மதிப்புரையாளர்கள், திறனாய்வாளர்கள், விருதுத் தெரிவுக் கமிட்டியினர், வாசகர்கள், ரசிகர்கள்….. இவர்கள் எல்லோரும் தனிமனிதர்கள்தான். எந்தவிதத்தில் வேறுபடுகிறார்கள்? எந்தக் கோட்டில் இணைகிறார்கள்?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
மதிப்புரையாளன் ஒரு சூழலின் பொதுவான சிறந்த அளவுகோல்களின்படி நூலை மதிப்பிட்டு அறிமுகம் செய்பவன். திறனாய்வாளன் அல்லது விமரிசகன் ஒரு ஆக்கத்தை தனக்கே உரிய நோக்கில் ஆராய்ந்து வெளிப்படுத்துபவன். விருது தெரிவுக்கமிட்டியினர் அவ்விருதின் நோக்கத்தை உணர்ந்து அதற்கேற்ற ஆக்கத்தைத் தெரிவுசெய்பவர்கள். தன் வாழ்க்கையனுபவத்தின் விளைவான அந்தரங்க நோக்குடன் படைப்பை வாசிப்பவர்கள் வாசகர்கள். வாசித்தவை தன் அந்தரங்கத்தை பெரிதும் கவர்வதாக உணரும்நிலையில் அவற்றை மீண்டும் மீண்டும் விரும்பிப் படிப்பவர்கள் ரசிகர்கள்.
சுருக்கத்தைசொல்லி முடிப்பவர்கள், வசைபாடுபவர்கள், வடைகாப்பிக்கும் முகமனுக்கும் விலைபோகிறவர்கள், தெரிந்ததையே மீண்டும் வாசிக்க விரும்புகிறவர்கள், தனக்குப் புரிந்ததை உலகிலேயே சிறந்ததாக என்ணுகிறவர்கள் என்றும் [எரிச்சல் வந்தால்] சொல்லிப்பார்க்கலாம்.
-*-
விமர்சகன் தன் மேதாவிலாசத்தைக் காண்பிக்கவே விமர்சகப் பக்கத்தை எடுத்துக்கொள்கிறான் என்று நினைக்கிறீர்களா?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
மேதாவிலாசம் இருந்தால் அதை காட்டாமல் இருப்பதே தவறு.
-*-
விமர்சகனும் விமர்சனம் செய்யும் நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு முழுப்படைப்பாளியாக வேண்டியிருக்கிறது. என்று சொல்கிறீர்கள். உணர்கிறேன். ஆனால் உணரமுடிந்ததைச் சொல்லக் கூடிய மொழிப் புலமையை எப்படி மேம்படுத்திக் கொள்வது?(முழுக்க முழுக்க இந்த விஷயத்தில் வள்ளுவர் சொன்ன ‘நாறாமலர்’ என்றே என்னை உணர்கிறேன்).
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
மொழித்திறன் மொழிப்புலமை இரண்டையும் வேறுபடுத்திக் கொள்ளல்வேண்டும். மொழிப்புலமை பயின்று அடையக்கூடிய ஒன்று. அதிகமான அளவுக்குச் சொற்களை, சொற்கூட்டுமுறைகளை, சொற்களின் வரலாற்றை அறிந்தால்போதும். அதைவைத்து நல்ல உரைநடையை உருவாக்கிவிட முடியாது. உரைநடைக்கு இலக்கணம் எழுதிய அ.கி.பரந்தாமனாரின் உரைநடைபோல ஒரு செத்தநடையை தமிழில் குறைவாகவே காண முடியும். மொழிப்பயிற்சி ஓர் அடிப்படைத்தேவை மட்டுமே.
மொழித்திறன் என்பது சிந்தனைத்திறனே. மொழி வேறு சிந்தனை வேறு அல்ல. சிந்தனையை எவையெல்லாம் மேம்படுத்துகின்றனவோ அவையெல்லாம் மொழிநடையையும் மேம்படுத்தும். அடிப்படை விதி என்றால் ஒன்றுதான், புறவயமாகச் சொல்லத்தக்கவற்றை சுருக்கமாகவும் திட்டவட்டமாகவும் வகுத்துக் கூறவும். அகவயமாகச் சொல்லவேண்டியவற்றைச் சொல்ல இலக்கியம்போலவே மொழியை படிமங்களினாலானதாக மாற்றிக் கொள்ளவும். எலியட்டின், எமர்சன், ஃப்ராய்ட் ஆகியோரின் நடையே சிறந்த உதாரணம் என்பது என் கணிப்பு. அவற்றை மொழிபெயர்த்து நான் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
இன்றைய மேலைநாட்டு நவீன திறனாய்வுகள் கல்வித்துறை அரங்குகளுக்காக உருவாக்கபடுபவை. ஆகவே ஆய்வேட்டுநடையை அவை சலிக்கச்சலிக்க கையாள்கின்றன. ஆனால் முக்கியமானவர்களின் நடை அப்படி இல்லை. உதாரணாமாக ரோலான் பார்த், ழாக் தெரிதா ஆகியோரைச் சொல்லலாம். அவை இலக்கிய நடைகள்.