுநாள் டாக்டர் சிவா என்னும் கண்மருத்துவரைச் சென்று கண்டேன். என் கண்ணில் ஒவ்வாமைதான் என்றும் நோயுயிர்முறியை என் கண் எதிர்க்கிறது என்றும் சொன்னார். வெறுமே ஒவ்வாமையை விலக்கும் மருந்துக்களை அளித்தார். கண் ஓரளவு சரியாகியது. சிவப்பு குறைந்தாலும் உறுத்தலும் நீர்வழிதலும் நீடிக்கிறது.

கூலிம் இலக்கியவிழாவுக்கு பவா செல்லத்துரை தன் குடும்பத்துடன் வந்திருந்தார். ஷைலஜா, வம்சி. மானசி மூவரும் உற்சாகத்துடன் இருக்க பவா திருவண்ணாமலையை எண்ணிய ஏக்கத்துடன் காணப்பட்டார். கொலாலம்பூர் திருவண்ணாமலையாக இல்லாமலிருப்பது ஏன் என விளக்கலாமா என எண்ணினேன். கண்கள் ஒத்துழைக்கவில்லை. விழாவில் பவா இரு கதைகளைச் சொல்லி கதை என்பது வெவ்வேறுவடிவில் படைப்பூக்கத்துடன் மீளுருக் கொள்ளும் திறன்படைத்தது என்று காட்டினார்.

1

எனக்கும் நாஞ்சில்நாடனுக்கும் பவாவும் அவரது கொலாலம்பூர் உறவினரும் அங்குள்ள முதன்மையான ஓட்டலில் ஒர் இரவுணவு அளித்தனர். நோன்பு திறக்கும் மாதம் ஆதலால் பலவகையான உள்ளூர் உணவுகள். மூங்கிலில் அடைத்து வேகவைக்கப்பட்ட சோறு. இறைச்சி, மீன். மலேசியாவில் நோன்புமாதம் என்பது மாபெரும் உணவுக்கொண்டாட்டம். ஏழரை மணிக்குமேல் மொத்த மலேசியாவும் உணவகங்களுக்கு வந்துவிடுகிறது. வழக்கம்போல பவா எனக்கு பலவகையிலும் ஊட்டி எழுந்தபோது மூச்சுத்திணறியது.

கூலிம் இலக்கிய அமைப்பு சுவாமி அவர்களின் தலைமையில் மலேசிய மூத்த படைப்பாளியாகிய கோ புண்ணியவான், பேராசிரியர்கள் தமிழ்மாறன், குமாரசாமி ஆகியோரின் பங்களிப்புடன் நிகழ்கிறது. அவர்களால்தான் விழா ஒருங்கிணைக்கப்பட்டது. குமாரசாமி என்னை சலிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச்சென்றார். எனக்கே ஒருகட்டத்தில் அதுகுறித்து குற்றவுணர்ச்சி ஏற்பட்டது . குமாரசாமியின் இல்லத்திலும் புண்ணியவான் இல்லத்திலும் உணவருந்தினோம்.

2

திரும்பிவரும்போது என்னை விமானநிலையத்தில் நிறுத்திவிடுவார்களோ என அஞ்சினேன். தொற்றுநோய் அல்ல என டாக்டர் சிவா அவர்களிடம் ஒரு சான்றிதழும் வாங்கியிருந்தேன். ஆனால் சீனவம்சாவள்ப்பெண் மேலே விழிகளை தூக்கவே இல்லை. பிறர் நான் மலேய மதுக்களில் நீராடியிருப்பதாக நினைத்திருக்கக் கூடும். 6 ஆம்தேதி மாலை 330க்குக் கிளம்பி 5 மணிக்கு திருச்சி வந்தேன். விஜயகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று தங்கி வெண்முரசு எழுதி வலையேற்றிவிட்டு நள்ளிரவு ஒன்றரை மணிக்கு நாகர்கோயில். வந்ததும் மீண்டும் வெண்முரசு. கண்ணீர் வழியத்தான்.

வீட்டில் அருண்மொழி இல்லை. திருவாரூர். அஜிதனும் நானும்தான். அவன் பகலில் விழித்திருக்கும் வழக்கமே இல்லை. மாலை மருத்துவரைச் சென்று கண்டேன். ஒவ்வாமை நீடிக்கிறது என மருந்துதந்தார். என்ன செய்கிறது என நாளை வந்து சொல்லும்படிச் சொன்னார். இப்போது கொஞ்சம் இடதுசாரிப்பார்வை வந்திருக்கிறது. நாலைந்துநாட்களில் சரியாகிவிடும்.

00

முந்தைய கட்டுரைசபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16