முதல் மழை

rain

இன்று காலை பத்துமணி அளவிலேயே இருட்டிக்கொண்டிருந்தது. காலையில் இருந்து ஏதும் எழுதவில்லை. மாமலர் முடிந்தமையால் ஒரு ‘ஜாலி’ மனநிலை. நேற்றும் முன்தினமும் நாளுக்கொன்றாக சினிமாக்கள் பார்த்தேன். ஒரு மோகன்லால் படம் இல்லாமல் என்ன சினிமா? ஒப்பம் மோகன்லாலை பார்ப்பதற்காகவே பார்க்கவேண்டிய, வேறெதற்காகவும் பார்க்கமுடியாத, நல்ல படம் .காலையில் எழுந்ததும் தேமே என்று உட்கார்ந்திருப்பதன் ஆனந்தம். கட்டன் சாயாவை துளித்துளியாக பருகியபடி எது எக்கேடாப்போனால் எனக்கென்ன என்ற வழக்கமான மல்லுமனநிலையில் நீடிப்பதன் பேரின்பம்

மற்றநாட்களில் கண்கூசும் வெயில். இன்று குளிரிருள் பெரிய பரவசத்தை அளித்துக்கொண்டிருந்தது.பனிரண்டரை மணி அளவில்கேளிகொட்டு திரைநோட்டம் போன்ற போதிய முஸ்தீபுகள் முடிந்து மழை தொடங்கியது.. மாமலரில் கடைசியில் மழை வந்தது. கோடையின் முதல்மழை. அதே இருட்டு, அதே குளிர், அதே ஓசைகள். அதை உள்ளூர எதிர்பார்த்திருந்தேன்போல. மாமலருக்கான கடிதங்களை ஒவ்வொன்றாக இப்போதுதான் பார்க்கிறேன். அதைமுடித்துவிட்டு கீழே வந்தால்கூரை நிலம் வரை சரிந்ததுபோல கொட்டிக்கொண்டிருந்தது.

ஒரு மழைநடை போகலாமா என்றேன். அஜிதனும் சைதன்யாவும் உற்சாகமாகக் கிளம்பினார்கள். குடையுடன் கிளம்பி கணியாகுளம் போய் அப்படியே வளைந்து வயல்நடுப்பாதை வழியாக ஏரிவரைச் சென்று திரும்பிவந்தோம். ஒன்றரை மணிநேரம். மழை மலைகளை முழுமையாக மூடியிருந்தது. குடையெல்லாம் ஒன்றும் பயனில்லை. முழுக்க நனைந்துவிட்டது. சுழன்றும் சாய்ந்தும் நீர்த்தாரைகள். வழக்கமாக கோடை மழையில் இடிமின்னல் இருக்கும். இது சீரான அருவிபோல கொட்டிக்கொண்டிருந்தது. புதுமண் எழும் மணம். ஆனால் சற்றுநேரத்திலேயே மழைப்பொழிவு அதையும் மூடிவிட்டது

மழைவிட்டபின் நின்று சூழந்திருந்த மலைகளில் சிறிய அருவிகள் இழிவதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். சிறிய வெண்தந்தங்கள். மறந்துவிட்டுப்போன சால்வைகள். மலைக்குமேல் கருமுகில்குவைகள் ஒளிகொண்டு நின்றன. சவேரியார் குன்று இருண்டிருந்தால் மழை தொடருமென பொருள். ஆனால் அது வெளுத்துக்கொண்டே வந்தது. திரும்பிவந்தபோது இரண்டுமணி. பசி கடுமையாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு மொத்தக்குடும்பமும் ஒரு நீண்ட தூக்கம். விழித்தபோது ஐந்துமணி, ஆனால் மழையால் ஏழுமணிபோலத் தெரிந்தது

டோராவுக்கு ஒரு பழக்கம், மழையில் ஒதுங்குவதே இல்லை. அதன் ஜீன்கள் உருவான நிலத்தில் மழை அன்றாட நிகழ்வாக இருக்கவேண்டும். மொத்த மழையிலும் அசையாமல் நின்று ஊறிக்கொண்டிருக்கும். மழையில் அதன் விழிகள் சொக்கியிருப்பதைக் காண்கையில்தான் அப்படி மழையில் நின்றால்தான் அதை ரசித்ததாக ஆகும் என்று தோன்றியது.

ஆனால் நிறைய மழைப்பயணம் சென்ற அனுபவத்தில் எளிதல்ல என்று தெரிந்துகொண்டிருக்கிறேன். குடை இருந்தாலும் நனையும், ஆனால் உடல் அந்தக்குளிரை ஈடுகட்டும். மழையில் நனைந்தால் இருபது நிமிடங்களில் உடல்வெப்பம் முழுக்கவே இல்லாமலாகி நடுக்கி எடுக்கும். அதன்பின் மழையை கொண்டாடமுடியாது. ஓடிப்போய் ஒண்டத்தான் தோன்றும்.

மழையில் எருமைகள் காதுகளைச் சிலிர்த்தபடி நின்றுகொண்டிருந்தன. கணியாகுளம் மக்களும் மழையில் நனைந்து நின்றுகொண்டிருந்தார்கள். இருசக்கரவாகனத்தில் ஒரு கூட்டுக்குடும்பமே மழையில் சீறிச்சென்றுகொண்டிருந்தது.இந்த நிலம் அவர்களுக்குரியது. நானெல்லாம் இதிலிருந்து எழுந்து அன்னியமாகிவிட்டவன்.ஆகவேதான் மழை பேரழகாகத் தெரிகிறது. மற்றவர்கள் மழையை அறியவே இல்லை.

. [7-5-2017]

இடவப்பாதி
 ஆனியாடி
வரம்பெற்றாள்
பருவமழைப்பயணம் 2012
பருவமழைப்பயணம் 2008
பருவமழைப்பயணம் 2010
பருவமழைப்பயணம்

 

முந்தைய கட்டுரைஇலக்கியம், வெறுப்பு
அடுத்த கட்டுரைசொல்! சொல்!