பெருவெள்ளம்

one-world-one-future

அன்பின் ஜெ.மோ அவர்களுக்கு வணக்கம்.

’புலம் பெயர்ந்த ஒரு நீண்ட கால வனவாசம்’ என் வாழ்விலும் கடந்துபோனது. அப்பொழுது தமிழக எழுத்தாளர்களைப் பற்றி ‘வாசிப்பு பழக்கமுள்ள’ பிரவாச  மலையாளிகளிடம் அடிக்கடி புழங்கிய பெயர் தங்களுடையது.  குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் கைராளியின் ‘குன்னி முஹம்மது’ம் ஏசியாநெட்-ன் கோபுகுமாரிடமும் அவ்வாறு கூறக் கேட்டேன்.

திருக்குறளுக்கு ‘சுஜாதா’வும் அதன்பிறகு ‘பட்டுக்கோட்டை’ பிரபாகர் எழுதிய மொழிபெயர்ப்பு அல்லது சுருக்கமான விளக்கத்தால் கவரப்பட்டு திருக்குர்ஆனை அப்படி தமிழில் கொண்டு முடியுமா என்கிற முயற்சியில் ஈடுபட்டு ஒரு மொழியாக்கத்தை – அல்லாஹ் என்கிற பெயர்ச்சொல்லை தவிர்த்து வேறு எந்த அரபு அல்லது உருது சொல்லையும் கலக்காமல் ஒரு மொழியாக்கம் செய்ய உத்தேசித்து குழுவாக அதை சாத்தியப்படுத்தினோம். அதன் பிரதியை தங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.

மகிழ்ச்சியான ஒரு செய்தி என்னவென்றால், அக்குழுவில் இருந்த ஆறு பேரில் மூவர் தங்களை நன்கு அறிந்தவர்கள் – அதாவது தங்களின் எழுத்தின் ஊடாக. குறிப்பாக நானும், கடையநல்லூர் ஷாஹுல் ஹமீதும் தங்களின் அனைத்து (?) நூல்களையும் வாசித்தவர்கள், குறிப்பாக ‘வெண்முரசு’ தொடரை தினந்தவறாமல் வாசிக்கும் பழக்கமுடையவர்கள். தங்களின் நண்பர் மதுரை சதகத்துல்லா ஹசனி-க்கு இதெல்லாம் நன்கு தெரியும். சரி – கேட்க வந்ததை கேட்டு விடுகிறேன்.

‘கீதை’யை சுருக்கியெல்லாம் புரிந்துக் கொள்ளமுடியாது என்கிறீர்கள். இன்றைய ‘தி இந்து – தமிழ் பதிப்பு’ தலையங்கத்தில் ‘கணிசமான இளைஞர் கூட்டம் இன்று நொடி வாசிப்பு கலாச்சாரத்தில் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை வளர்த்தெடுக்க அவர்கள் மத்தியில் நிமிடக் கட்டுரைகளினூடே இனி புழங்க முற்படுகிறோம்’ என்றும் பதிவுகள் மேலும் எளிமையாகவும் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் மாற்றப்படும் என்றும் கூறுகிறது.

கூடவே என்னை சங்கடப்படுத்திவரும் விஷயம் ஒன்றை பகிர்ந்துகொள்கிறேன். 89 முதல் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் கால் நூற்றாண்டு வாசிப்பு பழக்கம் இருக்கிறது. அந்த பெரும் பயணத்தை வாசிப்பு பழக்கமுள்ள கணிசமானவர்களைப் போல இடதுசாரிகளுடனேயே நடந்திருக்கிறேன். இதற்காக ‘முஸ்லிம் அடிப்படைவாதி’களால் ‘காஃபிர்’ கூட ஏன் சுற்றுகிறாய் என்றும் வையப்பட்டிருக்கிறேன். இருந்தும் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு உங்களிடம் கேட்க தோன்றியது – அதனால் கேட்கிறேன்.

’கை வீசம்மா கை வீசு – கடைக்கு போகலாம் கைவீசு என்கிற எளிமையான பாடல் கடந்த பல தலைமுறைகளாக நாமெல்லாம் நம் குழந்தைப் பருவத்தில் மொழியை சாதாரண பாடலின் வழியாக கற்றுவருகிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு என் தாயும் அதை சொல்லிக் கொடுத்த நினைவு உள்ளது.

ஆனால் மிக தாமதமாக பிறந்த என் மகன் அப்துல்லா படிக்கும் மழலைப் பள்ளிக்கூடத்தில் இதே பாடல் சொல்லித்தரப்பட்டிருக்கிறது. முன்கதை சுருக்கமாக அந்த பள்ளிக்கூடம் முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் என்பதையும் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். அந்த பாடலின் இடையே வரும் வரியான ‘கோவிலுக்கு போகலாம் கைவீசு’ என்பதை பாடிய அல்லது முணுமுணுத்த ஒரு குழந்தையின் குடும்பத்தில் அரசல் புரசலாக பேசப்பட்ட விஷயம், இன்று அந்த ‘முஹல்லா’விலுள்ள ‘அடையாள மீட்டெடுப்பு அரசியல்’ செய்யும் முஸ்லிம் இயக்கங்களால் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

70-களின் மத்தியில் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட அதே பாடல் என் பெற்றோர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. என் வாழ்வில் பல நூறு முறை கோயில்களுக்கும், தேவலாயங்களுக்கும் போய்வந்திருப்பது என் ‘ஈமான்’-ல் மத நம்பிக்கையில் எனக்கு எந்த பாதிப்பையும் தரவில்லை. அதற்காக எம்மதமும் சம்மதம் என்று நான் பேசாவிட்டாலும் ஏனெனில் என் நிலைப்பாடு ‘பிற தெய்வங்களை நிந்திக்காதீர்கள்’ என்கிற திருக்குர்ஆனின் 06:108 வசனத்தோடும், ‘அவர்களின் மார்க்கம் அவர்களுக்கு – உனது மார்க்கம் உனக்கு’ திருக்குர்ஆன் அத்தியாயம் 109-ன் சாரம் அது என்பதான புரிதல் எனக்கு உள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 70-களின் மத்தியில் என் தாயாருக்கு உறுத்தாத ஒரு மழலைப்பாடல் இன்று வேறுவிதமாக பொருள் கொள்ளப்பட என்ன காரணம் இருக்கமுடியும்? இங்கு அவர்கள் மண்டைக்காடு முதல் சமீபத்திய கோவைக் கலவரம் வரை பலநூறு எடுத்துக்காட்டுகளை காட்டி பேசுகின்றனர். ஒருவேளை அது போன்ற ‘புறக்காரணிகள்’ பூதாகரமானதாக இப்பொழுதைய இளம் தாய்-க்கு தோன்றியிருக்கலாம். ஆனால் அதுவல்ல எனது அச்சம்.

80-களில் இங்கு, தமிழகத்தில் தோன்றிய ‘தூய்மைவாத இஸ்லாம்’ பேசுபவர்களால் குறிப்பாக எங்கள் மாவட்டத்தில் வீட்டில் உருதுவும், வீதியில் தமிழும் பேசக்கூடிய ‘தேவ்பந்தி’ (வட இந்திய பழமைவாத) முல்லாக்களின் பிரச்சாரம் போன்றவை இந்த எளிய மக்களை மென்மேலும் உள்ளொடுங்கி போக வைப்பதும், அவர்கள் மைய நீரோட்டத்தில் கலந்துகொள்ளமுடியாமல் தனித்தொரு தீவுகளாக மாறிப்போவதையும் மிகவும் கவலையோடும், பயத்தோடும் எதிர்கொள்கிறேன்.

மூன்றரை வயதேயான எனது மகன் ‘அப்துல்லா’ “கும்பிட்டு வரலாம் கைவீசு” என்பதை அபிநயத்தோடு பாடிய ‘கணம்’ கைபேசியில் படம்பிடித்து வைத்திருக்கிறேன். எனது மரபு, எனது முப்பாட்டனின் தொடர்ச்சியை அவனில் கடத்திவிட்ட மகிழ்ச்சியும், பூரிப்பும், பரவசமும் ஏன் தடுக்கப்படுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை. ஒருவேளை தங்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக தெரியாது. ஆனால் என் வேர்களை வெட்டியதில் ‘இந்து வலதுசாரிகளுக்கு இருந்த அல்லது இருக்கின்ற பங்கைவிட என் சொந்த சமூகத்திலிருக்கும் ஒருசாராருக்கே பெரும் பங்கு உண்டு’ என்பதை ஜுரணிக்கமுடியவில்லை. அதை எப்படி கடந்துசெல்வது என்பது என்னளவில் பெருங்கவலை.

கொள்ளு நதீம், ஆம்பூர்

***

அன்புள்ள  கொள்ளு நதீம்  அவர்களுக்கு,

உங்கள் கடிதம் வந்து நெடுநாள் ஆகிறது அதற்கு ஒரு பதில் எழுத வேண்டுமென்று எடுத்து வைத்தேன். பின்னர் ஒரு சோர்வு. இன்றைய சூழலில் எந்த ஒரு பதிலும் பிழையாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. பிழைகளைப் பெருக்கி இஸ்லாமியரையும் பிறரையும் அகற்றும் வெறியுடன் களமிறங்கியிருக்கிறார்கள் பலர். முற்றிலும் வேறுபட்ட கருத்தியல்கள் கொண்டவர்கள், ஆனால் ஒரே செயலைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அத்தனைபேரும் உச்சகட்டப் பதற்றத்துடன் வாள்சுழற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றி இன்றிருக்கும் மிதமிஞ்சிய ஊடகச் சூழல்தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். ஒரு பூதக்கண்ணாடி போல அது அனைத்தையும் மும்மடங்கு பெருக்குகிறது. வெறுப்புகளை விரைவில் பெருவதானால் அது முன்னூறு மடங்காகிவிடுகிறது. சாதாரணமாக வலைதளங்களுக்குச் சென்று பார்த்தால் அதீதமான எதிர்மறை வேகத்துடன் எழுதப்படும் கட்டுரைகள்தான் அதிகமாகத் தென்படுகின்றன. யாரோ யாரையோ மிதமிஞ்சிய வெறுப்புடன் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். நுண்சதிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். துரோகிகளைப் பட்டியலிடுகிறார்கள்.

ஆனால் நேற்று இன்னொரு கடிதம் வந்தது. புரிந்துகொள்வதற்கான ஒரு மெல்லிய முயற்சி அது. தயக்கத்துடன் கூடிய ஒரு கைகுலுக்கல். அது ஒரு நம்பிக்கையை அளித்தது. திரும்பத்திரும்ப இந்த மாதிரி விஷயங்களை எழுதிப் பதிவு செய்துகொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இருபதாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஒரேநாளில் அட்டப்பாடியில் ஒரு பழங்குடி இல்லத்த்திற்கும் ஒரு உயர்குடி தொழிலதிபர் இல்லத்திற்கும் செல்லும் அனுபவம் அமைந்தது. அந்தப் பழங்குடிக் குடும்பமே முகமலர்ச்சியுடன் எங்களை எதிர்கொண்டது. மீண்டும் மீண்டும் பலவகையில் உபசரித்தது. ஒரு தேவதூதனைப்போல நாங்கள் உணர்ந்தோம். அன்று மாலையே பாலக்காட்டில் ஒரு புகழ்பெற்ற தொழிலபதிரின் இல்லத்திற்கு செல்ல நேர்ந்தது. நாங்கள் வருவதை முன்னரே அறிவித்து அனுமதி பெற்றிருந்தோம். அவர் இல்லத்தில் அவர் மட்டுமே எங்களை வரவேற்றார். மிகக்குறைந்த சொற்களில் உரையாடினார். விருந்தினரை வரவேற்பதற்கு என ஒரு தனி அறை அவர் இல்லத்திற்கு அருகே தனியாக அமைக்கப்பட்டிருந்தது. இல்லத்தின் பிறபகுதிகளில் எங்கும் விருந்தினருக்கு அனுமதியில்லை. வேலையாள் காப்பி கொண்டு வைத்தார். விருந்தினருக்கு என்றே ஒதுக்கப்பட்டுள்ள விலைமதிப்புள்ள அழகியகோப்பைகள். முறையான உபசாரச் சொற்களை அவர் சொன்னார். தேவையானவற்றை பகிர்ந்துகொண்டார். இருபது நிமிடங்களில் விடை கொடுத்து உபசாரச்சொற்களைச் சொல்லி அனுப்பி வைத்தார்.

பழங்குடியினரின் இல்லத்தில் மொத்த வீடே எங்களை நோக்கித் திறந்திருக்க இங்கு எங்களுடைய இடத்தை அந்த தொழிலதிபர் வரையறை செய்திருந்தார். இவ்வளவுதான் பேசலாம். இங்குதான் செல்லலாம். இவ்வளவு நேரம்தான் எடுத்துக்கொள்ளலாம் என்று .முதலில் அந்த வேறுபாடு மிகவும் உறுத்தியது. விருந்தோம்பலை இழந்துவிட்டோம். மனிதப்பண்புகளை துறந்துவிட்டோம் என்றெல்லாம் இதை எளிதில் விளக்கலாம். ஆனால் உண்மையில் அதை வேறொரு கோணத்தில் பார்க்கவேண்டும் என நான் பின்னர் எண்ணிக்கொண்டேன்.

பழங்குடியினர் தங்களை மிக இறுக்கமான நில எல்லைக்குள், குல அடையாளங்களுக்குள், உறவுமுறைகளுக்குள், தன்னிலை வரையறைக்குள் நிறுத்திக் கொண்டவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களுக்கு எந்த புறப்பண்பாடுகளுடனும் தொடர்பு கிடையாது. எந்த வகையிலும் பிற மானுடருடன் அவர்களுக்கு ஆக்க பூர்வமான உரையாடல் நிகழவில்லை. ஆகவேதான் அவர்கள் பழங்குடிகளாகவே இருக்கிறார்கள். இன்றுவரை அவர்கள் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளவில்லை. சமையல் கற்றுக்கொள்ளவில்லை. மலைகளில் பொறுக்கித் தேடியவற்றை விற்று வரும் வருமானத்தில் வாழ்பவர்களாகத்தான் இருந்தார்கள். புற பண்பாடுகளுடன் உறவு இல்லையென்பதனாலேயே எப்போதாவது வரும் விருந்தினர் முன் தங்களைத் திறந்து வைக்கிறார்கள். அவர்களை எண்ணிப் பரவசம் கொள்கிறார்கள்.

மாறாக, அந்தத் தொழிலதிபர் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐம்பதுக்கும் மேற்பட்ட விருந்தினர்களைச் சந்திக்கிறார். வெவ்வேறு வகையானவர்கள். அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், வணிகத்துக்கு வருபவர்கள், விற்பனைப்பிரதிநிதிகள், நன்கொடை கேட்டு வருபவர்கள், சாமியார்கள். ஆகவே தன்னுடைய இடத்தை அவர் தெளிவாக வரையறுத்துக்கொள்கிறார். இல்லையேல் அவர் வீடு ஒரு பொது இடமாக ஆகிவிடும்

இதை ஒர் உருவகமாகச் சொன்னேன். சென்ற காலங்களில் மதங்களும் சாதிகளும் மக்களை வரையறுத்து ஒடுக்கி எல்லைக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தன. அந்த எல்லைகள் உறுதியாக இருந்ததனால் அதைப்பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. அது இயல்பாக ஆகி காலப்போக்கில் அதை மறந்தும்விட்டிருந்தனர். எனவே இயல்பாக பிறரிடம் பேசினார்கள். எப்படி பேசினாலும் ஒரு அளவுக்கு மேல் அந்தப் பரிமாற்றம் நிகழாது, எவ்வகையிலும் எல்லைகள் அழியாது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

இந்த நூற்றாண்டு அப்படியல்ல. இன்று ஒவ்வொரு தனியடையாளங்களும் எல்லை திறந்து விரிந்து கலந்துகொண்டிருக்கின்றன. பண்பாடுகள் பல்வேறு வெளிப்பாதிப்புகளுக்குள்ளாகி ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கின்றன. செய்தித்தொடர்புகள் வழியாக போக்குவரத்து வழியாக ஒரு பெருங்கலவை நிகழ்கிறது. இன்று எந்த நாட்டிலும் எல்லாப்பண்பாட்டையும் பார்க்க முடியும்.  இன்றைய மனிதன் ஜப்பான் முதல் அமெரிக்கா வரை பெரும்பாலும் ஒன்றாகவே தெரிகிறான்

இப்படி ஒரு காலகட்டம் வந்துவிட்டதனால்தான் இன்று உலகமெங்கும் வலதுசாரி அலைகிளம்பியிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இறுக்கிப்பிடிக்காவிட்டால் அனைத்துமே அழிந்துவிடும் எனும் அச்சம் வந்துவிட்டது போலும். எல்லைகளை மூடிக்கொள்ளாவிட்டால் உள்ளிருக்கும் அனைத்தும் வெளியே பறந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். கொச்சையாகச் சொல்லப்போனால் மனைவியின் கற்பை சந்தேகப்பட்டு வாயிலைப்பூட்டி சாவியைக் கையிலே வைத்திருப்பவர்களைப் போல இருக்கிறார்கள் இன்றைய வலது சாரிகள்.

உலகஅளவில் வலதுசாரித்தனம் வளர்வதற்கான காரணம் வலதுசாரிகள் தங்கள் ஆதாரமாகக் கருதும் பழமைவாதங்கள் அனைத்தையுமே இந்தக் காலத்து உலகமயமாக்கம் அழித்து இல்லாமலாக்கிக் கொண்டிருக்கிறது என்பதே. காற்றில் பறக்கும் உடையைப் பற்றிக் கொண்டிருப்பது போல அவர்கள் பழமைவாதத்தை பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.  உண்மையில் அவர்களுக்கு அவர்களின் மரபு மேல் அதிக நம்பிக்கை இல்லை. அது மனிதனுக்கு இன்றியமையாதது. ஆகவே ஒருபோதும் மனிதன் அதைக் கைவிட மாட்டான் என்று அவர்கள் நம்பினார்கள் என்றால் அதை வலியுறுத்துவதற்கு இவ்வளவு மூச்சுப்பிடிக்க மட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மரபின்மேல் விமர்சனநோக்கு கொண்டிருக்கவில்லை. மரபிலிருந்து சாரமானவற்றை பிரித்தறிந்து எடுத்துக்கொள்வதில்லை. ஒட்டுமொத்த மரபையும் அப்படியே பேண நினைக்கிறார்கள். அதாவது சென்றகாலத்தை அப்படியே தக்கவகைக்க முயல்கிறார்கள். நமது முன்னோர்கள் முட்டாள்கள் அல்லவென்றும் நமது மதநூல்களில் அனைத்துமே சொல்லப்பட்டிருக்கிறதென்றும் எல்லா மதத்தினரும் சொல்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் அப்படி அல்ல என்று. ஆகவேதான் அதை அத்தனை ஆவேசமாகச் சொல்கிறார்கள்

இந்நூற்றாண்டின் ஊடகப்பெருக்கம் வழியாக ஒவ்வொரு குழந்தைக்கும் வந்து சேரும் அறிவின் பிரம்மாண்டம் இவர்கள் சொல்லி வைத்திருக்கும் பாரம்பரியத்தையும் மதத்தையும் மிகச்சிறிதாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய அடையாளங்கள் அழிந்துவிடுமென்ற அச்சம் அந்த அடையாளங்களை நம்பி அரசியல் செய்பவர்களை, அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டிருப்பவர்களை பதற்றமடைய வைக்கிறது அதை ஒரு வகையில் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.

உலகம் அனைத்து தளங்களிலும் வலதுசாரித்தனத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அடிப்படைவாதத்தை நோக்கி பின் காலடி எடுத்து வைக்கிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியா வரை அரேபியாவிலிருந்து மலேசியா வரை எங்கு பார்த்தாலும் இந்தச் சித்திரமே நமக்குக் கிடைக்கிறது. இதையெல்லாம் பார்க்கத் தெரிந்தவன் சலிப்பும் ஏமாற்றமும்தான் அடைய முடியும். அவநம்பிக்கையின் உச்சத்தில் தான் நிற்க முடியும். ஆனால் ஏனோ விலக்க முடியாத ஒரு நம்பிக்கை உணர்வை நான் அடைகிறேன்.  இது ஒரு வகையான கடைசித் துடிப்பு என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. உருவாகி வந்து கொண்டிருக்கும் புத்தம்புது உலகம் ஒன்றை எதிர்கொள்ளும் போது அந்தக் கடைசித் தருணத்தில் உருவாகும் ஒரு திமிறல் மட்டும் தான் இது.

உலகம் தோன்றிய காலம் முதல் மானுட அறிவு ஒன்றுடன் ஒன்று கலந்து ஒற்றைப்பேரமைப்பாக, ஒரே பெருக்காக ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் காலனியாதிக்க யுகம் தொடங்கியபோது அது பலமடங்காகியது. அச்சு ஊடகம் பெருகியபோது மேலும் பலமடங்காகியது. இணைய யுகத்தில் ஏறத்தாழ உலகமே ஒரே அறிவுத்தளமாக ஆகிவிட்டிருக்கிறது. எப்போதெல்லாம் விக்கி பீடியா தளத்திற்குள் செல்கிறேனோ அப்போதெல்லாம் இந்த அசாதாரணமான பேருணர்வை, பிரமிப்பை நான் அடைகிறேன். முப்பதாண்டுகளுக்கு முன்பு கூட இப்படி ஒன்று நிகழும் என்று என் தலைமுறையினர் எண்ணியிருக்கமாட்டார்கள். முப்பதாண்டுகளுக்குள் உலகத்தின் அனைத்து ஞானமும் ஒரு இடத்தில் ஒருகணத்தில் கிடைக்கும்படி மாறிவிட முடியுமென்று அன்று என்னிடம் எவரேனும் சொல்லியிருந்தால் வாய்விட்டுச் சிரித்திருப்பேன். மிக இயல்பாக நாம் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

இதெல்லாம் என்ன விளைவை உருவாக்கும், நாளை எந்த வகையான சமுதாயத்தை கட்டமைக்கும் என்று நாம் பெரிதாக யோசிப்பதில்லை, ஆனால் அது நிகழ்ந்து கொண்டிருப்பதை ஒருவகையான் உள்ளுணர்வால் அனைவரும் உணர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அதை அஞ்சுபவர்கள் எச்சரிக்கையாகிறார்கள். ஆகவே தான் ஒவ்வொருத்தரையும் கட்டம்போட்டு வாயில்களை மூடி கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.

எந்தக் குழந்தைக்கும் ஞானத்தை இனிமேல் கட்டுப்படுத்த முடியாது. வெளிவாயில்களை அடைக்க முடியாது. ஆகவே உள் வாயில்களை அடைக்கிறார்கள். பிறன் என்ற ஒன்றை உருவாக்கி அந்த வெறுப்பைக் கட்டமைத்து அந்த வெறுப்பைக் கொண்டு குழந்தைகளை எல்லைக்குள் நிறுத்த முயற்சி செய்கிறார்கள். இது ஒரு கடைசி முயற்சி. இது தற்காலிகமாக வளரும். ஆனால் ஒரு கட்டத்தில் காலப்பெருக்கில் தூசி போல அடித்துச் செல்லப்படும்.

இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் உலகம் முழுக்க ஒற்றை அறிவுப்பெருகே இருக்கும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மைக்கும் அதில் இடமிருக்கும். ஆனால் எதுவும் தான் மட்டுமே என வாயில்மூடி நீடிக்க முடியாது. அந்த பிரம்மாண்டமான மாற்றம் நிகழும் போது இன்று நாம் பார்க்கும் இந்த அடையாளங்களும் இது சார்ந்த காழ்ப்புகளும் எல்லாம் வேடிக்கையாக மாறிவிட்டிருக்கும் என்று தான் நினைக்கிறேன். பெருவெள்ளம் வரும்போது உங்கள் தனிக்கிணறுகளால் என்ன பயன் என்று கீதையில் ஒரு வரி வருகிறது. இத்தருணத்தில் அதைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைகிளம்புதல் –கடலூர் சீனுவுக்கு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3