காட்டின் சொல்

natarajaguru

வெண்முரசு ஒரே வரலாற்றுநிகழ்வை நோக்கி வெவ்வேறு பெருக்குகளாகச் சென்றுகொண்டிருப்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உரிமைப்போரும் விளைவான ஆணவச்சிக்கல்களும் ஒரு கதை. அன்றைய பாரதத்தில் இருந்த தொன்மையான அரசகுடிகளுக்கும் பொருளியல் மலர்ச்சியின் விளைவாக எழுந்துவந்த புதிய அரசகுடிகளுக்கும் இடையேயான அரசியல்போர் இன்னொரு கதை. அதேசமயம் அது மாபெரும் தத்துவப்போர் ஒன்று நேரடிப்போராக முனைகொண்டதும்கூட. அந்தத்தத்துவ முரண்பாட்டின் தொன்மை நோக்கிச் செல்கிறது கிராதம்.

சொல்வளர்காடு வேதம் மருவியகாலகட்டத்தின் தத்துவப்பூசல்களின் விரிவான சித்திரத்தை அளித்தது. கிராதம் மேலும் முன்னால் சென்று வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது. வருணனை முதல்தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல்தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.

அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்தரிக்கிறது. வேதமுதல்வனிடமிருந்து பாசுபதவேதத்தை அர்ஜுனன் பெறும்போது நிறைவடைகிறது. பாண்டவர்களில் அர்ஜுனனுக்கே கீதை உரைக்கப்பட்டது. அவனே வில் வழியாக யோகியானவன். இந்நாவலில் வருவது நாராயணவேதத்தின் உச்சத்தை கேட்கும் இடம் நோக்கி அவன் செல்லும் பயணமும்கூட. வேதம் எங்கிருந்தெல்லாம் ஊறியிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் அவன் பயணம் நிகழ்கிறது. ஆளுமையின் அனைத்து வடிவங்களிலும் அமைந்து அறிந்து அவன் மீள்வதே இதன் கதை.

உலகக் காப்பியவரலாற்றில் மாவீரர்களின் பயணங்களை மெய்ஞானப்பயணங்களாகச் சித்தரிப்பது பொதுவான வழக்கம். யுலிஸஸ் அல்லது ஜீவகன் என நாமறிந்த உதாரணங்கள் பல. ஒருபக்கம் எளிய வீரகதையாகவும் மறுபக்கம் அகப்பயணமாகவும் தோன்றும் ஒரு கதையாடல் தொன்மைக்காலம் முதலே இங்கு இருந்துள்ளது. அந்த காவியப்போக்கு கொண்ட நாவல் இது. கனவும் , அக்கனவை நனவில் மீட்கையிலெழும் மெல்லியநகையாட்டும் வியப்பும் கலந்து ஓடுவது.

இந்நூல் தொடராக வெளிவந்தபோது சீரமைத்து உதவிய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கு அன்பு. பிழைசரிபார்த்து உதவிய ஹரன்பிரசன்னாவுக்கும், கிழக்கு பதிப்பகத்துக்கும் நன்றி.

வெண்முரசு வரிசையின் பன்னிரண்டாவது நாவல் இது. இந்நாவலை கிராதரூபனாகிய நடராஜகுருவின் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

 

முந்தைய கட்டுரைவேல்நெடுங்கண்ணி
அடுத்த கட்டுரைஅரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்