அன்பு ஜெ,
வணக்கம். தங்கள் சமீபத்திய வெற்றி சிறுகதை முன்வைத்து என் பார்வைகள் கீழே:
என் இயல்பு மற்றும் சிறுகதை வாசிப்பின் போதைமையால் பிழையிருக்க வாய்ப்புண்டு.
ஜமீந்தார் காலத்து புனைவு ஆயினும் தங்கள் ஆற்றலால் கிளப் விவரணைகளும், எஸ். ஆர். நமச்சிவாயம் என்ற விற்பனை பிரதிநிதியின் மனவோட்டங்களும் புனைவின் உள்ளே வாசகனை உள்ளே இழுக்க வல்லது. ஆணின் மனோவோட்டம் பதிவாகிய அளவுக்கு அப்பெண்ணின் மனவோட்டம் பதிவாகாமல் இருப்பது பாதி கதையிலேயே முடிவின் போக்கை வாசிப்பவன் உணர்வதால் வாசிப்பில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
கதையே அப்பெண் போவாளா மாட்டாளா என்ற வினாவை வைத்துள்ளதால் இம்முடிவு யூகிக்கும் போக்கிற்கு வாசகன் தள்ளப்படுகிறான, யூகித்தல் சரியான வாசிப்பிற்கு தடை என்றபோதிலும்.
கதையை முடித்தபின் ஏனோ தங்கள் தளத்தில் வந்த கட்டுரை “சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா” உள்ள வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. “இன்றைய படித்தப்பெண் அவ்வளவு அசடல்ல என்றும், சமூகத்தின் சட்டகங்களுக்குள் தன்னை குறுக்கிக்கொள்பவள் அல்ல என்றும், தனக்கு வேண்டியவற்றை, பாலியல் உட்பட, அமைதியாக, சமூகத்தின் கண்ணில் ஒரு படி கூட இறங்காமல் அடையக்கூடிய சாமர்த்தியம் உடையவளாகவே பார்க்கிறேன். “
சாமர்த்தியத்தில் இன்றைய படித்த பெண் என்ன? அன்றைய பெண் என்ன? காரணங்கள் தான் வேறு!
எனக்கு புரியாதது அந்த இறுதி வரியின் தேவை என்ன என்பதில் தான். “எங்கிருந்தோ ஒரு தனி ஒளி அவள்மேல் விழுந்து கொண்டிருப்பது போலிருந்தது. ” என்ற வரியிலேயே முன்னரே உணர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியரால்.
தான் இறக்கும் தருவாயில் கூற வேண்டிய அவசியமென்ன? கூறியபின் அல்லது கூறியதாலேயே அவள் வாழ்ந்த 40 ஆண்டு கால வாழ்க்கையின் பொருள் என்ன?
ஆனால் அவள் கூறியதாக சொன்னபின் வாசக மனம் நமச்சிவாயத்தின் மனைவி இறந்ததிற்கு பிந்தைய வாழ்க்கையை அதிர்ச்சியோடு பார்ப்பதற்காகவே இறுதி வரி அமைக்கப்பட்டதா?
கிளப் நண்பர்களிடம் பகிரும் நமச்சிவாயம் இதை நோயில் பிழைத்த மகனிடம் பகிர்ந்தாரா? கதையே அவன் நோயை வைத்துத்தானே ..
அவள் கூறாமல் சென்றிருப்பின் வாசகனுக்கு விடப்பட்ட இடம் அதிகம் இருக்குமா இல்லை கம்மியாகவா?
தங்களின் ஆகச்சிறந்த கதையா என்று கேட்டால், இல்லை ஆசானே என்பதே என் பதில். அது ஏன் என்பதற்கு பதிலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
அகங்கார விளையாட்டில், முடிவை நோக்கிய கதை வகைமையில் “கெய்ஷா” என் முன்னே நிற்கிறாள்.
நன்றி.
ரமணா சந்துரு
***
அன்புள்ள ஆசிரியருக்கு,
வெற்றி சிறுகதையை இன்று வாசித்தேன். ஒரு வகையில் இப்படித்தானா என்று சாேர்வை அளிக்கிறது. படைப்புகளை வெறும் கதைகளாக அப்புறம் தள்ளி வைக்க முடிந்தால் தேவலை. ஆனால் இயலாது… அது நிகர் வாழ்க்கை. வாசிக்கையில் என் மனம் முதல் முடிவை நாேக்கியே இருந்தது. உங்கள் சூப்பர் ஈகாே விரும்பியது முதல்முடிவு, உங்கள் இட் விரும்பியது இரண்டாம் முடிவு எனக் காெள்ளலாமா? சில தலைமுறைகளுக்கு முந்தையக் கதை என்றாலும் நாம் மனநிலை அளவில், அதுவும் ஆண்பெண் பற்றிய கருத்தாேட்டங்களில் அந்த மனநி லையிலிருந்து வெகுவாக மாறவில்லை. நடைமுறை சாெல்கிறது. அதில்வெகுசில பெண்கள் நல்லவர்கள் எனக் குறிப்பிடுவதிலிருந்து ஆண்களும் அப்படியானவர்கள் என்று புரிகிறது. அப்படியெனில் மானுடமே அப்படியானதா? ஆண்கள் உதவிக்கரம் நீட்டுவது பற்றி ஏமாற்றமே ஏற்படுகிறது. குறிவைத்து அடிக்கும் பாேது இரை என்ன செய்யும்? எந்த நேரமும் பறவையின் கண் எச்சரிக்கை காெள்ள முடியுமா? கதையைப் வாசித்தப்பின் ஆண்கள் பற்றி பாட்டிகள், அம்மாக்கள், அக்காக்கள்… எச்சரித்ததை விட மேலும் எச்சரிக்கை வேண்டும் பாேல. எனில் பார்வை எப்பாேது மாறும்… இல்லை இப்படியனவர்கள் தான் நாமா? ஆதிகுணம். கதையாய் மட்டும் எடுத்துக் காெள்ள முடிந்தால் பரவாயில்லை. நன்றி ஏனெனில் தந்தை இடத்திலிருந்துபெண்களுக்கு அழுத்தமான எச்சரிகை.
அன்புடன்,
கமல தேவி
***
அன்பு ஜெ,
நலம் என்று அறிகிறேன்…
உங்கள் “வெற்றி” சிறுகதையை படித்தேன், பொதுவாகவே பெண் வெறுப்பு அதிகம் உள்ள இந்த சமூகத்தில் – சமீபமாக அவ்வெறுப்பினால் பெண்கள் அடையும் பாதிப்புகள் தான் எத்தனை – இப்படிப்பட்ட ஒரு கதை பெண்களைப்பற்றி மேலும் ஆழமாக எதிர்மறை எண்ணங்களை இச்சமூகத்தில் உருவாக்காதா?
அந்தக்கதையிலுள்ளது போல் நிகழ்வதற்கான சாத்தியங்களைப்பற்றியோ, அது சரியெனவோ தவறெனவோ நான் விவாதிக்க விரும்பவில்லை.. எதைப்பற்றியும் எழுத எவருக்கும் உள்ள உரிமையைப்பற்றியும் நான் சந்தேகிக்கவில்லை… ஆனால், நீங்கள் பேசும் அறத்தின் கீழ் இப்படியாகப்பட்டவை வருமா வராதா என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். ” பொதுவாகவே பெண் வெறுப்பு அதிகம் உள்ள இந்தச் சமூகத்தில் இப்படியான ஒரு கதை தேவைதானா? ”. அல்லது அறம் என்பதும் பெண்களை ஒதுக்கி வைத்து நீங்களெல்லாம் தனியாக இயங்கும் மற்றும் ஒரு தளமா?
என் சிறு எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறேன்.
அன்புடன்,
மோகனா
***
அன்புள்ள ஜெயமோகன்,
“வெற்றி” நான் வாசித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று மட்டுமல்ல, “இதை ஏன்
வாசித்தோம்” என்று நான் சங்கடப்பட்ட சிறுகதைகளிலும் ஒன்று.
சங்கடம். இது கதை முழுவதும் என்னைப் படுத்தி வைத்த ஒரு உணர்வு. மூன்று மாத காலக் கெடு முடிவது வரை நமச்சிவாயத்துக்கு மட்டுமல்ல ;வாசகனுக்கும் சங்கடம்தான். உண்மை அழகானது;உண்மை அருவருப்பானதாக இருக்காது என்று பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். அனைவரின் முன்னாலும் நிர்வாணமாய் நிற்க நேர்ந்தது போல் சங்கடம்.
மனித மனம் எப்படியெல்லாம் செயல்படக் கூடும் என்று தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். ஏழைகள் தன்மானம் மிக்கவர்கள்;எதன் பொருட்டும் தன்மானத்தை இழக்க மாட்டார்கள். என்று பேசி குடி போதையில் நமச்சிவாயம் தன் மனைவியின் கற்பை பணயம் வைத்து பந்தயம் வைத்தபின் கதை பதற்றம் கொள்ள வைக்கிறது. மனைவி மீது மரபு சார்ந்த நம்பிக்கை ஒரு புறம். ஐந்து லட்சம் (அரை நூற்றாண்டுக்கு முன்) கிடைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்ற வாய் பிளப்பு ஒரு புறம், மனைவி மேல் துளி சந்தேகம் வந்து போவதும், வென்றாலும், தோற்றாலும் பெரும் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போடுவதும் எதார்த்தமாக இருக்கிறது. அண்ணன் வீட்டில் பிளக்கப் போகும் வாய்கள் சுகமான கற்பனை.
சில விஷயங்களை சோதித்துப் பார்க்காமல் இருக்கும் வரை நல்லது. நிம்மதி. மனைவிகற்புள்ளவளா? எது வரை தாக்குப் பிடிப்பாள்? தாய் உத்தமியா? நான் இந்த அப்பாவுக்குத் தான் பிறந்தேனா? பெண்ணின் கற்பின் தாங்கு திறன் எவ்வளவு? கடவுள் உண்மையில் உண்டா? இந்த சோதனைகள் எல்லாம் செய்யாமல் இருப்பது நல்லது. எல்லாரையும், எல்லாவற்றையும் இழந்து விடக் கூடும் என்று தர்மருக்குத் தெரியாதா, என்ன? சுய நலம், ஆசை, அப்பாவித்தனம் என்ற மானுட பலவீனங்கள் மட்டுமல்ல-ஊழ். அரசியல் சரி நிலைகள் போல் அறம் சார்ந்த சரி நிலைகளும் உள்ளன.
வெற்றி என்ற தலைப்பே கிண்டல் போல் தோன்றுகிறது. கதையில் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று விட்டது போல் தோன்றுகிறது. நமச்சிவாயம் தன் மனைவியின் கற்பின் திறத்தால் வெற்றி பெற்றதாக நினைக்கிறார். போனசாக ஐந்து லட்சம் வேறு. லதாவுக்கு மகன் பிழைத்ததில் வெற்றி. , கணவனின் சமூக நிமிர்வைக் காப்பாற்றிய தோற்றத்தை ஏற்படுத்தியதில் வெற்றி. ரங்கப்பருக்கு பிறன் மனை கொண்டதில் வெற்றி. தன் பெண் புரிதல் ரகசியமாகவாவது மீண்டும் சரியானதில் வெற்றி.
ஒரு கோணத்தில் பார்த்தால் எல்லோருமே தோல்வி அடைந்தவர்களாகவும் தோன்றுகிறது. நமச்சிவாயத்துக்கு கற்புக்கரசியின் கணவன் என்ற பெயரும் பெரும் பணமும் கிடைத்தாலும் மனைவி இறக்குந் தறுவாயில் சொன்ன உண்மையால் நொறுங்கிப் போகிறார். தன் சாமர்த்தியத்தால் மகனையும் பிழைக்க வைத்து, தன்னையும், கணவனையும் சமூகத்தின் முன் பொய்யாகவாவது கௌரவமாக நடக்க வைத்த லதாவால் அந்த தகிக்கும் உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் சாகுந் தறுவாயில் உண்மையை வெளிப்படுத்துகிறாள். ரங்கப்பருக்கு
அடுத்தவன்மனைவியை அடைவதை விட, அதைப் பற்றி பிறரிடம் பீற்றிக் கொள்வதுதான் பெரிதாக இருக்கும். இந்த கேசில் அந்த பெருமையும் போயிற்று.
எல்லோரும் நல்லவரே. ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் நேர்மையும். இருக்கிறது. . நமச்சிவாயம் தன் மனைவி மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் மது போதையால் தான் பந்தயத்துக்கு ஒத்துக் கொள்கிறார். அவ்வப்போது அந்த நம்பிக்கை அசைந்து கொடுத்தாலும் உண்மையை மனைவியிடம் சொல்லி, எச்சரித்து, குறுக்கு வழியில் வெற்றி பெற அவர் விரும்பவில்லை. நேர்மையாக வெற்றி பெறவே விரும்புகிறார். இறுதியில் நண்பர்களிடம் உண்மையைச் சொல்லாமலே விட்டிருக்கலாம் . யாரும் சரி பார்க்கப் போவதில்லை. ஆனாலும் உண்மையைச் சொல்கிறார். சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்த குற்ற உணர்வுக்கு சிறிது ஆறுதல் கிடைக்கிறது போலும். வயதானவர்களால் ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு இழப்புகள் ஏதுமில்லை மகனுக்கு காச நோய் இல்லாவிடில் லதா உண்மையில் வென்றிருப்பாள். ஆனால்களும் இருந்தால்களும் வாழ்வைக் கட்டமைப்பதில்லை. இல்லாவிடில்கள் இதமாகத் தடவிக் கொடுக்க மட்டுமே பயன்படும். தன் ஈடிணையற்ற சாமர்த்தியத்தால் மகனையும், தன்னையும், தன் கணவனையும் குடும்ப கௌரவத்தையும் லதா காப்பாற்றி விடுகிறாள்.
ரங்கப்பர் பணக்கார பொறுக்கி என்றாலும் லதாவின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறார். கடைசி வரை ரகசியத்தைக் காப்பாற்றுகிறார். நமச்சிவாயத்துக்கு 90 வயது. சுமார் 60 வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. மேலோட்டமான வாசிப்பில் இது ஏழைகளைக் கொச்சைப் படுத்தும், பெண்களைக் கொச்சைப் படுத்தும் கதை போலத் தோன்றலாம்.. அது உண்மையல்ல.
ரங்கப்பர் கோமளவல்லியை வென்றதைப் பற்றிய உரையாடல் நிகழும் போதுதான் பந்தயப்பேச்சு தொடங்குகிறது. கோமளவல்லியை நாட் ராயன் என்ற பணம்படைத்த ஜமீந்தாரிடமிருந்துதான் ரங்கப்பர் அபகரிக்கிறார். பிரச்னை பணம் மட்டுமல்ல. ரங்கப்பரின் பார்வை நுட்பமானது. “பணத்தால் வெல்ல முடியாத பெண்ணென்று யாருமில்லை. அந்த பணத்தை எப்படி அவளுடைய ஆணவம் புண் படாதபடி கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்””ஒரு பணக்காரன் நினைத்தால் அடைய முடியாத பெண் என்பவள் பல லட்சங்களில் ஒருத்திதான்”.
அந்தக் காலத்தில் பொருளாதார தற்சார்பு இல்லாததால் பெண்கள் ஆண்களையே சார்ந்து வாழ வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பண்டங்கள்தான். பெண் பொறுக்குதல் பணக்காரர்களின் பொழுது போக்காகவே இருந்திருக்கிறது என்பதை நாச்சிமுத்து பாத்திரமும் உணர்த்துகிறது. நமச்சிவாயம் மட்டுமென்ன, உத்தமரா? ஏழைகளின் தன் மானத்தைப் பற்றி பெருமிதம் பேசும் அவருடைய ஐந்து லட்சக் கனவில் ஒரு துளி:”ஐந்து லட்சம் இருந்தால் என் தெருவில் நிற்கும் பெண்கள் அத்தனை பேரையும் நான் வெல்ல முடியும். ஐந்து லட்சத்துக்கு வராதவளாக ஏதாவது பெண் இங்கே இருப்பாளா, என்ன? “
ஆண்களையும் வீழ்த்தி விட முடியும். சதவீதம் தான் வேறுபாடு. காரணம், ஆண்களுக்கு ஆசையை விட ஆணவம் முக்கியம். காஸ்மோபாலிட்டன் க்ளப்பில் பணக்கார பெரிய மனிதர் கள் எல்லோருமே பொறுக்கிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்போது மட்டுமென்ன? பெரும் பணக்காரர்கள்தான் பெரும் பொறுக்கிகளாக இருக்கிறார்கள். ஏழைகளுக்கு பொறுக்கித்தனம் கட்டுப் படியாவதில்லை. பொறுக்கித்தனம் இல்லையென்றால் பணம் சேர்ப்பதனாலாய பயனென் கொல்? கஷ்டமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய? இப்படி உண்மைகளைத் துகிலுரிந்தால் சங்கடமாக இருக்காதா?
எனக்கு ரங்கப்பர் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. பணக்காரத் திமிர், பெண்களை கிள்ளுக் கீரையாக நினைத்தல், எச்சில் பண்டத்தை விழைதல் போன்ற இழிவுகள், கீழ்மைகள் இருந்தாலும் அவருள்ளும் சில நல்ல தன்மைகள் உண்டு. இவள் படியா விட்டால் நல்லது என்று பல பெண்கள் பற்றி நினைக்கிறார். உறவுக்குப் பின் ஏமாற்றம் தாங்காமல் அழுகிறார். லதாவை அணுகும் போதும் எளிய காமுகனாக இல்லை. லதாவின் வேண்டுகோளை ஏற்கிறார். கடைசி வரை ரகசியத்தைக் காப்பாற்றுகிறார். பந்தயம் போடும் போது மட்டுமே வேட்டைக்குக் கிளம்புகிறார் ராவணனும் எச்சில் பண்டத்தை இச்சித்தவன். நமச்சிவாயமும் இச்சிக்கக் கூடியவன்.
நல்ல சிறுகதை அருளியமைக்கு நன்றி.
ஜெ. சாந்தமூர்த்தி,
மன்னார்குடி.
***