ஜெயகாந்தன் -கடிதங்கள்

jayakanthan_2161849f

சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய் 

ஜெயகாந்தன் தமிழ்விக்கி

அன்புள்ள ஜெ

நான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைப் பல முறை முன்னரே வாசித்திருக்கிறேன்- தினமணிக்கதிர் தொடர்கதையாக வந்தபோது அதன் பக்கங்களை சேகரித்து என் அண்ணியார் பைண்டு செய்து வைத்திருந்தார் – அந்த பைண்டு நாவலைத்தான் பல முறை வாசித்தேன் – நான் ஜெயகாந்தனின் ரசிகன் – அவர் என் ஆசான்

அன்புடன்

சுரேஷ்குமார இந்திரஜித்

***

அன்புடன் ஆசிரியருக்கு

சில நேரங்களில் சில மனிதர்கள் குறித்த பதிவினை வாசித்தேன். ஒரு பக்கம் உற்சாகமும் மறுபக்கம் ஏமாற்றமும் ஒருங்கே எழுந்தது. உற்சாகம் கங்கை எங்கே போகிறாள் நாவலை வாசித்ததால். வருத்தம் சில நேரங்களில் சில மனிதர்கள் வாசிக்காததால்.

கங்கை எங்கே போகிறாள் முழுக்கவே கங்காவால் சொல்லப்படும் கதை தான். அக்னிப்பிரவேசம் படித்ததாலும் இந்நாவலுக்கான ஜெயகாந்தனின் முன்னுரையாலும் சில நேரங்களில் சில மனிதர்களின் ஓட்டத்தை ஓரளவு ஊகிக்க முடிந்தது. ஒரு வித சலிப்பான சற்றே கசப்பங்கதம் நிறைந்த ஒரு கங்காவின் கோணத்தைத் தான் இந்நாவலில் என்னால் பார்க்க முடிந்தது. எழுந்த உள்ள அலையை வென்று கங்கா தன்னையும் தன்னைச் சூழ்ந்திருப்பவர்களையும் மகிழ வைத்த பின் இறக்கிறாள் என எளிமையாக “சுபம்” போட்டுவிட்டு எழுந்து செல்லக்கூடிய வாய்ப்பை இந்நாவல் கொண்டிருக்கிறது தான். ஆனால் அதன் தொடக்க மற்றும் இறுதி வார்த்தை “கல்ப்”. முதல்முறை அது மது. இறுதி வரியில் அது கங்கை. “கல்ப்”. பிரபுவுடன் யாத்திரை புறப்படும் கங்கா கங்கையில் பிரபு பார்த்திருக்கவே மூழ்கிச் சாகிறாள். எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டவள் எல்லா வகையிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டவள் தன்னை சூழ்ந்து நடக்கும் வாழ்க்கையை மெல்லிய விழி விரிதலுடன் கடந்து செல்கிறவள் என மேலும் மேலும் வலியை மட்டுமே கொடுக்கிறது அந்த பாத்திரம். அர்ஜுன் – வசந்தா போல லட்சிய கதாப்பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவர்களின் வழியே நடக்கும் “முற்போக்கான” சம்பாஷணைகளுக்கு இன்றைய தேதியில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் இவர்களின் பெயரைத் தேடும் போது சட்டென ஒரு வரியை படித்துவிட்டு மனம் நின்று விட்டது. எத்தகைய மனநிலையில் ஜெயகாந்தன் இந்த வரியை எழுதியிருப்பார்.

சுபாஷ் கார் ஓட்டிண்டே திரும்பி பார்க்கிறான். முன்னெல்லாம் இவர் கண்ணுக்குள்ள பளபளக்குமே ஒரு பாம்பு பார்வை. அது அப்படியே அவன் கண்ல மின்றது”

உடைந்து நொறுங்கிவிட்ட ஒரு கனவினை சேகரிக்க முயல்கிறாள் கங்கா. தன்னை விட சிறுமியான சாந்தா குடும்பம் குழந்தை என இருப்பதையும் வசந்தா “முற்போக்காக” இருப்பதையும் வியப்புடன் கடந்து செல்கிறாள். ஆனால் அதற்கடியில் அவளுக்குத் தெரியும் அவள் கடந்துவிட்ட இழந்துவிட்ட ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள் என. அவள் ஒரு கால மாற்றத்தின் முதல் பலியாடு. அவளை பலி கொடுத்தே அந்த தலைமுறை எழுந்திருக்கிறது.

பிரபுவினுடைய பாத்திர வார்ப்பு ஒரு எல்லையில் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த ஆக்கமான ஹென்றியை (ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்) நெருங்கினாலும் அவனையும் துரத்தும் ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது. அத்தனை தீவிரமாக அவன் குடும்பத்தை மறுப்பது கங்காவால் தான். ஹென்றியிடம் அத்தகைய நெருடல் கிடையாது. அவன் சுதந்திரமானவன் தான். ஆனால் அவனும் அந்த சுவாதீனமற்ற பெண்ணை ஒழுங்காக உடுத்தச் சொல்லும் போது மிக நுணுக்கமாக கீழே விழுகிறான். ஜெயகாந்தன் ஆண்களை ஒரு படி கீழே தான் நிறுத்துகிறார்.

அவள் மீண்டும் அமைத்துக் கொள்ளலாம் என்றெண்ணிய ஒரு கணம் இனி எக்காலத்திலும் திரும்பாது என்ற உண்மையை உணரும் கணம் தான் இருக்கத் தேவையில்லை என்ற முடிவை எடுக்கிறாள். அவள் இறுதியில் விழுங்குவது விஷம். இங்கிருக்கும் எதுவுமே ஆற்றுப்படுத்த முடியாத ஒரு அழல் அவளுள் எரிகிறது. அதுவே அவளை இறுதியில் எரிக்கிறது.

துயர் எனும் கசக்கும் பிஞ்சு பெருந்துயர் எனும் இனிய கனியாகிறது. ஆனால் பிஞ்சிலும் கனியிலும் துயர் துயர் தான்.

என்னைப் பொறுத்தவரை இந்த வரியில் நாவல் முடிகிறது.

“‘Gulp’ முழுங்கு , கொழந்தே, முழுங்கு…இது அசிங்கமோ கசப்போ , பத்திண்டு எரியறதோ , பார்த்தால் குமட்டிண்டு வருமே …அது போன்றதோ இல்லே…This is death இது பேரின்பமான மரணம் மகளே! கல்ப்..கல்ப்..இட் பேபி!”

நன்றி

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள ஜெமோ

இவ்வளவு காலம் கடந்து சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு ஒரு ‘மறுபிறப்பு’ உருவாகி இருப்பது மிகச்சிறந்த விஷயம் என நினைக்கிறேன். ஜெயகாந்தன் மீது சுமத்தப்பட்ட ஒற்றைவரி என்பது அவரது எழுத்துக்கள் ‘கூச்சலிடும் பிரச்சாரப் படைப்புக்கள்’ என்பவை. அப்படிப்பார்த்தால் எல்லா எழுத்தாளர்களிடமும் அத்தகைய கதைகள் உண்டு. ஜெயகாந்தனை பிரச்சாரப் படைப்பாளி என்று சொன்ன சுந்தர ராமசாமி கதைகளிலேயே பள்ளம், வாசனை, பிள்ளைகெடுத்தான்விளை போன்ற எவ்வளவோ படைப்புக்கள் அவருடைய பிரச்சாரங்கள்தானே?

ஜெயகாந்தனிடம் அத்தகைய கதைகள் கொஞ்சம் அதிகம். ஏனென்றால் அவர் பூடகமாக எழுத முயலவில்லை. அனைத்தையும் உடைத்துச்சொல்ல முயன்ற எழுத்தாளர் அவர். முற்போக்கு எழுத்தாளர். முற்போக்கு சிந்தனைகளைப்பரப்புவதே அவருடைய இலட்சியம். ஆனால் அதை மீறி அவர் தன் நல்ல கதைகளில் ஒரிஜினலான கலைஞனாக மேலெழுந்து வந்தார். நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, எங்கோ யாரோ யாருக்காகவோ, நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன், குருபீடம், அக்னிபிரவேசம், சுயதரிசனம்,விழுதுகள் போன்ற பலகதைகளை கடந்துசெல்லவே முடியாது.

அவரது நாவல்கள் அறிவார்ந்தவை. உணர்ச்சிகள்கூட அறிவால்தான் முன்வைக்கப்படும். அது ஒரு எழுத்துவகை. அந்த வகையில் உலகப்புகழ்பெற்ற ஏராளமான எழுத்தாளர்கள் உண்டு. அவருடைய அந்த அறிவார்த்தம் டஸ்டயேவ்ஸ்கி முதல் உலகிலே உருவானது. தாக்கரே , தாமஸ் மன் போல அதுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. இங்கே பலபேர் அதை சரியாகப்புரிந்துகொள்ளவில்லை. இலக்கியம் என்றால் ஒருவகையான சொகுசு, ஃபில்டர் காபி குடிப்பது போல என நம்பிய ஒரு தலைமுறை இங்கே இருந்தது. அவர்களால் உருவாக்க்கப்பட்டது ஒரு மாயை. அதுதான் ஜெயகாந்தனை வாசிப்பதற்கு பெரிய தடையாக இருந்தது. அடுத்த தலைமுறை அதிலிருந்து வெளிவரவேண்டும்.

அந்த அறிவார்ந்ததன்மை ஜெயகாந்தனின் நாவல்களை மேம்போக்கில் விவாதம் போல காட்டுகிறது. உள்ளே நுட்பமான ஆயிரம் சிக்கல்கள். வாழ்க்கையை அறிவால் எதிர்கொள்பவர்களின் சிக்கல்கள் அவை. நீங்கள் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளை விட்டுவிட்டீர்கள். என் வாசிப்பிலே அதுதான் அவரது மாஸ்டர்பீஸ்

சிவக்குமார் சண்முகம்

***

சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்

***

முந்தைய கட்டுரைமுதலாளித்துவப்பொருளியல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநீர்க்கோலம்