அன்பு ஜெமோ,
வெற்றி சிறுகதை- எல்லா பக்கமும் சுவரிடிந்து விழும் உணர்வு. முதலில் நடை கொஞ்சம் இடறினாலும், மைய முடிச்சு வந்தவுடன் முழுதாக உள்ளிழுத்துக்கொண்டது. ஒவ்வொருவரின் சொல்லிலும் செயலிலும் உள்ள நெருடல்களே கதையின் ஆழம்.
ரங்கப்பர் போன்ற ஒருவருக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வெளியில் அவரைப்பற்றி பொதுவாக என்ன நினைக்கிறார்கள் என்பதும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. அவர் அதைத்தாண்டி பற்றிக்கொள்ள ஏதுமுள்ளதா என்று தேடுபவராகவே தெரிகிறார். அப்படி ஒன்றை லதாவிடம் கண்டுகொண்டதனால் இரண்டையும் இழக்கத் தயாராகிறார்.
கற்பைப்பற்றி வெளியில் உரக்கப்பேசும் நமச்சிவாயம், உள்ளூர எப்படியாவது பணம் வந்தால் சரிதான் என்று நினைக்கிறார். தன்கையில் ஐந்து லட்சம் வந்துவிட்டதாக கற்பனை செய்யும் போது பெண்களை எப்படிப்பார்க்கிறார் என்பது அவருக்கே பெரிய திறப்பு. தோற்றுவிடுவோம் என்ற எண்ணம் வந்தவுடனேயே, ரங்கப்பரின் வெற்றி மோகத்தைப்பற்றி நினைத்து ‘எப்படியும் வெல்ல எண்ணுபவர் 3 லட்சம் வரைக்குமாவது செலவு செய்து வெல்லத்தானே எண்ணுவார்’ என்று நினைத்துக்கொண்டு அதை பூடகமாக மனைவியிடமும், அண்ணனிடமும் சொல்கிறார். மனைவிக்கு வரும் பணமெல்லாம் தன்னுடையதுதானே என்றும் நினைக்கிறார்.
அவர் பார்வையில், லதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு நடந்துகொள்ளும் விதம், தெளிவாகவே ஏதோ நடந்திருப்பதை காட்டுவதாகவே வருகிறது. அந்த உறுத்தலுடன்தான் அவர் வாழ்ந்தாக வேண்டும். அதையும் தாண்டி, ரங்கப்பர் வெளியில் சொன்னதையே உண்மையென்று நம்பி அந்த உறுத்தலைக் கடக்கிறார் நமச்சிவாயம். அதனால்தான் லதா கடைசியில் அந்த ஓட்டையும் உடைக்கிறாள் என்று நினைக்கிறேன்.
எந்தவித மரியாதையும் தரப்படாமலேயே தன் கடமைகளை செம்மையாகச் செய்கிறாள் லதா. அவளுடைய நோயாளி மகன் வலிந்து உருவாக்கப்பட்டிருப்பதாக சில வாசகர்கள் எழுதியிருந்தார்கள். ரங்கப்பரின் பக்கம் சாய, அவளுக்கு நோயாளி மகனெல்லாம் தேவையே இல்லை. ரங்கப்பரின் மேல் நன்றியுணர்வு இருந்திருக்கலாம்; ஆனால் அவளை மனுஷியாகப் பார்க்கும் கண்கள் போதும்.
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்
***
அன்புள்ள ஜெ,
வெற்றி சிறுகதை பற்றி,
கதை எனக்கு பிடித்திருந்தது, எனக்கு ஒரு இடத்தில மட்டும்தான் குழப்பம், ஏதன் காரணமாக ரங்கப்பருடன் அவள் சென்றாள் என, பணம் எல்லாம் காரணமாக இருக்காது, கண்டிப்பாக இதில் வந்த ரங்கப்பரின் இயல்பின் படி அவர் பணம் பற்றி அந்நேரத்தில் அவளிடம் பேசியிருக்க (பேரம் )மாட்டார். நான் இவ்வாறு புரிந்து கொண்டேன், அவளது மகன் மீதான அந்நேர மன அழுத்தம் அதன் எல்லைக்கு சென்றிருக்கும், பின்பு அதிலிருந்து விடுபட, மறக்க ரங்கப்பர் உடனான நெருக்கத்தை தேடியிருக்கும்.
சமூக கட்டுப்பாடுகள் எல்லாம் பொது ஒழுங்கு சார்ந்த பிடிப்பிலிருந்து மனம் சிதறாமல் இருக்க உருவானவை, மனம் அழுத்தம் காரணமாக உச்சத்தை அடையும் போது கட்டுப்பாடுகள் எல்லாம் மறந்து விடும், அதாவது உடலின் விருப்பத்திற்கு மனம் தன்னை ஒப்பு கொடுத்து விடும், ஒப்புக்கொடுத்தல் என்பது நதியில் இலை தன் எதிர்ப்பினை காட்டாது நதியின் போக்குடன் செல்வது போன்றது, அவள் ரங்கப்பருடன் அன்றிரவு அப்படி சென்றிருப்பாள் (கொஞ்சம் ஓவரா தான் யோசிக்கிறேன், ஆனா எனக்கு இந்த கதையை பாசிட்டிவாக எடுத்துக்கணும்னு விருப்பம், அதனால இப்படி பொருள் எடுத்துக்கிட்டேன் :) )
இந்த கதை பற்றி நிறய எழுதலாம் னு தோணுது, அவளும் ரங்கப்பரம் சந்தித்த முதல் சந்திப்பின் முடிவிலேயே நமசிவாயம், போய் படுத்துக்க, 5 லட்சம் கொடுப்பாரு னு சொன்னது, நீங்க முடிவை முன்னாடியே கதைல சொல்லிட்டீங்க :) சொல்லப்படும் வார்த்தையை மனம் உள்வாங்க விட்டாலும் உடல் உள்வாங்கிடும் போல :)
அந்த பொண்ணு தெய்வம் மாதிரியான பொண்ணுதான், முக்கியமா அந்த இரவுக்கு பிறகும் அவள் மீது விழும் பொன்னிற ஒளி அதை தான் சொல்கிறது என நினைக்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் நமசிவாயத்திற்கு துவக்கத்திலேயே பணம் (பென்ஸ்) வரும்படி ரங்கப்பர் செய்வது, இது எதோ ஒரு விதத்தில் முடிவிற்கான மனநிலையை நமசிவாயம் ஏற்று கொள்ளும் மனநிலையை கொடுக்கும் அல்லது அது போன்ற எதோ ஒரு விஷயத்திற்காக என தோன்றுகிறது.
இன்னொன்று ரங்கப்பரை இந்திரனுடன் ஒப்பிடலாமா என்று தோன்றுகிறது, jk வின் (பிரபு -கங்கா ) கதையை போல, ஆனா அது போல யோசித்தால் சிவாகி அண்ணா ‘ டே கொல்லாத ‘ என்னை திட்டுவார் என்பது வேற ஞாபகத்திற்கு வருகிறது :)
தேவையை, விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழியாக எந்த பெண்ணையும் ஈர்த்து விடலாம் என்பதை (கசப்பை) எப்படி ஜீரணித்தேன்னா, ரங்கப்பர்க்கும் ஒரு மனைவி இருப்பாள், அவளுக்காகவும் வெளியில ஒரு தேவேந்திரன் காத்திட்டு இருப்பான் னு நினைச்சு :))
ராதாகிருஷ்ணன்
***
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் வெற்றி சிறுகதை பற்றி என் www. agnikuyil. blogspot. com என்ற BLOG -இல் ஒரு விமரிசனம் எழுதியிருக்கிறேன். அது கீழே.
வெற்றி – ஒரு எதிர்வினை
தினமும் காலையில் எழுந்ததும் மொபைலில் ஜெயமோகனின் சைட்டில் உள்ள வெண்முரசு மற்றும் கட்டுரைகளை விரைவாக ஒரு முறை படிப்பேன். இரவு சாவதானமாக லேப்டாப்பில் மீண்டும் ஒருமுறை அனுபவித்து படிப்பேன். அப்படிதான் வெற்றி சிறுகதையையும் படித்தேன். முதல் முறை படிக்கும்போது மனதில் அதிர்வலைகளை உருவாக்கியது. இரவில் படிக்கும் போதும்.. முதலில் கோபம். சாதாரணமாக மனதில் எழும் பாமரத்தனமான கேள்விகள்தான் எழுந்தது. மீண்டும் சில முறை நிதானமாக படித்தபோது சில உள்ளடுக்குகள் புலனானது. அதை எழுததோன்றியது.. எழுதும் முன் ஜெயமோகனின் வாசகிகளின் எதிர்வினை என்ன என்று பார்க்க தோன்றியது. காரணம் அவர்கள் தேர்ந்த வாசகிகள். ஞாயிறு காலை வரை இரண்டு எதிர்வினைகள் தான் வந்திருந்தது. இரண்டும் எதிர்மறை தான்.
CSK வின் விமரிசனமும் படித்தேன்
CSK இது அந்த பெண்னின் ராஜதந்திரத்தின் வெற்றி என்று எழுதியிருந்தார். எனக்கு சிறுவயதில் படித்த ஒரு குட்டிக்கதை ஞாபகம் வந்தது. ஒரு கழைக்கூத்தாடி தினமும் குரங்குகளை வைத்து விளையாட்டு காட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு பையன் இருந்தான். ஒருநாள் பையனை அழைத்து உனக்கு வயதாய்விட்டது. வந்து வித்தை கற்றுக்கொள் என்று கூட்டிக்கொண்டு போனான். நன்றாய் பார்த்துக்கொள் என்று பையனிடம் சொல்லிவிட்டு கையை தட்டினான். குரங்கு ஒரு கரணம் அடித்தது. உடனே அதற்கு ஒரு பழம் கொடுத்தான். பார்த்தாயா எப்படி குரங்கை பழக்கி வைத்திருக்கிறேன் என்றான் பையனிடம். கரணம் அடித்து திரும்பிய குரங்கு அருகிலிருந்த குட்டியிடம் பார்த்தாயா, ஒரு கரணம் அடித்தால் பழம் கொடுப்பான். அப்படி பழக்கி வைத்திருக்கிறேன் அவனை என்றதாம். யார் சரி?
வெற்றியில் யார் வென்றது? கற்பை இழக்காமல், மகனை காப்பாற்றிய தாயா, பந்தயத்தில் வென்று பணக்காரனான நமச்சிவாயமா, ஐந்து லட்சத்தை இழந்து, நினைத்த பெண்ணை அடைந்து, தன் நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொண்ட ரங்கப்பரா, எல்லோரும் எதோ வென்றிருக்கிறார்கள். ஏதோ இழந்திருக்கிறார்கள். வெற்றி என்பது எது அவர்களுக்கு முக்கியம் என்பதைப்பொறுத்தது.
விஷயம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆணோ பெண்ணோ அனைவருமே பலவீனமானவர்கள்தான். காமம் என்கிற விஷயத்தில் 99.9% ஆண்கள் வீழ்ந்து விடுவார்கள் என்பதில் பெரிய அபிப்ராய பேதம் இருக்காது என்று நினைக்கிறேன். பெண்களிலும் ஒரு கணிசமான அளவினர் ஏதோ ஒரு பலவீனத்தில், ஒரு தருணத்தில் வீழ்ந்து விடுவார்கள் என்பதும் எல்லா ஆண்களுக்கும் தோன்றும். எவ்வளவு சதவிகிதம், எதற்காக என்பதில் தான் சர்ச்சை.
எல்லாப் பெண்களும் ஒரு குறைந்த எண்ணிக்கை தவிர பணத்திற்காக விழுந்து விடுவார்கள் என்ற தொனி வருவதால்தான் சிக்கல்.
எல்லா ஆண்களும் காமத்தில் விழுந்து விடுவார்கள் என்று எழுதினால் சிக்கல் இல்லை. காரணம் இந்த சமூகத்தில் ஒரு ஆண் எத்தனை பெண்களை வீழ்த்தினான் என்பதிலே வெற்றி என்று காண்பிப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் ஒரு பெண் எத்தனை ஆண்களை வீழ்த்தினாள் என்பது வெற்றியாக கருதப்படுவதில்லை. எவ்வளவு ஆண்களின் முயற்சிகளை தடுத்தாள் என்பதை வைத்து தான் அவள் வெற்றியை காண்பிக்க முடியும். இந்த கதையில் கூட அவள் தன பெயர் கெடாமல், மகனையும் காப்பாற்ற்றினாள் என்பது தான் அவள் வெற்றியாக கருதப்படுகிறது.
உலக சுகங்களுக்காக பெண்கள் வீழ்ந்து விடுவார்கள், ஆண்கள் தங்கள் ஆணவத்திற்காக எதையும் தியாகம் செய்வார்கள் என்பது எவ்வளவு தூரம் உண்மை? அழகிற்காகவோ, கிடைக்காத அன்பிற்க்காகவோ, சொத்து சுகங்களை துறந்து ஓடுகிற எத்தனை பெண்களை கண்டிருக்கிறோம். விரும்பிய பெண்ணிற்காக அதிகாரத்தையே துறந்த ஆண்கள் எத்தனை? ராமராவ் ஞாபகம் வருகிறார்.
ஜெயமோகனின் படைப்புகளை தொடர்ந்து படித்து கொண்டிருப்பதால் எனக்கு ஜெயமோகனின் ஒரு இயல்பாக தோன்றுவது இரண்டு முரணியக்கங்கள். அவர் பெண்கள் ஒருபக்கம் உலக சுகங்களில் பலவீனம் உள்ளவர்கள் என்று எண்ணுகிறார்.. மறுபக்கம் தாய்மையின் மகத்தான சக்தி பற்றி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் படைப்புகளில் தாய்மையின் சக்தி திரும்ப திரும்ப வருகிறது.
ரங்கப்பரிடம் பெற்ற அனுபவத்தைப்பற்றி லதா என்ன நினைக்கிறாள் என்று தெளிவாக தெரியவில்லை. ஜெயகாந்தனின் சூயிங்கம் போல எதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். ஒரே நாளில் பத்து பதினைந்து வயது கூடியது போல இருந்தாள். எங்கிருந்தோ ஒரு தனி ஒளி அவள் மேல் வீழ்ந்தது போல இருந்தது என்று எழுதியிருக்கிறார். அந்த ஒளி தியாகத்தின் ஒளியா, இதுவரை கிடைக்காத பரிவு இப்போது கிடைத்ததின் ஒளியா என்று தெரிய வில்லை.
இந்தக் கதையில் காச நோய் பிடித்த மகனை காப்பாற்ற அவள் வீழ்வதாக காட்ட வேண்டிய தேவையே இல்லை. ரங்கப்பர் வீசிய பனத்திற்கெல்லாம் மயங்காமல், ஆனால் அவர் காண்பித்த அன்பிற்காக, நமச்சிவாயத்தின் புறக்கணிப்பிற்கு பழியாக அவள் தன்னை ரங்கப்பரிடம் சமர்ப்பித்தாக அமைந்தால் லதாவின் பாத்திரம் மோசமடையுமா? இல்லை என்றே தோன்றுகிறது. ரங்கப்பர் லதா பணத்திற்காக வீழவில்லை, தன் அன்பிலேயே வீழ்ந்தாள். ஆகவே பெண்கள் பணத்தில் வீழ்வார்கள் என்ற தன் சித்தாந்தம் தோற்றுப்போனதை ஒத்துக்கொண்டு பணம் கொடுப்பதாக முடித்தாலும் சரியான முடிவாகத்தான் இருக்கும்.
அப்புறம் எதற்கு ஜெயமோகன் ஒரு காச நோய் மகனை உருவாக்கி, தாய்மைக்காக அவள் வீழ்வதாக எழுதியிருக்கிறார்.? இது ஒரு சீரியல் எழுத்தாளரின் உத்தி என்று அவருக்கு தெரியாதா?
அவர் சுமதி என்ற பெண் வாசகருக்கு எழுதிய பதில் சுவாரசியமானது. இது தான் என் தரப்பா என்றால் இல்லை என்கிறார். ஆனால் எந்த எழுத்தாளரும் தான் அந்தரங்கமாக நம்பாததை எழுத மாட்டான். அதை அடுத்த வரியிலேயே ஒத்துக்கொள்கிறார். இவ்வுண்மையை கண்டு அஞ்சி அறம் போன்ற கதையில் ஒளிந்து கொள்வேன் என்று எழுதுகிறார். அந்த பெண் வீழ்வாள் என்று அவர் உள் மனம் நம்புகிறது. இது பெரும்பாலான ஆண்கள் உண்மையாக உணர்வது. அந்தராத்மாவை உண்மையாக நம்பும் எந்த எழுத்தாளரும் அதை எழுதாமல் தப்ப முடியாது. இதனால் பெரும் திட்டுகளை சந்திக்க வேண்டும் என்று உணர்ந்த பிறகும் கூட. ஆனால் தாய்மையை ஆராதிக்கிற ஜெயமோகனுக்கு அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அதை ஒரு தாய்மையின் தியாகமாக மாற்றி ஆறுதல் கொள்கிறார். ஒரு உத்தியாக அது ஒரு தோல்வி என்ற போதும் கூட. அது அவர் அறம். இது அவர் வெற்றியா, தோல்வியா என்பது அவரவர் கோணத்தைப் பொறுத்தது.
ஆனால் கதை ஒரு வாசகனாக என்னை வென்றிருக்கிறது.
ஏ.ராமகிருஷ்ணன்
***
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
உங்கள் வெற்றி சிறுகதை பேருந்துப் பயணத்தில் படிக்க ஆரம்பித்து நான் முதன் முதலில் படித்த உங்கள் யானை டாக்டர் போலவே இறங்க வேண்டிய நிறுத்தத்தைத் தவற விடச் செய்தது..
அதன் பின் இரு நாட்களாக அன்றாட வேலைகளின் நடுவே அதன் ஒரு பகுதி சில கேள்விகளை எழுப்ப அதற்கான பதிலை அதன் மற்றொரு பகுதி வழங்குவதாகத் தோன்றுகிறது. அதன் பொருட்டு எழுதப்பட்ட சில கடிதங்கள்/விமர்சனங்களையும் படித்த போது பெண்கள் சற்று காயமுற்றிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் அது உண்மையல்ல, அது அந்த கதாபாத்திரங்களின் மன அமைப்பு என்பதும் கதை நடக்கும் ஜமீன்தார் கால ஆண்களின் பொதுப்புத்தி என்பதையும் கண்டு கொள்ளலாம். கூடவே பெண்களிலும் பலவீனர்கள் எல்லா காலத்திலும் உண்டு என்பதையும்..
அந்தக் கதையின் ஆரம்பத்தில் சொல்லியது போல காஸ்மாபாலிடன் கிளப் என்பது தேவர்களும் அசுரர்களும் சந்தித்துக் கொள்ளும் இடம். ஆனால் தேவர்கள் அசுரர்கள் என்று தனித்தனியாக யாரும் அங்கு இருப்பதாகத் தோன்றவில்லை. அங்கு வரும் ஆண்கள் ஒவ்வொருவரும் தேவர்களாகவும் அசுரர்களாகவும் ஒவ்வொரு நாளும் பாத்திரம் மாற்றி நடிக்கிறார்கள்.. ஆம் நடிக்கிறார்கள்.!
ஒருவன் அசுரனாகி ஒரு கருத்தை சொன்னால் மற்றொருவன் தன் ஆணவம் சீண்டப்பட்டு தன்னை தேவனாகப் பாவித்து எதிர் கருத்தை சொல்கிறான்.. அடுத்த முறை அவர்கள் பாத்திரங்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள். ஆண்களுக்கு அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரம் அசுரனா தேவனா என்பதை விட அதில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆணவமே முக்கியமாகிறது.. நட்ராயன் வைர வைடூரியங்களை வாரி இறைத்து வைத்திருக்கும் கோமளவல்லியை வீழ்த்த முடியாது என்று ஒரு ஆணவத்தில் (அவள் காதல் மேல் கொண்ட நம்பிக்கை தரும் ஆணவம்) சொல்லும்போது ரங்கப்பர் பணத்தினால் பெண்களை வீழ்த்தி விடலாம் என்று தன் ஆணவத்தால் சொல்கிறார் (இதற்குப் பின்னும் ஒரு பெண் தந்த நம்பிக்கை இருக்கலாம்)..
இந்த முறை நட்ராயன் தோற்கிறார். இது போன்ற பலவீனமான பெண்களிடத்தில் அவர் கொள்ளும் வெற்றி தரும் ஆணவத்தில் ரங்கப்பர் எல்லோருக்கும் விலை வைக்கிறார்.
வெற்றி மட்டுமல்ல தோல்வியும் தாழ்வுணர்ச்சியும் தரும் வன்மம் கூட சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஆணவமாக மாறக்கூடியது, அதுவே நமச்சிவாயத்தை தேவர்கள் பாத்திரம் ஏற்று நடித்து “என் வீட்டு பெண்கள் ஏழைப் பெண்கள் நல்லவர்கள்” என்று எதிர் சவால் விடச் செய்கிறது..
தனக்கு ஐந்து லட்சம் கிடைத்தால் அதை கொண்டு தெருவின் எந்த பெண்ணையும் வாங்கலாம் என்று அவர் நினைக்கும் கணம் அந்த வேஷம் கலைந்து போகிறது..
நமச்சிவாயத்தின் அண்ணன் “விடுபட்ட இரு பேப்பர்களை எழுதினால் இவன் இருக்கும் இடம் என்ன என்பது தெரிய வேண்டாமா” என்று அக்கறையோடு பேசுவதும் கூட நான் உன்னைவிட உயர்ந்தவன் என்னும் ஆணவத்தால் ஏற்று நடித்த ஒரு வகையான தேவர்கள் பாத்திரம்.. நமச்சிவாயத்திற்கு வரப் போகும் எதிர்காலத்தைப் பற்றி கேட்டு் துணுக்குறும் கணம் அது கலைந்தும் விடுகிறது..
இதில் உள்ள முரண், நமச்சிவாயம் அடிப்படையில் மூர்க்கர் அல்லர். தன் மனவோட்டங்களை அதன் அபத்த சிந்தனைகளை உணர்ந்தே இருக்கிறார் என்பதும் கூடத் தெரிகிறது. ரங்கப்பர் அந்த கணத்தில் அவ்வாறு தோன்றியதால் மட்டுமே சவால் விட்டார் என்று கூட இவர் அவரையும் புரிந்து கொள்பவராகவே இருக்கிறார். ஆனாலும் அவை பின்னே தள்ளப்பட்டு இரு வகை வெற்றிகள் (ஆணவங்கள்)அவரைத் துரத்துகின்றன. முக்கியமாக கிடைக்கப் போகும் பெரும் பணம் கொண்டு அவர் அடையப் போகும் லௌகீக வெற்றி அதன் மூலம் அவர் திரட்டப் போகும் பேராணவம். அந்த இடைப்பட்ட நாட்களில் அவர் வரப்போகும் பணத்தை குறித்தே அதிகம் சிந்திக்கிறார்.. ஆண் மனம் இவ்வளவு மூர்க்கமாக வெற்றி பெறத் துடிப்பது என்பதே அச்சம் தர செய்வதாக உள்ளது..
கோமலாவைப் பதினைந்து தினங்களில் கவர்ந்து கொண்ட ரங்கப்பர் எழுபத்தைந்து நாட்கள் முடிந்து மீதம் பதினைந்து நாட்களே உள்ள நிலையில் லதா நல்லவர் என்று சான்றளிக்கிறார். ஆனால் அழுத்தங்களுக்கு வளைவார்கள் என்று அவர் சொல்லும் போதே புரிந்து விடுகிறது அவரளவில் அவர் தோற்று விட்டார் ஆனால் ஒரு வகையில் அவர் பார்க்க விரும்பிய, பணத்திற்கு வளையாத பெண்ணைப் பார்த்து விட்டார். அந்த வகையில் அவருக்கு அது வெற்றியே.
கடைசி தினத்தில் எதுவும் நடந்திருக்கலாம். தான் உயிரெனக் கருதிய குழந்தைக்காக அவள் அழுத்தத்திற்கு வளைந்திருக்கலாம். அதுவே அவளுடைய அன்றைய தின குற்ற உணர்வுக்கு காரணமாய் இருந்திருக்கலாம்.. ரங்கப்பரும் அதே குற்ற உணர்வு கொண்டு தான் தோற்றுவிட்டதாக அறிவித்து ஐந்து லட்சத்தை அளித்திருக்கலாம்..
அல்லது ரங்கப்பரின் நோக்கம் கண்டு அவள் அவர் மேல் வைத்திருந்த மிகப்பெரிய மரியாதை எனும் நம்பிக்கைப் பொய்த்துப் போனது கூட காரணமாயிருக்கலாம்.
தன்னை அடைவதற்காக ஒருவன் செய்யும் உதவி என்று தெரிந்திருந்தால் எந்த பெண்ணும் அவரைக் கடவுளோடு ஒப்பிட்டு தன் கணவனிடமே அவ்வளவு இயல்பாக பேச மாட்டாள்.
மற்றபடி அவள் ஒன்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நமச்சிவாயத்துடன் வாழவில்லை என்பது அவர் வார்த்தைகளின் வழியே தெரிகிறது. அவரும் தொடர்ச்சியாக அவளைக் காயப்படுத்துகிறார்..
அதனால் அவள் தனக்கு கிடைத்த ரசனையான பாராட்டுகளை சமூகத்தில் கிடைக்கும் மதிப்பை (மருத்துவமனை தாதி பற்றி சொல்லும் இடம்) மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொள்கிறாள் என்று எண்ணத் தோன்றுகிறது.. அதை தன் கணவனிடமும் பெரும்பொருட்டே அதை நமச்சிவாயத்திடம் சொல்லவும் செய்கிறாள்.
ஒரு வேளை நமச்சிவாயம் அந்த ஐந்து லட்சத்தோடு தன் ஆணவப் போக்கைத் தொடர்ந்து (தொடர்ந்திருக்க வாய்ப்புகளே அதிகம் அவர் அதை கனவு கண்டவர்), கடைசியில் அதை சிறுமைப் படுத்த வழி தெரியாமல் கூட லதா அது தன்னால் சாத்தியப்பட்டது என்று பொய் சொல்லியிருக்கலாம்.
ஒரு வேளை தான் அவ்வாறு வெல்லப்பட்டிருக்க ஆசைப் பட்டிருக்கலாம் கூடத்தான்..
எது எப்படியாகினும் நானும் ஒரு ஆண் மனத்துடன் படிக்கிறேன் என்பதை இந்த கதை சில இடங்களில் இயல்பாகவே நினைவூட்டியது. அந்த குற்ற உணர்வே இது குறித்து இரு நாட்களாக இடையிடையே இம்சை செய்தது.. இதை எழுதுவதின் மூலம் அது பெருமளவு குறைந்து விட்டது.
ஆம், நான் தேவர்கள் பாத்திரம் ஏற்றுக் கொண்டு விட்டேன். என்னை அசுரனாக்க இன்னொரு ஆண் முயலாதிருப்பானாக..!
அன்புடன்,
ஞானசேகர் வே
***