கிசுகிசு வரலாறுகளின் மீது எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு ஒன்று உண்டு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஜான் தல்வி எழுதிய தி ஹிமாலயன் ப்ளண்டர் என்ற நூலை நான் படித்தேன். அப்போது அந்தப்போரைப்பற்றி எனக்குப்பெரிதாக ஏதும் தெரியாது. குறிப்பாக அப்போரின் கேலிநாயகனாய்கிய பி.என்.தாப்பரைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அந்நூல் ஒரு பரபரப்பான சித்திரத்தை அளித்தது.
தாப்பர் இந்திய முப்படைகளின் தலைவராக இருந்தார். தன் செயலின்மை காரணமாக சீனா இந்திய எல்லைகளை ஊடுருவியதை அறியாமல் கால்ஃப் விளையாடிக்கொண்டிருந்தார். நேருவின் குடும்பத்துடன் மணஉறவு கொண்டிருந்தவர். அக்காரணத்தால் ஜெனரல் திம்மையாவின் எச்சரிக்கையை மீறி , தகுதிகொண்டவரான ஜெனரல் தோரட்டை மறிகடந்து முப்படைத் தலைவரானவர்.போர் முடிந்தபின்னர் ராஜினாமா செய்யவைக்கப்பட்டார்.
தாப்பர் பதவியை ஒரு சுகபோகமாக மட்டுமே எண்ணியவர், விளைவாக வரலாற்றால் சுண்டி வீசப்பட்டு குப்பைக்கூடைக்குள் விழுந்த ஒருவர் என்பதே வரலாறு. ஆனால் இன்று அவருடைய அந்தச்செயலின்மைக்கு அவருக்கு சீனாவுடனோ இடதுசாரி அதிகார மையத்துடனோ இருந்த தொடர்புகள் காரணமா என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஐயப்படுகிறார்கள்.அவருடைய மகன்தான் தொலைக்காட்சி விவாதங்களை நடத்தும் கரன் தாப்பர். அவருடைய மருமகள்தான் பிரபல வரலாற்றாய்வாளரான ரொமீலா தாப்பர். இக்குடும்பமே அவர்களின் இடதுசாரி அரசியல், இந்திய வெறுப்பு, சீனத்தொடர்பு, சமையலறை அரசியல் வியூகங்களுக்கு இன்று பரவலாக அறியப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது
ஹிமாலயன் பிளண்டர் நூல் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் அது கிடைத்தது. அது அளித்த அந்த கிசுகிசு வரலாறு நான் அறிந்த சீனப்படையெடுப்பு கதைகளுக்கு நேர்மாறாக இருந்தது. எனக்கு ஏழு வயதாக இருந்த போதுதான் சீனப் படையெடுப்பு தொடர்பான செய்திகளை வாரஇதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்புகளில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு வெவ்வேறு கட்டுரைகளில் சீனப்படையெடுப்பு குறித்து வாசித்தேன். தல்வியின் கிசுகிசு வரலாற்றுக்கும் அதிகாரபூர்வ வரலாற்றுக்கும் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது. அது என்னை ஒருவகையில் உலுக்கியது. வரலாறென்பதே அது நமக்கு எவரோ எழுதி அளிப்பது தானோ என்ற எண்ணத்தை அந்த வயதிலேயே உருவாக்கியது.
மேலும் மேலும் குழப்பத்தை அடைந்து சீனப்போரின் பின்னணி, டெல்லியின் அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றி மட்டுமே மூன்று மாதங்களுக்கு மேலாகப் படித்துக் கொண்டிருந்தது நினைவு வருகிறது. நெவில் மேக்ஸ்வெல்லின் இந்தியாஸ் சைனா வார், கன்னர் மிர்டாலின் ஏஷியன் டிராமா, செஸ்டர் பௌல்ஸின் சுயசரிதை என கலந்துகட்டி வாசித்தேன்.. இன்றைக்கு திரும்பிப் பார்க்கையில் எனக்கான வரலாற்றுச் சித்திரத்தை அப்போது உருவாக்கிக் கொண்டேன் என்று தோன்றுகிறது. தல்வியின் நூலை மெதுவாக பிற நூல்களின் வழியாகப் புரிந்துகொண்டேன். ஒவ்வொன்றையும்பற்றி எனக்கான மதிப்பீட்டை உருவாக்கிக்கொண்டேன்.
அந்த பிற நூல்களின் முக்கியமானவை அனைத்துமே ஒருவகையில் கிசுகிசு நூல்கள் தான். கிசுகிசுவை முன்வைப்பவரை நாம் சரியாக மதிப்பிட்டுவிடும்போது கிசுகிசு வரலாற்றுக்கு ஒரு மதிப்பு ஏற்படுகிறது. பின்னர் இந்திய கிசுகிசு வரலாறுகளின் உச்சமான எம்.ஓ.மத்தாயின் மை டேய்ஸ் ித் நேரு என்னை கவர்ந்தது. எனக்கு அது ஒருவகை வரலாற்று ஆவணம்
இன்று இருவகை வரலாறுகள் உண்டு என்று எண்ணுகிறேன். ஒன்று அதிகார பூர்வமாக வெளியிடப்படும் வரலாறு. அது அரசியல் சரிநிலைகளுக்கேற்ப வரலாற்றுத் தேவைகளுக்கேற்ப, அதிகார அமைப்பின் நோக்கங்களுக்கேற்ப உருவாக்கப்பட்டு பொதுவாக முன்வைக்கப்பட்டு பல்வேறு தரப்புகளால் ஏற்பும் மறுப்பும் கூறப்பட்டு காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்படுவது. அதுவே மைய ஓட்ட வரலாறு என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த வரலாறு ஒருவகையில் உயிரற்றது. செங்கல் செங்கல்லாக கட்டி அடுக்கி எழுப்பப்படும் கட்டிடங்களைப்போல. அந்த வரலாற்றை மிக எளிய வடிவில் நாம் பள்ளிக்கூட பாடங்களில் படிக்கிறோம். பின்னர் அன்றாடம் படித்துக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான செய்திக்கட்டுரைகளில், கல்வித்துறைசார்ந்த ஆய்வுக்கட்டுரைகளில் அது பல கோணங்களில் குறிப்பிடப்படுவதை வாசிக்கிறோம். அதனூடாக நம் மனம் அதை ஒருவகையான வரலாறாக ஏற்றுக் கொள்கிறது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்களைப் பார்த்தால் ஒவ்வொருவரிடமும் இருக்கும் வரலாற்றுப் பிரக்ஞை என்பது இந்த மைய ஓட்ட வரலாறுதான்.
ஆனால் ஒவ்வொருவருக்கும் அந்த மைய ஓட்ட வரலாற்றில் எப்போதும் தவிர்க்கமுடியாமல் ஒரு சிறிய அடிக்குறிப்பு இருக்கும். ஒரு ”அரைப்புள்ளி” என்று அதைச் சொல்லலாம். கிசுகிசு வரலாறு அந்த இடைவெளியில் நிகழ்கிறது. அது பிறிதொரு வரலாறு. வரலாற்றில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களால் எழுதப்படுவது. வரலாற்றின் நாயகர்களோ அல்லது வெறும் சாட்சிகளோ பதிவுசெய்வது. பெரும்பாலும் அதில் தோல்வியுற்றவர்களே அவ்வரலாற்றை எழுதுகிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள, கைகடத்திவிட, தங்கள் பிம்பங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தோல்வியடைந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டவர்களும் பிறிதொரு வரலாற்றை எழுதுகிறார்கள்.
அவ்வரலாற்றை அவர்கள் எழுதுவதற்கான முதன்மைக்காரணம் என்பது அவர்களுடைய வன்மமும் கழிவிரக்கமும் சுயநியாயப்படுத்தலும் அடிபட்ட அகந்தையும்தான். வரலாறு என்னைப்பழிவாங்கிவிட்டது, திருப்பி நான் வரலாற்றைப் பழிவாங்குவேன் என்பது அந்த எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. அல்லது தனக்கு நழுவிப்போன வாய்ப்புகள் குறித்த ஏக்கம். அல்லது நானும் ஒரு முக்கியமான ஆள்தான் என்னும் டம்பம். மிக அபூர்வமாக தனது தோல்விக்கான காரணங்கள் என்ன என்று பார்க்கும் நேர்மையான நோக்கும் கிசுகிசு வரலாறுகளில் இருக்கலாம். வரலாற்றை திரும்ப எழுதி பார்ப்பதனூடாக தனக்கு உகந்த ஒரு வரலாற்றை அமைத்துக் கொள்ளும் முயற்சி இவற்றில் உண்டு.
தமிழகம் குறித்த அத்தகைய பல சுவாரசியமான கிசுகிசு வரலாறுகளை இப்போது நினைவு கூர்கிறேன். முதன்மையானது கண்ணதாசனின் ‘வனவாசம்’தான். அது ஒரு கழிவிரக்க வரலாறு. சுத்தானந்த பாரதியின் தன்வரலாறு, கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் போன்றவை நேர்மையான மாற்று வரலாற்றுப்பதிவுகள். முன்னாள் காவல்துறை ஆணையர் கெ. மோகன் தாஸின் எம்.ஜி.ஆர். மேன் ஆண்ட் மித் மிகச்சிறபான, நம்பகமான ஒருகிசுகிசு வரலாறு
இந்நூல்களின் ஆசிரியனுக்கு வழக்கமாக வரலாற்றாசிரியனுக்கோ காலப்பதிவாளனுக்கோ புனைவெழுத்தாளனுக்கோ அளிக்கும் கௌரவத்தை நாம் ஒருபோதும் அளிக்கலாகாது. அவர்கள் கிசுகிசு உரைப்பவர்கள் மட்டும் தான் அவர்கள் வெற்றி அவர்களுடைய தோல்வி அவர்கள் அதை எழுதுவதற்கான காரணம் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள் ஆகியவற்றை நன்கறிந்த பின்னர் இவற்றிலிருந்து எடுத்த தகவல்களால் நாம் அறிந்த வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பிக் கொள்ள முடியும். அது வரலாற்றைப் பற்றிய புதிய நோக்கை நமக்கு அளிக்கும்.
அதிகாரபூர்வ வரலாற்றில் குறைவது என்ன? ஒற்றை வார்த்தையில் அதை மனிதக் கதை எனலாம். வரலாறு என்பது எப்போதுமே மனிதனின் கதைதான் ஆகவே அது உணர்வுகளின் கதை. நட்பு, துரோகம், நம்பிக்கை, ஏமாற்றம், கனவுகள், கசப்புகள் என பெருகி ஓடுவதாகத்தான் அது இருக்க முடியும். மனிதர்களின் சிறுமைகளும் பெருமைகளும் தான் வரலாறு. ஆனால் அனைவருக்கும் பொதுவான வரலாற்றை உருவாக்கும் போது அனைவராலும் உருவாக்கப்பட்ட செய்திகளின் தொடர்ச்சியாகவே அது இருக்கும். உணர்வுகள் அதில் கலக்க முடியாது. கலக்கப்படும்போது கூட அனைவரும் ஏற்கப்படும் உணர்வுகளே இருக்க முடியும்.
அங்குதான் புனைகதைகளின் இடம் வருகிறது. புனைகதைகள் வரலாற்றை மனிதகதையாக மாற்றுகின்றன. அதன் பொருட்டு வரலாற்றில் பலவிதமான சுதந்திரங்களை அவை எடுத்துக் கொள்கின்றன. புனைகதை ஒருவகை இணை வரலாறாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. எண்ணிப்பாருங்கள், நாம் உலகப்போரை ,இந்திய சுதந்திரப்போராட்டத்தை அதிகார பூர்வமாக அறிந்திருப்பதை விடவும் அதிகமாக புனைவுகளினூடாகவே அறிந்திருக்கிறோம். ஹாலிவுட் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகப்போரை ஒரு மாபெரும் புனைவுப் படலமாக மாற்றிவிட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் காலம் தோறும் வரலாறு அப்படித்தான் மனித நினைவில் நீடிக்கிறது. அதிகார பூர்வமான முறையான வரலாறென்பது எப்போதும் இரண்டாம் பட்சமாகவும் அறிஞர்கள் நடுவில் உலவக்கூடியதாகவும் இருக்கிறது. ராஜராஜ சோழனையோ நெப்போலியனையோ புனைவாகவே நாம் அறிந்துள்ளோம்.
புனைவுக்கு மிக நெருக்கமாக நிற்கக் கூடிய ஒன்று என்று கிசுகிசு வரலாற்றைச் சொல்வேன். அது ஒருவகையான புனைவுதான் ஆனால் வரலாற்றை சொல்லக்கூடியவர் தன் நம்பகத்தன்மையை உருவாக்கவேண்டும் என்பதற்காக பெரும்பாலும் அனுபவங்களுக்கு அணுகி நிற்கிறார். மேலும் கிசுகிசு வரலாறுகள் இனிமேல் அடைவதற்கொன்றுமில்லை. என்று முழுமையாக உணர்ந்த பின்னரே எழுதப்படுகின்றன. ஆகவே அவற்றில் உண்மையின் குரல் மேலும் வலுத்து ஒலிக்கிறது இந்த மனித உணர்வு எனும் அம்சம் இருப்பதனால் கிசுகிசு வரலாறுகள் புனைவு அளவுக்கே அணுக்கமாகின்றன.
கிசுகிசு வரலாற்றில் ஒரு பார்வையாளன் இருக்கிறான், வரலாற்றில் ஒரு சாட்சியாக அவன் நின்று பார்க்கையில் எழும் சித்திரமே வேறு. அவன் தன்னுடைய உணர்வுகள் வழியாக வரலாற்றைப்பார்க்கையில் வரலாற்றிலிருந்து உணர்வுகளையே முதன்மையாகத் தொட்டு எடுத்துக் கொள்கிறான். ஆகவே கிசுகிசு வரலாறுகள் மையவரலாற்றில் வடிகட்டப்பட்ட செய்திகளாலும் உணர்வுகளாலும் ஆனவை. மைய வரலாற்றில் விடுபட்டவற்றால் ஆன வரலாறாக அது ஆவது இப்படித்தான். எளிய கிசுகிசு ஆர்வத்துடன் இவற்றை படிப்பதும் கிசுகிசுவாகவே இவற்றை பேசிக்கொண்டிருப்பதும் பெரும்பாலானவர்களால் செய்யப்படுகிறது. அதற்கப்பால் சென்று ஒரு வரலாற்று தரிசனத்தை இவற்றைக் கணக்கில் கொண்டு உருவாக்குவது வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள், எழுத்தாளர்கள் ஆகியவர்களின் கடமையாகும்.
[ 2]
தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க கிசுகிசு வரலாறுகள் என்று வலம்புரி ஜான் நக்கீரன் பதிப்பகத்திற்காக எழுதிய வணக்கம் என்ற நூலைச் சொல்வேன். இந்நூலை அவர் ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறார். நக்கீரனில் தொடராக வந்தபோது மிகக் கடுமையான சர்ச்சையை உருவாக்கிய நூல் இது. ஒரு வரலாற்று நூலுக்குரிய ஒழுங்கு இதிலில்லை. பெரும்பாலான அத்தியாயங்கள் சமகால அரசியல் சார்ந்த கருத்துடனும் எதிர்வினையுடனும் தொடங்குகின்றன. இந்த நூலை எழுதும்போது வந்த மிரட்டல்களும் இதற்குள்ளேயே பேசப்படுகின்றன. வலம்புரி ஜானின் தனிப்பட்ட உணர்வுநிலைகளும் கசப்புகளும் வெளிப்படுகின்றன. ஆகவே ஒவ்வொரு அத்தியாயமும் ஒருவகையான அலைபாய்தல் கொண்டுள்ளது. ஆயினும் அந்தக் காலகட்டத்தின் உயர் மட்ட சதியுலகொன்றை வலம்புரிஜானால் காட்டிவிட முடிகிறது என்பதனால் இந்த நூல் பலவகையிலும் முக்கியமானது.
ஜான் தன்னுடைய வாழ்க்கை வரலாறாக இதைத் தொடங்குகிறார். மிக இளம் வயதில் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஒருவரின் கீழே வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடும் வழக்கறிஞர் வலம்புரிஜான் சிறுபான்மை மீனவக் கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். அன்றைய அரசியல் சூழலில் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச்சிறப்பாக உரையாற்றுபவர். ஆகவே அன்றைய இளைஞர்களின் கவர்ச்சிமிகு இயக்கமாக இருந்த திமுகவில் அவருக்கு ஒரு இடம் அமைகிறது. அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் தெரிவு செய்யப்பட்டு மிக இளம் வயதிலேயே டெல்லி மேல் சபைக்குத் தேர்வாகிறார். அப்போதே அவருக்கெதிரான சதிகள் தொடங்கிவிட்டன என்று வலம்புரி ஜான் பதிவுசெய்கிறார். அதைப்புரிந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு அரசியல் பயணத்திற்கும் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ச்சியாக எதிர்விசையாக இருந்து கொண்டிருப்பது அவரைப்போலவே உடனோடுபவர்களின் எதிர்ப்பும், போட்டியும், சதிகளும் தான். வயதை திருத்தி ராஜ்ய சபாவில் போட்டியிட விண்ணப்பித்தார் என்னும் புகார் வலம்புரி ஜான் மேல் வருகிறது. இவர் மழுப்பி மென்று எழுதுவதை வைத்துப்பார்த்தால் அக்குற்றச்சாட்டு உண்மை என்றே ஊகிக்க முடிகிறது. தான் பிறந்த பிற்பட்ட கிறித்தவ சமுதாயத்தில் வயதை முறையாக பதிவு செய்யும் வழக்கம் இல்லாததால் தானே தன் வயதை எழுதிக் கொண்டதாக சொல்கிறார். ஆனால் அது உண்மையல்ல கத்தோலிக்க கிறித்தவர்களின் பிறப்பு முறையாக திருச்சபைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
பின்னர் கருணாநிதியிடம் முரண்பட்டு எம்.ஜி.ஆரிடம் சென்று சேர்கிறார் ஜான். எம்.ஜி.ஆருக்கு அணுக்கமானவராகவும் ஆங்கிலத்திலும் அவர் உரைகளை எழுதிக் கொடுப்பவராகவும் மாறுகிறார். அதற்குப் பிரதிபலனாக அவருக்கு சிறிய பதவிகள் அளிக்கப்படுகின்றன. அப்பதவியை அவருக்கு அளிப்பதற்கே கடுமையான போட்டிகளும் காழ்ப்புகளும் கிளம்பி வருகின்றன. தனது அரசியல் வாழ்க்கையில் ஜான் அடைந்த உச்சம் என்பது தாய் பத்திரிக்கையில் ஆசிரியராக ஆனதுதான். அதற்கு ஒருவகையில் ஜெயலலிதா காரணம். ஜெயலலிதாவுடனான நெருக்கம் அவருக்கு பலவகையில் உதவி செய்தது.
ஜெயலலிதா அவரை ஒரு அறிவு ஜீவியாகவும் புத்தகங்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு மறுதரப்பாகவும் எண்ணுகிறார். ஜெயலலிதாவைத் தொற்றிக் கொண்டு சற்று முன்னால் செல்லும் வலம்புரி ஜான் புதிதாக வந்து ஒட்டிக்கொள்ளும் நடராஜனால் வீழ்த்தப்படுகிறார். ஜெயலலிதாவுக்கு அணுக்கமானவர்கள் அத்தனை பேரையும் ஜெயலலிதாவிடமிருந்து விலக்கி ஒரு வலுவான மாய வலையத்தை உருவாக்கும் நடராஜன் மெல்ல வலம்புரி ஜானை சுண்டி வெளியே வீசுகிறார். அரசியலிலிருந்து முற்றாக வெளியேற நேர்ந்த வலம்புரி ஜான் தொலைக்காட்சிகளில் தலைகாட்டுவது, நக்கீரனில் தொடர் எழுதுவது என்று வாழ்ந்து எந்த முக்கியத்துவமும் இல்லாமல் மறைந்தார்.
இந்த நூலின் முக்கியமான இடம் என்பது எம்.ஜி.ஆரின் இறுதி நாட்களில் அவரைச் சுற்றி நடந்த பலவகையான சதிகளை வலம்புரி ஜான் பதிவு செய்திருப்பது தான். எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா மீதிருந்த வெல்லவே முடியாத ஈர்ப்பு, அதே சமயம் ஜெயலலிதாவின் ஆணவப்போக்கினால் அவருக்கு ஏற்படும் மனஉளைச்சல், அந்த மன உளைச்சலை வென்று செல்லும் மோகம் ஆகியவற்றை ஓரளவுக்கு துல்லியமாகவே ஜான் பதிவு செய்கிறார். மிகச் சங்கடமான ஒரு பின்னணியில் இருந்து வளர்ந்து வந்த ஜெயலலிதா வெற்றி ஒன்றின் மூலமே அதைக் கடந்து செல்ல முயல்வதையும் அதில் எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட முரண்பாடால் உருவான ஒரு பெரும் பின்னடைவையும் ஜான் சித்தரித்துக் காட்டுகிறார்.
சோபன்பாபுவுடன் கோயிங் ஸ்டெடி என்ற தலைப்பில் குமுதத்தில் வந்த கட்டுரை ஜெயலலிதா ஹைதராபாதில் சோபன்பாபுவுடன் குடும்பம் நடத்துவதை காட்டியது. திரும்ப சென்னை வரும் நோக்கத்துடன் எம்ஜியாரின் பொறாமையைத் தூண்டுவதற்காகவே அக்கட்டுரை ஜெயலலிதாவால் பிரசுரம் செய்யப்பட்டது என்கிறார் ஜான். ஆர்.எம்.வீரப்பனைப் பயன்படுத்தி ஜெயலலிதா மீண்டும் எம்ஜியாரின் கண்ணுக்கு முன் தோன்றுகிறார். அவரை வீழ்த்துகிறார். எம்ஜியாரின் பலவீனங்கள் ஜெயலலிதாவுக்கு மிக நன்றாகத்தெரியும். ஜானகி பயப்படுவதும் ஜெயலலிதாவை எண்ணி மட்டுமே.
எப்படியாவது வென்று பதவியில் அமர்ந்துவிட வேண்டுமென்ற ஜெயலலிதாவின் வெறி எம்.ஜி.ஆரை ஒரு பகடைக்காயாகவே பயன்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் செயலிழந்துவிட்டார் என்று சொல்லி ராஜீவ் காந்தியின் உதவியுடன் தான் முதல்வராக முயல்கிறார். தன் பாதையிலிருக்கும் அனைவரையும் மாறிமாறிப் பயன்படுத்துகிறார். பயன் முடிந்ததும் தட்டி வெளியே தள்ளுகிறார். ஆங்கிலம் பேசத்தெரிந்ததனால் தான் ஒரு அறிவு ஜீவி என்றும் தனக்கு அனைத்திலும் தேர்ச்சி உண்டு என்றும் நினைக்கிறார். ஆனால் தமிழக அரசியலைப்பற்றி அவருக்கு பெரிதாக எதுவுமே தெரிந்திருக்கவில்லை. குறிப்பாக மைதிலி சிவராமன் போன்ற இடதுசாரிப் பெண்களைப்பற்றி அவர் முதன் முறையாகக் கேள்விப்பட்டு திகைக்கும் இடம் , கக்கனை யார் என்று கேட்கும் இடம்போன்றவை ஒரு புன்னகையை வரவழைக்கிறது.
இந்நூலில் பிராமணர்களின் அரசியல் விளையாட்டு பற்றிய இடம் மிக விரிவாக வருகிறது. கருணாநிதியை விலக்குபவர் என்பதனால் பிராமணர்கள் எம்ஜியாரை முன்னிறுத்தினர். எம்ஜியார் அதை உணர்ந்திருந்தார். அவர்க்கு பிராமணர்கள் அபாயகரமானவர்கள் என்னும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அவர்களை பகைத்துக்கொள்ளக்கூடாது என்றும் நினைக்கிறார். அதோடு மலையாளிகள் நம்பக்கூடாதவர்கள் என்றும் எம்ஜியார் எண்ணுகிறார்– அல்லது அப்படி அவர் ஜானிடம் சொல்கிறார்.. ஆனால் தன்னைச்சூழ்ந்து அவர் மலையாளிகளையே வைத்திருந்தார். ஜெயலலிதவை காஞ்சி சங்கராச்சாரியார், சோ, பல்வேறு சோதிடர்கள் போன்ற பிராமணர்கள் அதிகாரம் நோக்கித் தள்ளுகிறார்கள். அவர் ராஜாஜிக்குப்பின் தங்கள் சாதிக்கான தலைவர் என நினைக்கிறார்கள்
ஆனால் கனி பழுத்ததும் பறவை கொண்டுசெல்வது போல நடராஜன் தலைமையில் தேவர் சாதி அதிகாரத்தைக் கைப்பற்றியது. பிராமணர்களில் ஒரு சாரார் சமரசம் செய்துகொண்டனர். எதிர்த்தவர்கள் நடராஜனின் கைப்பாவையாகிய ஜெயலலிதா அரசால் பழிவாங்கப்பட்டனர். நடராஜனை அச்சம், காழ்ப்புடன் மட்டுமே குறிப்பிடும் ஜான் கூட அவர் பிராமண ஆதிக்கம் மீண்டும் தமிழகத்தில் வேர்விடாமல் காத்தவர் என்பதற்காக தமிழகம் நன்றியுடன் இருக்கவேண்டும் என்கிறார்
ஜெயலலிதாவை வேவு பார்க்கும்பொருட்டு எம்.ஜி.ஆர் சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அணுக்கமாக நியமிக்கிறார். ஆனால் சசிகலா ஜெயலலிதாவுக்காக எம்.ஜி.ஆரையும் வேவு பார்க்கிறார். இவ்வாறு ஒரு இரட்டை ஒற்றராக அறிமுகமாகும் சசிகலா நடராஜனின் மிக முக்கியமான சதுரங்கக் காய். ஜான் சசிகலாவை முதலில் பார்ப்பது எம்ஜியாரின் ராமாவரம் தோட்டத்தில் எம்ஜியாரின் அந்தரங்க மாடியறையில் இருந்து இறங்கி வரும்போதுதான். சசிகலா மிகமிகத் தந்திரமான , சோர்வே அடையாத ஒற்றர் என்றுதான் ஜானின் நூல் காட்டுகிறது
இந்த நூலில் தமிழகத்தில் ராஜாஜிக்குப் பிறகு தோன்றிய மிகப்பெரிய அரசியல் சதுரங்க விளையாட்டாளராக நடராஜனைத்தான் வலம்புரிஜான் சித்தரிக்கிறார். ஜெயலலிதாவைச் சூழ்ந்திருந்த ஒவ்வொருவரையும் சசிகலாவைக் கொண்டு நடராஜன் விலக்குகிறார். ஜெயலலிதாவின் உள்ளத்தில் அரசியல் ஆசைகளைத் தூண்டிக்கொண்டே இருக்கிறார். மேலும் மேலும் ஜெயலலிதா வெறி கொள்ளும் பொருட்டு ஜெயலலிதா அவமதிக்கப்படுகிறார் என்ற சித்திரத்தை ஜெயலலிதாவிடமே உருவாக்குகிறார். அவமதிப்பின் வழியாக வாழ்ந்து வளர்ந்து வந்த ஜெயலலிதாவுக்கு ஒருவர் தன்னை அவமதிக்கிறார் என்ற செய்தியே போதுமானது. அவரை விலக்குவது மட்டும் அல்ல பழிவாங்கவும் வெறிகொள்வார்.
தாய் பத்திரிகையில் வெளிவரும் சிறிய செய்திகளைக்கூட எப்படியெல்லாம் எம்.ஜி.ஆரும் ஜானகியும் ஜெயலலிதாவும் புரிந்து கொள்கிறார்கள், எப்படியெல்லாம் அவற்றை திரித்து பிறர் அவர்களின் காதுகளுக்குப் போட்டுக்கொடுக்கிறார்கள் என்பது ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் வாசிக்க வைக்கிறது. ஜானகியும் எம்ஜியாரும் இருக்கும் ஓர் அட்டைப்படத்தை தாயில் போடுகிறார் ஜான். அதை ஜெயலலிதாவுக்கு நடராஜன் போட்டுக்கொடுக்கிறார். அப்போது ஜானகியும் எம்ஜியாரும் கசப்புடன் இருந்த காலகட்டம். ஜான் அவர்களை ஜெயலலிதாவுக்கு எதிராக சமரசம் செய்துவைக்க முயல்கிறார் என்று நடராஜன் சொல்ல ஜான் ஜெயலலிதாவின் அணுக்கப்பட்டியலில் இருந்து விலகுகிறார். ஆனால் எம்ஜியார் இருந்ததுவரை இருவரும் மேலோட்டமான பார்வையில் நட்புடன் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை ஜானும் அவ்வப்போது எம்ஜியாருக்கு போட்டுக்கொடுக்கிறார். ஆனால் எம்ஜியாரின் மோகம் ஜெயலலிதாவை எந்நிலையிலும் கைவிடாது என பின்னர் புரிந்துகொள்கிறார்
இதில் வலம்புரி ஜானின் கதாபாத்திரம் முக்கியமானது. எந்த கொள்கையும் இல்லாமல் அரசியலில் ஏதேனும் ஒரு பதவியில் தொற்றிக் கொண்டு இருந்துவிடவேண்டுமென்ற எண்ணம் அன்றி வேறெதுவுமே உந்தாமல் இதற்குள் அவர் சுற்றி வருகிறார். மீண்டும் மீண்டும் அவமதிக்கப்படுகிறார். அவமதிப்புகளை எதிர்கொள்வது தாங்கிக் கொள்வது ஒரு கலை என்று சொல்லிக் கொண்டு அவமதித்தவர்களிடமே திரும்பிச் செல்கிறார். அவர்களைப் பற்றிய கசப்புகளைத் தேக்கிக்கொண்டு அவர்களிடம் மீண்டும் மீண்டும் இன்முகத்துடன் பழகுகிறார். மிதிபட மிதிபட செருப்பை முத்தமிட்டபடி அவர் முடிந்த வரை முயன்று பார்ப்பதை அவரே எழுதியிருக்கும் விதம் தமிழக அரசியலின் ஒரு பெரிய சித்திரத்தை காட்டுகிறது.
இந்நூலின் ஒரு அகண்ட சித்திரம் என்பது தமிழக அரசியலின் முதன்மைக் கலையென்பது போட்டுக்கொடுத்தல் என்பதுதான் ஒவ்வொருவரும் பிறிதொருவரை தலைமைக்கு போட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். திராவிட அரசியல் என்பது முழுக்க முழுக்க தனிநபர்களைச் சார்ந்தது. ஈவேரா,அண்ணாத்துரை, கருணாநிதி ,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சசிகலா. பிறர் எந்த வகையிலும் முக்கியமானவர்கள் அல்ல. அவர்கள் இந்த தலைவர்களை அண்டி நயந்து அரசியலில் நீடிக்க நினைப்பவர்கள். அவர்களின் கருணையை இழந்தால் முழுமையாகவே வீட்டுக்குச் செல்ல வேண்டியவர்கள். ஆகவே ஒருவர் தலைமையை சற்று அணுகினால் அந்த இடத்துக்கு வரவிரும்பும் அத்தனை பேரும் அவரைப்பற்றி கோள்சொல்கிறார்கள். அகற்றி அங்கே தங்களை நுழைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.
தலைவர்களும் தங்கள் கீழிருப்பவர்கள் பிற அனைவரையும் மாறி மாறி வேவு பார்க்க வேண்டும் என்றும் ,அவர்கள் தங்களிடம் வந்து கோள் சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள். அதன் வழியாக அமைப்பிலுள்ள அனைவரைப்பற்றியும் தாங்கள் வேவு பார்க்க முடியுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒருலட்சம் உறுப்பினர்கள் கொண்ட ஒரு கட்சி ஒரு லட்சம் ஒற்றர்களையும் கொண்டிருப்பது போல. ஒவ்வொருவரையும் ஏறத்தாழ ஒருலட்சம் ஒற்றர்கள் கண்காணிக்கிறார்கள்! ஆனால் எங்கு தவறு எழுகிறது என்றால் இந்த தலைவர்கள் தாங்கள் தலைவர்களாக இருப்பதனாலேயே அசாதாரணமானவர்கள் என்றும், அனைவருக்கும் மேலே நின்றிருக்கும் அறிவுடையவர்கள் என்றும் நம்புவதுதான். அவர்களை அந்த கோள்சொல்லும் கும்பல் அலைக்கழித்து அடித்துச்செல்வதை அவர்கள் உணர்வதே இல்லை.
இந்நூலில் எம்.ஜி.ஆர் ஒவ்வொருவரைப் பற்றியும் தன்னிடம் பிறர் கோள் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார். அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சொல்லும் கோள்களிலிருந்து ஒரு பொதுச் சித்திரத்தை அவர் உருவாக்கிக் கொள்கிறார். இவ்வாறு எல்லாரைப் பற்றியும் சரியான புரிதலை தான் உருவாக்கிக் கொண்டிருப்பதாக அவர் நினைக்கிறார். ஆனால் கோள் சொல்பவர்கள் பல சமயம் எம்.ஜி.ஆரை விட பலமடங்கு கூர்மையானவர்கள். உதாரணம் வலம்புரி ஜானேதான். பல்வேறு நபர்களைப் பற்றி வலம்புரிஜான் எம்.ஜி.ஆரிடம் சொன்ன கோள் முழுக்க இந்த நூலில் பதிவாகியிருக்கிறது. எம்.ஜி.ஆரே அதைக் கேட்கும் அளவுக்கு பொறுத்திருந்து எம்ஜியார் கேட்டபின்பு நீண்ட தயக்கத்துடன் ஒரு வம்பின் ஒரு முனையை மட்டும் சொல்லி மிச்சத்தை ஊகத்திற்கு விட்டு விட்டு வருகிறார் ஜான். உண்மையான தகவல்களை மட்டும் சொல்லி அவற்றை அடுக்கும் முறையால் மட்டுமே ஒரு கருத்தை உருவாக்குகிறார். ஏனென்றால் எம்ஜியார் தகவல்களைச் சரிபார்ப்பார் என ஜானுக்குத்தெரியும். இவ்வாறே இதைவிட திறமையாக பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.எம்.வீரப்பன், ராகவானந்தம் போன்றவர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் எம்ஜியாரின் கருத்துக்கள மாறிமாறி உருவாக்குகிறார்கள்.
ஆகவே எம்.ஜி.ஆர் ஒருவகையில் சதுரங்கக் காய்களை ஆட்டுவித்த ஆட்டக்காரர் அல்ல. கால்களால் தட்டி விளையாடப்பட்ட ஒரு கால்பந்து போலத்தான் செயல்படுகிறார். அதேதான் ஜெயலலிதாவுக்கும் நிகழ்கிறது. ஏறத்தாழ இதுதான் விடுதலைப்புலி இயக்கத்திலும் நடந்தது என்பது புஷ்பராசாவின் ‘ஈழப்போரில் எனது சாட்சியம்’ தமிழினியின் ’ஒரு கூர்வாளின் நிழலில்’ போன்ற நூல்களால் நமக்குக் காணக் கிடைக்கிறது. இங்கு அதிகபட்சம் அதிகாரம்தான் பறிபோகிறது அங்கு சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். ஸ்டாலினுக்கும் ஹிட்லருக்கு நெருக்கமானவர்களுக்கும் இதே வாழ்க்கைதான் கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது. இந்த வரலாற்றுச் சித்திரத்தை இன்னும் நுட்பமாக விரிவாக்குவதனால்தான் இந்த நூலைமுழுதாக கருதுகிறேன்.
இந்த நூலில் பதினாறாண்டுகளுக்கு முன்பு இரண்டு ஆரூடங்களை வலம்புரி ஜான் சொல்கிறார். ஒன்று சோதிடர் காழியூர் நாராயணன் 1996-ல் சொல்கிறார் 2016 வரைக்கும் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ஜெயலலிதா எந்த விதத்திலும் தோற்காமல் உச்சத்திலேயே இருப்பார் என. இந்த ஆரூடம் ஆச்சரியப்படுத்துகிறது. ஏறத்தாழ அது உண்மையாகவே ஆகிவிட்டது. 2000 ல்- பத்து வருடங்களுக்குள் சசிகலாவோ நடராஜனோ தமிழகத்தின் முதன்மைப் பொறுப்பை ஏற்கக்கூடுமென்றும் ஜெயலலிதாவை அவர்கள் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றக்கூடுமென்றும் வலம்புரி ஜான் ஊகிக்கிறார். மேலும் சில ஆண்டுகளுக்குப்பிறகு கிட்டத்தட்ட அத்தகைய சூழல் உருவாகியது.
ஜெயலலிதா உட்பட அனைவருமே சோதிடர்களையும் மந்திரவாதிகளையும் நம்புவதும், ஆனால் வெளியே பகுத்தறிவு பேசுவதும், வெவ்வேறு சோதிடர்களின் கருத்தைக் கேட்டு அதன் அடிப்படையில் ஒரு கருத்தை தாங்கள் உருவாக்கிக் கொள்வதும் இந்நூலில் தெரிகிறது. ஜானுக்கும் அந்த நம்பிக்கைகள் வலுவாக உள்ளன. அரசியல்வாதிகளை அவர்களிடம் அழைத்துச்செல்லும் வேலையை ஜான் தொடர்ந்து செய்கிறார். இலட்சியவாதக் கோஷங்கள், பொருளியல் சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள், கொள்கைகள் எதுவுமே இந்த அரசியலில் எவ்வகையிலும் முக்கியமல்ல. அனைத்துக்கும் அடியில் இருப்பது அதிகாரத்திற்கான மனிதர்களின் முட்டி மோதல்களும் ஒருவருக்கொருவர் கொள்ளும் காழ்ப்பும் வெறுப்பும், விளைவான சதுரங்க ஆட்டமும் மட்டும் தான்.
இந்நூலில் இருந்து சமகால அரசியலில் இருந்த உள்நாற்றத்தை நேரடியாகச் சென்றடைகிறோம். இன்று நாம் பேசும் அனைத்து விவாதங்களுக்குள்ளும் இந்த உண்மைச் சித்திரத்தை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டோம் என்றால் ஆளுமைகள் சார்ந்த மூடநம்பிக்கைகள், ஒற்றை வரிக் கொள்கை கோஷங்கள் ஆகியவற்றுக்குப் பின்னால் போகாமல் மெய்யான அரசியலை நோக்கி நம்மால் செல்ல முடியுமென்று தோன்றுகிறது.
[வணக்கம். வலம்புரி ஜான், நக்கீரன் பதிப்பகம்]