முதலாளித்துவப் பொருளியல் -எதிர்வினைகள்

vijay
தொழில்முனைவோர்- ஒர் எதிர்வினை
நேரு முதல் மல்லையா வரை..

அன்பு ஜெயமோகன்,

வணக்கம். நலமா?

திரு பாலா அவர்களின் நீண்ட கட்டுரையைப் படித்தேன். இவ்வளவு தீர்க்கமாகவும் ஆழமாகவும் எழுதப் பட்ட இது போன்ற கட்டுரை சமீபத்தில் வந்ததில்லை. எழுதிய பாலாவுக்கும் வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுகள். நீங்கள் எழுதியதற்கும் அவரின் எதிர் வினைக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாய்த் தோன்றவில்லை.

பொதுமயமாக்கப் பட்ட வங்கியிலும் தற்போது வெளி நாட்டு வங்கியிலும் பணியாற்றியவன் என்கிற முறையில் சொல்கிறேன். நம் தாழ்வு மனப்பான்மையினாலே பொதுத் துறையைக் கொன்று விட்டோம். இரண்டு காரணங்கள். பணத்தாசை பிடித்த அதிகாரிகள்; தம் காரியத்தை சாதிப்பதற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து சமயத்தில் அவர்களை பிளாக் மெயில் செய்த தொழிற் சங்கங்கள். இதனாலேயே மேலிருந்து கீழ்வரை ஊழல்; ஒழுங்கீனம்; அலங்கோலம்.

மஹாத்மா காந்தியைக் கொண்டாடும் தேசம் நேரு என்கிற மா மனிதனைப் போற்றுவதில்லை. அந்த விதத்தில் பார்க்கும் போது உங்களின் வலையில் அவ்வப்போது நேருவை ஞாபகப் படுத்திக்க கொண்டிருப்பது மிகப் பெரிய சேவை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அன்புடன்,

அஸ்வத்

***

அன்பு ஜெ,

நேரு முதல் மல்லையா வரை..கட்டுரைக்கு திரு.பாலாவின் கட்டுரை படித்தேன்.நன்றி இருவருக்கும்.

அதில் உங்கள் வாதமான ‘பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவது பற்றி ‘ அவரது பதிலில் எண்ணெய் நிறுவங்களையும், மின் உற்பத்தி நிறுவனங்களையும் ஒப்பீடு செய்திருந்தார்.

மட்டையடியாக RELIANCE உலகத்திலேயே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் சிறந்த GRM [Gross Refining Margin] கொண்டுள்ளது, எனவே தனியார் சிறந்தது என்று முடித்தல் எளிதாயினும் அது வல்ல என் நோக்கம்.

மின் துறையில் உள்ள என் குறைந்த பட்ச அனுபவத்திலும், துறை சம்பந்தமான செய்திகளை தொடர்பவன் என்ற முறையிலும் அவரின் வாதம் தொடர்பான என் கருத்துக்கள் கீழே:

  1. NTPC ஐம் Tata ஐம் வைத்து செய்யும் ஒப்பீடு apple vs oranges வகையானது. ஒத்த தளத்தில் இயங்குவது போல தெரிந்தாலும் அது அல்ல என்பதே நிதர்சனம்.
  2. மேலும் UMPP (ULTRA MEGA POWER PROJECTS) அது MUNDRA [TATA] வில் indonesia நிலக்கரியிலும், SASAN [Reliance]னில் உள்ளூர் நிலக்கரியிலும் இயங்குகிறது. நிலக்கரி கொணர்தல் மற்றும் சூழியல் தொடர்பான சிக்கல்கள் எனவே வேறுவேறானவை. எரிபொருள், நிலம் கையகப்படுத்தல், சூழியல் சார்ந்த கொள்கை குழப்பங்கள் அதிகம் உள்ள துறை இது.
  3. NTPC இன்னும் ஒரு UMPP கூட போட்டி ஏலத்தில் எடுத்து பங்கப்படவில்லை என்பது என் நினைவு. மேலும் அது தன் பெருவாரியான மின் நிலையங்களை pit head [நிலக்கரி சுரங்கத்து அருகில்] வைத்துள்ளது. ஆனால் tata தன் மும்பை மின் நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்கிறது சூழியல் காரணமாக. [பொதுவாக இந்திய நிலக்கரி அதிக [ash content] கொண்டது].
  4. மின் வாரியத்தில் ஒப்பீடு செய்ய வேண்டுமெனில் ”மின் உற்பத்தித் துறை”யை விட “மின் பகிர்மான துறை” யில் தனியார் துறையின் பங்களிப்பை கணக்கில் கொள்வதின் மூலமே ஒப்பீடு ஒரு பொருள் தரும். தனியார் துறையே சிறந்தது என்று நான் கூற வரவில்லை. இதிலும் மின் பகிர்மானத்தில் உள்ள சிக்கல்கள் மக்கள் ”கொக்கி” போட்டு எடுப்பதில் மட்டுமே அல்ல என்பதே என் எண்ணம். அதிகாரிகளின் ஊழல், முறையான பராமரிப்பின்மை இருப்பினும் வேலையில் தகவல் தொழில் நுட்பத் தழுவல் அதிகம் தேவைப்படும் இடம் அது.புது தில்லி மின் பகிர்மான கழகம் அரசாங்கம் நடத்தியதிற்கும் இப்போது தனியார் நடத்துவதுற்கும் உள்ள வேறுபாடுகள் சிற்சில குறைபாடுகள் உண்டெனினும் என்னை தனியார் [tata அண்ட் reliance] பக்கமே நிற்க வைக்கும். பழைய மும்பை பகுதி corporation மின் பகிர்மானம் இன்று வரையும் tata விடம் தான்.
  5. ஆண்டுக்கான எரிபொருள் சம்பத்தப்பட்ட மின் விற்பனை விலை உயர்வு சம்பந்தமான கேள்விகள் prayas பூனே என்ற அமைப்பின் மூலம் மற்றும் அது சம்பத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகள் அவர்கள் தளத்தில் உள்ளது.வேண்டுவோர் படித்து பார்க்கலாம். http://www.prayaspune.org/peg/index.php

இந்திய நிலக்கரித் துறை சார்ந்த சிக்கல்கள் பற்றி எழுத இந்த பதிலில் நான் விரும்பினாலும் விட்டு விடுகிறேன் தற்போதைக்கு.

நான் சொல்ல வருவது தனியாரோ? அரசோ? யார் தொழில் செய்யினும் இது போன்ற parallel அமைப்புகள் மூலம் மக்கள் நலன் முன்னிறுத்தி நெறி செய்யப்படின் ஒரு பாத கதம் முன் வைக்க வாய்ப்புண்டு என்றே நம்புகிறேன். அது கனவாகவே முடியும் எனில் தவறு யாருடையது? அதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.

அன்புடன்,

ராமன் சந்துரு

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்!

உங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் கருத்துக்களுக்கு ஒத்து போகிறேன். ஆனால் எந்த தத்துவத்துக்கும் (கம்யூனிசம், சோசியலிசம்) வீழ்ச்சி புள்ளி உண்டு என்பது மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு மனிதன் பேராசையே காரணம். அதுதான் இப்போது முதலாளித்துவத்துக்கும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த அமெரிக்காவின் முதலாளித்துவத்தால், பூமியே குப்பைதொட்டியாக மாறி விட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தாலும், எழை மக்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் பொற்காலம் என்பது 2000 வருடத்துக்கு முன்புவரை, அமெரிக்க மக்கள் வாழ்வு அவ்வளவு கொண்ட்டாமாக இருந்தது, ஆனால் இப்போது? எந்தவொரு விஷயத்தையும் பணமாக மட்டுமே பார்த்தால், விளைவு என்னவாக இருக்கும்? அமெரிக்கா விமான நிறுவனங்கள் மட்டுமே எவ்வளவு பெரிய தீண்டாமையை மக்களியிடையே விதைத்து கொண்டு இருக்கின்றது தெரியுமா? இதை தடுக்க முடியாது, விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.

நன்றி

அசோக்.

***

முந்தைய கட்டுரைசங்கசித்திரங்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைசாகித்ய அகாடமியும் நானும்