ஜெ அவர்களுக்கு,
வணக்கம்,
சங்கச் சித்திரங்கள் படித்தேன். விகடனில் தொடராய் வந்த போது முழுமையாய் வாசித்தேன் என்றாலும், இப்பொழுது படிக்கையில், சில சம்பவங்கள் மட்டும் நினைவில் இருந்து எழும்பி வந்தது.
மற்றபடி புதிதாய் வாசித்த அனுபவம். உண்மையிலேயே சங்கப்பாடல்களை, இறுகப்பூட்டி கண்ணாடிப் பெட்டியில் வைத்து, அருங்காட்சியகத்தில் வைத்திருந்தனர் தமிழாசிரியர்கள். உங்களின் கட்டுரைகள் அன்றாட வாழ்க்கையின் சம்பவங்களை சங்கப்பாடல்களுடன் பொருத்தி, அவற்றை காலம் கடந்த நிலைக்கு, இன்னும் பல்லாண்டு கழித்துப் படித்தாலும், புதிதாய் உணருமாறு செய்திருக்கிறீர்கள்.. இத்தனை வேகமாய்ப் படித்து, வெகுநாட்களாகி விட்டன.
என் வாழ்க்கையில், வாசிப்புத் தேடலில், காயசண்டிகையின் பசித்தீ தீர்க்க வந்த அமுதசுரபியென உங்கள் எழுத்துகளை உணர்கிறேன்.
பவித்ரா பாலு.
***
அன்புள்ள பவித்ரா
அந்நூலின் சாராம்சமான வரி ஒன்றே. கவிதை இசை போல ஓர் அழகியல் சட்டகம் அல்ல. வாழ்க்கையைக்கொண்டே அதை வாசிக்கவேண்டும். அத்தகைய வாசிப்பு அமைக
ஜெ
***
அன்புள்ள ஜெ
சங்கசித்திரங்கள் நூலை ஒரு நண்பர் தந்தார். ஏதோ கல்யாண வீட்டில் தேங்காய் பையுடன் கொடுத்திருக்கிறார்கள். நல்லுபதேசம் என்று அலட்சியமாக வாசிக்க ஆரம்பித்தேன். சங்க இலக்கியம் பற்றியும் கவிதை பற்றியும் நான் கொண்டிருந்த பொதுவான பார்வையையே மாற்றிவிட்டது. கவிதை என்றாலே சாதாரண விஷயங்களை பூடகமாகவும் அலங்காரமாகவும் சொல்வது என்பதே என் எண்ணமாக இருந்தது. கவிதை என்பது வாழ்க்கையனுபவங்களின் உச்சப்புள்ளியை மட்டுமே சொல்வது என்று புரிந்துகொண்டேன். குறிப்பாக அந்த சின்னக்குழந்தையின் இறப்பை யானையின் மறைவுடன் சம்பந்தப்படுத்திச் சொல்லியிருந்த கவிதை. உலுக்கிவிட்டது அது. இப்படி சங்கப்பாடல்களைச் சொல்லித்தந்திருந்தால் எங்கோ சென்றிருப்பேன்
ராமச்சந்திரன்
***
அன்புள்ள ராம்,
கவிதை வாசிக்க ஒரு வயதுமுதிர்ச்சியும் தேவைதானே. இனிமேல் ஆரம்பிக்கலாமே
ஜெ
***