சார் வணக்கம்,
ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
ஊட்டி காவிய முகாமில் பங்கேற்க வெகு நாட்களாக ஆசை இருந்தது. அதை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் கடிதங்களும், எடுத்த புகைப்படங்களும் ஆர்வத்தை அதிகரிக்கும். ஆனால், விண்ணப்பம் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியிருக்கும். ஏனெனில் நள்ளிரவில் பதிவேற்றம் செய்தவுடன் வாசிக்கிற எத்தனையோ வாசகர்கள் இருக்கிறார்கள். எப்படியோ இந்த முறை பங்கேற்க அழைக்கப் பட்டிருந்தேன். ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஊட்டி நாராயண குருலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் போக முடியுமா என்று தெரியாத சூழல். அலுவலக வேலை தவிர்த்து, வீட்டிலேயே அடைந்து கிடந்தேன். எப்படியாவது கிளம்ப மனதை தயார் படுத்தினேன். விஷ்ணுபுரம் குழுமத்தை சேர்ந்த நண்பர் பிரசாத் தன்னோடு அழைத்துச் செல்ல சம்மதித்தார். எப்போதும் என்னை தன் பிரியத்திற்குரிய மாணவனை போல் நடத்தும் கவிஞர் மோகனரங்கன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் விஜயராகவன் ஆகியோருமாக ஒன்றாக கிளம்பினோம். இரவே அங்கு சென்று தங்குவதாக திட்டம்.
எழுத்தாளர் நிர்மல்யாவின் அன்பான வரவேற்பு. குளிரில் உடல் நடுங்க, சூடான உணவு உண்டோம். இயல்பாக விஷ்ணுபுரம் நண்பர்களுடன் பழகிவிட முடிந்தது. பெரும்பாலானவர்கள் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதப்படும் கடிதங்கள் மூலம் அறியப்பட்டவர்கள். அவர்கள் வரும் புதியவர்களுக்காக ஏற்படுத்திக் கொடுக்கும் இடமும் காரணம். இரவே விவாதமும், சிலர் தவறவிட்ட கதைகளை வாசிப்பதுமாக பரபரத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்களுடன் அன்றைக்கே அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. முக்கியமாக, கவிஞர் தேவதேவன். இருட்டிலும் குருகுலத்தை ஒரு வலம் வந்து பார்த்தேன். கம்பளி தாண்டி ஊடுருவிய குளிரை உடல் தாங்கவில்லை. இரவில் எழுந்து பார்த்தால் கம்பளியும் குளிர்ந்து தகவமைந்திருந்தது. விடிந்தால் எதற்கு போட்டியிருக்கும் என்று விஜயராகவன் சொல்லியிருந்தார்.
முதல் நாள், எல்லோருடைய வருகையும் தயாரிப்புகளுமாக நிகழ்வு தொடங்கியது (இதென்ன சாய்ந்தும் படுத்தும் புரண்டும் உரைகள் மனம் கொள்ள இயலாமல் செய்யும் நாற்காலிகள் ஏன் என்கிற மிகப்பெரிய சர்ச்சை உண்டானது). நெறியாளரின் சில நினைவு படுத்தல்களுக்கு பிறகாக, சுவாமி வியாசப்பிரசாத் சிறிய அறிமுகத்துடன் அமர்வுகளை தொடங்கி வைத்தார். எழுத்தாளர்கள் அசோகமித்திரனுக்கும், மா.அரங்கநாதனுக்குமான மெளன அஞ்சலிக்கு பிறகு, கவிஞர் மோகனரங்கனின் அசோகமித்திரன் படைப்புலகம் பற்றிய உரை. அவருடைய கதைகளை பற்றியும், அதன் பார்வை மற்றும் அழகியல் சார்ந்தும் பேசிவிட்டு அங்கிருந்து அவற்றின் மொழியை குறித்து பேசும்போது விவாதமாக மாறி வளர்ந்தது. அங்கிருந்த பெரும்பாலானவர்களின் கேள்விகள் காரணமாக, அந்த மொழியின் போதாமை குறித்த விவாதமாக நீண்டு சென்றது.
காவிய முகாமில் கம்பராமாயண பாடம் கேட்பது முக்கியமானது. இவ்வருடம் சுந்தர காண்டம். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பலவருடங்களாக நடத்தி வருகிறார். தொடக்கத்தில் புதியவர்களுக்கான அறிமுகத்துடன் தொடங்கியது. அவரும், மாற்றி மாற்றி நாங்களுமாக பாடல்களை வாசிக்க அதன் விளக்கமும், வாசிப்பு வழிகாட்டலும் தந்தார். கர்நாடக இசைப்பாடகர், நண்பர் ஜெயகுமார் அவற்றை பாடக்கேட்டது எங்கள் நற்பயன். அவர் ராகம் தேர்ந்த விதம் பற்றி சொன்னதும், தொடங்கிய விவாதங்களுமாக தொடர்ந்தது பயனுள்ளதாக இருந்தது.
https://www.facebook.com/ragu.raman.737/videos/1408191855886246/
குளிருக்கு இதமாக நேரத்துக்கு தேனீர், வேளைக்கு குறையில்லாத நல்ல உணவு. காலையும், மாலையும் தமிழ்ச்சமூகம் நன்றாக அறிந்த ‘ஒரு நீண்ட நடை‘. இரவும், பகலும் ஜெயகுமாரின் நற்குரலோசையில் பாடல்கள். கம்பளி மறையும் குளிர். சுதந்திரம் (முதல் நாளே மதியத்துக்கு மேல் நாற்காலிகள் எடுக்கப்பட்டு விட்டன). இடைவெளி இல்லாத உரையாடல்கள். அடையாளங்களை பகடியாக அணுகும் நட்பான சூழல். மூன்று நாட்கள். வேறென்ன வேண்டும்? மேலும், அவ்வப்போது தலைகாட்டும் காட்டெருதுகள்.
தேர்ந்தெடுத்து கொடுத்திருந்த சிறுகதைகள், கவிதைகள் மற்றும் புத்தகங்கள் தொடர்பான சிறு அமர்வுகள் மூன்று தினங்களும் பிரித்து அமைத்திருந்தார்கள். மேலும் முக்கியமான S.சுவாமிநாதன் அவர்களுடைய இந்திய சிற்பக்கலை தொடர்பான வகுப்புகள். இந்திய கலை வரலாறு, குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் இந்திய சிந்தனை முறை. மிகவும் விரிவான தகவல்களுடன், தெளிவான முறையில் தன்னுடைய அனுபவத்தையும், பரந்த வாசிப்பையும் தொகுத்ததாக அவருடைய வகுப்புகள் அமைந்தன. அவர் பகிர்ந்த தன் பெரிய அளவிலான குறிப்புகளும், புத்தகங்களும் இருக்கும் மின்சேகரிப்பு பயனுள்ளதாக இப்போது அனைவருக்கும் பகிரப்பட்டது.
மூன்றாம் நாள் வீடு திரும்புதல். மழைத்தூறல் இருந்தது காலையில். ஒருவருக்கு ஒருவர் மிச்சம் வைத்ததெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். சுவர் தெரியாமல் புத்தகங்களாக இருக்கும் இந்த வாசிப்பு அறையை மீண்டும் எப்போது பார்க்க என்று தோன்றியது. அங்கு நிறைந்திருந்தது நிறைவும், இருப்பும்.
அன்று விடுமுறை தினமாதலால் எந்த வழியில் சிரமமில்லாமல் இறங்குவது என்கிற குழப்பம் அனைவருக்கும் இருந்தது. மூன்று வண்டிகளும் வழியறியாமல் எங்காவது போய் சிக்குவதும், போகிற பாதை அடைந்து கிடப்பதும் மீண்டும் வேறு வழியை தேடுவதுமாக பிரிந்து வெவ்வேறு பாதைகளில் இறங்கினோம்.
முழுவதும் விவாதங்களையே மையப்படுத்தியிருந்த நிகழ்வு. மேலும் பங்கேற்றவர்கள் அனைவருமே உரையாடத் தகுந்தவர்களாகவும், பல்வேறு துறை சார்ந்த வாசிப்பை உடையவர்களாகவும் இருந்ததால் இதைத்தான் பேசினோம் என்று வரையறை செய்துவிட முடியவில்லை. ஆனால், இதை இப்படித்தான் அணுகவேண்டும் என்கிற புரிதல் நிறைய கிடைத்திருக்கிறது. ஆதுரமாய் தம் தோளோடு சேர்த்துக்கொள்ளும் மனிதர்கள் நிறைய கிடைத்திருக்கிறார்கள்.
– நாகபிரகாஷ்
18-மே-2017
ஊட்டி புகைப்படங்களின் தொகுப்புகளின் லிங்க்குகள்
https://goo.gl/photos/6VmPDArPsMxtRsVe8
https://goo.gl/photos/5vt5CdAgpFqsJpTo8
https://goo.gl/photos/r6J3BuYjn9mUnWC2A
ஜானகிராமன்.