சபரிநாதன் கவிதைகள் 3

இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருதைப்பெறும் சபரிநாதனின் கவிதைகள். அவருடைய வால் என்னும் தொகுதியில் இருந்து.

விருது விழா ஜூன் 10 அன்று சென்னையில் நிகழவிருக்கிறது.

 

sapari

விழிப்படைந்த கத்தி

நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி
தவறி விழுந்த போது சுயநினைவிற்குத் திரும்பியது
இப்போது அது ஒரு பசித்த புலி,யாராலும் தொடமுடியாது.
இனி அதற்கு எதுவும் தேவை இல்லை
தனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக்கொள்ளும்
குளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்
சட்டென உற்ற விழிப்பு,திடுமென நுரைத்த கருணை;
பளிச்சிடலைக் கைவிளக்காக ஏந்தியபடி
சுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றை பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.
நெருப்பிலும் கல்லிலும் உரசி நலம் பேணும் அது
மழை ஓய்ந்த கருஞ்சாம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்
காவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.
***

பதினொரு காதல் கவிதைகளில் ஒன்று

என் வாசலில்
மகத்தான விடியல் போல
ஒரு பெண்
அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…
அப்படி ஒரு விடியல்
அதைக் காண்பது எவராயினும் அழுதிடுவோம்.
அது போலொரு காட்சியால் மீட்படையாத ஒருவரை
யாராலும் ரட்சிக்க முடியாது
கண் திறந்து நாழிகையே ஆன புதுக்காற்றின் கோர்வைக்கு
ஒலி செய்யும் பறவைகள் முன் பின் அறியாத கீதங்களை.
சிறிதும் பெரிதுமான பொற்கூடுகளில் குஞ்சுகள் எழும் தருணம்
மரங்கள் நிற்கின்றன ’எமக்கு முன்னமே தெரியும்’ என்பதைப் போல.
இங்கு உள்ளே,
ஒளி நோக்கித் தவழும் குழந்தைகளாய் கவிதைகள்
உலுக்கி அவை சொல்லட்டும்:இன்னும் ஓர் இரண்டு அடி எடுத்து வை கண்ணே
நான் வீடு சேர்ந்திடுவேன்.
என் வாசலில்
மகத்தான விடியல் போல
ஒரு பெண்
அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…
அப்படி ஒரு விடியல்
***

சொல்ல வருவது என்ன என்றால்

இங்கு இல்லை
கொஞ்சம் தள்ளி..இன்னும் கீழே
இல்லை அங்கு இல்லை
இல்லை இது வலியே இல்லை டாக்டர்
இது ஒரு குமிழ் ஊத்தைக் குமிழ்
திசுச்சுவர்களில் மோதி மோதி உடைய முயலும்
வெறும் குமிழ்
இல்லை அதுவும் இல்லை
ஏதாவது புரிகிறதா தந்தையே
இல்லை அச்சம் இல்லை
மூடுபனி ததும்பும் பள்ளாத்தாக்கைப் பார்ப்பதல்ல
உறக்க முகப்பில் நிலம் நழுவுமே..அது அல்ல
ஒரு விதமான குளிர் தான் ஆனால்
இது கூதிர் இல்லையே
தொட்டுப் பாரும் அன்னையே
முதலில் எனை வெளியே விட்டிருக்கவே கூடாது
நான் கண்டதை எல்லாம் எடுத்து வாயில் வைத்து விட்டேன்
அப்போது ஓடி வந்த தாங்கள்
எனை அள்ளி விழுங்க முயன்றிருக்கக் கூடாது
புரிகிறதா
நான் கண்டது மிளா இல்லை
கானகக் கண்கள்,செம்பழுப்பு சிறகுகள்,பருந்திமில்
புராதன உயிரி அன்று
பேரம் பேசத் தெரியாத ஒருவன்
குருணைகளையும்,போலிப் பவழங்களையும்,பாதுகாப்பு உத்திகளையும்
கொடுத்து வாங்கிய விலைமதிப்பற்ற பண்டம் அது
இல்லையா அது இல்லையா
இது நீ தானா
இல்லை இது மரப்பு இல்லை
இன்னும் உணர முடிகிறது
படுகுழி எனும் சொல்லருகே அமர்ந்திருக்கையில் கோதிப்போகும் தென்றலை
நெம்ப முடிகிறது கனவில் ஆடும் முன்னம் பல்லை
இல்லை நான் அறிந்தது மந்திரம் இல்லை
ஆசை கூட அல்ல
அற்புத ஜீவராசியின் குரலா என்ன
தீக்காய வார்டின் சாமத்து ஒலிகளா
தெரியவில்லை
நடை சாத்திய நள்ளிரவுக் கோயிலினுள்
நடுங்கும் சுடர் முன்னில் நான் கண்ட இருள்
இல்லை அது இல்லை
சடலங்களை அறைந்து எழுப்பும் ஒளி
இல்லையா அதுவும் இல்லையா
புரிகிறதா அன்பே
புரிகிறது தானே
எனக்குத் தெரியும் உனக்குப் புரியும் என்று.
***

அர்த்த மண்டபம்

நஞ்சுறங்கும் மிடறு கடற்குகையின் அலைவாயில்
காட்டுக் கற்றளியில் கரந்து காத்திருக்கும்
மாந்தருசி கண்ட வேங்கைப்புலி
சதைநினைவு தசைநார்த் தூண்கட்டு
சுவரெங்கும் உதிரம் படியெங்கும் நிணநீர்
தொல்லெலும்புகளின் உத்தரம் தாங்க
விதானமென லட்சோப லட்ச விழிப்பாவைகள்
கீறலுற்று சீதளமற்று கிலி முற்றிய அடிச்சுவடுகளது
உபானமென விரிந்த கபாலப் பாட்டை
வெட்ட வெளி நிறைய எரிமூச்சு இளநாடித்துடிப்பு
சித்தம் குலைத்தலம்பும் நிச்சலனத்துச் சிலாரூபம்
கொதிமணலில் கடந்தகால முடிவிலியின் பாதரேகை
காற்றலைச்சலில் தோன்றியடங்கும் வேற்றுலக அட்சரம்
திருத்துயர் மறந்து மடப்பீடச் சத்திரத்தண்டை
முகமூடிப் பொய்யுறக்கம் போர்த்திய ஊர்
மலர்ச்சகதி பூசனச்சந்தனம் கிழிந்த பைம்பட்டுக்குடை
நிறையலங்காரம் தரித்து நிலையில் குடிகாரத் தேர்
வலை பிண்ணி வலை பிண்ணி ஓயும் அற்பச்சிலந்தி
கோடான கோடி விறைநாண்களின் மௌனம்
மகோந்நதப் பொதி அணுவுறைந்து கோளியக்கி
திறந்த வெட்புலத்தில் மறைந்து வாழும் ஊழ்
அசேதனத்துள் குடியேறிய தன்னிச்சைத் தாளம்
விடையேதும் பெறாது வீழ்ந்த சரற்கால உதிரிகள்
வேதிப்புனல்களின் வெஞ்சினப் பெருக்குடைக்கும்
எண்ணிறந்த ஆடிகளின் அபத்த நிழற்கூத்து
சூன்யகனம் தாளாது சரிந்து நொறுங்கிய மாகோபுர
இடிபாடுகளின் பாறைக்குவையில் மூச்சுத்திணறி முடியும்
முதுநிகண்டு நற்காட்சி முலைக்கருணை நிமிர்வடம்
வெடிப்பின் விசும்பலின் எதிரொலிப்பின் காதகாதம்
காணாமற்போன தெய்வங்களின் ஓடுபாதையாய்க் காலகாலம்
அந்தோ மந்தை மந்தையாய் மூழ்கடிக்கும் சாம்பற்கனவு
நீரடி வண்ணங்களூடே நட்சத்திரமீன் நீந்தும் பொற்கனவு
ஒளியறியா பேராழி அதன் ஆழாழத்தில்
உருக்கொண்ட எண்ணமது தீதோ நன்றோ
நான் நீ அது இது நாம்
இருப்புக்கு முந்திய இன்மைக்கு முந்திய
இருப்பு இருப்போ இன்மையோ கனவிதுவோ நிஜமே தானோ
வென்று வினைமுடித்து அரசாண்டு பகல் நரைத்துக் கருக்கையில்
சரியும் பரிதி ஏந்தி முன்னநகர்ந்து வருகுது மகிடக்கொம்பிரண்டு
வீண் வீண் என்றிரையுது ஆளிலாத் தீவின் அநாமதேய பட்சி
ககன மடிப்பில் தட்டழிந்து பாயும் அநந்த பிறவிகளின்
மருந்தெனப் பிறந்தவொரு சொல்
மணிநாத ஓய்வில் மர்மச்சிறு நகை
ஒற்றைக் கல்லில் குடைந்தெடுத்த இருளினுள்ளே
சிறகொடுக்கி எழுந்தமர்ந்த செந்நீலச்சுடர்
இருட்சக்தியுள் கண்டறியா ஓரை மண்டலத்தின் கீழே
சூல் கொண்டு பாழ் துளைத்து கிளைத்து விண்நிறைக்கும்
ஒற்றையொரு தன்னந்ததனி வெண்பெருங்கேள்வி:ஏன்?
***

தானியங்கி நகவெட்டி

முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி நகவெட்டி விரலைக் கடித்தது
சீர் செய்யப்பட்ட இரண்டாவது ரகத்திற்கு சதை என்பது என்னவெனத் தெரியும்
ஆக அது மொத்த நகத்தையும் தின்றது.படிப்படியாக நகவெட்டிகள் மேம்படுத்தப்பட்டன
சமீபத்தில் வெளியான அதிநகவெட்டி முழுமுற்றான தானியங்கிகள்
விலை அதிகம் தான் எனில் அவற்றுக்கு நகம் தவிர வேறெதன் உதவியும் தேவையிராது
என்பதால் நகம் வளர்க்க வேண்டும் நாம் எல்லோரும்
அதன் உலோகப்பற்களின் மினுமினுப்பைச் சிலாகிக்க வேண்டும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்ட இரவுகளில் அது
அலறும்:நான் ஏ..ன் பிறந்தேன்?
நகம் வெட்டத்தான் என்றால் நம்பாது.
***

சமவெளி

ஒரு தற்கொலைக்குப் பின்னர் கைவிடப்பட்ட பொதுநீர்த்தொட்டி விளிம்பில்
கதிர் நோக்கி வட்டம் கட்டி நிற்கும் புறவுகள்
இன்றிற்காய் நிரப்பிக்கொள்கின்றன தம் மின்கலன்களை.
பல்துலக்கியும் கையுமாய் படிக்கட்டில் மெய்மறந்த சிறுமிகள்.
நாலாயிரம் மைல்கள்,இரண்டு பெருங்கடல்கள்,ஏழு தேசங்கள்,
ஐம்பத்து சொச்ச ராப்பகல்கள்…காலை வணக்கம் திருமதி.பழுப்பு கீச்சானே!
இன்று நம் முன்னே ஏறிக்கடக்க வேண்டிய குன்றுகள் ஏதுமில்லை
நான் எப்போதுமே நம்பிய அதல,விதல,சுதல,பாதாள லோகங்கள் யாவும்
இவ்வெளிர் வெயிலில் வெறும் மனப்பிரமைகள் தானோ.
பூமி தெரிகையில் நடக்க வேண்டும் போலிருக்கிறது வெறுங்காலுடன்
இந்நீநிலம் ஓர் ஆயுட்கைதியின் கனவு தான் என அறிந்ததும்,நண்பா
உனக்காக நான் நடந்துகொண்டே இருப்பேன்.
குளக்கரைச் சத்திரத்தில் கழுதைகள் தியானிக்கும் மதியம் இப்போது
ஒருவர் காதலிக்கலாம் பழம்பெரும் நடிகைகளை அல்லது
பிரிக்கப்படும் தேக்கிலை புளிசாதக் கட்டுகளின் வாசத்தில் அப்படியே கால் நீட்டலாம்.
கழுவப்படும் தூக்குவாளிகள்,சாந்து கரண்டிகள்,மண்வெட்டிகள்
நடை திறந்து மணி ஒலிக்கிறது ஆம் ஆம் ஆம் என்று
கருவறை வாசலில் நிற்கும் பதின்மரில் ஒருவன் விழித்துக் கொள்கிறான்.
அடுக்குப்பானைகள் ஏதுமற்ற அரங்குவீட்டின் இருட்டு இது
கோடாங்கி கிளம்பும் ஏழாம் சாமத்தில் சிலிர்க்கின்றன பனந்தோகைகள்
அவை,படுக்கையில் சாய்ந்ததும் உறங்கிவிடுபவளின் நினைவுகள்.
சாந்தி கிட்டா ஆவிகளே தவிப்பாறுங்கள்
சூட்டுக்கோல்களே மனமிறங்குங்கள் என்
பெரும்பேராசைகளே இன்று போய் நாளை வாருங்கள்.
***

ஆச்சர்யக்குறி

பிராயத்து கவிதைகளில் நிறைய ஆச்சர்யக்குறிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்
முதிர்ச்சியற்ற உள்ளரங்கு வடிவமைப்பாளனைப் போல நடந்து கொள்வேன்
இப்போது அப்படியில்லை
இருந்தும் நான் விரும்புகிறேன்
என் கவிதைகளுக்குள் ஆச்சர்யக்குறிகள் தாமாகவே முளைப்பதை
நடை வழி காளானென
காட்டு புல் இதழென
குழந்தை கண்ட மின்னலென
***

நீரும் ஒளியும்

நள்ளிரவு.சோடிய மஞ்சள் நீத்த ஆழத்தில் தெருமுனை.வந்து நிற்கின்றன

கிரேட்டிசிய யுகத் தொல்லுயிர்களை நினைவூட்டும் எந்திரங்களும் சேணமிட்ட கனரக
வாகனங்களும்.
எனக்கவற்றின் பெயர் தெரியாது.அவை எதற்கென்றும் தெரியாது.
சில கணங்கள் ஒரு சில்லிடும் திகில்.
தூங்க முடியவில்லை.அங்கே,அவையருகே யாரும் இல்லை
சட்டென யாவும் தாமே இயங்கத் துவங்குகின்றன
சுழலும் திருகாணிகள் இறங்கும் இரும்புருளைகள் விரிந்த உலோகக்கரங்கள்
ராமுழுதும் இரைய தூங்க முடியவில்லை
புழுதிக்கோளத்தில் குனிந்து நிமிர்ந்து உரசி நகரும் கிழட்டு பூதங்களை
எப்படி நிறுத்துவது? சாவி யார் கையில்? கட்டுப்பாட்டு அறை எங்கே?
காலையில் தடைச்சாய்ப்புகள் சுற்றி நிற்க ஒரு பெரும்பள்ளம்.சற்று தள்ளி
செடி ஒன்று பணி செய்துகொண்டிருக்கிறது தன்னந்தனியாக
அதன் வேர்களோ நீர்த்தேடலின் மும்முரத்தில்
கருங்கண்ணாடி அணிந்த கட்டடங்களைத் தாண்டி அது வளரும்.
அண்ணாந்து பார்க்கும் தனிஒருத்தி அறிவாள்:
அதன் கிளைகள், ஆ… அவை தான் ஒளியைத் தேடுவோர்க்கான வரைபடம்.
***

முந்தைய கட்டுரைவெற்றி -கடிதங்கள் 5
அடுத்த கட்டுரைஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்