ஜெ,
வணக்கங்கள்
சமீபத்தில் கங்கா ஈஸ்வர் என்ற வாசகர் ஒருவர் சில நேரங்களில் சில மனிதர்கள் புதினத்தை அதன் பாத்திரங்கள் வாயிலாக மிகவும் வித்தியாசமான முறையில் அணுகி இருந்தார். அது என்னை மிகவும் சிந்திக்க வைத்த ஒரு அணுகுமுறையாகத் தோன்றியது. பொதுவாக பாடம் கற்பிக்கப்படும் முறையிலிருந்து இப்படியும் சிந்திக்கலாமே என்ற கங்கா ஈஸ்வரின் பரிந்துரை வாயிலாக நான் சிக்கலான ஆக்கங்களை அணுகும் முறை ஒன்றை கண்டு கொண்டேன். அதே பாணியில், கதாபாத்திரங்கள் வாயிலாக வெற்றி என்ற தங்களது சிறுகதையை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வெற்றிகள் மூலமாக அணுகும் எனது முயற்சி இது. எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் எழுதினாலும் கூட, உணர்ச்சிகரமான விஷயத்தில் வாசகர்களிடமிருந்து ஆட்டும் துப்பும் ஏற்கும் தங்களுக்கும், சிந்திக்க கற்றுக்கொடுத்த கங்கா ஈஸ்வருக்கும் நான் செய்யும் ஒரு சிறிய நன்றிக்கடன்.
முதலில் ரங்கப்பர்:
பணத்தால் எந்தப்பெண்ணையும் வளைக்கும் ரங்கப்பர் கதாபாத்திரம் மீது எனக்கு துவக்கத்தில் ஒரு மனத்தாங்கல் தோன்றியது. ஆனால் வியாபாரத்தை பல மடங்கு விரிவாக்கிய, அமெரிக்காவில் படித்து விட்டு வந்த மனிதனின் கணிப்பு என்பதால் அதனைப் புறம் தள்ளவும் இயலவில்லை. அமெரிக்க படிப்பு- சுதந்தர சிந்தனை பயின்ற ஒரு மனிதனின் அவதானம், தமிழக பெண்களைக்குறித்தது. கட்டிக்காப்பதாக நம்ப வைக்கப்படும் கற்பை பற்றி, கேள்வியே கேட்காமல் அந்த கதாபாத்திரம் ஏற்றுக்கொண்டு இருக்காதுதான். சோதித்து பார்க்கும் தன பலமும் அந்த கதா பாத்திரத்துக்கு உள்ளது. சோதித்தும் பார்த்திருக்கிறது. அவள் அழகாக இல்லாததால் எனக்கு தங்கையாகி விட்டாள் என்பது போல் அவன் பணக்காரனாக இல்லாதததால் நான் கற்புக்கரசியாகி விட்டேன் என்னும் சாதாரணப் பெண்களை மிகச்சரியாக கண்டு கொண்டு இருக்கிறார். கோமளவல்லியை பதினைந்து நாளில் வளைத்துப்போட்டு ஏற்காடுக்கு கொண்டு செல்லும் தகவமைவு கொண்டவர். ரங்கப்பரின் வெற்றி என்பது அவரது சோதனையின் வெற்றி என்பதால் ரங்கப்பர் தோல்வியடையவில்லை.
அடுத்து எஸ்.ஆர்.என் கதாபாத்திரம்:
பணத்தேவை நிறைந்த சாதாரண வர்க்கத்தின் பிரதிநிதி. ஒண்டுக்குடித்தனக் காரன். ஒரு டிகிரி கூட முடிக்க இயலாதவன் என்று சொந்த அண்ணன் குடும்பத்தில் கூட மரியாதை கிடைக்காதவன். அண்ணன் குடும்பத்தில் மிகவும் அசிரத்தையாக நடத்தப்பட்டு அவமானம் அனுபவிப்பது, மெர்சிடஸ் வாகனத்தின் மூலம் தனக்கு கிட்டப்போகும் தனலாபம் குறித்து அவர்களிடம் பேச்சுப்போக்கில் பீற்றிக்கொண்டு அண்ணன் குடும்பத்தாரை கடுப்பேற்றுவது, என்ற எல்லா பலஹீனம் மற்றும் பலம் கொண்ட ஒரு லௌகீக மனிதன். ரங்கப்பரின் பணத்தைக் கொண்டு என்னென்னவோ சாதித்து காணும் வாய்ப்புக்கள் பெற்ற கதாபாத்திரம். ஒரு சவலை பிள்ளை வாயிலாக ரங்கப்பர் வழி கண்டு கொள்வது, தான் தோற்கும் வாய்ப்புதான் அதிகம் என்று புரிந்தும், பந்தயத்தை ஒப்புக்கொண்டு சோதனையை அனுமதிக்கிறது. சோதனையில் ஜெயித்தால் பணம், தோற்றால் ஆத்மஹத்தி என்ற தீர்மானம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு அம்சமாக முதலில் இருந்தது. ஆசுபத்திரியிலிருந்து ரங்கப்பரின் காரில் சென்று பிறகு ரங்கப்பர் வீட்டிலிருந்து திரும்பிய மனைவியின் தோற்றத்திலிருந்தே எஸ்.ஆர்.என் கதாபாத்திரத்துக்கு எல்லாம் விளங்குகிறது. அப்பொழுதே நாண்டுக்கிட்டு செத்திருக்க வேண்டும். ஆனால் சாகவில்லை. ரங்கப்பர் அதை அறிவிப்பதில்தான் எஸ்.ஆர்.என் கதாபாத்திரத்தின் வெற்றி தோல்வி அடங்கியுள்ளது. காலம் கடந்து, பந்தயத்தில் தான் தோற்றுப்போனது, மனைவி வாயிலாகவே உறுதியும் செய்யப்படுகிறது. அவர் அப்பொழுதும் சாகவில்லை. பிளாக் லேபல் அருந்தியவண்ணம் இளவட்ட பயல்களிடம் நடந்ததை சொல்பவருக்கு, தோல்வி முக்கியம் அல்ல, ரங்கப்பர் வாயிலாக தோல்வி அறிவிக்கப்படக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று நான் உணர்கிறேன். இவ்விதத்தில் எஸ்.ஆர்.என்னும் வெற்றி அடைந்தவர்.
அடுத்ததாக எஸ்.ஆர் என்னின் மனைவி:
ஒரு உரையாடல் வழியாக அவர் பெயர் லதாவாக இருக்கலாம் என்று குறிப்பு காட்டப்படுகிறது. எந்த பாட்டிக்கு லதா என்றெல்லாம் நாகரிக பெயர் இருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. காலத்துக்கு அப்பாற்பட்ட ஒரு கதாபாத்திரம் என்று எடுத்துக்கொள்கிறேன்.
ரங்கப்பரும், எஸ் ஆர் என்னும் சோதினையாளர்கள். லதா சோதனைப்பொருள். பணம் என்ற கிரியாஊக்கியைக் கொண்டு பதிலீட்டு வினையை நிகழ்த்திவிடலாம் என்ற தனது அனுமானம் மற்றும் சோதனைகள் வாயிலாக அறிந்திருக்கும் ரங்கப்பர், மற்றும் வெல்லுவிளித்த எஸ்.ஆர்.என்னின் சோதனை ரசாயனம். ரசாயனம் தேமே என்று பாட்டிலில் இருக்கலாம். மெதுவாக நீர்த்து வீரியம் குறைந்து போகலாம். சரியான சேர்மானங்களோடு சேர்ந்து நறுமணம் எழுப்பலாம், மருந்தாகலாம், அழகுசாதனமாகலாம். தவறாகக் கையாளப்பட்டால் சோதிப்பவருக்கு ஆகப்பெரிய விபத்து ஏற்படலாம். ரங்கப்பருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கிறது. ரசாயனத்தை சரியான முறையில் கையாளும் வித்தை அறிந்தவர். ரசாயனத்தின் வினைபுரியும் பகுதியை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார். லௌகீக ரீதியான ஒரு பெண்ணுக்கு, தான் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளும் பருவத்தில்தான் இருக்கிறோம், இந்த சவலைக்குழந்தைக்கு ஏதாவது ஆனால் அதுவே ஒரு திடமான சரீரத்தோடு தனது வயிற்றில் மறுசென்மம் எடுக்கும் என்ற அடிப்படை மரபார்ந்த மறுபிறவி நம்பிக்கை சார்ந்து சிந்தித்து சமாதானமாக இருக்க இயலாதுதான். அதுதான் ரங்கப்பரும் அவதானிப்பது. கற்புக்கரசியாகும் வாய்ப்பும் அங்ஙனம் சிந்திக்கும் திறனுக்குள்ள பெண்ணுக்கல்லவா சாத்தியம்? ஒழுக்கம் கற்பு என்று போதிக்கும் நம் சமூகத்தில் பெண் என்ற ஆயுதத்தை உபயோகித்து சலுகை வாங்காதே என்று சில வருடங்களுக்கு முன்னர் அறிவுறுத்திய தங்களுக்கு எதிராக படித்த பெண்கள் அல்லவா கையெழுத்து வேட்டை நடத்தினர். அதையெல்லாம் சிந்தித்தால் ரங்கப்பரின் அவதானத்தையும் புரிந்து கொள்ள இயல்கிறது. லதா ஒருவேளை மேட்டுக்குடி கூட்டத்தில் பட்ட பெண்ணாக இருந்திருப்பின் ரங்கப்பருக்கு காரியம் கோமளவல்லி அளவு எளிதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் லதா விஷயம் அத்தனை எளிது அல்ல. வேதிவினைக்கு முயற்சிகள் சற்று அதிகம் தேவையாக உள்ளது.
இருந்தாலும், சரியான பருவத்துக்கு சோதனைப்பொருளைக் கொண்டுவந்து நிறுத்தி அதீத அழுத்தத்தில் வினையும் நிகழ்த்திக்காட்டுகிறார் ரங்கப்பர். எஸ்.ஆர்.என் கண்ணின் வாயிலாக கதாசிரியர் காட்டுவது, நிகழ்ந்தது பதிலீட்டு வினை (substitution reaction) அல்ல, அணுக்கரு வினையே (nuclear reaction) என்று. வெறும் பதிலீட்டு வினையை எதிர்பார்த்த ரங்கப்பருக்கே அது ஒரு எதிர்பாராத வினை முடிவாக இருக்கலாம். உச்சக்கட்டம் அனுபவித்த ஒரு பெண்ணை நான் அறிந்தவரை இதுவரை யாரும் இத்தனை செறிவான நடையில் வர்ணித்தது இல்லை. அந்த மூன்று மாதத்தில் கிட்டிய பரிவு, மகனின் சிகிச்சை குறித்த நம்பிக்கை அவள் வாழ்நாளில் கிட்டியிராதுதான். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, அந்த ஒரு இரவில் அவளுக்கும் அவளது சவலைக்குழந்தைக்கும் புதுப்பிறவி கிட்டுகிறது. இந்த விதத்தில் வெற்றி பெற்றது அவளும்தான்.
அடுத்ததாக தொற்று:
அது மாத்திரம் இல்லாமல் போயிருந்திருப்பின்? ரங்கப்பர் வேறு வழி கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்தான். ஆனால் அது மருந்தை எதிர்க்கும் வீரியம் கொண்டதாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட மருந்து வாயிலாகவே வீரியம் கொள்கிறது. பணம் அளவுக்கு அதுவும் வினையை நிகழ்த்தும் ஊக்க சக்தி கொண்டதாக உள்ளது. அதை முறியடிக்க உள்ளூரில் மருந்து இல்லை. லண்டனிலிருந்து வரவேண்டும். அதுவும் ஒரே வேளை தொற்றை முறியடிக்கலாம், அல்லது வேலை செய்யாமல் போகலாம், அவ்வளவுதான். பாதாளத்தில் தள்ளலாம் அல்லது ஆகாசத்தில் பறக்கவைக்கலாம் என்ற ஒரு உச்சவழுவில் (topslip ) எஸ் ஆர் என்னின் மனைவியை வைத்திருக்கிறது.
கா நா சு வின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது; உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் உள்ள ஒரு மகனின் தந்தை, மகனின் உடல்நிலை குறித்து செய்தி கொண்டு வருபவனுக்காக காத்திருக்கிறார். அவனும் தொலைவில் வந்து கொண்டுதான் இருக்கிறான். நேராக வீட்டுக்கு வராமல் வழியில் யாரிடமோ பேசிக்கொண்டு நிற்கிறான். செய்தியைக் கேளாமல் அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உறங்கத்தொடங்கி விடுவார். அழுத்தத்தின் உச்சியில் கிட்டும் ஒரு விடுதலை. அந்த நிலைக்கு மனிதரைத் தள்ளும் தொற்றின் சக்தியை எளிதாக எடைபோடவில்லை. குத்தாலத்தின் தொற்று ஒருவேளை பெரிய ஆசுபத்திரியின் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கே கட்டுப்பட்டிருந்தால் கதை எப்படி சென்றிருக்கும் என்ற ஒரு சிந்தனை எழாமல் இல்லை. கதையை இவ்விதம் நிகழ்த்த இயன்ற தொற்றுக்கிருமியைப் பொறுத்தவரை லண்டன் மருந்தால் முறியடிக்கப்பட்டாலும் கூட கிருமியின் வெற்றியும் கூட.
அடுத்ததாக கதை: பொதுவாக ஆசானின் லௌகீக ரீதியான கதைகள் சிலவற்றில் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பும் சமநிலை இருக்கும். உதாரணம் காடு கதையில் தூயமையே உருவான அதன் காரணமாகவே கிட்டத்தட்ட அழிந்து போகும் ஒரு சமூகத்தை சேர்ந்த நீலி கதாபாத்திரமும், அந்தக் கதாபாத்திரத்தை சமனப்படுத்தும் மாமி மற்றும் இறுதியில் வந்து கதையை முடித்துவைக்கும் நாயர் பெண்மணி கதாபாத்திரமும். இந்தக்கதை லௌகீகம் சம்பந்தப்பட்டது என்பதால் பக்கத்து வீட்டு பாட்டியை லௌகீக ஆசா பாசங்களுக்கு அடிமைப்படாத ஒரு ஞானியாக சித்தரித்து இருந்திருக்கக்கூடும். ஆயிரத்தில் ஒருத்திக்காக என்னதான் செறிவான கதையாக இருந்தாலும் ஒரு பத்தி ஒதுக்குவதா பெரிய காரியம்? ஆனால் அப்படி ஒரு சித்திரம் வராத காரணத்தாலேயே கதையை நான் வேறு விதமாகப் புரிந்து கொள்கிறேன். வெற்றிகளுக்கு அடியில் கற்பு என்ற நம்பிக்கை குறித்த தோல்வி என்பதை கதைக்கு சமநிலை தருவதாக எடுக்கலாம்தான். ஆனால் கற்பு வெளுப்பெல்லாம் ஞானியாக மலரும் பெண்ணுக்குத்தான். லௌகீக உலகில் ஒரு ஒழுங்கு, லயத்துக்கு கற்பு குறித்த நம்பிக்கை தேவையே. அதுவே மூச்சு விடுவது போல் வாழ்வின் அடிப்படையான ஆதார விதியாக ஆக இயலுமா? அப்படியெனில் அது வெற்று நம்பிக்கைதானே என்று தோன்றுகிறது. பொய்யை பொய் என்று நிரூபணம் செய்வது கதையைப்பொறுத்த வரை கதையின் வெற்றி.
ஒரு விமரிசகர், கதையின் நீளம் அதிகம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கு என்னவோ கதையின் தலைப்பு தொடங்கி, இறுதி வரை இது மிகவும் செறிவான கதையாகத்தான் தெரிகிறது.
இந்தக்கதைக்கு வெற்றி என்ற தலைப்பும் மிகவும் செறிவான தலைப்பு என்றே உணர்கிறேன். யாரும் நஷ்டப்படாத, அல்லது பரிபூரண வெற்றி என்று முதிர்ச்சியற்றவர்கள் தலைப்பு வைத்திருப்பார்கள் என்றாலும் வெற்றி என்ற தலைப்புதான் கதைக்கு ஒரு மர்மத்தையும், வசீகரத்தையும் நல்குகிறது.
நன்றி
கௌரி ஆர்
***
அன்புள்ள கௌரி,
கூர்வாசிப்புக்கு நன்றி. நான் எழுதும்போது யோசிக்கவில்லை, வழக்கம்போல ஒரே வீச்சு. இரண்டுமணிநேரம். திரும்பிப் படிக்கவுமில்லை. என்ன நிகழ்கிறது என்பதில் எனக்கும் ஆர்வமிருந்தது. நானே அத்தருணங்களை யோசிக்கையில் அந்த கதையைப்பற்றி சூழ்ந்திருந்து பலகோணங்களில் வாசிப்பதே சாத்தியம் என தோன்றுகிறது.
ஜெ
***
அன்புள்ள ஜெ
நலம்தானே? வெற்றி கதை படித்தேன். கதை எனக்குப் பிடித்திருந்தது. இது என் புரிதல். எனக்கு சாதகமாக வளைத்துக் கொண்டேனா எனத் தெரியவில்லை.
பல முறை லதாவை ஆஸ்பத்திரிக்கு ரங்கப்பர் தான் அழைத்து செல்கிறார். நமசிவாயம் கூட சென்றது இல்லை. லதா மனதில் ரங்கப்பருடன் செல்வது தவறான அர்த்தத்தில் பதியவில்லை. அதே போல இரவு முழுவதும் கண்விழித்து ஆஸ்பத்திரியில் இருந்த லதாவை வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்து வரலாம் என்று சொல்லியிருந்தால் கூட அவளுக்கு தவறாக புரிந்திருக்காது. ரங்கப்பர் லதாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் முயற்சியில் வெற்றி அடைந்திருக்கலாம். ஆனால் அங்கு அவருக்கு லதா பணிந்து போயிருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
ரங்கப்பர் முதலில் சொல்லியது போல் “கடவுளேம் இந்தப் பெண் கடைசி வரைக்கும் பணியவே கூடாது என்று வேண்டிக்கொண்டு பல பெண்களை முயற்சி செய்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர்கள் பணியும்போது அவ்வளவு பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் நானே அடைவேன். அவர்களிடம் உறவு கொண்ட பிறகு உப்பரிகையில் நின்று கொண்டு அழுதிருக்கிறேன். எந்த நம்பிக்கையில் வாழ்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறேன்.” லதா பணியாமல் இருந்தது, அவர் பார்க்க விரும்பிய பெண்ணாக லதா இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் ( கதையின் ஆரம்பத்திலிருந்தே ரங்கப்பர் நியாயமானவராக, அனைவரையும் சமானவராக, உரிய மரியாதையுடன் நடத்துபவராகவே சித்தரிக்க படுகிறார் ). உண்மையை, பந்தயத்தை லதாவிடம் சொல்லியிருக்கலாம்.
தன் ஆணவத்திற்காக, பணத்திற்காக தன்னைப் பணயம் வைக்கும் தன் கணவனை லதாவால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்காது. அதுவே அவளுக்கு அதிர்ச்சியாக, அவன் மேல் வெறுப்பாக கூட இருந்திருக்கலாம். இறுதி நாள் வரை தன்னை பணயம் வைத்த பணத்தில் ஆடம்பரமாக, கௌரவத்துடன், வெற்றிவாகை சூடி உலாவரும் தன் கணவனை முற்றாய் வெல்ல, ஏன் அது லதா சொன்ன ஒரு பொய்யாக இருக்கக் கூடாது?
அன்புடன்,
மஹேஸ்வரி
நியூஜெர்ஸி
***
அன்புள்ள மகேஸ்வரி,
அந்த வாசிப்புக்கு இடமிருக்கிறது. உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது அக்கதையில் இல்லை. அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதுகூட. மொத்தக் கதையையுமே சொல்லாமல் ஒரு கதையை எழுதிவிடவேண்டும் என்றுதான் நானே நினைத்தேன். அக்கதையைச் சுற்றிச் சுழலும் பிறஉணர்வுகளை, சூழலை மட்டுமே கதையில் சொன்னது அதனால்தான்
ஜெ
***
அன்புள்ள ஜெ
என்னை பாதித்தது இந்த கதை.
ஆண்களின் வக்ரத்தையே எழுதினீர்களோ? பெண் இடர அவளின் பலகீனத்தை அறிய வேண்டும் என்கிறார் ஒருவர்.
இல்லை என்று சொல்லி தன்னையும் தன்னை நம்பி வந்தவளையும் வதைக்கிறார் இன்னொருவர்.இதற்கிடையில் அன்பில்லாத கணவனுடனும் நோயாளியான குழந்தையுடனுமான தாய் ஒருத்தி.என்ன அவஸ்தை தெரியுமா? படிக்கும் போது.முடிவை ஊகித்திருந்தேன்.
லதாதான் வென்றிருக்கிறாள் அந்த மூர்கன்களை. சந்தேகம் இல்லை
அந்த இரு ஆண் மகன்களும் அவளிடம் தோற்றே போயிருக்கின்றனர்.
பெண் வலிமையானவள் என்றே பெருமிதம் அடைந்தேன் வழக்கம் போல.
லதா ஒன்றும் பலகீனமானவள் அல்ல. ஆணவமும் அகந்தையுமே பலகீனமானது. இரு ஆண்களை அழித்த காளி லதா.
அன்புடன்
மாலா
சார் வண்க்கம்
தங்களின் வெற்றி கதையை வாசித்தேன் பலமுறை. மிக மிகப்பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. சிறுகதை வந்ததிலிருந்து கதையையும் அது தொடர்பான பல கோணங்களிலான ஆண் பெண் இருபாலரிடமிருந்தும் வரும் விமர்சன மற்றும் கண்டனக்கடிதங்களையும் கூட தவறாமல் வாசிக்கிறேன்
என் கருத்தையும் பதிவு செய்கிறேன் சார். ஒருவேளை ஒரு பெண்ணாக நான் சொல்லும் இந்த கருத்து தவறோ என்னவோ, எனக்கு இந்த கதையிலிருந்தும், இன்னும் தினம் தினம் நான் பார்க்கும் பலவற்றிலிருந்தும் தோன்றியதை அப்படியே எழுதுகிறேன்
மனைவி என்பதெல்லாம் கதையில் சொல்லியது போல ஒரு பொதுச்சொல்லேதான் பூசாரியை போல. அது போலவே கணவன் என்பது நிச்சயம் ஒரு பொதுச்சொல்தான். யுகம் யுகமாக இப்படியான கணவர்களே மனைவியை இழிவு படுத்திவருகிறார்கள்
இந்த கதையிலும் லதாவின் இளமையையே அவள் கண்வன் ரங்கப்பரின் சவாலுக்குப்பின்னர்தான் கவனிக்கிறான், அவள் எவ்வளவு சிவப்பு என அவன் அதற்கு முன்னர் கண்டுகொண்டதேயில்லை, அவளையே அவனுக்கு கொஞ்சமும் தெரியாது காலையில் புறப்பட்டு போய் பாதிராத்திரியில் போதையில் வரும் கணவன் என்பதும் பூசா,ரி சாமி போல பொதுவிலான ஒரு பெயரெதான் பொதுவான ஒரு முகம்தான் அவனுக்கும். ஆயிரக்கணக்கில் கோடிக்கணக்கில் இப்படித்தான் இருக்கிறார்கள் இந்த உலகில் கணவர்கள்.
இந்தக்கதையைப் படித்து சிலராவது மனைவி என்பவள் அணுகி அறிந்து கொள்ளவேண்டிய, முறையாக நடத்தப்பட வேண்டியவள் என தெரிந்துகொண்டாள் போதும்.
அங்கீகரிக்கப்படாவிட்டாலும் குறைந்த பட்சம் மனைவிகள் அறிந்துகொள்ளப்படுவதற்காவது அருகதை உள்ளவர்கள் தானே சார்?
16 வயதில் திருமணம் முடிந்து 3ஆவது சவலைப்பிள்ளையின் மார்புச்சளியை தூக்கத்தில் கூட அனிச்சையாக தடவிக்கொடுத்துக்கொண்டு வீட்டைப்பராமரித்து சமைத்து, அவன் உடல்பசியையும் தீர்த்து, அவன் சாப்பிட வரும் போது எப்படி அவனுக்கு பிடித்த விரும்பிய உண்வொன்று தட்டில் இருந்த்ததோ அதைபோலவே அவனுக்கு உகந்ததாக வடிவமைக்கபட்ட 28 வயதே ஆன ஒரு மனைவி அவள்
உக்கிரமாக தெருநாயைபோல விரட்டப்பட்டவள், தேவடியா என சர்வ சாதாரணமாக அடிக்கடி விளிக்கபப்ட்டவள், காசநோய்ப்பிள்ளையின் சிகிழ்சைக்கு வழியின்றி வீட்டில் அவள் இருக்கையில் விஜயா கபேயில் வயிறுவெடிக்க தோசையும் அடையும் காபியும் சாப்பிடும் கண்வனுக்காக வீட்டில் சமைத்து வைக்கும் களிமண்ணால் செய்யப்பட்ட மனைவி என்னும் அச்சு அவள்,
இந்த கதையை நான் லதாவின் கோணத்தில் இருந்தும் வாசித்தேன் சார்,
மிக அலட்சியமாக குரூரமாக இழிவாக தெருநயைவிடக்கேவலமாக நடத்தபப்டும் ஒருத்தி, அடிக்கடி தேவடியா என்றும் வெட்டி கொன்னுடுவேன் அவன் கூட படுத்துக்கோ பணம் தருவான் என்பதையெல்லாம் கூட மிகச்சாதாரணாமன ஏச்சாக அவள் மேல் வீசும் கணவனை அடைந்தவள் ,காசநோய் பிள்ளைகாககூட எந்த முயற்சியும் எடுக்காத, ஏன் இரவில் மார்பை நீவிவிடும் குறைந்த பட்ச உணர்வுகூட் இல்லாத தகப்பனை கணவனாக பெற்றவள்
மாற்றுப்புடவை கூட மரியானதாக இல்லாதவள், கழுத்தில் காதில் ஏதும் பளிச்சென போட்டுக்கொள்ள வழியில்லாதவ்ள், ஆனால் முதலைத்தோல் பர்ஸும் கொம்பு பிரேமிட்ட கண்ணாடியும், பாலிஷ் பண்ணப்பட்ட ஷுவுமாய், இஸ்திரி போட்ட உன்னத உடையலங்காரமுமாய் தினமும் வெளியே போகும் கணவன் , கிடைத்தவள்
கதையின் இறுதியில் வென்றது ரங்கப்பரின் செல்வமோ அழகோ கல்வியோ அல்ல சார் என்னைப்பொறுத்தவரையிலும் லதாவை வென்றது அவரின் கருணை அன்பு கவனித்தல் இவையெல்லாம்தான் ஒரு காபியைக்கூட இது புதுப்பாலில் போட்டதா எனறு கேட்டவரின் அன்பு வென்றிருக்கலாம் அவள் கண்களின் வேதனையை உடன் உணர்ந்து மகனைக்காப்பாற்றிவிடலாம் என்று சொல்லும் கருணை வென்றிருக்கலாம்,, அவளும் நேர்த்தியாக் உடுத்திக்கோள்ளவேண்டும் என நினைத்து அதற்கு ஏற்பாடு செய்த மரியாதை வென்றிருக்கலாம்,, முறையான சிகிழ்சையின் மூலம் மகனைக்காப்பற்ற முயன்ற தெய்வ வடிவு வென்றிருக்கலாம். எட்டாம் வகுப்பு படித்திருப்பது, கூட சொல்லி பாராட்ட வேண்டியது என தெரிந்திருந்த புரிதல் வென்றிருக்கலாம்
பெண்ணை வெல்லவோ அணுகவொ கைக்கொள்ளவோ நீங்களே சொல்லி இருப்பது போல விசித்திரமாகவோ நுட்பமாகவோ ஏன் அசாதரணமாகவோ கூட ஏதும் செய்ய வேண்டியதில்லை அவளை அறிந்துகொண்டு அவளிடம் கருணையுடனும் புரிதலுடனும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டாலே போதும்.
லதா அன்பாலும் கருணையாலும் தாய்மையாலும் வெல்லப்பட்ட இது போன்ற அரிதான விஷயங்களுக்காக காலம் காலமாக காத்திருக்கும் பெண்களின் பிரதிநிதியாகவே எனக்கு தெரிகிறாள்
உலகில் கடவுள் என்றும் கற்பென்றும் எதுவும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அன்பெனும் ஒன்று நிச்சயம் இருக்கிறது சார் அதனால்தான் இது போல கோடிகோடி ஆண்களுக்கும் கணவர்களுக்கும் பின்னரும் மானுடம் வாழ்வது தொடர்கின்றது
லோகமாதேவி