12. சகடத்திருமை
அந்திப்பொழுதில்தான் அவர்கள் குண்டினபுரியை சென்றடைந்தனர். அதன் புறக்கோட்டை வாயில் இரண்டு ஆள் உயரமே இருந்தது. அடித்தளம் மட்டுமே கற்களால் கட்டப்பட்டு அதன்மேல் மண்ணாலான சுவர் அமைந்திருந்தது. பசுவின் வயிறென வளைந்து நீண்டு சென்ற அச்சுவர் சில இடங்களில் தாவிக் கடக்குமளவே உயரமிருந்தது. அதன்மேல் மழைக்காலத்தில் வளர்ந்த புல் வெயிலில் காய்ந்து இளமஞ்சள் நிறத்தில் காற்றிலாடியது. கோட்டை வாயிலின்மேல் அமைந்த காவல்மாடம் ஈச்சை ஓலையால் கூரையிடப்பட்டிருந்தது. கோட்டைக்குள்ளிருந்த மரத்தாலான மூன்றடுக்குக் காவல்மாடத்தின் உச்சியில் நடுவே வடுவுடன் கரிய தோல் பரவிய இரு முரசுகளுடன் காவல் படையினர் நால்வர் அமர்ந்திருந்தனர்.
கோட்டையை பழுது பார்க்கவோ முரசுகளை சீரமைக்கவோ மரச்சட்டங்களில் வண்ணம் பூசவோ அவர்கள் முயலவில்லையென்று தெரிந்தது. முந்தைய மழைக்காலத்தில் சேறாக இருந்த சாலை புழுதியாக மாறிவிட்டிருந்தது. அவ்வழியில் மிகச் சிலரே கோட்டைக்குள் சென்றுகொண்டிருந்தனர். நளன் “நாம் முன்னரே வந்துவிட்டோமா?” என்று கேட்டான். “இல்லை, அரசே. சாலை வழியாக இந்நகருக்குள் புகுபவர் மிகச் சிலரே. சாலைவழி காட்டுக்குள் குளம்புப்பாதையாக மாறிவிடுகிறது. எனவே வரதாவினூடாக படகுகளில் வருவார்கள்” என்றார் ஸ்ரீதரர்.
பொதி சுமந்த அத்திரிகளும் கழுதைகளும் தலையாட்டி மணியோசை எழுப்பியபடி சென்றன. கோட்டை வாயிலில் அவை ஒன்றுடன் ஒன்று முட்டி தயங்கி நின்றன. சிறுவணிகர்கள் மரத்தாலான தங்கள் சுங்க இலச்சினைகளைக் காட்டி ஒப்புதல்கொண்டு உள்ளே சென்றனர். அங்கே மிகச்சிலரே இருந்தமையால் நெடுநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது. நிஷதநாட்டின் கொடியை அவர்கள் பொருட்டாக நினைக்கவில்லை. “நம்மை எதிர்கொள்ள அரசகுடியில் எவரும் வரவில்லை” என்றான் புஷ்கரன். அவனுக்கு எவரும் மறுமொழி சொல்லவில்லை.
நளன் கோட்டையை நெருங்கியதும் கோட்டைக்காவலன் இறங்கி வந்து அவன் கொடியைப் பார்த்ததும் குழம்பி பின் தலை வணங்கி எந்த உணர்ச்சியுமின்றி மரபான முகமன் சொன்னான். நளன் மறுமுகமனுரைத்து உள்ளே சென்ற பின் “அவன் நோக்கில் நம்மை அவன் விரும்பவில்லையென்று தெரிகிறதே?” என்றான். ஸ்ரீதரர் “ஆம் அரசே, சில நாட்களுக்குள்ளாகவே குண்டினபுரியின் மக்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. நெடுநாட்களாக இளவரசிக்கு திருமணம் ஆகாதிருந்தபோது தங்களையும் அவரையும் நினைத்து அவர்கள் மகிழ்ந்ததுண்டு. இன்று தன்னேற்புக்கு கலிங்கனும் மாளவனும் மகதனும் வருகிறார்கள் என்று தெரிந்தபின் அவர்களில் ஒருவரே தங்கள் அரசியை கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறார்கள். தங்கள் வரவை எவரும் இங்கு விரும்புவதற்கு வழியில்லை” என்றார்.
குண்டினபுரியின் தெருக்கள் முழுக்க யானைத்தோல் இழுத்து கட்டப்பட்ட கூடாரங்கள் தோள்முட்டி நெருங்கி பரவியிருந்தன. அவற்றில் படைவீரர்களே தங்கியிருந்தனர். “பாடிவீடுகள் அமைக்காமல் கூடாரங்களில் வீரர்களை தங்கவைத்திருக்கிறார்கள். அவர்களின் இல்லங்களை விருந்தினருக்கு அளிப்பார்கள்போலும்” என்றார் நாகசேனர். வணிகர்களின் கடைகள் ஓரளவிற்கே இருந்தன. “இங்கு கடை வீதி மிகவும் சிறியது. வரதாவின் கரையோரமாக வணிகர்களின் பண்டகசாலைகள் உள்ளன” என்று ஸ்ரீதரர் சொன்னார்.
“எந்த வகையிலும் ஒரு மணநிகழ்வுக்கு இந்நகரம் சித்தமாகவில்லை. மணம்நாடி அணுகும் அரசர்களுடன் இணைந்து வரும் படைகளுக்கு பொருள் வழங்கும் கடைகளோ அவர்களை தங்கவைக்க கூடாரங்களோ இருப்பதாக தெரியவில்லை” என்று நளன் சொன்னான். வஜ்ரகீர்த்தி “ஆம், ஓராண்டுகாலம் எடுத்துக்கொண்டு அனைத்தையும் அமைத்தாலும் இவர்களால் சரியாக நிகழ்த்த முடியாது. ஓரிரு நாட்களில் முடிவெடுத்து அமைத்திருக்கிறார்கள். இங்கு பெருங்குழப்பமே நிகழவிருக்கிறது” என்றான். நளன் “அவ்வாறல்ல. பல தருணங்களில் நிகழ்வுகள் தாங்களே முட்டி மோதி ஓர் ஒழுங்கை கண்டுகொள்ள வாய்ப்புள்ளது நாம் விரும்பியபடி அவற்றை அமைக்க முயல்கையில் மட்டுமே குழப்பங்கள் எழுகின்றன” என்றான்.
அவர்கள் முதல் அரணின் காவல்மாடத்தை அடைந்தபோதுதான் விதர்ப்பத்தின் ஆயிரத்தவர்களில் ஒருவனாகிய ருத்ரன் தன் இரு உதவியாளர்களுடன் வந்து வணங்கி “நிஷத அரசர்க்குரிய தங்குமிடம் ஒருக்கப்பட்டுள்ளது. வருக!” என்றான். அவன் உடல் மொழியிலும் குரலிலும் வணங்காமை இருந்தது. முகமன் உரைத்து அவனுடன் செல்கையில் ஸ்ரீதரர் “ஒரு துணையமைச்சரை அனுப்பும் மதிப்பை விதர்ப்பம் அளித்திருக்கலாம்” என்றார். நளன் புன்னகையுடன் “தாழ்வில்லை, சில ஆண்டுகளுக்குப்பின் நம் மைந்தன் இங்கே கோல்சூடி அமர்வான்” என்றான். ஸ்ரீதரர் புன்னகை செய்தார்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இல்லம் சூதர்களின் தெருவில் அமைந்திருந்தது. தலைமைக் கணியரான ஜீமுதரின் இல்லம் அது. அவர் அதன் வாயிலில் கைகூப்பி நின்றிருந்தார். அவர்கள் புரவிகளில் இருந்து இறங்கியதும் அவர் முகம் மலர்ந்தபடி அணுகி “கிரிப்பிரஸ்தத்தின் அரசர் என் இல்லத்தில் கால்வைத்தது என் மூத்தோரின் நல்லூழ்ப்பயன். என் பிந்தையோருக்கு நான் அளிக்கும் கொடை. இத்தருணம்போல என் வாழ்க்கையில் இனி ஒரு பெருநிகழ்வு வரப்போவதில்லை” என்றார். உணர்வெழுச்சியால் அவர் குரல் தழைந்தது.
நளன் அவரை வணங்கி “தாங்கள் முதற்கணியர் ஜீமுதர் என்று எண்ணுகிறேன்” என்றான். “தங்களுக்கு என் பெயர் எப்படி தெரியும்? எண்ணவே இல்லை” என்றார் ஜீமுதர். “திறனுடையோரை நான் அறிந்து வைத்திருப்பேன். இங்கிருந்து செல்வதற்குள் அடுமனைத்தலைவர் வீசிகரையும் புரவிச்சாலை தலைவர் சுப்ரரையும் சந்திக்க விழைகிறேன்” என்றான். அவர் பேருவகையுடன் “தங்கள் நாவால் பெயர் சொன்னீர்கள் என்றறிந்தால் அவர்கள் நெஞ்சுருகி இறக்கவும் கூடும்… பாரதவர்ஷத்தின் அடுமனைத்திறனாளர்களில் முதல்வர் தாங்களே என அறியாதவர் எவர்? புரவிகளின் தெய்வமாகிய ஹயக்ரீவரின் வடிவம் நீங்கள் என்று சூதர் சொல்லி கேட்டிருக்கிறேன்” என்றார்.
அவர் கைகளை பற்றிக்கொண்டு “நாம் இன்றிரவு பேசுவோம்… நான் எங்கும் செல்வதாக இல்லை” என்றான் நளன். அவர் கூப்பிய கையை பிரிக்காமலேயே நளனை தன் இல்லத்திற்குள் அழைத்துச்சென்றார். சிறிய இல்லமாயினும் அதை நன்கு தூய்மைசெய்து அணிக்கோலமிட்டு அழகுறுத்தியிருந்தார். அவரது இளையோரும் மைந்தரும் இல்லமகளிரும் சிறுவரும் புத்தாடைகளுடன் வாயிலின் இருபக்கமும் கைகூப்பி நின்றனர். நளன் வாயிலை அடைந்ததும் அவர்கள் வாழ்த்தொலி கூவினர். மூதாட்டி ஒருத்தி நிறைகுடமும் பொலிமுறமும் ஏந்தி எதிரே வந்தாள். நளன் வலக்கால் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தபோது பெண்கள் குரவையிட்டார்கள்.
நீராடி ஓய்வெடுக்க அமர்ந்தபோது நாகசேனர் “சூதர் மனையை நமக்காக தெரிவுசெய்ததில் அவர்களின் வஞ்சம் ஒளிந்துள்ளது, அரசே” என்றார். “ஆம், அதை இதற்கு அப்பால் அவர்களால் காட்டமுடியாது” என்றான் நளன். உரக்க நகைத்து “நான் விரும்பிய மறைவிடமும் இதுவே” என்றான். புஷ்கரன் “நாம் அரண்மனைகளில் தங்கவைக்கப்படுவோம் என எண்ணினேன்” என்றான். அவனை அனைவரும் திரும்பி நோக்கினர். “அவ்வாறு வழக்கமில்லையா?” என்றான். ஸ்ரீதரர் வெறுமனே புன்னகைமட்டும் செய்தார். நளன் “நாம் அரண்மனைக்குச் செல்ல சற்று பிந்தும், இளையோனே” என்றான். தான் எதையோ புரிந்துகொள்ளவில்லை என உணர்ந்த புஷ்கரன் “ஆம்” என்றான்.
நளன் ஓய்வெடுக்க புஷ்கரன் வெளியே சென்று குண்டினபுரியை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தான். அந்நகர் முதல்நோக்கில் மிகச் சிறிதாக இருந்தது. சுற்றச்சுற்ற வளர்ந்து விரிந்தது. அதன் ஒவ்வொரு தெருவையும் மாளிகையையும் அவன் நினைவில் நிறுத்திக்கொள்ள முயன்றான். அவற்றை அவன் மறக்கவே கூடாது என சொல்லிக்கொண்டான். அவற்றை சூதர் எப்படி பாடுவார்கள்? ஆனால் அதற்கு முன் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவன் சரியாக உளப்பதிவு செய்துகொள்ளவேண்டும். வீரர்களின் எண்ணிக்கைகளை, படைக்கலங்களை, காவல்கோட்டங்களை. தப்பிச்செல்ல ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளை கண்டு வைக்கவேண்டும். ஏதோ ஒரு சாலையில் அவன் வாளுடன் திரும்பி நிற்கக்கூடும். வெட்டுண்டு மண்ணில் விழுந்து கிடக்கக்கூடும்.
அவன் உடல் முதல்முறையாக அவ்வெண்ணத்தை உணர்ந்து சிலிர்ப்படைந்தது. அச்சம் வயிற்றில் குளிராக, எடையாக அழுத்த அவன் அதை வேறு எவரேனும் உணர்கிறார்களா என்று திரும்பிப்பார்த்தான். எண்ணங்கள் உடலுக்குள்ளேயே இருப்பது எத்தனை நல்லது! இறந்துவிட்டான் என்றால் அவன் புகழ்ப்பெயராக எஞ்சுவான். நடுகல்லாக நீடிப்பான். ஆனால் இந்த எண்ணங்களுடன் இவ்வுணர்வுகளுடன் இருக்கமுடியாது. முற்றிலும் இல்லாமலாகிவிடுவான். அப்பால் என்ன? இருளா? விண்ணுலகா? ஆழமா? அறியமுடியாமை. அவன் உடல் மீண்டும் சிலிர்த்தது.
ஏன் இறக்கவேண்டும்? நான் இன்னும் எதையும் நுகரவில்லை. பெண்? ஓரிருமுறை. ஆனால் நான் விரும்பும் பெண், என்னை அடையும் தகுதிகொண்டவள் இன்னும் என் கண்ணெதிரே வரவில்லை. எங்கோ அவள் கனிந்து ஒளிகொண்டபடி இருக்கிறாள். நான் வெல்லப்போகும் களங்கள் பெறப்போகும் சொற்கள் அனைத்தும் அறியாவெளியில் உருத்திரள்கின்றன. நான் சாவதைப்பற்றியே ஏன் எப்போதும் எண்ணிக்கொள்கிறேன்? களம்படுபவன் பெரியோன். அவனை மூதாதையர் வாழ்த்துகின்றனர். உண்மை, ஆனால் வென்று வாழ்பவனுக்கே அரசலட்சுமி அளிக்கப்படுகிறாள். அவன் குலமே வாழ்கிறது. அவர்களுக்கு அவன் தெய்வம்.
ஆம், சாகவேண்டியதில்லை. செறுத்து நின்று போரிட்டு வெல்லவேண்டியவன் அவன். உண்மை, அவன் வெல்பவன் மட்டுமே. சாகவேண்டியவர்கள் எளிய படைவீரர்கள். அரசர்கள் வாளுடன் முன்னின்று போரிடுவதில்லை. அவர்கள் களம் அமைத்து கருநிலைகளை அமைத்தபிறகு பின் அமைந்து போர் சூழ்பவர்கள். அவர்கள் மானுடரை வைத்து ஆடுபவர்கள். கருக்கள் அல்ல, கைகளே பேரரசர்கள்.
அவன் திரும்பி வந்தபோது நகருக்குள் சென்றிருந்த காவலர்கள் திரும்பி வந்து நளனுக்கு செய்தியறிவித்துக்கொண்டிருந்தார்கள். மகதனும் வங்கனும் கலிங்கனும் மாளவனும் முன்னரே வந்துவிட்டிருப்பதை வஜ்ரகீர்த்தியின் காவலன் நளனிடம் சொன்னான். “எவருக்கும் தனியாக பாடிவீடுகள் எதுவும் அமைக்கப்படவில்லை, அரசே. கலிங்க அரசரையும் வங்க அரசரையும்கூட பெருவணிகர்களின் இல்லங்களிலேயே தங்க வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய காவல் படைகள் திறந்தவெளியில் தோல்கூடாரங்களில்தான் தங்கியிருக்கின்றன” என்றான்.
நளன் ஸ்ரீதரரை நோக்கி புன்னகைத்து “வங்கப்படைகளும் கலிங்கப்படைகளும் ஒருவரையொருவர் விழிநோக்கும் தொலைவில் போரின்றி தங்கியுள்ளது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும். சாளரம் வழியாக நோக்கினேன், சற்று அப்பால் மகதனின் கொடி பறக்கிறது. பாரதவர்ஷத்தில் ஒரு போரற்ற பொன்னுலகம் பிறந்துவிட்டதோ என்ற மயக்கத்தை நான் அடைந்தேன்” என்றான். ஸ்ரீதரர் “ஒவ்வொன்றும் இயல்வதற்கு வாய்ப்புள்ள அத்தனை பிழைகளுடனும் நிகழ்கின்றன. நெடுங்காலம் பொறுத்திருந்து செய்யப்படும் செயல் சில சமயம் முழுமையாக அமையும். பெரும்பாலும் ஆர்வம் குன்றி சிதறிப்போகும்” என்றார்.
நளன் நாகசேனரை அழைத்து “மாமன்னர்கள் அனைவருக்கும் நமது குலவழக்கப்படி பரிசுகளை அளித்து வணங்கி மீள்வோம்” என்றான். புஷ்கரன் குழப்பத்துடன் “நாம் இங்கு அவர்களுடன் போட்டியிட வந்திருக்கிறோம். அவர்களை வென்று மகள்கொள்ளும் பொருட்டு. அவர்களைச் சென்று கண்டு பணிந்து கொடையளித்து மீள்வதற்கு இங்கு எந்தத் தேவையுமில்லை” என்றான். “ஆம், முறைப்படி தேவையில்லை. நாம் நிஷாதர், பேரரசர்களின் கருணை எப்போதும் நமக்குத் தேவை” என்றான் நளன். “கருணையா? நாம் அவர்களை வாள்முனையில் வெல்லப்போவதில்லையா?” என்று புஷ்கரன் உரக்க கேட்டான். “வாள்முனை தேவையென்றால் உறை மீளட்டும். அதுவரை அவர்களின் கருணையே நம்மிடம் இருக்கட்டும்” என்றபின் நளன் ஆவன செய்யும்படி நாகசேனரிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
புஷ்கரன் சினத்துடன் “என்ன நிகழ்கிறது? நாம் எதற்காக இங்கு வந்துள்ள அரசர்களைச் சென்று பார்த்து வணங்கி மீளவேண்டும்?” என்றான். ஸ்ரீதரர் “அது சூழ்ச்சி மட்டுமே, இளவரசே” என்றார். “நாம் இளவரசியை மணம் கொள்ளக்கூடும் என்று அவர்கள் எண்ணவே கூடாது. இங்கு நாம் வந்தது பேரரசர்களைக் கண்டு முறைமை செய்து அவர்களின் கருணையைப் பெறுவதற்காக மட்டுமே என்று அவர்கள் எண்ணலாம். இங்கு வந்துள்ள சிறிய அரசர்கள் எல்லோரும் அதையே செய்வார்கள். நாம் அதை செய்யவில்லையென்றால் ஐயத்திற்கிடமாகும். அவர்கள் இங்கு வந்ததுமே சூதர்கள் நாவில் விதர்ப்ப இளவரசியையும் நிஷத அரசரையும் குறித்து உலவும் கதைகளை தாங்களும் கேட்டிருப்பார்கள்” என்றார்.
“சூழ்ச்சியா?” என்று முகம் மலர்ந்த புஷ்கரன் “ஆம், நாம் அவர்களை ஏமாற்றுகிறோம் அல்லவா?” என்றான். பின் உரக்க நகைத்து “நாம் சென்று பணிந்து நிற்கையில் அவர்களுக்குத் தெரியாது, அவர்கள் நாடி வந்ததை கவர்ந்து செல்லப்போகும் வீரர்கள் நாம் என்று. நான் செல்கிறேன். கலிங்கனைக் கண்டு முழந்தாளிட்டு பணிந்து சொல்கிறேன், கடல்சூழ் கலிங்கத்தை ஆளும் பேரரசரே, உங்கள் அளிக்கொடை தேடி வந்துள்ள எளிய மலைநிஷாதன் நான், உங்கள் காலடிகளை என் தலையில் மணிமுடியென சூட விரும்புகிறேன் என்று. என் உடைவாளை உருவி அவர் காலடியில் தாழ்த்தி எனது வீரமும் உயிரும் உங்கள் பணிக்கே அளிக்கிறேன் என்று வஞ்சினம் உரைக்கிறேன். அவன் நம்பிவிடுவான். ஐயமே வேண்டாம். இவற்றை சிறப்பாக என்னால் செய்ய முடியும். மூத்தவரிடம் சொல்லுங்கள், திறைக்கொடையுடன் நானும் சில அரசர்களை பார்க்கிறேன் என்று” என்றான்.
ஸ்ரீதரர் புன்னகைத்து “பேரரசர்களான அங்கனையும் வங்கனையும் கலிங்கனையும் மாளவனையும் அரசர்கள் சென்று பார்ப்பதுதான் முறைமை. மேலும் இங்கு அரசர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நீங்களும் நானும் சென்று பார்க்கவேண்டிய பலர் உள்ளனர்” என்றார். புஷ்கரன் முகம் சுருங்கி “நான் கலிங்கனையோ மாளவனையோதான் சென்று பார்க்க விரும்புகிறேன். அவர்களைத்தானே நான் நாளை களத்தில் சந்திக்கப்போகிறேன்? பின்பு நான் திறையுடன் சென்று அவர்களைச் சந்தித்து மீண்ட காட்சியும் சூதர்களால் திறம்பட நடிக்கப்படும் அல்லவா?” என்றான்.
“தாங்கள் சென்று பார்க்கவில்லையென்றாலும் அதை திறம்பட நாடகமாக்கும்படி சொல்லிவிடலாம்” என்றார் ஸ்ரீதரர். அருகில் நின்ற நாகசேனர் புன்னகையுடன் வேறு பக்கம் திரும்ப புஷ்கரன் ஆவலுடன் ஸ்ரீதரர் கையை பற்றிக்கொண்டு “மெய்யாகவா? உண்மையில் நிகழவில்லை என்றாலும் எழுதச்சொல்லிவிடலாமா…?” என்றான். “மெய்யாகவே சொல்லிவிடலாம். அதிலென்ன ஐயம்? ஆனால் நீங்கள் ஏதேனும் ஓர் அரசரை சந்திக்கவேண்டும். அது மகதனைத்தான் என்று சொன்னால் யார் மறுக்கப்போகிறார்கள்?”
“மகதனை சந்திப்பதுதான் எனக்கு உகந்தது. ஆயினும் மூத்தவரின் ஆணைப்படி நிகழட்டும்” என்று புஷ்கரன் சொன்னான். “ஏனென்றால் நான் அவருக்கு கட்டுப்பட்டவன். அவரை காத்து நிற்கவிருப்பவன். அமைச்சரே, இப்போது நான் செய்தவை என்ன தெரியுமா? நகரை மும்முறை சுற்றிவந்து அத்தனை படைசூழ்கையையும் என் உள்ளத்தில் பதியச்செய்திருக்கிறேன். உரிய தருணத்தில் எனக்கு பிறந்த மண்ணுக்கு நிகராக இந்த நகரம் அறிமுகமாகியிருப்பதைக் கண்டு நீங்களே வியப்படைவீர்கள்.”
புஷ்கரன் தனது தோற்றத்தை சிறிய ஆடிமுன் நின்று திரும்பி நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை நோக்குகையிலும் உவகையும் நிறைவும் எழுந்தது. சில கணங்களுக்குள் குறையொன்று தென்பட்டது. பதற்றம் கொண்டு அணிச்சேவகரை அழைத்து கூச்சலிட்டான். அவர்கள் அதை செம்மை செய்ததும் நிறைவடைந்து மீண்டும் ஆடி முன் சுழலத்தொடங்கினான். பீதர் நாட்டு பொன்னூல் பணி செறிந்த பட்டாடையும், பொன்வளையங்களிட்ட பட்டு அரைக்கச்சையும், மார்பில் மாலைகளும் ஆரங்களும் சரப்பொளியும், விரிந்த தோளணிகளும் அணிந்திருந்தான். தலையில் நிஷதநாட்டு இளவரசனுக்குரிய காக்கை இலச்சினை பொறித்த தலைப்பாகையும் அதில் வலப்பக்கமாக நின்று காற்றில் குலைந்த செம்பருந்தின் இறகும் சூடியிருந்தான்.
அவன் உருவம் அவன் நோக்கில் ஓவியத்தில் தென்படுவதுபோல் இருந்தது. சுவரில் நின்று காலத்திற்கப்பால் எங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருக்கும் மூதாதையரின் ஓவியங்களை அவன் கிரிப்பிரஸ்தத்தின் அரண்மனையில் கண்டதுண்டு. ஒவ்வொரு ஓவியத்தின் முன்னாலும் நின்று அவ்விழிகளை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் சொல்லி நிற்கும் அச்சொல் என்ன என்று எண்ணியபடி பகல் கடத்தியதுண்டு. இப்போது அவ்வோவியங்களில் ஒன்றாக தான் ஆகிவிட்டதுபோலத் தோன்றியது. காலவெளிக்கப்பாலிருந்து இடவலமாக திரும்பித் தெரியும் உலகை நோக்கி வியந்து கொண்டிருப்பதாக.
திரும்பி அருகே நின்ற ஏவலர்களிடம் தன் முகக்குறியால் தன் கச்சையை ஏற்றிக் கட்டும்படி சொன்னான். அவர்களுக்கு அது புரியவில்லை. மீண்டும் இருமுறை முகக்குறி காட்டியபோதும் அணியன் வெறுமனே தலைவணங்க மட்டுமே செய்தான். ஆம், இப்போது என் சொற்கள் இவர்களுக்கு கேட்காது. நான் ஓவியங்கள் வரையப்பட்ட திரைச்சீலைக்கு அப்பால் இருக்கும் ஆடியுலகில் வாழ்கிறேன். விருத்திரனும் ஹிரண்யனும் மாவலியும் வாழும் உலகில். இவர்கள் என்னை படையலிட்டு மலர்செய்கை செய்து மட்டுமே அணுகமுடியும். சன்னதம் கொண்டெழுபவர்களினூடாகவே நான் இவர்களுக்கு ஆணை பிறப்பிக்க முடியும்.
அவ்வெண்ணத்தில் முகம் விரிய தன் குழலை நீவி அழுத்தியபடி சாளரம் வழியாகத் தெரிந்த வரதாவின் பெருக்கை நோக்கி புன்னகைத்தான். ஸ்ரீதரர் வந்து நின்று “கிளம்புவோமா, அரசே? பொழுதாகிவிட்டது…” என்றார். “தேர்கள் ஒருங்கிவிட்டனவா?” என்று புஷ்கரன் கேட்டான். “நமக்கு ஒரு தேர் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது” என்றார் ஸ்ரீதரர். “அரசரும் தாங்களும் அதில் செல்லலாம். நாங்கள் மெல்ல நடந்தே அங்கு வந்துவிடுவோம்” என்றார். “அமைச்சர்கள் நடந்து வருவதா…?” என்று புஷ்கரன் சினத்துடன் கேட்க கண்களைச் சிமிட்டி “அரசுசூழ்தல்” என்றார் ஸ்ரீதரர்.
புஷ்கரன் புன்னகைத்து “ஆம், நாம் எளியவர்களாக தோற்றமளிக்க வேண்டும். நன்று!” என்றான். அவர்கள் படியிறங்கி முற்றத்திற்கு வந்தபோது நளன் தன் முழு அரசத்தோற்றத்தில் அமைச்சரும் காவலரும் சூழ நின்றுகொண்டிருந்தான். புஷ்கரன் அருகே சென்று தலைவணங்கி “வணங்குகிறேன், மூத்தவரே. இத்தருணத்தை இனி நம் குலதெய்வங்கள் ஆளட்டும். தங்களை வெற்றி தேவி உடனிருந்து வாழ்த்தட்டும்” என்றான். “நன்று! நீயும் உடனிரு” என்றபின் அவன் ஸ்ரீதரரிடம் “சரியான சொற்களை சொல்லக் கற்றுவிட்டிருக்கிறான் அல்லவா?” என்றான்.
ஸ்ரீதரர் அவனை ஒருமுறை நோக்கியபடி புன்னகைத்து “அணிக்கோலமும் மிகச் சிறப்பாக இருக்கிறது. மணத்தன்னேற்புகளில் அவையமரச் செல்வதற்கும் தகுதியடைந்துவிட்டார்” என்றார். புஷ்கரன் நாணி “என்ன சொல்கிறீர்கள்?” என்று சிரித்தான். நளன் அவன் தோளில் கைவைத்து “வருக, இளையோனே” என்றான்.
அவர்கள் தேரிலேறிக்கொண்டதும் ஸ்ரீதரர் “நீங்கள் தெற்கு வாயிலுக்குத்தான் செல்லவேண்டியிருக்கும், அரசே” என்றார். புஷ்கரன் “கிழக்கு வாயிலில்தானே அரசர்கள் நுழைவார்கள்?” என்றான். “அது ஷத்ரிய அரசர்களுக்கு. பிறர் தெற்கு வாயிலினூடாகத்தான் உள்ளே நுழைய ஒருங்கு செய்யப்பட்டுள்ளது” என்றார் நாகசேனர். “பிறர் என்றால்…?” என்றான் புஷ்கரன். “பிறர் என்று அவர்கள் வகுத்த குடிகள்” என்றார் ஸ்ரீதரர். “நாம் குடிகளிலொருவராக இங்கு கப்பம் கட்ட வரவில்லை. அரசகுடியாக வந்திருக்கிறோம்” என்று புஷ்கரன் உரக்க சொன்னான். “அரசுசூழ்தல், இளவரசே” என்றார் ஸ்ரீதரர்.
புஷ்கரன் சினத்துடன் “அரசுசூழ்தல் என்றாலும் நமது முறைமையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நம்மை அரசராகவே எண்ணவில்லை” என்றான். அவன் தோளில் தட்டி “எண்ணவைக்கும் பொருட்டுதானே நாம் இங்கு வந்துள்ளோம், இளையோனே?” என்றான் நளன். அவன் கையசைக்க தேர் கிளம்பும்படி ஸ்ரீதரர் ஆணையிட்டார். தேருக்குள் அமர்ந்து இருவரும் திரைகளை மூடிக்கொண்டனர். நளன் தேர்த்தட்டில் சாய்ந்தமர்ந்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டான்.
புஷ்கரன் நின்றபடி “எதை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள், மூத்தவரே?” என்றான். “இவர்களின் தேர்கள் மிகத் தொன்மையானவை. தேர்த்தட்டு அமையும் எடைவிற்களை இன்னும் இவர்கள் கண்டடையவில்லை. இரு சக்கரங்களுக்கு இடையே ஒத்திசைவு இருக்கவேண்டுமென்பதையும் புரிந்துகொள்ளவில்லை. ஆகவே புரவியின் ஆற்றல் முழுக்க தேரின் பிழையான அசைவுகளுக்காக சிதறடிக்கப்படுகிறது” என்றான் நளன்.
“இதையா எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றான் புஷ்கரன். “ஆம். ஏன்?” என்றான் நளன். “விதர்ப்ப இளவரசியைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அல்லது நிகழவிருக்கும் போரைப்பற்றியாவது…” “அவற்றைப் பற்றி எண்ணுவதில் என்ன பயன்? எண்ணித்துணிந்த பின் தானே இங்கு கிளம்பி வந்துள்ளோம்?” என்றான் நளன். “இருப்பினும்…” என்ற புஷ்கரன் “என்னால் நேற்றிரவு ஒரு கணம்கூட அவ்வெண்ணத்தை விட்டு விலக முடியவில்லை, மூத்தவரே. பிறிதொன்றை எண்ணாமல் இரவெல்லாம் இந்தச் சிறிய இல்லத்தின் இடைநாழிகளில் சுற்றிவந்துகொண்டிருந்தேன்” என்றான்.
“ஆம், உனது காலடியோசை கேட்டது” என்றான் நளன். “நானும் அப்பருவத்திலிருந்திருக்கிறேன். அதை கடந்து வந்துவிட்டேன்.” “கடந்து வந்துவிட்டீர்கள் என்றால்?” என்றான் புஷ்கரன். “இத்தகைய நிகழ்வு உங்களை கிளற வைப்பதில்லையா?” சிரித்து “இல்லை” என்றான் நளன். “ஏன்?” என்று வியப்புடன் கேட்டபடி அவன் பீடத்தின் மேல்வளைவை பற்றியபடி குனிந்து “இவை அரிய நிகழ்வுகளல்லவா? வரலாற்றின் திருப்புமுனைகள் அல்லவா?” என்றான். “இளையோனே, நாம் வாழ்ந்து சலித்து முதிரும்போது இவையனைத்துமாகிய இவ்வொழுக்கிலுள்ள தற்செயல்களின் பொருளின்மையே நம்மில் எஞ்சுகிறது. ஒரு மாபெரும் இளிவரல் நாடகம்போல அனைத்தும் தோற்றமளிக்கத் தொடங்குகின்றன. அவை வியக்கவும் நகைக்கவும் வைக்கின்றன, கிளர்ந்தெழச் செய்வதில்லை.”
“பொருளின்மைதான் எஞ்சுவது என்றால் அதில் வியப்பதற்கு என்ன?” என்றான் புஷ்கரன். “பல்லாயிரம் பொருளின்மைகள் கூடி உருவாகும் ஒத்திசைவு. அந்த ஒத்திசைவினூடாக தெரியவரும் மையப்பொருள். அது வெறும் தோற்றமே எனக் காட்டும் ஆழ்பொருள். அது ஒரு துளிமட்டுமே என விரியும் மெய்ப்பொருள். அது வெறும் வியப்பு, வேறொன்றுமல்ல” என்று நளன் சொன்னான். “தாங்கள் அதை அறிந்துவிட்டீர்களா, முற்றாக?” என்று புஷ்கரன் கேட்டான். “அறிந்துளேன், உணர்ந்து கடக்கவில்லை. அறிந்ததனால் இத்தருணத்தில் கிளர்ச்சியடையாமலிருக்கிறேன். உணர்ந்திருந்தேனானால் பற்றின்றி ஈடுபட்டிருப்பேன்” என்றான் நளன்.
“இளையோனே, இன்று வெற்றியை விழைகிறேன், தோல்வியை அஞ்சுகிறேன். சிறுமையை விலக்கி பெருமை கொள்ள நினைக்கிறேன். இந்த அலைக்கழிப்பு இந்த கணத்தின் அமைதிக்கு அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விரு நிலையால் என் சொல்லும் செயலும் சிதறடிக்கப்படுகின்றன. நான் இறங்கி அவைக்களத்தில் நடந்து செல்லும்போது என் உடலின் எளிய அசைவைக்கொண்டே முனிவர்கள் நான் இரண்டாக பகுக்கப்பட்டிருக்கிறேன் என்று உணர்வார்கள். இந்த தேரைப்போல எனது ஆற்றலும் ஒத்திசைவின்மையால் வீணாகிக்கொண்டிருக்கிறது” என்றான் நளன்.