பெருவெள்ளம்
அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு,
தங்களிடமிருந்து பதில் வந்ததே எனக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘நான்(ம்) x அவன்(ர்கள்) என்கிற வகைமை என்றைக்குமே நான் பொருட்படுத்தியதில்லை. கடந்த வாரம் சமஸ் தமிழ் தி இந்து நாளேட்டின் நடுப்பக்க கட்டுரையில் காந்தி தொடர்ந்து ஆங்கிலேய தரப்புடன் உரையாடி வந்தவர் என்பதை இன்று வலது / இடது என்று எழுதியிருந்தார். அது அப்படியே ‘தூய்மைவாதம்’ என்கிற பின்னோக்கிய பாய்ச்சலுக்கு ஏழாம் நூற்றாண்டு அரேபிய பாலைவெளிக்குள் வரலாற்றை பின்னகர்த்த நடக்கும் முயற்சிகளை அஸ்கர் அலி எஞ்சனியர் ‘இஸ்லாம் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில் எழுதப்பட்டிருந்ததை ஒப்புநோக்கிக்கொண்டேன்.
நான் தங்களையும், எவரையும் என் எதிர்தரப்பாக எண்ணியதேயில்லை. நான் முன்பு பணிபுரிந்துகொண்டிருந்த வளைகுடா நாட்டின் பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் ஒரு வேடிக்கையான சம்பவம். வழக்கமான அலுவலக மற்றும் தனிப்பட்ட என் மடிக்கணிணி ஒன்று random check வகைமையில் Management Information System துறையால் பரிசோதிக்கப்பட்டது. அல்லது பச்சையாக சொல்லப்போனால் கண்காணிக்கப்பட்டேன். நான் மெய்ந்து கொண்டிருந்த (web surfing) தளங்கள் ஒன்றுக்கொன்று முரணான என்னைக் குறித்து எந்தவொரு முத்திரை குத்தமுடியாதபடிக்கு அவர்களை கண்டபடிக்கு குழப்பியிருக்கிறது. எங்கள் வீட்டிற்கு வந்துள்ள பல நண்பர்களும் என்னிடமுள்ள முஸ்லிம் அடிப்படைவாத / ஆர்.எஸ்.எஸ். நூல்கள், பெரியாரிய, கம்யூனிஸ்ட், தூய தமிழ் தேசியவாதிகள் மற்றும் இது எதிலும் சாராத இந்திய, பன்னாட்டு இலக்கியம், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி இலக்கிய ஆக்கங்கள் என்கிற கலவை குறித்து நிறைய என்னிடம் சர்ச்சை / சச்சரவு செய்துள்ளனர். இவற்றின் ஒவ்வொரு நல்ல கூறும் என்னிடம் உள்ளன.
என் துரோணாச்சாரி மௌலானா வஹீதுத்தின் கான் அடிக்கடி சொல்வார். தேனியாக இரு, தேனை மட்டும் எடுத்துக்கொள், ரோஜாவின் நறுமணத்தை மட்டும் நுகரு, முள்ளிலிருந்து சற்று விலகி நில், அது உன்னை ஒருபோதும் காயப்படுத்த விடாதே என்பார். சமீபத்தில்கூட காஞ்சி பெரியவா அவர்களை மேற்கோள் காட்டி, கீதையின் ஒரு வசனத்தை கையாண்டு தாங்கள் எழுதியது. ஒரு கொசு பசுவின் மடியில் அமர்ந்தும் இரத்தத்தையே உறிஞ்சும் என்பது. இது சமஸ்கிருதம் என்பதனால் மட்டும் நான் ஏன் புறக்கணிக்கவேண்டும். அது ஒரு மொழியாக, எனக்கு எப்படி எதிரியாகமுடியும். அதை புறம் தள்ளுவதால் நான் இழப்பது நிறைய. காம்யு, டால்ஸ்டாய், விவேக், அயோத்திதாசர் என்கிற என் முன்னோடி வரிசையில் ரூமியும், இப்னு அரபியும், கஸ்ஸாலியும் உள்ளனர். திட்டவட்டமாக சொன்னால், என்னில் அம்பேத்காரும் உண்டு, நபிகளாரும் உண்டு.
மனிதநேயம், உலகளாவிய மானுடம், மனதுக்கு பிடித்த இலக்கியம் என என்னில், என் சிறிய உலகில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இந்த வாழ்வை கழித்துவிட வாய்ப்பு கிடைத்தால் விமோசனம் கிடைத்துவிடுமென நினைக்கிறேன். பார்ப்போம். நன்றி.
கொள்ளு நதீம்
***