‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9

8. அன்னங்கள்

flowerதமயந்தியின் இயல்புகளை நளனிடம் நாளுக்கொரு செய்தி என சொல்லிக்கொண்டிருந்தனர் ஒற்றர். எளிதில் சினப்பவள், சினந்தமையாலேயே கனிபவள். மாற்றுச்சொல் பொறுக்காதவள். நிகர் வைக்க ஒப்பாதவள். மகளிர்மன்றுகளை வெறுப்பவள். சேடியரன்றி பிற பெண்டிர் அவளுடன் சொல்லாடவே இயல்வதில்லை. பின்னர் நுண்செய்திகள் வரலாயின. தன் உடலில் கால்நகங்களையே அவள் முதன்மையாக நோக்கினாள். ஒவ்வொருநாளும் அதை சமையப்பெண்டுகள் நீவியும் சீவியும் வண்ணமிட்டனர். அவை புலியின் விழிகள்போல் வெண்ணிற ஒளி மிளிரவேண்டுமென அவள் விழைந்தாள். ஆடைகளில் அவள் தோள்சரியும் பீதர்நாட்டு மென்பட்டாடையை விரும்பினாள். மணிகளில் அனலென எரியும் செவ்வைரத்தை.

வண்ணங்களில் குருதி. சுவைகளில் காரம். இசையில் செம்பாலை. மணங்களில் தாழை. விலங்குகளில் வேங்கை. ஊர்திகளில் கரும்புரவி. படைக்கலங்களில் எட்டடி நீளமுள்ள கலிங்கத்து எடைவாள். “பெண்கள் விழையும் எவையுமில்லை, இளவரசே” என்றான் ஒற்றன். நளன் அவளை தன்னருகே எப்போதுமிருப்பவளாக உணரலானான். பின்னர் அவளைப்பற்றி புதிய எதையுமே அவனிடம் சொல்லவியலாதென்று அவர்களும் உணர்ந்தனர். காதல்துணைவியுடன் கூடியிருப்பவனின் விழிவிரிவும் மாறா நகையும் அவன் முகத்தில் திகழ்ந்தன.

அவன் எண்ணுவதை உணர்ந்த மூத்த அமைச்சர் பூர்ணசந்திரர் நிஷாதர்களைப்பற்றி விதர்ப்பத்தினர் எண்ணுவதென்ன என்று உசாவிவர ஒற்றர்களை அனுப்பினார். அவர்கள் வந்து சொன்ன சொற்கள் நளனை நிலைகுலையச் செய்தன. நிஷாதர் வேனனின் குருதியினர். கலியின் குலத்தினர். காகத்தை தெய்வமெனக் கொண்டவர்கள். கரிய நிறத்தினர். எனவே எந்த அவையிலும் இருளெனச் சூழ்பவர்கள் என்று விதர்ப்பத்தின் தொல்கவிஞர் சம்புகர் பாடிய கவிதையை குண்டினபுரியில் அறியாத எவருமில்லை என்றார்கள் ஒற்றர்கள். “உயரப் பறந்தாலும் காகம் கழுகென்று கருதப்படுவதில்லை, இளவரசே” என்றார் பூர்ணசந்திரர்.

“இளவரசி எண்ணுவதென்ன என்று அறிந்துவா” என்று ஏழு பெண் ஒற்றர்களை நளன் அனுப்பினான். அடுமனையாளர்களாகவும் சமையப்பெண்டிராகவும் தமயந்தியின் அரண்மனைக்குள் புகுந்து மூன்று மாதம் அவளுடன் உறைந்து சொல்லாடிவிட்டு அவர்கள் செய்தி அனுப்பினர். நிஷாதர் காகத்தை வணங்குவதும் கலியின் குடிகள் என்றிருப்பதுமே இளவரசியிடம் ஒவ்வாமையை உருவாக்குகிறது என்று அவர்கள் சொன்னபோது நளன் முகவாயை வருடியபடி எண்ணத்திலாழ்ந்தான். “நாம் கலியை விலக்கியாகவேண்டும்” என அவன் பின்னர் சொன்னபோது “என்ன சொல்கிறீர்கள், இளவரசே?” என பூர்ணசந்திரர் திகைத்தார். “அரசி இங்கு வரட்டும். அதன்பின் நாம் மீண்டும் கலியை நிறுவுவோம். இது ஓர் சூழ்ச்சி மட்டுமே” என்றான் நளன். “இளவரசே…” என அவர் சொல்லத்தொடங்க கையமர்த்தி “வேறு வழியில்லை” என்று அவன் அவரை நிறுத்தினான்.

ஆனால் பேரரசர் வீரசேனர் சினம்கொண்டு கூவியபடி “தன் குலதெய்வத்தை ஒரு பெண்ணின் பொருட்டு விலக்குகிறானா? மூடன், அடைவது வரைதான் பெண்ணுக்கு மதிப்பு. அவளை ஆறுமாதங்களில் அவன் கடப்பான். அதன்பின் தான் செய்தவற்றுக்காக எண்ணி எண்ணி நாணுவான்” என்றார். “நான் ஒப்பமாட்டேன். ஒருபோதும் இது நிகழாது” என்றார். அன்று மாலை அவரை தனியறையில் வந்து சந்தித்த நளன் “நான் முடிவுசெய்துவிட்டேன், தந்தையே. நம் அடையாளத்தை கலியிடமிருந்து மாற்றவிருக்கிறேன்” என்றான். “முழுமையாகவா? நீ அரசுசூழ்தல் என்றல்லவா சொன்னதாக அறிந்தேன்” என்றார் வீரசேனர். “ஆம், ஆனால் பிறகு எண்ணிப்பார்க்கையில் ஒருமுறை அடையாளத்தை மாற்றிக்கொண்டபின் அதை மீட்கவியலாது என அறிந்தேன்” என்றான்.

“நான் ஏற்க மாட்டேன்” என்றார் வீரசேனர். “நீங்கள் அப்படி சொன்னதை அறிந்தேன். அதன்பொருட்டே வந்தேன். நான் எண்ணியது நிகழும். இல்லையேல் உடனே இளவரசுப் பட்டத்தை துறந்து காடேகுகிறேன். இதில் சொல்மாறுபாடே இல்லை” என்றான் நளன். “நீ சொல்வதென்ன என்று புரிகிறதா? மைந்தா, நான் வாழ்வை அறிந்தவன். கடந்தபின் நோக்கி அறிவதே மெய்யறிவு. நான் இன்று காமத்தை கடந்துள்ளேன். சொல்வதை கேள். கொள்வதற்குமுன் பெண்ணுக்காக நாம் எதையெல்லாம் இழக்க சித்தமாக உள்ளோமோ அதுவே நாம் அவளுக்கு அளிக்கும் விலை. அதை அறிந்தபின்னரே அவள் தன்னை அளிப்பாள். விலை கூடும்தோறும் அளிப்பவனின் விலை குறைகிறது என்பதே அதிலுள்ள ஆடல்.”

“அவள் யாரென்று நானும் அறிவேன்” என்று வீரசேனர் சொன்னார். “ஆயினும் நீ மிகை விலை அளிக்கிறாய். ஆண் எந்தப் பெண்ணுக்காகவும் தன் அடையாளத்தை விலையாக கொடுக்கலாகாது. அதை அளித்தபின் அவள் முன் அவன் வெறும் உடலென்று நிற்பான். நீ இன்று செய்வதற்காக பின்னர் வருந்துவாய்.” நளன் “நான் அளிக்கும் விலை அவளுக்காக மட்டும் அல்ல. அவள் என்பது எனக்கு அரசியோ பெண்ணோ அல்ல” என்றான். “நான் சொல்வதை கேள்” என்றார் வீரசேனர் அவன் தோளை நோக்கி கை நீட்டி. அவன் விலகி “உங்கள் முடிவை சொல்லுங்கள். நான் நாளை புலரியில் இங்கிருக்க வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்கவேண்டும்” என்றான்.

சீற்றத்துடன் “நான் உன்னை இந்நாட்டை ஆளும்பொருட்டே பெற்றேன்” என்றார் வீரசேனர். “அதனாலென்ன? காளகக்குடியில் பிறந்த உங்கள் பிறமைந்தன் புஷ்கரன் இருக்கிறான். அவனை அரசனாக்குக!” என்றான் நளன். “நீ அறிவாய், உன் புரவித்திறன் இன்றி இந்நாடு வாழமுடியாது என.” நளன் “ஆம், ஆனால் நான் விரும்புவதுபோல இந்நாடு அமையாதென்றால் இக்கணமே இதை துறந்துசெல்வேன்” என்றான். அவர் சோர்வுடன் “நீ துறக்கவேண்டியதில்லை. நான் துறக்கிறேன். நான் அரசுநீத்து கானேகுகிறேன். உன் விருப்பப்படி நீயே இதை ஆள்க!” என்றார். “அம்முடிவை நாளை அறிவியுங்கள்” என்றான் நளன். “ஆம், எனக்கு வேறு வழியில்லை. என் கண்முன் குலதெய்வத்தை நீ துறப்பதை நான் ஏற்கமுடியாது. கானேகியபின் நீ செய்யும் செயல்கள் எவற்றுக்கும் நான் பொறுப்பாகமாட்டேன்” என்றார் வீரசேனர்.

“ஆனால் ஒன்று மட்டும் சொல்லவிழைகிறேன். நீ நாகமணியுடன் நாகத்தை வாங்கியிருக்கிறாய்” என்ற வீரசேனர் அவன் செல்லலாம் என கையசைத்தார். நளன் தலைவணங்கி வெளியே நடந்தான்.

flowerமறுநாளே நளனுக்கு முடிசூட்டிவிட்டு வீரசேனர் காட்டுக்கு சென்றார். முடிசூடி அமர்ந்தபின் முதல் ஆணையிலேயே கிரிபிரஸ்தத்தின் உச்சியில் இருந்த நிஷாதர்களின் குடித்தெய்வங்களின் ஆலயத்திலிருந்து கலியின் சிலையை எடுத்துச்சென்று மலைச்சரிவின் தெற்குமூலையில் இருந்த இருண்ட சோலைக்குள் நிறுவும்படி நளன் வகுத்தான். ஆலயத்தில் இருந்த காகச் சிலைகள் அனைத்தையும் அங்கே கொண்டுசென்று வைத்தான். கலியின் சிலையை அகற்றுவதை குடிகள் உணராதிருக்கும்பொருட்டு ஆலயத்தை முழுமையாக சீர்திருத்தி அமைத்தான். அந்தணரை அமர்த்தி வேள்விகளை நிகழ்த்தி பூசனைமுறையையும் மாற்றியமைத்தான்.

ஆனால் அது போதாதென்று அச்செயல் முடிந்ததுமே அவன் உணர்ந்தான். மக்கள் கலியை வழிபட காட்டுக்கு செல்லத் தொடங்கினர். கலியையும் காகத்தையும் வழிபடுபவர்கள் என்னும் முகத்தை மாற்ற என்ன செய்யலாம் என்று அமைச்சர் பூர்ணசந்திரரிடம் கேட்டான். “முன்னரே நமக்கு பரசுராமர் இந்திரனை அருளியிருக்கிறார். இங்கு நிகழும் வேள்விகள் அனைத்திலும் அனல்குலத்து வேதியர் இந்திரனுக்கு அவியளித்து வழிபடுகின்றனர். மாகேந்திரம் என்னும் வேள்வி ஒன்றுள்ளது. இந்திரனை முதன்மையாக நிறுத்தும் அதை இங்கே இயற்றுவோம். பாரதவர்ஷத்தின் அந்தணர்குலம் அனைத்தையும் இங்கு வரச்செய்வோம்” என்றார் அமைச்சர்.

படைத்தலைவன் பத்மன் “ஆம் அரசே, அந்தணர் அதை சொல்லில் நிறுத்தட்டும். எளியோர் அதை விழியால் நோக்கவேண்டும். விருத்திராசுரனை கொல்லும்பொருட்டு தவம் செய்த இந்திரன் கிரிப்பிரஸ்தத்தின் உச்சியில் வந்து தங்கி தன் படைக்கலன்களை கூர்தீட்டிச் சென்றானென்பது நம் அவைக்கவிஞர் குந்தலர் உருவாக்கிய காவியம். கிரிப்பிரஸ்தத்தில் இந்திரன் வாழ்ந்த நாட்களைப்பற்றி மேலும் பன்னிரு காவியங்கள் இயற்றப்படட்டும். அவற்றை சூதர் தங்கள் சொல்களில் நிறுத்தட்டும். கதைகளைப்போல் வல்லமை கொண்டவை பிறிதில்லை” என்றான்.

நளன் அவையின் மூலையில் சித்திர எழினி பற்றி நின்ற முதுசூதன் அங்கதனை அழைத்து “மூத்த சூதரே சொல்க, தங்கள் எண்ணமென்ன?” என்றான். “வேள்வியிலும் கதையிலும் நிற்பதற்கு நிகராக விழிகளிலும் நிற்கவேண்டும், அரசே. கிரிப்பிரஸ்தத்தின் உச்சியில் நூறடி உயரத்தில் இந்திரனுக்கு ஒரு சிலை அமைப்போம். இந்திரகிரி என்று இந்நகர் அழைக்கப்படட்டும். கோதாவரியின் நீர் விரிவில் செல்லும் அத்தனை படகுகளிலும் இந்திரன் முகம் தெரியட்டும். நாம் இந்திரகுடியினர் என்பது எவரும் சொல்லாமலேயே நிறுவப்பட்டுவிடும்” என்றார். “ஆம், அதை இயற்றுவோம்” என்றான் நளன்.

நளனின் ஆணைக்கேற்ப அமைச்சர்களே நேரில் சென்று அழைக்க கலிங்க நாட்டிலிருந்து ஏழு சிற்பியர்குலங்கள் பரிசில்களும் அரசவரிசைகளும் அளிக்கப்பட்டு வந்துசேர்ந்தனர். அவர்கள் தங்குவதற்கென்று கிரிப்பிரஸ்தத்தின் இடதுபக்கத்தில் நூற்றெட்டு மாளிகைகள் அடங்கிய சிற்பியர் தெரு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்களுக்கு பணிவிடை செய்யும் ஏவலரும் குடிகாக்கும் காவலரும் தங்குவதற்கான ஐநூற்று ஐம்பது இல்லங்கள் அத்தெருவைச் சூழ அமைக்கப்பட்டு அச்சிற்றூருக்கு சிலாபிரஸ்தம் என்று பெயர் சூட்டப்பட்டது.

நிமித்திகர் குறித்த நன்னாளில் தலைமைச் சிற்பியான மகாருத்ரன் இந்திரனின் சிலை அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்தான். புற்களும் உயரமற்ற புதர்களும் மட்டும் மண்டிய உச்சியில் அவன் சுட்டிய இடத்தில் தோண்டி மண்ணை அகற்றியபோது உருக்கி ஊற்றிய இரும்பென ஒற்றைப்பாறை தட்டுப்பட்டது. பின்னர் அவர்கள் கிரிப்பிரஸ்தத்தில் குன்றைச் சூழ்ந்திருந்த நிஷதக்காடுகளை துழாவிதேடி மேற்கு எல்லையில் மண்ணுக்கு அடியில் நான்கடி ஆழத்தில் புதைந்து கிடந்த ஒற்றைக்கருங்கல் பாறையை கண்டடைந்தனர். அதை உளியால் அவன் தொட்டபோது வெண்கல மணியோசை எழுந்தது. மரங்களை வெட்டி மண்ணை அகற்றி அப்பாறையை வானம் நோக்கச் செய்தனர். அதில் செங்குழம்பால் இந்திரனின் சிலையின் நீளத்தையும் அகலத்தையும் சூத்ராகியாகிய தாண்டவர் வரைந்தார்.

உளியால் தடமிட்டு துளைநிரை அமைத்து அதில் காய்ந்த மரத்தை அடித்து இறுக்கி நீரூற்றி உப்பச்செய்தனர். பிளந்து மயிர்க்கோடென விரிசல் ஓடித்தெரிந்த பாறையை உளி வைத்து நெம்பி மேலும் பிளந்து அதில் நெம்புகோல்களை செலுத்தி பிரித்து எடுத்தனர். வடம்கட்டி தூக்கி மேலெடுத்தபோது அந்த வடிவிலேயே இந்திரனை கண்டுவிட்ட சிற்பிகள் “விண்ணாளும் தேவனுக்கு வாழ்த்து! இடிமின்னல் ஏந்தியவனுக்கு வாழ்த்து! நிகரிலா செல்வம் சூடியவனுக்கு வாழ்த்து” என்று குரலெழுப்பினர்.

உருளைத்தடிகளின்மீது ஏற்றப்பட்டு அத்திரிகளாலும் குதிரைகளாலும் இழுக்கப்பட்டு குன்றின்மேலேற்றி கொண்டுவரப்பட்டது நெடும்பாறை. எட்டு மாதம் அதில் சிற்பிகள் விழுந்த மரத்தில் விளையாடும் அணில்கள் என தொற்றி அமர்ந்து உளியோசை முழக்கினர். கொத்திக் கொத்தி உளிகள் வெட்டி குவித்த கற்சில்லுகள் இருபுறமும் எழுந்தன. வலக்கையில் மின்படையும் இடக்கையில் தாமரை மலரும் ஏந்தி ஏழடுக்கு முடி சூடி நின்றிருக்கும் இந்திரனின் பெருஞ்சிலை திரையென மூடியிருந்த கற்பரப்பை விலக்கி மேலெழுந்தது.

சித்திரை மாதம் முழுநிலவு நாளில் மண்ணுக்குள் இருந்த பாறையில் வெட்டிய எட்டடி ஆழமுள்ள குழியில் கற்சிலையின் கீழ்ப்பீடம் இறக்கி நிறுத்தப்பட்டு உருக்கிய இரும்பு அவ்விடைவெளியில் ஊற்றி குளிர வைக்கப்பட்டபோது சிலை ஒன்றென அப்பாறையில் பொருந்தியது. சிலை நிறுவும் நாளுக்கு மூன்று மாதம் முன்னரே கிரிப்பிரஸ்தத்தில் வேள்விகள் தொடங்கியிருந்தன. நிஷதபுரியிலிருந்து கிளம்பிச் சென்ற தூதர்கள் பாரதவர்ஷமெங்கும் குடியிருந்த வைதிகர் குலங்கள் அனைத்தையும் அங்கு வேள்விகள் இயற்றும் பொருட்டு அழைத்தனர். தயங்கியவர்களுக்கு மேலும் பொன் பரிசுகளும் சொல்லளிக்கப்பட்டன. ஒவ்வொருநாளும் கோதாவரியில் படகுகளில் வைதிகர்குடிகள் தர்ப்பைகளும் கங்கைநீர்க்குடங்களுமாக வந்திறங்கிக்கொண்டிருந்தனர்.

குன்றைச் சூழ்ந்து எட்டு இடங்களில் அமைந்த வேள்விப்பந்தலில் ஒருகணமும் ஓயாமல் வேதச்சொல் முழங்கியது. அவிப்புகை எழுந்து கிரிப்பிரஸ்தத்தின் காலடியில் முகிலென தேங்கி காற்றில் கிளைபிரிந்து உலைந்தது. வைதிகர் குலங்கள் பதினெண்மர் வேதம் ஓதி கங்கையின் நீர் கொண்டு முழுக்காட்டி இந்திரனை அச்சிலையில் நிறுவினர். அருமணிகளும் பொன்நாணயங்களும் பட்டும் மலரும் குங்குமமும் களபமும் மஞ்சளும் முழுக்காட்டி இந்திரனை மகிழ்வித்தனர். ஏழு நாட்கள் நகரம் விழவுக்கோலம் கொண்டது. கலையாடலும் காமக் களியாடலும் ஒழிவின்றி நிகழ்ந்தன.

கிழக்கே விழிநோக்கி கோதையின் பெருக்கின் அலையொளி முகத்தில் நெளிய நின்றிருந்த பெருஞ்சிலை நகர் மக்களின் உள்ளங்களை விரைவிலேயே மாற்றியமைத்தது. தாங்கள் இந்திரனை வழிபடும் தொல்குடிகளில் ஒருவர் என்று ஓரிரு மாதங்களிலேயே அவர்கள் நம்பத் தலைப்பட்டனர். சூதர்கதைகள் சொல்லிச் சொல்லி சொல்பவராலும் கேட்பவராலும் ஏற்கப்பட்டன. அவர்கள் கலியை முழுமையாகவே மறந்தனர்.

NEERKOLAM_EPI_09

கோதையின் நீர் விரிவில் படகில் சென்றுகொண்டிருந்த வணிகர்கள் தொலைவிலேயே மரங்களுக்கு மேல் எழுந்து நின்ற மணிமுடிசூடிய பெருமுகத்தைக் கண்டு கைவணங்கினர். கிரிப்பிரஸ்தம் இந்திரகிரி என்று விரைவிலேயே பெயர் மாற்றம் பெற்றது. அம்மக்கள் இந்திரனை வணங்குபவர்கள் என்றும் அறியப்படலாயினர். இந்திரனுக்கு மலர்களும் படையலுமாக நாளும் நிஷத குலங்கள் மலையேறி வந்து ஓங்கிய சிலையின் பெருங்காலடிகளில் படையலிட்டு பூசை செய்து வணங்கி மீண்டனர்.

flowerஇந்திரபுரியின் தலைவனின் பெருமையும் அதன் நகரின் அழகும் நடுவே ஓங்கி நின்றிருந்த விண்முதல்வனின் சிலையின் மாண்பும் நளன் அனுப்பிய சூதர்கள் வழியாக ஒவ்வொரு நாளும் தமயந்தியின் செவிகளுக்கு சென்றுகொண்டிருந்தன. நளனின் ஒற்றர்கள் அவள் சேடியரை இல்லங்களில் சென்று பார்த்து பரிசில்கள் அளித்து அச்சொல்லை தருணம் அமையும்போதெல்லாம் அவளிடம் அளிக்கும்படி பணித்தனர். முதலில் அவள் அதை எவ்வகையிலும் உளம் கொள்ளவில்லை. பின்பு எப்போதோ ஒருமுறை தன்னிடம் அப்பெயர் வழக்கத்திற்கு மாறாக மிகுதியாக சொல்லப்படுவதை உணர்ந்தாள். அத்தருணத்திலேயே அது ஏன் என்றும் எவ்வாறென்றும் அறிந்தாள்.

இளிவரலுடன் புன்னகைக்கவே அவளுக்கு தோன்றியது. நிஷதபுரியின் அரசன் நளனைப்பற்றி அவள் ஒற்றர்கள் அவளிடம் முன்பே சொல்லியிருந்தனர். அவளைவிட எட்டு ஆண்டு இளையவனாகிய அவன் பிறப்பையே அவள் கேட்டிருந்தாள். அன்று கேட்டவற்றில் சூதர்குலத்து முதியோன் ஒருவனின் மறுபிறப்பென்று நிமித்திகர்கள் அவனை வகுத்ததையே அவள் நினைவில் கொண்டிருந்தாள். “அடுமனையாளன், புரவித்திறவோன். நன்று” என்று தன் சேடியிடம் இகழ்ச்சியில் வளைந்த உதடுகளுடன் சொன்னாள். “அரசமுறைப்படி அவர் செய்வதில் பிழையொன்றுமில்லை, இளவரசி. பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களும் அவர்களின் வெற்றியையும் அழகையும் புகழையும் உங்கள் செவிகளுக்கு கொண்டுவருவதற்கு முயன்றுகொண்டுதான் இருக்கிறார்கள்” என்றாள் சேடி.

“ஆம், அவர்கள் பேரரசர்கள். என்றேனும் ஒருநாள் என் கைபற்ற தங்களால் இயலுமென்று கனவுகாண அவர்களுக்கு வாய்ப்புள்ளது. இவனோ இங்கு என் அரண்மனையின் அடுமனையாளனாக ஆகவேண்டுமெனினும்கூட நான் ஏழு முறை உளம் சூழவேண்டிய நிஷாதன். இப்படி ஓர் எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்ததே என்னை இழிவு செய்கிறது” என்றாள் தமயந்தி. “நிலவு மண்ணில் விழியுள்ள அனைவருக்காகவும்தான்” என்று சொல்லி சேடி நிறுத்திக்கொண்டாள்.

“இளவரசி, அவர் தன் தந்தையை மறுத்து கானேகச் செய்தார். பாரதவர்ஷத்தின் பெருவேள்விகளைச் செய்து நகர் நடுவே மாபெரும் இந்திரன்சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார்” என்றாள் சேடி. அவள் விழிகாட்ட இன்னொருத்தி இந்திரன் சிலையின் ஓவியச்சுருளை அவளிடம் காட்டினாள். “மாபெரும் சிலை என்றால்…” என்றாள் தமயந்தி. சேடி “நூறடி உயரம் என்கிறார்கள்” என்றாள். “நூறடியா?” என்றபின் அவள் அச்சுருளை விரித்து சிலையை ஒருமுறை நோக்கியபின் “கலிங்கச் சிற்பிகள். நன்று” என்றாள். சுருட்டி அப்பாலிட்டபின்  தன் குழல்சுருள்களை திருத்தி அமைத்துக்கொண்டிருந்த அணிப்பெண்டிரின் தொடுகைக்கேற்ப அசைந்தமர்ந்து விழிமூடிக்கொண்டாள்.

“இளவரசி, அவர் தங்களுக்கு அளிக்கும் மதிப்பு அது. நம்மை நயந்துவரும் பேரரசர்களை எண்ணி நோக்குங்கள். அவர்கள் தங்களின் பொருட்டு எதையேனும் இழக்கிறார்களா? பிறிதொரு அரசையே அவர்கள் முதன்மையாக எண்ணி கணக்கிடுகிறார்கள். ஒவ்வொரு அசைவும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட நெடுநாட்களாக நிகழ்கிறது இந்த ஆடல். ஆண்டுகள் சென்று உங்கள் அகவையும் மிகுந்துவிட்டது. உண்மையிலேயே இவர்களில் எவருக்கேனும் உங்கள்மேல் காதலிருந்திருந்தால் படைகொண்டுவந்து உங்களை வென்று சென்றிருக்கலாம். அவர்களுக்கு நீங்கள் தேவையில்லை. உங்களை பிறிதொருவர் கொள்ளலாகாதென்பதே அவர்களின் திட்டம்” என்றாள் சேடி.

“ஆகவே…?” என்றாள் தமயந்தி. “ஆகவே, நாம் பேரரசர்களின் விழைவையும் வெறும்காதலர்களின் விழைவையும் வேறிட்டு நோக்கவேண்டும்” என்றாள் சேடி. “இந்த நிஷாதனை நான் எவ்வண்ணம் நோக்கவேண்டும்?” என்று ஏளனப் புன்னகையுடன் தமயந்தி கேட்டாள். “இவர் விழைவை மட்டுமே நோக்குங்கள். நான் சொல்வது அதையே” என்று சேடி சொன்னாள். “இவர் விழைவில் ஒரு துளி அரசர் எவருக்கேனும் இருப்பின் அவரை கைப்பற்றுங்கள்.” தமயந்தி உதட்டைச் சுழித்து அணிப்பெண்டிடம் “மெல்ல” என்றபின் கண்களை மூடிக்கொண்டாள்.

அவ்வெண்ணத்திற்கப்பால் அவனுக்கு தன் உள்ளத்தில் இடமில்லை என்றே எண்ணியிருந்தாள். ஆனால் அன்றிரவில் அவன் தன் உள்ளத்தில் ஏன் எழுகிறான் என்று அவள் வியந்தாள். எண்ணத்துணியாத ஒன்றை எண்ணியவன் என்பதாலா? அவ்வெண்ணம் கொள்ளும்படி தன்னில் அவன் எதை உணர்ந்தான்? அவன் குடியில் சூதர்கள் நாளும் அவனைச் சூழ்ந்தமர்ந்து புகழ் பாடுகிறார்களா? நிமித்திகர்கள் நாள் கணித்து ஏதேனும் உரைத்துவிட்டார்களா? எண்ண எண்ண அவ்விந்தையே அவளை ஆட்கொண்டது. இருமுறை அவளை அறியாமலேயே புன்னகைத்தாள்.

மறுநாள் அவள் சேடியிடம் “நிஷத அரசன் என்னை தன் அரசி என்று எண்ணுவதற்கு எதை அடிப்படையாக கொண்டிருக்கிறான்?” என்றாள். சேடி புன்னகைத்து “ஒருநாள் மட்டுமாவது உங்கள் உளம்திகழ்ந்துவிட்டார் அல்லவா? இதுவே முதற்சான்று” என்றாள். சினத்துடன் “போடி” என்று தமயந்தி விழிதிருப்பி “நான் கேட்டதற்கு பதில் சொல்” என்றாள். “படைவல்லமை” என்றாள் சேடி. “விதர்ப்பத்தை விடவா?” என்று அவள் கேட்டாள். “ஆம் அரசி. இன்று விதர்ப்பத்தை விடவும் ஆற்றல் கொண்ட நாடுதான் நிஷதம். கோதை ஒரு வணிகப்பெருவழியாகி அவர்களுக்கு பொன்னை கொட்டுகிறது. அப்பொன்னைக் காத்து நிற்கும் வாள் வல்லமை அவர்கள் படைகளுக்கு இருக்கிறது. நிஷதரின் புரவிப்படையை இன்று சூழ்ந்துள்ள அத்தனை நாடுகளுமே அஞ்சுகின்றன” என்றாள் இன்னொரு சேடி.

எண்ணத்தின் மெல்லிய புரளல் ஒன்றை உணர்ந்து அவள் தலையசைத்து அத்தருணத்தை கடந்தாள். அணிச்சோலையில் அமைந்த சுனைக்கரையில் அன்னங்களை நோக்கிக் கொண்டிருந்தவள் எழுந்து “நான் அரசவைக்கு செல்ல வேண்டும். அணிப்பெண்டிரை என் அறைக்கு அனுப்பிவை” என்றபின் நடந்தாள். அவளிடமிருந்து கூலமணி பெற்று உண்டுகொண்டிருந்த அன்னங்கள் கழுத்தை வளைத்து தலைதூக்கி கூவியழைத்தன. திரும்பி புன்னகையுடன் அவற்றை நோக்கியபின் செல்லக் குரலில் “இப்போதல்ல, உச்சிப் பொழுதுக்குப் பிறகு” என்றாள்.

நீரிலிருந்து சிறகடித்து எழுந்து கரைவந்த அன்னம் ஒன்று துடுப்புக்கால் வைத்து, பின்புடைத்த சங்கை ஆட்டி, நாகக்கழுத்தை நீட்டி, செவ்வலகை கூர்த்தபடி அவளை நோக்கி வந்தது. அவள் சிரித்து “செல்க! உச்சிப்பொழுதுக்குப்பின்…” என்று அதை கைவீசி விலக்கினாள். அது கூவியபடி அவளுக்குப் பின்னால் நடக்க மேலும் இரு அன்னங்கள் எழுந்து அதை தொடர்ந்தன. “செல்க… செல்க…” என கைகாட்டியபடி அவள் ஓடி இடைநாழியை அடைந்தாள். அங்கு நின்று நோக்கியபோது அவை தலைநீட்டி அவளையே நோக்கி நின்றிருக்கக் கண்டாள்.

முந்தைய கட்டுரைபாபநாசம் ,கமல் பேட்டி
அடுத்த கட்டுரைவெற்றி -ஒரு கடிதம்