ஜெ
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அலைந்து திரியும் துறவியை ‘பஹுதக்’ எனவும், ஓரிடத்தில் தங்கியிருக்கும் துறவியை ‘குடீசக்’ எனவும் வகைப்படுத்துவார்.
கே முத்துராமகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
இந்திரா பார்த்தசாரதி ஒரு கட்டுரையில் நீங்கள் முதற்சிந்தனையாளர்களில் ஒருவராகக் குறிப்பிடும் எஸ்.என்.நாகராசனை ‘அனாச்சார மார்க்ஸியர்’ என்று சொல்வது நினைவுக்கு வந்தது
சாமி
அன்புள்ள ஜெ,
நடராஜ குருவை முன்வைத்து நீங்கள் எழுதிய அனாச்சார துறவிகள் கட்டுரை வாசித்தேன். குடும்பம், சாதி, மதம், தேசம் என அமைப்புகள் தங்களுக்கென நியதிகளை வகுத்துக்கொண்டுள்ளன. எத்தனைக்கு எத்தனை அதன் நியதிகள் இறுக்கமாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை அமைப்புகள் வலுவாகின்றன. வலுவான அமைப்புகள் வெகு மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பை அளிக்கின்றன. வலுவான அமைப்பிலிருந்து வெளியேறுவதை அமைப்புகள் விரும்புவதில்லை. அவை கடுமையாக எதிர்க்கப்படுகின்றன.
அமைப்புகளின் இறுக்கத்திற்கும் அவை அளிக்கும் பாதுகாப்பு உணர்வுக்கும் நேரடி தொடர்பு உண்டு. நெகிழ்வான அமைப்புகள் வெளியேறும், விமர்சிக்கும் சுதந்திரத்தை அளிக்கின்றன, அதனாலேயே பலவீனமாகவும் பார்க்கப்படுகின்றன. முறையான துறவு கூட இத்தகைய அமைப்புகளில் இருந்து வெளியேறி மற்றொரு அமைப்புக்குள் புகுவது போலத்தான். விடுதலைக்கும் பாதுகாப்புக்குமான தேர்வில் பெரும்பாலான சமயங்களில் மக்கள் பாதுகாப்பையே நாடுகிறார்கள். அதுவே இயல்பும், சரியும் கூட.
எல்லாவற்றையும் துறந்து தேசாந்திரியாக திரிவதற்கு அபார துணிவும் கொஞ்சம் கிறுக்கு தனமும் வேண்டும்.
எப்போதும் விடுதலை வேட்கை கொண்டவர்கள் அமைப்புகளில் இருந்து வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
கென்னெத் ஜிஸ்க் எனும் ஆய்வாளார் முற்காலத்தில் இப்படி உதிரிகளாக அலைந்து திரிந்த பவுத்த, இந்து துறவிகள் செவ்வியல் ஆயுர்வேத கட்டமைப்பையே அவர்கள் தான் உருவாக்கினார்கள் என வாதிடுகிறார். தாந்த்ரீகம், ஹத யோகம், ரசவாதம் என இத்தகைய துறவிகளின் பங்களிப்பு இந்தியாவிற்கும் உலகிற்கும் மிகப்பெரிய கொடை. உலகம் இவர்களால் இயக்கப்படுகிறது.
கசன்சாகிஸ் “ஜோர்பா எனும் கிரேக்கன்” நாவலில் புத்தனுக்கும் ஆட்டிடையனுக்கும் இடையில் நிகழும் உரையாடல் பகுதி நினைவுக்கு வந்தது.
ஆட்டிடையன் – எனது உணவு தயாராகிவிட்டது, நான் எனது ஆடுகளிடமிருந்து பால் கறந்துவிட்டேன், எனது குடிசையின் கதவு தாழிடப்பட்டுள்ளது, உள்ளே தணல் எரிகிறது, ஓ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
புத்தர்- எனக்கு உணவும் தேவையில்லை பாலும் தேவையில்லை. இந்த காற்றே எனது புகலிடம், தணல் அணைந்துவிட்டது. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
ஆட்டிடையன்– என்னிடம் எருதுகள் உண்டு, மாடுகள் உண்டு, என்னிடம் என் தந்தை எனக்களித்த வயல்வெளிகள் உண்டு, எனது மாடுகளைச் சினையாக்கும் காளையும் உண்டு, ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
புத்தர்– என்னிடம் மாடுகளும் இல்லை, காளைகளும் இல்லை, எருதுகளும் இல்லை, வயல்வெளிகளும் இல்லை. என்னிடம் எதுவுமே இல்லை. ஆகவே எனக்கு எந்த அச்சமும் இல்லை. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
ஆட்டிடையன்– எனக்கு நான் சொல்வதை கேட்கும், நம்பிக்கையான மனைவி இருக்கிறாள். எத்தனையோ ஆண்டுகளாக அவள் என் மனைவியாக இருக்கிறாள். இரவுகளில் அவளுடன் விளையாடும்போது நான் மகிழ்வாக இருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
புத்தர்– நான் சொல்வதை கேட்கும் சுதந்திரமான ஆன்மா என்னிடம் இருக்கிறது. நான் பலவருடங்களாக அதைப் பயிற்றுவித்திருக்கிறேன் என்னுடனே விளையாட அதற்கு கற்று கொடுத்திருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!
இவ்விரு குரல்கள் என்னுள் மாறி மாறி ஒலித்துக்கொண்டே இருந்தன, தூக்கம் ஆட்கொண்டது. காற்று மீண்டும் பலமாக வீசத்தொடங்கியது. அலைகள் பக்கவாட்டுச் சாளரங்களின் கனத்த கண்ணாடிகளை அறைந்து மோதின. நான் விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடையில் ஊசலாடும் புகை போல் மிதந்தேன்.
கொடூரமான புயல் வீசியது, வயல்வெளிகள் நீரில் மூழ்கின, எருமைகள், மாடுகள், காளைகள் என எல்லாவற்றையும் நீர் விழுங்கி கொண்டது. குடிசையின் மேற்கூரை பிய்த்துக் கொண்டு போனது, தீ அணைந்தது, அந்தப்பெண் கதறினாள், மயங்கி மண்ணில் விழுந்து மரித்தாள், ஆட்டிடையன் தன் புலம்பல்களைத் தொடங்கினான். அவன் சொல்வது என் காதில் விழவில்லை ஆனால் அவன் உரக்க அழுது கொண்டிருந்தான், உறக்கத்திற்குள் மூழ்கி கொண்டிருந்தேன், ஆழ்கடலுக்குள் தப்பித்துச் செல்லும் மீனைப்போல் மூழ்கி கொண்டிருந்தேன்.
நாம் ஊட்டியில் கல்பற்றாவின் ‘நெடுஞ்சாலை புத்தரை’ பற்றி விவாதித்து கொண்டிருந்தோம். முன்பு இக்கவிதையை பற்றி நானொரு கட்டுரை எழுதி இருந்தேன்.
ஜோர்பாவின் அதே புத்தன் தான் நெரிசலான நெடுஞ்சாலையையும் கடந்து செல்கிறான் என எண்ணிக்கொண்டேன்.
சுனீல் கிருஷ்ணன்