இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது இவ்வருடம் கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது. வரும் ஜூன் 10 அன்று குமரகுருபரனின் பிறந்த நாள். அன்று சென்னையில் விழாவில் விருது வழங்கப்படும்.
வாசகர்களுக்காக அவருடைய வால் என்னும் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்
மின்மினியே…
யார் தொட்டு எழுப்பியது உனை
எந்தக் கரம் உனக்கு பார்வை தந்தது
எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்
கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்
பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்
***
விழி
அஸ்தமனம்-சாய்கதிர்கள் மெது மெதுவாக உருட்டி விரிக்கின்றன நிழற்பாய்களை.
வெண்ணிற இரவுகளின் நாயகனைப் போல நானும் அஞ்சுகிறேன்
‘எல்லோரும் எனை விட்டுப் போகிறார்களோ…’
இது மார்கழி.கருக்கலின் அடர்புதர் மறைவினின்று இரவு பாய்கையில் எனக்குத்
தோன்றுகிறது,
இப்போதிந்த மொத்த அந்தகத்தையும் நான் ஒருவனே குடித்தாக வேண்டுமென்று
ஆதலின் இருளில் மட்டும் பிரதிபலிக்கும் சொல்லை உச்சரிக்கிறேன்:தனிமை.
ஆயினும் இப்புராதன உடலோ விதிர்த்து,எனக்கெதிராய் காய் நகர்த்த,
இன்னும் இன்னும்..என விரிகிறது கண்மணி:உற்பவம்.
நிமிர்கையில் தென்படுவது
தொடுவான மலைத்தொடரின் வரைகோடு
பைய்யப் பைய்ய வெளிவருவன
மரங்கள்,தெருக்கள்,கோபுரங்கள்,வீடுகள்
அம்மாக்கள்,அப்பாக்கள்,அக்கா தம்பிகள்
அணிற்பிள்ளைகள்,கோழிக்குஞ்சுகள்……
கவிஞனின் பிரார்த்தனை
என்னோடு பேசு
ஏதாவது
என்னோடு பேசு
வாதிடும் அளவிற்கு அறிவிலி இல்லை நான்
என்னோடு பேசு
சுருக்கெழுத்தில், குதலையில், சைகையில், நெடுமூச்சில் பேசு
நினைவின் தொடுதிரையில் நின் கால் பெருவிரலை அழுத்து
நீ சொடுக்கினால் மட்டும் ஒளிரும் விளக்குகள் உண்டு என் வீட்டில்
நீ கைதட்டினால் மட்டும் நீர் கொட்டும் குழாய்கள் உண்டு
வளர்ப்பு நாயின் சொப்பனத்தினின்று எழுப்பும் சீட்டி உனது.
தனியே தூங்கிப் பழக வேண்டிய குழந்தை நான்
எப்போதாவது செருமு எனக்காக.
எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்து எனை
இருக்கும் ஒரே ஜீன்ஸ் அரையுடையென நைய்ய உடுத்து.
தொடர் புகைக்காரனின் தீப்பெட்டியென
பைக்குள்ளேயே வைத்திரு
ஒவ்வொரு குச்சியாக எரித்துக் காலி செய்யும் வரை
கோபுர உச்சியில் நிற்கும் குருடன் உன் நிசப்தத்தைக் கேட்கிறான்
என்னையும் அவ்விடத்திற்குக் கூட்டிச் செல்.ஆனால்
பார்வை எஞ்சுகிற வரை மண்ணில் பாதம் இழுபடுகிற வரை
என்னோடு பேசு.
*
புண்-பழுத்துவிட்டது;இருக்கட்டும்
அதை உணரும் நரம்பை மட்டும் வெட்டி விடு
கன்மம்-யாரும் தரவேண்டாம் நானே எடுத்துக்கொள்கிறேன்
யாவற்றையும் பதிவு செய்துவரும் இவ்வுறுப்பை மட்டும் அணைத்து விடு
இரையைச் சூழ்ந்திறுக்கும் குடற்சுவராகக்
கண்டதையெல்லாம் பற்றிக்கொள்ளும் இந்த உள்ளங்கையில் குழி பறி
இது கிடக்கட்டும்
என்னிடம் மட்டும் பேசும் இந்த நாக்கை அறுத்தெறி
இவை இருக்கட்டும்
என்னை மட்டும் காணும் இந்தக் கண்களை நுங்கெடு
அவை ஓடட்டும்
நின்று கவனித்திருக்கும் இக்கால்களைத் தறித்துப் போடு
இவனை விட்டு விடு
இவனைச் சதா துரத்திக்கொண்டிருக்கும் என்னை மட்டும் அழைத்துக் கொள்
*
மனநலங்குன்றிய குழந்தைகளின் தேவனே
அழுக்குத்துணிகளையும் ஞாபத்தில் தங்காக் கனவுகளையும் சிருஷ்டிப்பவனே
கருஞ்சிறுத்தைகளின் வரையாடுகளின் உபகாரியே
விபத்துப்பகுதிகளில் விடுமுறைகளில் காட்சி தருபவரே
நவ்வல்,கொய்யா,இலந்தை என எல்லாக் கனிகளிலும் நின்றிலங்கும் உள்ளானே
வாய் துர்நாற்றத்தை ஒளிக்க மனமில்லை எனக்கு
வாக்களிப்பதில் ஆர்வம் இல்லை
மரணமிலா வயோதிகக் கருத்துக்களான தாத்தா பாட்டிகளால் வளர்க்கப்பட்டேன்
நேசத்தின் திட்டவட்ட வடிவங்களில் மோதி சிராய்த்துக் கொண்டேன்
போலி முடிச்சுகளுடன் போரிட்டே களைத்துப் போனேன்.இருந்தும்
உலகை
வாழ்வை
உன்னை
போற்ற விரும்புகிறேன்
திக்குவாய் பையன் பாடுவதை போல் அது
கவிதையில் மாத்திரமே சாத்தியம்
எனவே
எம் பொருட்டு
நாள் தோறும்
நன்கு உழை.
***
எங்கிருந்து தொடங்குவது
முடிவிற்கு வருவது பலியாட்டின் இரவு.
கூண்டைச் சுற்றிலும் கூருகிர்த்தடம் குலையதிர்விக்கும் உறுமல் சிலைப்படுத்தும் பார்வை.
காணும் எவரும் ஊகிக்கலாம் ‘அது விதி விளையாடிய இடம்’ என்று
இறுகச் சார்த்தப்பட்ட குச்சுகளுக்குள் வளர்த்தோரும் வாங்கியோரும் சயனித்திருக்க
அக்கதியற்ற ஜீவன் சந்தித்துள்ளது
நேர் நேராய் காணத் தகாத
ஒளிந்து திரியும் ஒரு
மகத்தான உண்மையை!இதோ
தும்பு அவிழ வெளிவருகிறது ஆடு துறவைத் தேர்ந்தவரின் தோற்றத்தில்.
இனி அதனால் மந்தையோடு மேயவியலாது
மெதுவாக குரல் மாறத் துவங்கும்.பின்
பகல் தன் பாசறைக்கு மீளும் அத்தாழங்களில்
கொட்டிலுக்கன்று தனியாக தன் குகைக்குத் திரும்பும்.
இப்போதங்கே மிதமாகச் சலசலக்கும் ஓடை மௌனமாகப் பழுக்கும் ஆலம்பழங்கள்
சிறுத்தை சாலையைக் கடக்கும் முக்கில் இளைப்பாறும் குல்பி வண்டிகள்
ஏவல் பொம்மை தோண்டியெடுத்த வீதியில் ஆள் நடமாட்டமில்லை
மின்கம்ப உச்சியில் வெள்ளை முண்டா பனியன் காக்கி அரைடவுசர் உடுத்தியவரைத் தவிர.
நிழற்படத்திற்கு நிற்கமுடியாததை முன்னிட்டு வயிறெரியும் மலங்கயத்து ஆவிகள்.
அருகுள்ள சோற்றுப்பாறையில் கரித்துண்டால் மாணவர்களின் காதல் பிரகடனம்.
கீழே ஓர் ஊமைக்குசும்பன் ஆங்கிலத்தில் எழுதியுள்ளான்:Start the Music
மூங்கில் தோப்பிற்குள் விடியல் நுழைவதைப் போல்
ஆன்மாவிற்குள் எப்போதாவது வருகை தருகிறது துஆ.
***
அன்பின் வழியது
எனை நேசி என்பதை
எத்தனை சத்தமாக சொல்ல வேண்டியுள்ளது
தொலை மரத்திலிருந்து பட்சிகள் பதைத்து பறக்கும் அளவுக்கு
கார் கண்ணாடிகள் கீறல் விட
சீதனச் சின்னங்கள் விழுந்துடைய
மற்றெல்லோரும் காதைப் பொத்திக் கொள்ளும்படி
அத்தனை சத்தமாக,நாம் சொல்வதை நாமே கேட்கமுடியவில்லை.
ஒருவரை அடிமை செய்வதற்கு
எத்தனை முறை காலில் விழுவது
தாகத்தின் நீச்சு நமைத் தாண்டி உயர்கையில்
ஆக்ஸிஜன் உருளையைக் கட்டிக்கொண்டு சுவரேறி குதிக்கவேண்டும்
பரிசுப்பொருட்கள் குட்டிக்கரணம் உண்ணாவிரதம்
வாக்குறுதிகள் பொய்கள் அழுகை பாவனை அரக்கு முத்தங்கள்
ஒன்று அடிமையாக வேண்டும் அல்லது அப்படி நடிக்க வேண்டும்.
அன்பை பரிசோதித்துப் பழகியிராத
பால்கன்னி ஆடுகளின் காலம் அது
கால் ஊன்றிய பதமழை இரவு
நானும் தம்பியும் படுத்துக்கொண்டோம்.அம்மா வந்து
ஒரு பழைய சேலையால் எம்மிருவரையும் போர்த்தினாள்
அப்பொழுது நான் நினைத்தேன் இனி
எந்தப் பேய்களும் எமை அண்டமுடியாது என்று.
***
மனித மூளை தொடர்பாக சில சிந்தனைகள்
1
என் மூளையை யார் யாரோ பயன்படுத்துகின்றனர்,இங்கிதமே இல்லை
அது என்ன பொதுநீர்க்குழாயா அதுவும் இலவசத் தொடர்பு எண் வசதியுடனா
பாவம் ஒரு மனித மூளை ஏன் இவ்வளவு பாதுகாப்பற்றுத் திறந்து கிடக்கிறது
நடைவழிச் சத்திரமென.
கபாலமே சல்லாத்துணி முக்காடு தான் போல
என்பதால் பலநேரம் அது வெட்டவெளியின் கீழ் வாழ்கிறது தொலைநோக்கியென
நுரையீரலுக்கோ சிறுநீரகத்துக்கோ நன்கு தெரியும் தன் பணி என்ன என்று
இருதயத்திற்கோ எதுவும் ஒரு பொருட்டில்லை
நான் உட்பட.
ஆனால் இந்த மூளை இருக்கிறதே,தருமருக்கும் கூனிக்கும் பிறந்த குத்துச்சண்டை
வீரனின் கையுறையென காட்சியளிக்கும் இது நடுசாமத்தில் திடுக்கிட்டு விழித்தெழுந்து
தனக்குத் தானே கேட்டுக்கொள்கிறது ‘நான் யார்’ என்று.
அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மயிர்கள் எல்லாம் என்ன நினைக்கும்?
***
2
பார்மலினில் மிதந்துகொண்டிருக்கிறது மனிதமூளை.இப்போது
அதுவொரு நெளிந்த பூஜ்யம்,எவரும் காணலாம் அக்கண்ணாடிப் பீங்கானுக்குள்
எடைகுறைந்த குதூகலத்தை,விடுதலை எனும் கருத்தாக்கத்தை.
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சீமாட்டியின் மூளை அது
(மேதகு ஆராய்ச்சியாளரின் இரண்டாவது மனைவி)
சரித்திரத்திற்கோ பரிணாமத்திற்கோ எந்த பங்களிப்பும் நிகழ்த்தியதில்லை,
யாவும் வழுக்கிச் சென்றுவிட்டன:நினைவுகள்,பகற்கனவுகள்,சதித்திட்டங்கள் யாவும்..
இன்று அந்தப் பெண்மணியே கூட
இதைப் பார்ப்பதற்கு வெட்கமுறமாட்டாள்;யாருக்குத் தெரியும்
காற்றிழந்த காற்பந்தைப் போல
உருட்டி விளையாடவும் முயற்சிக்கலாம்.இருந்தும்
இன்னுமதில் உள்ளன ரகசியத்தின் கடவுகள்
நான் நான் என முட்டிப் படபடக்கும் சிச்சிறு பூச்சிகள் மட்டுமே வழியறிந்த கடவுகள்.
விளக்கணைக்கப் படுகிறது,ஆய்வறையின் கதவடைக்கப்படுகிறது.சட்டென
அம்மூளைக்கு குளிக்கவேண்டும் போலிருக்கிறது,குளிக்கும் போதே சூடாக ஏதாவது
குடிக்கவேண்டும் போலிருக்கிறது.
***
3
நான் தான் அவனிடம் சொன்னேன் தீயைத் தீண்டுமாறு பின்
நான் தான் அவனிடம் சொன்னேன் கையைத் தூர விலக்குமாறு பிறகும்
நான் தான் சொன்னேன் இனி ஒருபோதும் தொடக்கூடாது என்று
அவ்வப்போது அவனிடம் முணுமுணுத்து வருவதும் அடியேன் தான்
‘ஒரு முறை ஒரே ஒரு முறை தான்…தொட்டுப் பாரேன்’
அடர்சாம்பலும் வெண்மையுமாய் நான்கு மடல்களுடன் நான் தான் கவிஞனின் மூளை.
எனை தன் பெயர் சொல்லி அழைக்கும் அவன்
சிலபோது முணுமுணுக்கிறான் ‘எனக்கு மூச்சு முட்டுகிறது’
சிலபோது முழங்குகிறான் ‘செத்த வாயை மூடு’.
இன்று ஒரு முடிவுக்கு வந்தாகவேண்டும் என
நானும் அவனும் ஒரு நாள் தன்னந்தனியாக உரையாடினோம்
ஆனால் இந்த சமாச்சாரம் குழப்பமானது தவிர
அவனுக்கும் புரியவில்லை எனக்கும் புரியவில்லை, இது மிகவும் விசித்திரமானது தான்
ஒரு நாய் தன் வாலின் நிழலைக் கவ்வ முனைகையில் இன்னொரு நாய் அதைப் பார்த்து
குரைப்பதைப் போன்றது.
***
4
முகத்திற்கு சவக்காரம் போடுகிறேன்
உள்ளே பைத்தியக்கார பன்றி ஒன்று சாக்கடையை மொத்துகிறது
அது சலப்புவதை நிறுத்தும் வரை
நான் இப்படி
கழுவுதொட்டி மேல் குனிந்தவாறு அரக்கி அரக்கி தேய்த்துக் கொண்டே இருக்கப் போகிறேன்
இன்னும் ஓர் அரை மணிநேரம் ஆனாலும் பரவாயில்லை.
***
5
மனிதமூளை இன்னும் மனிதமூளை ஆகிவிடவில்லை,அதாவது
மனித வளம்,மனித வெடிகுண்டு…
இவை போன்று தெளிவான வரையறையை இன்னமும் வந்தடையவில்லை.
செயலிழந்த விளக்குகளிடையே சில விளக்குகள் அசந்தெரிய
சுரங்க நடைபாதையின் பாதி வழியில் தவங்குகிறது அது.
மண்டையோட்டிற்குள் ஒரே இருட்டு.கதவுகள் மெதுவாகத் திறந்து பலமாக
மூடுகின்றன.நாற்காலிகள் தாமாக ஆடுகின்றன.பொம்மைகள் சத்தமாகச்
சிரிக்கின்றன.விசும்பல் போலொரு ஓசை.சலங்கை போலொரு ஓசை.தாலாட்டு அல்லது
இடியின் முணுமுணுப்பு.
யாவற்றுக்கும் நடுவே
இளைத்த செம்புத் தகட்டையோ,சிறிய சிலுவையையோ பற்றிக்கொண்டு
உறங்கமுயலும் ஒரு கதாபாத்திரம்.
அப்படியும் சில தருணம்..
கீழக்கோபுரத்திற்கும் மேலக்கோபுரத்திற்கும் இடையே தொங்கும் பருத்த கருமேகத்தினின்று
வெண்விமானம் ஒன்று வெளிவருவதைக் காண்கையில்
அவ்வெளிய மனித மூளையின் சந்து பொந்துகள் எல்லாம்
குளம்பொலித்து விரைகின்றன
எரிகல்லென மின்மினிகள்…மின்னற் கொப்பளங்கள்…
***
தவம்
பனிமூட்டத்தினுள் மலைகள்,இன்னும் தீரவில்லை நித்திரை.
தூளிக்கு வெளி நீண்ட கைக்குழந்தையின் முஷ்டியென சிச்சில முகடுகள்.
உள்நின்று வந்தருளும் வரம் ஒன்றிற்காக தவம் இயற்றும் இலையுதிர்மரங்கள்
பொடிந்து நொறுங்க விண்ணோக்கி விரிந்த விரல்கள்,மூடப்பட்ட ஆலை,அதன்
வதன வறுமை.
அசையும் வண்ணமலர்கள் அவை இருட்டினின்று வந்துள்ள இன்றைக்கான முறிகள்.
தோல் உரிய நுரையீரற் தேம்பலூடே மலையேறிகள் ஒவ்வொருவராய்
அணையாது பொத்தி எடுத்துப் போகின்றனர் தம்
சொந்த மௌனத்தை.
யாரும் கவனிக்கவில்லை,யதேச்சையாய் திரும்பிப் பார்க்கிறாய்
பள்ளத்தாக்கில் வீற்றிருக்கிறது சோதியின் பேராதனம்.
***