தேடுபவர்களுக்கு மட்டும்….
மாதம் ஒருமுறை எனக்கு வரும் கடிதங்களில் ஒன்றில் ஒரு மனக்குறை இருக்கும். ‘நித்ய சைதன்ய யதி பற்றி நிறைய பேசுகிறீர்கள். நீங்கள் அதிருஷ்டசாலி. இன்று அப்படிப்பட்ட ஞானிகளும் நல்லாசிரியர்களும் எங்கே இருக்கிறார்கள்? இன்றைக்கு எல்லாமே வியாபாரம்….” இந்தவகையில்.
‘பாலுள்ள பசுவின் மடியிலும் குருதியே கொசுவுக்கு உகந்தது’ என்று ஒரு சம்ஸ்கிருதக் கவிதைவரி உண்டு. எவருமில்லை என்பது எதையும் தேடாமலேயே சென்றடையும் முடிவு.எல்லாம் வியாபாரம் என்பது தன்னைவைத்து மட்டுமே உலகைப்பார்க்கும் நோக்கு. உண்மையில் மகத்தான பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மகத்தான மனிதர்களும் இருக்கிறார்கள். நாம் தேடவேண்டும். நம் விழி திறந்திருக்கவேண்டும்.
ஊட்டியில் குரு வியாசப்பிரசாத் இருக்கிறார். தத்துவம் பயிற்றுவிக்க அவருக்கு நிகரான ஒரு பேராசிரியர் மிக அரிது. ஆனால் முழுமையான தனிமையில்தான் அவர் ஊட்டியில் இருக்கிறார். அதேபோல பலரைச் சொல்லமுடியும். அவர்களுக்கு தேடிச்சென்றுகற்கும் சிலரே மாணவர்களாக இருக்கிறார்கள்.
பொதுவாக இவ்வாறு வரும் ‘சலிப்பு’ கடிதங்களுக்கு நான் பதில் போடுவதில்லை. ஏனென்றால் அதற்குரிய ஓர் அமைப்பை, ஒரு மனிதரை அடையாளம் காட்டியதுமே ஞானத்தை கோரியவர்கள் கேட்கும் முதல் கேள்வி அந்த ஞானாசிரியர்கள் தங்கள் வீட்டருகே, தங்களுக்கு ஓய்வு இருக்கும் நாட்களில், இலவசமாக ஞானத்தை வழங்கமுடியுமா என்றுதான். அதன்பின் லீவு கிடைப்பதில்லை, பிள்ளைகள் படிக்கிறார்கள், மழைபெய்கிறது என பல காரணங்கள் சொல்லப்படும்
அமெரிக்காவிலிருந்து ஊட்டியில் மூன்றுமாதம் தங்கி வேதாந்தம் கற்க வருகிறார்கள் வெள்ளைக்காரர்கள். கோவையில் இருப்பவர் “அவ்ளவு தொலை போணுங்களா? இங்க வரமாட்டாங்களா?” என்கிறார். தத்துவக்கல்வி தேடலற்றவர்களுக்கு அளிக்கப்படக்கூடாது. அதன்பொருட்டு தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்பவர்கள், இழக்கச் சித்தமானவர்கள் மட்டுமே அதை உண்மையில் கற்கமுடியும். அந்த அர்ப்பணிப்பு பெரும்பாலும் ஐரோப்பியர், அமெரிக்கர்களுக்கே இன்று உள்ளது. பிரச்சினை இதுதானே ஒழிய அமைப்போ ஆசிரியர்களோ இல்லை என்பதல்ல
யோக ஆசிரியரும் என் நண்பருமான சௌந்தர் எழுதிய இக்குறிப்பு ஒர் அருமையான ஆசிரமச்சூழலை அறிமுகம்செய்கிறது
ஜெ
சௌந்தர் கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் ,
நம் ஆன்மாவோடும்,அகங்காரத்தோடும், ஒரே நேரத்தில் உரையாடக்கூடிய, கருணையும், வல்லமையும், ஒருங்கே படைத்த, ஞானாசிரியர்களை, காலந்தோறும் தோற்றுவித்தபடியே, இருக்கும் இந்த தேசத்தில், இன்னும் குருகுல மரபுகள் அப்படிப்பட்ட ஆசிரியர்களை வைத்து ஏதேனும் வகையில் ”உயர் கல்வியை’ முன்னெடுத்தபடியே தான் உள்ளனர், அப்படி ஒரு 2 மாத பயிற்சி தான் ரிஷிகேஷ் சிவானந்த ஆஸ்ரமத்தில் நடத்தப்படும், ”’யோக-வேதாந்த பயிற்சி”.
சுவாமி வியாஸப்ரசாத் அவருடைய அத்வைத வகுப்புக் காணொளியில் குறுக்கும் நெடுக்குமாக இரு கோடுகளை போட்டு இடவலமான கோட்டில் காலம், வெளி மற்றும் நாம, ரூபம் { பெயர், உருவம்} என்பதையும், கீழிருந்துமேல் கோட்டில் சத் சித் ஆனந்தம் என்பதையும் எழுதி விளக்கத்தொடங்கும் முதல் 5 நிமிடத்திற்குள், நம்மை முழுவதுமாக அந்த வகுப்புக்குள் உள்ளிழுத்து விடுவார், சற்று ஆர்வம் இருப்பவர்கள் 20 காணொளிகளை முழுவதுமாக பார்க்காமல் இருக்கவே முடியாது. அப்படி ஒரு ஆர்வத்தில் தான் நான் மேலே சொன்ன பயிற்சி வகுப்புக்கும் வந்தேன்
நான் சார்ந்திருக்கும் சிவானந்தர் ஆஸ்ரமம், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக, இப்படி ஒரு தத்துவ பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது, எனினும்ஒரு யோக ஆசிரியராக மற்ற யோகா பயிற்சிகளுக்காக, கடந்த 10 வருடங்களாக சென்று வந்திருக்கிறேனே தவிர, மேலை மட்டும் கிழக்கின் தத்துவ பயிற்சிக்காக 2 மாதம் கலந்துகொள்வது இதுவே முதல் முறை.
உங்களுடைய கீதை உரையில் ” கீதா முகூர்த்தம்” பற்றி சொல்லியிருப்பீர்கள், அப்படி ஒரு முகூர்த்தம் அங்கே வாய்க்கும் என்ற பெரும் நம்பிக்கையில் இந்த பயிற்சிக்கு விண்ணப்பித்தேன், பக்தியையும், கர்மயோகத்தையும், தன் வாழ்வாகவும், போதனையாகவும் கொண்ட சுவாமி சிவானந்தர் வடிவமைத்த வகுப்புகள் இவை என்பதால் ” பகவத் கீதா” வகுப்புகள் சற்று பக்தியை முன்னிறுத்தி நடத்தப்பட்ட்து, ஆனால் பதஞ்சலி யோக சூத்திரமும், இந்திய, மற்றும் மேலை தத்துவம், நடத்திய சுவாமி பத்மனாபானந்தரும், சுவாமி பரம் ப்ரியானந்தரும், பக்திமரபை பின்னணியாக கொண்டிருந்தாலும், தூய அத்வைதிகளான குரு நித்ய சைதன்ய யதி, அரவிந்தர், போன்ற, ஞானிகளின், உரையையும், உவமானங்களையும், மேற்கோள்காட்டி நேரிடையாக முன்வைத்து வகுப்புகளை நடத்தினர்.
இந்த இருவரின் வகுப்புகளிலும், மாணவர்கள் சிறிதுகூட கவனச்சிதறல் இன்றி, கூர்மையாக அமர்ந்து கவனித்ததை காணமுடிந்தது. கீதை எனக்குள் திறந்துகொள்ளும் என்று நினைத்தேன், ஆனால் எதோ காரணத்தால் என்னால் கிரகிக்க முடியவில்லை, அதே சமயம், பதஞ்சலி யோக சூத்திரம் நடத்திய சுவாமி பத்மனாபானந்தர், முதல் வகுப்பிலேயே,” Oh My dear Boys, ”Pls. do not take any notes, i will write it in your mind” என்று சொல்லிவிடடார், அதே போல் இந்த 60 நாட்களுக்குள் அதை செய்தும் காட்டிவிட்டார், என்னைப்போலவே, பெரும்பாலான மாணவர்கள், 10-20 சூத்திரங்களை, மனப்பாடமாகவும், தங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்த்துப்பார்த்துக் கொள்ளவும் வைத்துவிட்டார். இனி ஒவ்வொரு நாளும் இந்த 10 முதல் 20 சூத்திரங்கள் என்னை வழிநடத்தும் என்றே தோன்றுகிறது.
பதஞ்சலி யோக சூத்திரம் ‘ கீதையை போலவே, எப்போதைக்குமான, அறிவியல்,தத்துவ, வாழ்க்கை வழிகாட்டி நூல் என்பதை ஞானாசிரியரின் அருகில் அமர்ந்து கேட்கும்போது மட்டுமே புரிகிறது. நீங்கள் நிச்சயமாக பதஞ்சலி நூலுக்கு ஒரு உரை ஆற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் உரையாடலாம் என்கிற நோக்கில், மூன்று முதன்மை ஆசிரியர்களையும், மாணவர்கள் தாங்கும் விடுதிகளுக்கு நடுவிலே உள்ள அறையில் தங்க வைத்துள்ளனர். இதனால் எப்போதும் ஏதேனும் ஒரு மாணவர் ஒரு ஆசிரியரிடம் உரையாடியபடி இருப்பதை காணமுடிந்தது.
முப்பது வருடங்களாக, இங்கே மேலை தத்துவ வகுப்புகள் நடத்தும் , சுவாமி பரம்ப்ரியானந்தர், தொடர்ந்து தன்னை அப்டேட் செய்துகொண்டவண்ணம் இருக்கிறார் , கிரேக்க தத்துவம் தொடங்கிய காலம், முதல் சாக்ரடீஸ், பிளாட்டோ,அரிஸ்டாட்டில் இம்மானுவேல் காண்ட், வரையிலான, தத்துவ ஞானிகளை மையமாகவும்,அதிலிருந்து கிளை பிரிந்து இன்றைய தத்துவவாதிகள் வரை மிக அழகாகவும், உவமானங்கள் வழியாகவும் விளக்கினார்,
கிரேக்க புராண கதைகளிலிருந்தும், மதத்திலிருந்து, தத்துவம் தன்னை கொஞ்சம்,கொஞ்சமாக விடுவித்து, அறிவியல் ரீதியான, மற்றும் பகுத்தறிவு திசையில், இயற்கை தத்துவவாதிகள் எப்போது முதல் அடி எடுத்து வைத்தனர், அதன்மூலம், அறிவியல் துறை முழுமையாக வளர்வதற்கு எப்படி முன்னோடியாக இருந்தனர் என்பதையும், தொடர் உரையாடல் மூலம் புரியவைத்தார்,
எனினும், இந்திய ஞான மரபும், தத்துவ, சிந்தனை மரபும் அடைந்த உயரத்தையும், கண்டடைந்த நிறைவையும், முழுமையையும், மேற்கின் தத்துவ, சிந்தனையாளர்களில், ஒரு சிலர் தவிர , மற்றவர்கள் தொடமுடியவில்லை என்பது இவரது கருத்து. அதேபோல் ”அறிவியல்” வளர்ச்சி என்பது, சமுதாயத்தின், பெரும்பான்மை மக்கள் சிந்திக்கும் ஆற்றலும், அதன் மூலம், மொத்த சமுதாயமும் பரந்து பட்ட துறைகளில் முன்னகர்ந்து செல்வதே அறிவியல் வளர்ச்சி, ஆனால் இன்றோ, அறிவியல் செயல்பாடு மொத்தமும், வர்த்தக நோக்கிலும், மனித சுகபோக வாழ்க்கைக்கு பயன்படும், கருவிகளின் கண்டுபிடிப்பிலும் முடங்கிவிட்ட்து என்கிற வருத்தமும் இவருக்கு உள்ளது. அதற்கு மைய குற்றச்சாட்டாக இவர் முன்வைப்பது ”சிந்திக்க வைக்காத ”கல்வி முறை”.
75 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், இவரை நம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும் என்று நினைத்தேன், ஒரு 3 நாள் பயிற்சி பட்டறை ஒன்றை சென்னையில் ஏற்பாடு செய்யலாம் என்கிற எண்ணம் வந்தது, அவரிடம் அனுமதி கேட்டேன், செப்டம்பரில் வகுப்புகள் எல்லாம் முடிந்து சற்று ஓய்வாக ஊர் சுற்ற கிளம்பிவிடுவாராம், அப்போது வருகிறேன் என்றார் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரம்மசாரி கோபி என்கிற கேரளத்தை சேர்ந்த ஆசிரியர் உபநிஷத் வகுப்புகளை நடத்தினார், 10 உபநிடங்களின் மேலோட்டமான அறிமுகமும், ”ஈசாவாஸ்ய உபநிஷத்” முழுவதும் நடத்தினார், மிகமுக்கியமாக சுவாமி சிவானந்தரின் விளக்க உரையும், குரு நித்யா, மலையாளத்தின் எழுதிய உரையையும் தான் முக்கிய மேற்கோள் நூலாக பயன்படுத்தினார். அவருடைய அறைக்கு சென்றேன், குரு நித்யாவின் பெரும்பாலான புத்தகங்களை வைத்திருந்தார்.
இப்படியாக 2 மாதமும் வேகமாக நகர்ந்து முடிந்து விடுகிறது, 2 மாதத்திற்குள் அனைத்தையும் கற்று தேர்ந்துவிடலாம், என்று சொல்ல மாட்டேன், ஆனால், மேலும் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தையும், எதை முக்கியமாக கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆரம்பகாடட அறிவையும் பெற, ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்வேன். மேலும் நூற்றுக்குமேற்படட சந்நியாசிகளுக்கு நடுவே,தொடர்ந்து கற்றுகொண்டேயும், ஏதேனும் செயலில் ஈடுபட்ட படியும், ஆஸ்ரம சூழலில் இருப்பது ஒரு பேரனுபவம். நம் நண்பர்களில் யாருக்கேனும் விருப்பமும், வாய்ப்பும் இருந்தால் நிச்சயமாக விண்ணப்பித்து போய் இருந்துவிட்டு வரவும், நான் ஏற்கனவே கூறியதுபோல
சுவாமி சிவானந்தர் தன் வாழ்நாளெல்லாம், பக்தியோகத்தையும், கர்ம யோகத்தையும், போதித்துவந்தவர் என்பதால் எங்கள் ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு வகுப்பும், ஒரு சாந்தி மந்திரத்தில் தான் தொடங்கும், கீர்த்தனை அல்லது ஒரு பஜனை பாடலில் தான் முடியும், அதேபோல 2 மணிநேரம் நிச்சயமாக கர்மயோகாவில் ஈடுபட வேண்டியிருக்கும். [ ஆஸ்ரமத்தில் புல்லு வெட்டுவதால் , என் அறிவு எப்படி வளரும் என்கிற எண்ணமும், பக்தியோகத்தில் சிறு அளவிலேனும், விலக்கமும் இருப்பவர்கள் தயவு செய்து விண்ணப்பிக்க வேண்டாம்]
இது அத்தனையும் தாண்டி ”கங்கை” நம் அறையிலிருந்து கங்கையை பார்த்தபடி வெறுமனே அமர்ந்திருப்பதும், நினைத்தவுடன் ஆஸ்ரம படி இறங்கினால் கங்கையில் நீந்தி குளியல் போடுவதும் வரம் அன்றி வேறில்லை.
இது அத்தனையும் சேவை மனப்பான்மையோடும், குருதேவர் தொடங்கிய ” ரிஷி யக்ஞம்” எனும் இப்பணி எப்போதும் நின்றுவிடக்கூடாது என்கிற திடமான நல்லெண்ணத்தோடும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக நடத்திவருகின்றனர்.
விண்ணப்பிக்க இந்த லிங்கை தொடர்க…. http://www.sivanandaonline.org/public_html/?cmd=displayrightsection§ion_id=1707&format=html
அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் முதல் நாள் வகுப்பில் இந்த மந்திரத்தை சொல்லித்தான் வரவேற்றனர். மற்றும் ” Yoga -Vedanta Forest Academy”……. பதாகையின் முகப்பில் எழுதப்பட்டிருப்பதும் இதுவே.
ஈசாவாஸ்ய உபநிஷத்தின் 11வைத்து மந்திரம்,
”அறிவையும்,பேதமையையும், ஒருங்கே அறிந்தவன்,
பேதமையின் வழி மரணத்தை அடைகிறான்
அறிவின் வழி அமரத்துவம் அடைகிறான்.
”வித்யயா அம்ருதமச்னுதே ”
சௌந்தர்
சத்யானந்த யோகா மையம்
11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு
வடபழனி
சென்னை
அழைக்க:- 9952965505