ஜெயகாந்தன் –கடிதங்கள் 2

jeyakanthan-l

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய் 
ஜெயகாந்தன் தமிழ்விக்கி

தங்களின் சில நேரங்களில் சில மனிதர்கள் கட்டுரை வாசித்தேன். நான் இந்நூலின் பதிவைக் குறித்து எழுதுகையில் இப்படித்தான் ஆரம்பித்திருந்தேன், “ஒரு புத்தகத்தின் அட்டைப் படம் என்னைக் கவர்ந்தது. எடுத்துப் பார்த்தபோது அது ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று தெரிந்தது. காலச்சுவடு பதிப்பகத்தின் அந்தப் புத்தகம் என்னை ஈர்த்து வாங்கத் தூண்டியது”

இந்நாவலின் மீது எனக்கிருந்த தவறான அபிப்ராயத்தை இந்நாவல் குறித்து தாங்கள் முன்னர் எழுதிய கட்டுரைகள் மாற்றியமைத்தன. எனவே முற்றிலும் மாறான ஒரு கோணத்தில் இந்நாவலை அணுக முடிந்ததோடு அது குறித்து ஒரு நீண்ட பதிவையும் எழுத முடிந்தது.

http://kesavamanitp.blogspot.in/2015/06/1.html

http://kesavamanitp.blogspot.in/2015/06/2.html

http://kesavamanitp.blogspot.in/2015/06/3.html

ஒரு வாசகன் நாவல் ஒன்றை வாசிக்க முற்படுகையில் அவன் தவறவிடும் சாத்தியங்களை இப்படி பல நாவல்களுக்கு தாங்கள் சுட்டிக் காட்டியள்ளீர்கள். தங்கள் விளக்கத்தால் பல நூல்கள் இப்படி வெளிச்சம் பெற்றிருக்கின்றன. அந்த  வகையில் சில நேரங்கிளில் சில மனிதர்கள் முக்கியமானது.

அன்புடன்,

கேசவமணி

***

அன்புள்ள ஜெ

ஜெயகாந்தனைப்பற்றிய உங்கள் தொடர்ச்சியான எழுத்துக்கள் ஒரு ஆக்கப்பூர்வமான வாசிப்பை உருவாக்கி வருவதையும் தப்பான மனப்பதிவுகளை அழித்து வருவதையும் காண்கிறேன். அவரைப்பற்றிய பல கருத்துக்கள் அவர் உயிரோடு இருந்தபோது எழுந்தவை. அவை அவர் மீதான காழ்ப்புகள், சிறுபத்திரிகை பெரும்பத்திரிகை என்ற பாகுபாடு அவருடைய இடதுசாரித்தனம் மீதான காழ்ப்புகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டவை. இன்றைக்கு அதெல்லாமே காலம் கடந்துசென்றுவிட்டன

அவர் எழுத்துக்களில் மூன்று அம்சங்கள் உண்டு. சீண்டும் அம்சம் ஒன்று உண்டு. அதை உரத்தகுரலில் வைப்பார். ஆகவேதான் அவை பரபரப்பாகப் பேசப்பட்டன. அந்த அம்சம் அவர் தன்னை நோக்கி மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்தது. எங்களூரில் தோழர்கள் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் கைகளை தட்டியபடி ‘இங்குலாப் சிந்தாபாத்’ என்று பத்துநிமிஷம் கோஷம் போடுவார்கள். அதைப்போல. அதன் பிறகு ஒரு உணர்வுபூர்வமான கதை இருக்கும். அதற்கு அடியிலேதான் உணர்வுகளை அறிவுபூர்வமாக அணுகுவது இருக்கும். இந்த மூன்றாவது படிநிலைதான் நல்ல வாசகனுக்கு உரிய இடம். அங்கே செல்லாமலேயே அபிப்பிராயம் சொல்பவர்களே அதிகமானபேர்.

எனக்குத்தோன்றிய ஒரு கருத்து உண்டு. ஜெயகாந்தன் எல்லா மன உணர்வுகளையும் அறிவால் அள்ள முயல்வார். அவரது கதாபாத்திரங்களும் அதையெல்லாம் செய்யும். ஆனால் அவர்கள் திகைத்து நின்றுவிடக்கூடிய ஓர் இடம் உண்டு. அங்கேதான் ஜெயகாந்தன் கலைஞனாக வெற்றி பெறுகிறார். அது சிலநேரங்களில் சிலமனிதர்களின் கிளைமாக்ஸில் உள்ளது. அதை மறுபடியும் சொல்ல ஆரம்பித்து சொல்லமுடியாமல்தான் தொடர்ச்சியான மற்றநாவல்களை முடிக்கிறார். ஜெயகாந்தன் தோற்கும் இடங்கள் என்று ஒரு பட்டியல் போடலாம். ஹென்றி ஏன் கிறுக்குப்பெண்ணுக்கு ஆடை அணிவித்தான், ஏன் அவள் ஓடிப்போனாள் என்பது அதேபோன்ற ஓர் இடம். பாரீஸுக்குப்போ நாவலில் ஏன் சாரங்கன் அந்தப் பெண் உறவில் தோற்றான் என்பது அதேபோல ஓர் இடம். இதையெல்லாம் பேச இங்கே வாசகர்கள் வரவேண்டும்

அதிகமாக எழுதியதில்லை. நான்காண்டுகளாக உங்கள் இணையதளத்தை பைத்தியம் மாதிரி வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி

சபேசன்

***

ஜெ

ஜெயகாந்தன் மாதிரி அவரது காலகட்டத்திலுள்ள எல்லா அறிவார்ந்த விஷயங்களையும் பேசிய எழுத்தாளர்கள் தமிழிலே வேறு யார்? சிறுபத்திரிகை எழுத்தாளர்களுக்கு இருத்தலியல் தவிர் வேறேதும் கண்ணுக்கே படவில்லையே. ஹிப்பிகளின் ஹெடோனிசம் [ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்] கிழக்குமேற்கு முரண்பாடு [பாரீஸுக்குப்போ] பெண்ணியம் [நடிகை நாடகம் பார்க்கிறாள்] ஃப்ராய்டிசம் [ரிஷிமூலம்] என்று அவர் ஆழமாகத் தொடாத இடங்களே இல்லை.என்னவென்றால் அவர் இவற்றை அவருக்கே உரிய முறையில் இங்கே உள்ள வாழ்க்கையிலே வைத்துப்பார்க்கிறார். ஆகவே அவர் இதையெல்லாம் பேசியிருக்கிறார் என்பது சாதாரணமாகத் தெரிவதே இல்லை

மகேஷ்

***

முந்தைய கட்டுரைமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2
அடுத்த கட்டுரைவேல்நெடுங்கண்ணி