2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது பெறுபவர் சபரிநாதன். அவருடைய களம் ஆட்டம் காலம் தொகுதியில் இருந்து சில கவிதைகள்
விழா ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் நிகழ்கிறது
ஒரு மழைப்பூச்சியை அறிதல்
பழைய அலமாரியிலிருந்தெடுத்த
ஒரு கனத்த தத்துவப் புஸ்தகத்தினடியில்
நசுங்கிக் காய்ந்திருந்தது மழைப்பூச்சியொன்று
அருகே சென்று பார்த்தபோது தான்
அதற்கு ஒரு மண்டை இருப்பது தெரிந்தது
அதில் இரண்டு உணர்கொம்புகள் நீண்டிருந்தன
அதன்கீழே இரு பொடி கன்னங்கருவிழிகள்
வரிவரியாயிருந்த அதன் இரைப்பை புடைத்த பொற்பொதியென மினுங்கியது
சற்றும் எதிர்பார்த்திராதது
அதற்கு தன் உடலைப் போல் இருமடங்கு நீளமான சிறகுகள் இருக்குமென்பது
ஒளிகொள் சிறகுகள்
நின்று பார்வை அகலும்
கணத்தில் காண்கிறேன்
அதற்கு உயிர் இருக்கிறது
நம்மனோர் விதி
கட்டக் கடைசியாகச் சன்னலைத் திறந்துவைத்தது கோடை தான்
தொடர்ந்துவரும் ஒருவருக்கும் திரும்ப தைரியமற்ற ஒருவருக்கும்
இடையே நடந்துகொண்டிருந்தது மழை முன்னொருகாலம்
மீண்டும் சன்னலைத் திறந்தபோது கோடை வந்தது
பருவத்திற்கேற்ப கவிதைகளைப் பகுத்து அடுக்க அடுத்தநாளே அவை குழம்பிவிடுகிறது
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்
மனப்பாடச் செய்யுளைப் படிக்கும் ஒரு மக்குப்பையனைப் போல
*
இன்று கூதிருக்கான சமிக்ஞை புலப்படுகிறது என்
உள்ளங்கை பற்றக்கூடிய தானியத்தைச் சேகரிக்கிறேன்
இந்நீண்ட துயிலில் நாம் தனித்திருந்தாக வேண்டும்
கார்பொழுதினில் சூளைக்காரக் கிழவரோடும் ,வேனலில் காத்திருக்கும்
மீன்காரச்சிறுவனோடும் ஊறுகாயைப் பகிர்ந்துகொள்கிறேன்
என்றாவது ஒருநாள் அவசரஅவசரமாகக் குடைதைப்பவரைச் சந்திக்கவேண்டியிருக்கிறது
வேறொருநாள் பழைய போர்வையைச் சலவைக்குப் போடவேண்டியுள்ளது
அங்கிருந்த இன்னொரு நண்பர் கூறுகிறார்
‘நீ எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கவிதை சுத்த அபத்தமானது’
பின்னிரவில் நடக்கும்படியானது மிதமான போதையில் இலைகள் சலசலக்கும் சாலையில்
முதிய புத்தகத்தின் காகிதங்களென உதிர்ந்த முள்வேலியிலைகள்
சன்னல் கதவை யாரோ ஓங்கியோங்கித் தட்டுகிறார்கள்.திறந்துபார்க்கிறேன்
வெளிர்நீல முழுக்கைச் சட்டையுடுத்தி
மிதிவண்டியில் அமர்ந்தபடி கையசைக்கிறது பசுவெயில்
நான் நம்பத்தொடங்குகிறேன் விதியை (நம் எல்லோரின் விதியும் ஒன்றுதான்)
குழிபறித்துப் பதுங்கின தவளைகள்
முக்குளிப்பானொன்று குளத்தைச் சிதறடித்து
தலைப்பிரட்டைகளை ஒளிக்கும் புளிமரப்பொந்தில்
ஆண்டு பல கழித்துச் சந்திக்கும் விவாகரத்தான ஜோடியைப் போல
நாரைகளும் மாடுகளும் கதிரறுத்த காடுகளில் பேசியபடி நடக்கின்றன பையப்பைய
நாம் காத்திருக்கிறோம் மஞ்சள் வைத்த புத்தாடையைப் பிரிப்பதற்காக
இதுதானே இளவேனில் என்று சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக
ஏனெனில் நாம் அறிவோம் வலசை விரையும் பறவைகளை அதன்
கூரிய அலகுகளை சின்னஞ்சிறிய வயிறுகளை.தவிர சன்னலோரத்தில்
பிடிவாதமாக நின்றுகொண்டு
காலாகாலத்தைக் கழிக்கும்
ஒரு மரத்தை
***
சிரிப்பு வரும் வரை
சுற்றுச்சுவருக்கு வெளியே கிடக்கும் மலர்களைப் பொறுக்குகிறாள் அம்மா
மினுமினுக்கும் வெள்ளாட்டுக்குட்டியொன்று
முன்னத்தங்கால்களை எழுப்பி இளஞ்செடியில் பசியாற யத்தனிக்கிறது
‘எடுபட்ட கழுத..’
திட்டியபடி கைகளிலிருந்த பூக்களை வீசியெறிகிறாள் அதன்மேல்
காற்று நுழைகிறது யாரோ ஒருவரால் துரத்தப்படுவதைப் போல
ஓடியோடி மீண்டும் குனிந்தெடுக்கிறாள் வீசிய பூக்களை
கழுத்துமணியை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு
சாவகாசமாகக் கால்களை உயர்த்துகிறது குட்டி
இத்தனை நடந்துகொண்டிருக்கும் பொழுது அங்கே
அந்த உசந்து தடித்த செண்பகமரம் மலர்களை உதிர்க்கிறது அதுவும்
சுற்றுச்சுவருக்கு வெளியே
***
மூன்றே மூன்று காதல்கள்
1.அப்போது நான் அசைவப் ப்ரியனாக இருந்தேன்
இரண்டு ஜடைப்பின்னல்களுக்கிடையே வானவில்லைக் கட்டித்தொங்கவிடும் அவளும்
நானும் சாப்பாட்டு மேஜையில் எதிரெதிரே அமர்ந்துகொள்வோம்
எனக்குப் பிடித்தமானவை:
புறாக்குஞ்சு ரோஸ்ட்,நெய்யிட்டு வறுத்தெடுத்த ஆட்டு முன்தொடை,
வதக்கிய வெங்காயம் விரவிய சில்லி சிக்கன்,சிகப்புச் சாயம் பூசிய இதழ்கள்,
கோச்சைக்கறி,புழுக்கள், கைப்பற்றிக் கூட்டிச்சென்ற விரல்கள்
நண்டு வறுவல்,நெத்திலிக்கருவாட்டுக்குழம்புடன் பால்கருவாட்டுப் பொரியல்
பொடிப்பொடியாய் நறுக்கப்பட்ட சிறுமூளைத் துண்டுகள்,..
ஓரிரவு நான் அவள் காதைச் சத்தமில்லாமல் வேகவைத்து ருசித்துக்கொண்டிருந்தேன்
அவள் பார்த்துவிட்டாள்
அதற்குப் பிறகு நானவளைப் பார்க்கவில்லை
2.அவள் தான் எனக்கு கற்றுக்கொடுத்தது
பாசித்திரிகளை ஊதித்தள்ளி,கொடியிலைகளை ஒதுக்கிவிட்டு
வழுக்குப்பாறையில் கையூன்றி உடல்கிடத்தி
காட்டுச்சுனையில் நீரருந்த தவிர
அவள் தான் என் மூன்றாவது கண்ணைத் திறந்தாள்
அன்றிலிருந்து என் போஜனப் பட்டியிலை நிரப்பியவை:
தாளித்த கீரைக்கடையல்,கொத்தமல்லித் துவையல்,கத்தரிக்காய் காரக்குழம்பு
அழுகல் தக்காளி,வாழைக்காய் புட்டு,வறுத்த விதைகள்
காளான் குருமா,ஆரஞ்சுத் தொலிகள்,உரிந்துவிழுந்த பட்டைகள்…
துணிமணிகளை மடித்துவைத்த அவள்
ஒருநாள் எங்கள் தோட்டத்தையேக் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்
அதற்கு எந்தக் காரணமும் தேவைப்படவில்லை
3.அவள் எந்த வகையிலும் சுவாரசியமானவளில்லை ஆனால்
அவள் தான் எனது நான்காவது கண்ணைத் திறந்துவைத்தவள்
இப்போது நான்
முட்டையோடுகளையும்,துருப்பிடித்த ஆணிகளையும்,உடையும் காகிதங்களையும்
தின்றுகொண்டிருக்கிறேன்
***
மத்திமம்
ஏழுவருடங்களுக்கு முன் என் இயற்பியல் ஆசிரியர் சொன்னார்,இப்பிரஞ்சத்தில்
ஒவ்வோர் புள்ளியும் ஒவ்வோர் புள்ளியிடமிருந்து சமதொலைவில் உள்ளது
தப்பியோடும் மானும் துரத்திவரும் பசியும் இருப்பது போல
அப்படித்தான் வசிக்கிறது எனது ஊர்
இரண்டுவிரல்களில் ஒன்றைத் தொடச்சொல்லும் கரத்தின் முன் நின்றுகொண்டு
எனது வீட்டிலிருந்து சமதூரத்தில் இருக்கிறது
மூடப்பட்ட தீப்பட்டியாலையும் ஆளற்ற புதிய பேருந்துநிலையமும்
இதோ இங்கு மின்னோட்டம் அறுந்துபோக எங்கென்று தெரியாத
மெழுகுவர்த்திக்கும் இரண்டு காதலிகளுக்கும் மையத்தில் நான் எனது
சின்ன+சின்ன+சின்ன+சின்ன ஆசைகளும் பாவங்களும்
அப்படி அப்படியே.இந்நள்ளிரவில்
போய்ச்சேரவேண்டிய இடமும் புறப்பட்ட இடமும் சமதூரத்தில் இருக்க
இந்தப் பேருந்து எரிபொருளை முற்றாய்த் தீர்த்துவிட்டிருக்கிறது
சமதொலைவில் நின்றுகொண்டிருக்கும் நாங்கள் கால்சராய்க்குள் கைபுதைத்தபடி
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறோம்
சொல்வதற்கு எதுவுமேயில்லை என்ற பாவனையில்
நீ சொல்ல வருவதைப் புரிந்துகொண்டேன் என்ற பாவனையில்
***
தூக்கமாத்திரைக்கு ஒரு பாடல்
துய்ய பெண்குரலினாலானது ஆதலால் துயரமானது
இறந்த காதலி வெண்சீலையில் வந்திசைக்கும் பாடலைப் போல் நிராசையானது
மைய்யலில் தோய்ந்தது அச்சமூட்டுவது அதனாலேயே துய்யதானது
தூக்கமாத்திரையை உள்ளங்கை நடுமத்தியில் வைத்துப் பார்ப்பதென்பது
மலைமுகட்டில் நின்று சிறுகுளமொன்றைக் காண்பதானது மேலும்
ஒரு நாளென்பது இருபத்துநான்கு மணிநேரத்தால் ஆனது
நான் முதன்முதலாக தூ.மா வைப் பார்த்த அன்று எந்த இழப்பும் நேர்ந்திருக்கவில்லை எந்தக்
காதலும் முத்தமும் தலைவலியும் இல்லை சின்ன
ஒரு ஆவல் தான் அன்றிலிருந்து
இமையசைப்பின் நீளமுள்ள இரவை ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே
செருகிக்கொள்வேன்.சாம்பல் உதிரவுதிர மார்புக்கூடு ஆழமானது நான் லேசானேன்
அன்றிலிருந்து தூக்கமாத்திரைகளை எண்ணுகிறேன்
மனசுக்குள்
அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்
வேதக்கோயில் மைதானத்தில் ஓர் எலுமிச்சைமாலை வரிசையில் நிற்கும்பொழுது
கிறிஸ்துமஸ் தாத்தா வந்துகொண்டிருந்தார் எனைநோக்கி
எழு ஆறு ஐந்து…
எனக்குப் பொறுமையில்லை இப்போதே பிரிக்கத் துவங்கிவிட்டேன் பரிசை
சிகப்பு குல்லா மங்கிக்கொண்டே வருகிறது.அவர் தந்த தேன்மிட்டாய்களை
விழுங்கித் தண்ணீர் குடிக்கத் தலைசாய்க்கும் ஒருவன் காண்பது
கொய்யெனும் விண்மீன்களை
***
வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
ஒரு நல்ல குடிமகனை நாய் துரத்துகிறது
கையிலிருந்த மீன் துண்டத்தை எறிந்துவிட்டான்
கவிச்சிவீசும் இரண்டு விரல்களையும் சப்பிக்கொண்டே ஓடுகிறான்
சாவடியில் மக்கள் தங்களுக்குள்ளாகவே பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்
‘இதோ பாரடி நல்ல குடிமகன்’
அங்கே உயரமான ஒருவனது தலையில் வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை
அம்புமுனையால் குறிபார்க்கிறார் சிலர்.அது மதியம்
சாம்பாருக்கடியில் கிடக்கும் கல்லைக்கட்டி மூழ்கடிக்கப்பட்ட மனிதர்களைப் போல
மடிப்புக்குலையாத முழுக்கைச்சட்டையை காற்சட்டைக்குள் சொருகிய அவன்
எனைக் கடந்தபோது
பழைய புத்தகக்கடையில் ஒரு வரலாற்றுப்பாடநூலைப் உருவினேன்
பாதி கிழிந்திருந்த கடைசிப்பக்கத்திலிருந்து அதை வாசிக்கத் துவங்கினேன்
ஒரு லட்சத்து தொண்ணூற்றய்யாயிரம் வருடங்களுக்கு முன் பூமி மனிதரற்று இருந்தது
என்ற வரியோடு நிறைந்த இரவில்
சொப்பனமற்ற ஒரு நீண்ட உறக்கம்
இப்போது தோன்றுகிறது
வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கு மீதமிருப்பது ஒன்றுதான்:
வானம் தலையில் முட்டாமல்
நிலத்தில் கால்களிரண்டையும் பதித்து நடப்பது எப்படி
வரிசையில் நிற்கும் நம்மில் ஒருவன் கழன்றுசென்று
விறைத்துவீங்கிய மதிற்சுவர் மேல் சிறுநீர் கழிக்கிறான்
நாங்கள் அஞ்சுகிறோம் திட்டுகிறோம் பிறகு ஆவலோடு பார்க்கிறோம்
அவன் முடிந்தவரை உயரமாகப் பீச்ச விரும்புகிறான்
கைதட்டுகிறோம் வார்த்தைகளற்று வெறுமனே கூச்சலிடுகிறோம்
தளர்ந்து
கேவிக்
கேவி
இறுதியாகச் சொட்டும் பொழுது அறிகிறோம்
நாம் யாரென்பதை
***
முள்
கனிந்த குலைத்திராட்சையைக் கொய்யும் கரமென
தரையிறங்குகிறது இரவு கருவேலங்காட்டிற்குள்
பகல்முழுதும் எச்சமிட்ட குயில்கள் செட்டையடித்துப் போனபின்
ஓணான்முட்டைகளுக்கென நிழலற்றிய முட்செடி அசைவை நிறுத்துகிறது
முன் ஜென்மத்தில் அது மூன்றுபத்தி வீடு ஒன்றில் வாழ்ந்துவந்தது
பவளமல்லிக்கும் கொடிவீசும் பிச்சிக்கும் மஞ்சள்ரோஜாவிற்குமிடையே
அதிகாலையில் அவற்றோடு உசாவிச்செல்லுமது
களைத்து வீடுதிரும்பி சாய்வுநாற்காலியில் விழுந்து
தன்னுடல்பூத்த முட்கள் ஒவ்வொன்றாய் ஒடித்துப்போடும் ஒவ்வொரு ராவிலும்
இப்போது அதன் வேர்முடி ஒளியைக்கண்டு அஞ்சியோடுகிறது
எந்தச் சாளரமும் எட்டாத தொலைவில் அது தூக்கத்தை விளிக்கிறது
***
கூக்ளி
அவள் உன்னை வெளியேற்ற விரும்புகிறாள்
என நம்பிக் கொண்டிருக்கிறாய்
எத்தனை வேகத்திலும் மூர்க்கதிலும்
தாண்ட முடியாத கோட்டை
எழுப்பியிருக்கிறாய்
உன்னைப் பார்த்தபடியே முத்தமிடுகிறாள் பந்தை
அவள் ஓடிவந்து கொண்டிருக்கிறாள்
பாதுகாப்புக்கென்று கவசங்களைச் சேர்த்து சேர்த்து நீ
யாரெனத் தெரியாவண்ணம் மறைந்துகொண்டாய்
முதல் பந்தில் வெறியேறிவிட்டு நிதானமாக இசை கேட்டபடியே மாதுளம் பழச்சாற்றை
உறிஞ்சலாம் என்று கனாக் காண்பவனே அவளுன்னை வெளியேற்றவே விரும்புகிறாள்
என இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறாய்
ஓடிவந்துகொண்டிருக்கிறாள் அவள்
தலைக்காப்பு சொட்டிச் சொட்டி கரைய ஆரம்பித்துவிட்டது
பதற்றத்தில் நீ
கிரீஸிற்கு அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்துகொண்டிருக்கிறாய்
வாசத் திரைச்சீலையென
***
மே
கொசுத்தொல்லையால் அவஸ்தைப்பட்ட ஓரிரவு
எழுந்து வாசற்கட்டில் வந்தமர்ந்தேன்
முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டி
மே என்றது
நானும் மே என்றேன்
கயிறு இழுபட அருகில்வந்து நின்றது
நான் மே.. என்றேன்
அது மே மேமே என்றது
நிலவிலிருந்து பனி இறங்கிற்று.வெள்ளி சரியத்துவங்கிய பின்னரவில்
அதனிடம் மே சொல்லிவிட்டு வந்து படுத்தேன்
இருட்டுக்குள் நான் செல்வதைப் வெறித்தபடியே மெல்லிசாக
மே என்றது
இப்படியாக எங்கள் நட்பு தொடங்கியது
குலையொடித்துக் கட்டும் சமயங்களில்லாம் அது சிரித்துக்கொண்டே
மே சொல்லும்
வீட்டைவிட்டுக் கிளம்பும்போது நான் தவறாமல் மே மே சொல்லிவிட்டுத்தான்
நடப்பேன்,அதுவும் நெடுந்தூரம் ஓடிவந்து மே மே சொல்லியனுப்பும்
பொழுதுபோகாத மதியங்களில் அது சும்மா மே… என்று கூறும்
நானும் சும்மா மே.. என்பேன்
பிறகு அது மே..மே என்கும்
நானும் மே..மே என்பேன்
அது மேமே மே.. என்றால்
நானும் மேமே மே.. என்பேன்
இப்படியே நாங்கள் விளையாடிக்கொண்டிருப்போம்
அம்மா வந்து தலையில் குட்டுவைக்கும் வரை அல்லது
இலையுருவிய அகத்திக்குச்சியைக் காட்டும்வரை
கொஞ்ச தினங்களுக்கு முன் என் அறைத்தோழனும்
வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டேன்
இன்று இந்தவூரில் பார்த்தால் ஒரு சின்ன மே சொல்வதற்குக்கூட நாதியில்லை
நேற்று அம்மா தொலைபேசியில் சொன்னாள்
நம்ம குட்டி ராத்திரியெல்லாம் ஒரே ஊளை என்று
ஒத்துக்கொள்கிறேன்
அநேகரிடம் மே கேட்க வேண்டிய ஒரு மனிதன் தான் நான்
***
அக்கா ஒரு முதலை வளர்த்தாள்
வாய்கொப்பளிக்கும் தொலைவில் புழக்கடைக்குப் பின்புறம் ஒரு
கம்மாய் இருந்தது அதில் தான் அக்கா முதலை வளர்த்துவந்தாள்
பள்ளிக்கூடம் விட்டு வருகையில் நீர்ப்பரப்பில் சலனமறுத்த இரண்டு
கண்கள் முளைத்தன,யாருமற்ற வீட்டில் இரண்டு கொலுசுகள் கிடந்தன|
பண்டிகை தினமொன்றில் அக்கா என் விரல்களைப் பற்றி
முதலையின் கரடுமுரடான ஈர நெற்றியைத் தொடச்செய்தாள் நான் பதறியுதற அது
கண்ணைச் சிமிட்டிவிட்டு வாலால் என் கன்னத்தைத் தட்டியபடி முழுகிப் போனது
நான் எவ்வளவோ சொல்லினேன் எங்கள் துருவேறிய செவ்வக ரேடியோப் பொட்டியின்
அத்தனை இரைச்சலுக்குள்ளும் பாட்டைக் கண்டுபிடித்துவிடும் அவளுக்கு எப்படி
முதலைகளைப் பற்றி எதுவுமே தெரியாமல் போனது
சேக்காளிகள் சொர்க் அடித்துக்கொண்டிருக்கும் பொழுதும் எனக்கு
கம்மாய் முழுக்க முதலையின் கண்களே தளும்பும் இருந்தும்
அக்காவின் காலை முதலை கவ்வுவது போன்றும் நானதன் கண்ணைக் குத்தி
காப்பாற்றுவது போன்றும் கற்பனை செய்து செய்து தூங்கிப் போவேன்
அப்படியொரு கடையாமத்தில் பேய்மழை கொட்டக் கொட்ட
விழித்திருந்தேன் வீடு ஒழுக ஆரம்பித்தது, சன்னல்கதவுகள் பிய்ந்தோட
தாழ்வாரம் கரைந்துவிட்டது. மறுகாலை மினுங்கும் ஈரவிறகருகேயிருந்த
என் வீட்டிற்குச் செல்ல ஒரு படகு வேண்டியிருந்தது
மெல்ல உடைகளைக் கழற்றி வேலிப்பொடவில் வைக்க
கம்மாய் ததும்பிக் கிடந்தது
கம்புக்கூட்டில் கைகளை சொருகியபடி படித்துறையில் இறங்கினேன்
நான் அன்று
***
நானுக்கு சுதந்திரம்
சிறுவயதுமுதலே என் நாவை ஒரு கிளியைப் போல் வளர்த்துவந்தேன்
ஒருபோதும் தங்களுக்குள் தொட்டுக்கொள்ள முடியாத
நான்கு இணைகம்பிகளை அதன்முன்னே நட்டுவைத்தேன்
அதற்கு விரல்கள்மேல் அபாரப் பிரியமிருந்தது-கோதுமை மணிகளுக்காக மட்டுமல்ல
நான் அதற்குப் பல அழகான வார்த்தைகளைக் கற்றுத்தந்தேன்
உதாரணத்திற்கு:வணக்கம்,வாழ்க,மூன்றுசுழி அண்பு
வேறுசில எளிய சொற்களைக்கூட அது கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டது
எ.கா: தர்மம்-அதர்மம்,காலம்-அகாலம்,நேர்கோடு-அநேர்கோடு…
ஒவ்வொரு வாழ்நாளிலும் முக்கியச்செய்திக்கென்று
ஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது அப்படியொரு தருணத்தில் ஏதோ
ஒரு துச்சன் அதற்கு ஒரு புதுவார்த்தையை அறிமுகப்படுத்திவிட்டு ஓடித்தொலைந்தான்
அன்றிலிருந்து நான் வாசலைத்தாண்டும்போதெல்லாம் இது
‘நானுக்கு சுதந்திரம்…நானுக்கு சுதந்திரம்’ என்று கத்தத் தொடங்கிவிட்டது
வேறென்ன சொல்ல நான்
பைங்கிளியே சுதந்திரம் ஓர் ஈமொய்க்கும் பண்டம் என்பதைத் தவிர
இன்று மாலை நடையில் கண்டேன்
சணல்கயிற்றில் சிகரெட் பற்றவைத்துக்கொண்டிருந்தது ஒட்டகம்
நாக்கு கேட்டது- அதற்கு ஏன் இவ்வளவு உயரமான கழுத்து?
’ஏனெனில் பாலைக்கரையின் நீரோடை அதன் கண்ணுக்கு எங்கிருந்தும் தெரியவேண்டும்’
அருகில் ஒரு பருந்து அடிடாஸ் சப்பாத்துக்கயிற்றை முடிச்சிட்டபடியிருந்தது
‘எங்கே இவ்வளவு தூரம்’
‘சும்மா அப்டியே காத்து வாங்கதான்’
என்னவொரு மோசமான உச்சரிப்பென அலுத்துக்கொள்கிறது நாக்கு
’சகோதரா தண்ணீரைத் தவிர வேறு
எதுவும் எனக்கு வேண்டாம்
என்றெண்ணிய கணங்களில்தாம் நாம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தோம்’
‘நானுக்கு சுதந்திரம் நானுக்கு சுதந்திரம்’ (ஒற்றைக்காலில் நின்றுகொண்டு)
‘ம்ஹும்….இப்படிவா
வந்து இந்த கையடக்க வென்னிலா கோப்பையின் பாற்கடலுக்குள் குதி’
வேறுவழியில்லை
***
நீர்வழிப்புணை
இடைவேளையின் போது நண்பன் சிரித்துக்கொண்டே சொன்னான்
‘வரும் வழியில் பார்த்தேன்.செவ்வந்தித் தோட்டத்தின் நடுவே ஒரு எருமைமாடு
மும்முரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தது.ஒரு சாயலில் பார்ப்பதற்கு
உன்னைப் போலவே இருந்தது’
இரண்டு குளிர்பானத்திற்கான விலையை அவன் செலுத்தவேண்டியதாயிற்று
அன்றிரவு விருந்தின் போது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்,அதாவது
நம் அளவிற்கு நம் கால்கள் நம்பத் தகுந்தவையல்ல
நம் அளவிற்கு நம் கண்களுக்கு நிதானமில்லை
நம்மைப் போல் செய்துமுடித்தபின் எதையும் யோசிப்பதில்லை நம் கைகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சாக்லெட்டுகளும் கரடிபொம்மையும் வாங்கும்
ஒரு மனிதர் குடியிருக்கிறார் (நமது நண்பர்தான்) பக்கத்து ஃப்ளாட்டில்
அவர் அடிக்கொருதரம் சொல்வார்
‘கிழிந்த உள்ளாடைகளைக் காயப்போடுவதுதான் சிரமம்’
அப்போது தன் கைகளிரண்டையும் உயர்த்திக்கொள்வார்
துப்பாக்கிமுனை முன் நிற்கும் ஒருவனைப் போல
பின் கைகளிரண்டையும் சேர்த்துப் பலமாகச் சப்தமெழுப்புவார்
அவ்வளவு தான் என்பதைப் போல
***
விடாப்பிடியான கறைகள்
அவள் தருகிறாள் இருமுனைகள் சீவப்பட்ட சிறு பென்சிலை
தொலைவில் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது வாழ்க்கையைப் போல
அவன் வரைகிறான்
நான்கு அறைகளும் அநேக வாசல்களும் கொண்ட ஒரு
காலியான இருதயத்தை
தீர்ந்ததென வீசியும் மீண்டும் மீண்டும் பிதுக்கப்படும் பற்பசைக் குழாயைப்
பத்திரப்படுத்தும் ஒருவனுக்குக் காலம்
கண்டயிடமெல்லாம் பொத்தான்களைத் தைக்கும் ஒருத்தியை வழங்கும்போது
அண்ணாந்து விமானத்தை விரட்டியோடும் சிறார்கள் குதூகலிக்கிறார்கள்
நல்லவேளை அது ஒரு மனிதனின் முழுநிழலுக்கு இடம்போதாத சிறிய இதயம்
ஜொலிக்கும் நாணயங்கள் சப்தமிடும் நாணயங்கள் இரண்டு பக்கம் உடைய நாணயங்கள்
சிதறி விழுகின்றன கனமான நாணயங்கள்.அவன் ஓடிப்போய்
வாங்கினான்:ஒரு நூல்கண்டு,ஒரு பென்சில்,ஒரு மினுங்கும் வெள்ளி ப்ளேடு
நான் வெகுநேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அது ஒரு காலணி அடிப்புறத்தின் ஓவியம்
அவன் காதில் சொன்னான்
இது என் ஐயாவின் ஐயாவினுடையது
முட்கள் பொதிந்த ரப்பர் செருப்பைத் தவிர வேறெதையும் அது குறிக்கவில்லை என்று
அவள் துள்ளிக் கூச்சலிடுகிறாள்;ஊசியின் காதில் நூல் நுழைந்துவிட்டது போலும்
கிட்டப்பார்வையாளனான நான்
தினசரியின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்ததிற்குச் செல்வதற்காக
ஓடும் பேருந்தில் ஏறுகிறேன்
நதியில் இறங்குவதைப் போல
தீட்டுத்துணிகளை அடித்துச்செல்லும் நதியில் இறங்குவதைப் போல
***
நான் ஓர் ஆரஞ்சாக விரும்புகிறேன்
உறங்கும் என் சட்டையை அவிழ்ப்பது போல் அம்மா
அச்சுளையைத் திறந்தாள்.ஒரு விதையை எடுத்து
இது நீ என்றாள்.இன்னொரு விதையைக் காட்டி
இது நான் என்றாள்.மற்றொரு விதையும் அங்கிருந்தது
சற்று யோசித்துவிட்டு அவள் சொன்னாள்
‘இதுதான் ஆரஞ்சு விதை’.நாங்கள் அதை
வளாகச் செம்மண் தரையில் புதைத்தோம்.அது
துளிர்க்கவேயில்லை நிறைமனதொன்றின் மௌனமென
நான் முதன் முதலாக ஆரஞ்சைச் சந்தித்தது ஒரு
சாக்குத்துணி போர்த்திய துருவேறிய தள்ளுவண்டியில்
இரண்டு மலைகளுக்கிடையில் சூரியனைப் போல் அது
ஜம்மென்று அமர்ந்திருந்தது பலாக்காய்களின் மேல்
அம்மா அதை வாங்கினாள்;ஒன்று மூனேகால் ரூபாய்
நான் இரண்டு பழங்களைக் கண்களில் ஒற்றி,ஆரஞ்சு
வழியாக உலகத்தைப் பார்த்தேன்.ஆரஞ்சு வானத்தின்
கீழ் ஆரஞ்சுக் கூரைகளும் ஆரஞ்சுத் தெருவும்
முன்செல்லும் அம்மாவைப் பேர்சொல்லிக் கூப்பிட்டேன்.
திரும்பிய அவள் என்னை ஆரஞ்சு வழியாக முறைத்தாள்
வீட்டிற்கு வந்திருந்த ஒரு மாமாவிடம் பழச்சாற்றைக்
கொடுத்தேன்.அவர் அம்மாவின் கண்களைப் பார்த்தபடியே
சொன்னார் ‘ஆரஞ்சு ஓர் எரியும் நிழல்’.உடனே நான்
சொன்னேன் ஆரஞ்சு ஒரு கடல்.அவர் கேட்டார்
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.நான் சொன்னேன்
ஆரஞ்சு ஒரு பாலைவனம்.அவர்களிருவரும் சிரித்தனர்
நான் கூவிக்கொண்டேயிருந்தேன்
ஆரஞ்சு ஒரு அதிகாலை,சாயங்காலம்,மத்தியானம்
கண்ணாடி பார்த்தபடி சீவிய தொலியெடுத்து தன் முகத்தில்
அரக்கித் தேய்த்த அம்மாவை முத்தமிட்டேன்
முகத்தில்.பழத்தைப் பிழிந்து நானென் உடல்முழுதும்
பூசிக்கொண்டேன்.கோபித்த அவள் எனையள்ளி முத்தமிட்டாள்
உடல்முழுதும்.அன்றிலிருந்து ஆரஞ்சைச் சுழற்றி விளையாடத்
துவங்கினேன்.தூங்குகையில் தொடைகளின் நடுவே ஆரஞ்சைப்
பதுக்கிக்கொள்வேன்.அதிலிருந்து கனவுகள் படரும் ராமுழுதும்
அதில் ஆரஞ்சிற்கென்று வனைந்தேன் இரண்டு முலைகளை
ஆரஞ்சு அளவிலான முலைகளை.ஒரு ஆகஸ்ட் மாதத்தில்
அம்மா ஓர் ஆரஞ்சு விதையைப் பெற்றெடுத்தாள்.
அழுகல் வாசம் நிறைந்த இருளறையில் கிடந்த அவளிடம்
சொன்னேன் ’அம்மா நீ ஒரு ஆரஞ்சு’
எனக்குத்தோன்றியது ஒரு கத்தியால் பிரிக்கப்பட்ட இரண்டு
அரைக்கோளங்கள் தாம் நாங்கள் என்று.துமி வித்தியாசமும்
இல்லாத அவை ஒன்றையொன்று பார்த்துக்கொள்கிறதென்று
நான் வேறு நிலத்திற்குச் செல்லவிரும்பினேன்
கையில் எஞ்சிய ஆரஞ்சை சுழற்றினேன்
நான் சொல்லிக்கொண்டேன் இது சுற்றட்டும்
நான் எரியும் நிழலாகும் வரை,காற்றின் தோளேறி
பருவங்கள் போய்த்திரும்பட்டும்.நான் காத்திருக்கிறேன்
காதலறியாத நெஞ்சம் சதா உணரும் பிரிதலோடு
ஒரு புதுப்பொழுதில் ஒளித்துகள் ஒன்று ’ம்..
ஆகட்டும்’ என்று சொல்லும் வரை.அக்கணமே
பாலை போர்த்திய கடலாக இரண்டு முலைகளுடன் அதி
காலையாக மத்தியானமாக சாயும்காலமாக
இரு மலையிடைதனில் சூரியனாக கைக்கெட்டாத
உயரத்தில் தனியாக அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும்
நிலத்தை வெறித்து இருக்கும் ஓர் ஆரஞ்சாவேன்.
***