மறைந்த குமரகுருபரனுக்கும் எனக்குமான உறவு விந்தையானது. என் நல்ல வாசகர். என்னை ஒரு மூத்தவனாக எண்ணியவர். ஆனால் இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறோம். அதுவும் மிகச்சம்பிரதாயமான சிலநிமிடச் சந்திப்பு.நான்குமுறை மட்டுமே தொலைபேசியில் பேசியிருக்கிறோம். எப்போதும் ஒரு மானசீக உறவு இருந்துகொண்டிருந்தது
குமரகுருபரன் அறியமுடியாத எவற்றினாலோ அலைக்கழிக்கப்பட்ட ஆத்மா. என்ன என்று எனக்கும் தெரிந்திருக்கவில்லை. இரவு 12 மணிக்குமேல் எனக்கும் அர்த்தமில்லாத மின்னன்சல்கள் வரும். அவை அதிகாலையில் இன்னொரு மின்னஞ்சலால் ரத்துசெய்யப்பட்டிருக்கும். அவர் விரைவில் விடைபெற்றபோது எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. இன்று வேறுவகையில் அது அமையமுடியாதென்றே நினைக்கிறேன்
குமரகுருபரனின் துணைவி கவிதா சொர்ணவல்லி குமரகுருபரனின் நினைவை நிறுத்தும்வகையில் ஒர் இலக்கியவிருது அளிக்கவேண்டும் என அரங்கசாமியிடம் சொன்னார். அவர் விருதுத்தொகையை அளிப்பார். பிற செலவுகளை விஷ்ணுபுரம் அமைப்பு ஏற்றுக்கொண்டு விருதை வழங்குவது என முடிவுசெய்தோம். முன்னரே அவ்வாறு ஒரு விருது அளிக்கும் எண்ணம் இருந்தது. இன்னொரு விருது இளம் எழுத்தாளர்களுக்கு அளிக்கவும் எண்ணமிருந்தது. நிதிதான் சிக்கலே. கவிதா முன்வந்தமையால் இவ்வருடம் முதல் இவ்விருதை அளிக்க முடிவெடுத்துள்ளோம்