அனாசார உலகம்

download

இந்த இணையப்பக்கத்தில் நடராஜகுருவைப்பற்றிய பலவகையான நினைவுக்குறிப்புகள் உள்ளன. நடராஜகுருவின் வாழ்க்கை சுவாரசியமானது. அவருடைய An autobiography of an absolutist ஒரு பக்கம் கட்டற்ற அலைச்சலாகவும் மறுபக்கம் எங்கும் செல்லாத யோகியாகவும் அமையும் ஒரு மனிதனின் வாழ்க்கையின் சித்திரம்.

துறவிகளை இருவகையாக பிரிக்கலாம். ஆசாரத்துரவி, அனாசாரத் துறவி. ஆசாரத்துறவிகள் ஓர் அமைப்பின் உறுப்பினர்கள் பின்னர் தலைவர்கள். அவர்களை துறவியர் என்பது அவர்கள் நாம் வாழும் குடும்பவாழ்க்கையை வாழவில்லை என்பதனால்தான். மற்றபடி அவர்களுக்கும் அனைத்துவகையான உலகியல் சிக்கல்களும் உண்டு. அனைத்து உலகியல் உறவுகளும் அதன் விளைவான உணர்வுநிலைகளும் உண்டு. அவர்கள் அந்த அமைப்பின் ஆசாரங்கள், சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

அவர்களின் அன்றாடவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் முன்னரே முடிவுசெய்யப்பட்டது. அவர்களால் எவ்வகையிலும் மீறப்படமுடியாதது. உலகியளானைப்போலவே அவர்களும் மற்றவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டவர்கள். ஆகவே நம்மைப்போலவே ஒருவகை நடிகர்கள்.

‘அனாசார’த் துறவிகள் என்பவர்களே உண்மையில் துறவிகள். அவர்களை எந்த புற அமைப்பும் கட்டுப்படுத்துவதில்லை. அலைந்து திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். எங்காவது அமர்வார்கள். நினைத்த போது கிளம்பிச்செல்வார்கள். அவர்களின் திசையை அவர்களின் தேடலும் கண்டடைதலுமே தீர்மானிக்கிறது. எங்காவது அமர்ந்தவர்களுக்குக் கூட அலைந்து திரியும் வாழ்வு இருந்திருக்கிறது. எங்கும் செல்லாத ரமணர், ராமகிருஷ்ணர் போன்றவர்களுக்குக் கூட மாபெரும் அக அலைச்சல் உள்ளது.

ஆனால் உலகியலாளர்களுக்கு ஆசாரத்துறவிகளையே பெரும்பாலும் பிடித்திருக்கிறது. தாங்கள் கடைக்கொள்ள முடியாத கடுநோன்புகளை அவர்கள் கைக்கொள்வார்கள் என்றால் அவர் மேல் பெரும் மரியாதைகொள்கிறார்கள். தூய்மை, ஒழுங்கு, உலகியல் விஷயங்களில் ஈடுபடுதல் ஆகியவை அவர் மேல் எளியவர்கள் பெருமதிப்பு கொள்ள காரணமாக அமைகின்றன. அவர் பெரிய அமைப்புகளின் தலைவராகவும் செல்வத்தை கையாள்பவராகவும் இருப்பார் என்றால் அவர் மேலும் முக்கியத்துவம் கொண்டவர் ஆகிறார். சுருக்கமாகச் சொன்னால் உலகியலாளர் அறிந்த உலகியலே அத்தகைய ஆசாரத்துறவிகளை நோக்கி அவர்கள் செல்வதற்கான அரசப்பாதையாக அமைகிறது.

அனாசாரத்துறவிகளின் உலகம் உலகியலாளர்களுக்கு அன்னியமானது மட்டும் அல்ல பலசமயம் அருவருப்பையோ கோபத்தையோ உருவாக்குவதும்கூட. அனாசாரத் துறவிகள் உலகியலில் ஈடுபடாமையால் அவர்கள் பயனற்றவர்கள் என கருதப்படுகிறார்கள். அவர்களின் ஞானம் இவர்களும் சோறும் துணியும் வீடும் தங்கமுமாக மாறாது என்பதனால் அதைக்கொள்ள ஆளிருப்பதில்லை. அவர்களின் நகைப்பும் விலக்கமும் எரிச்சலூட்டுகின்றன. அவர்களை அண்டி வாழ்பவர்கள் அல்லது கிறுக்கர்கள் என உலகியல்மனம் மதிப்பிடுகிறது.

ஆனால் ஆன்மிகத்தின் சாரம் அவர்களே. அவர்களே தேடிச்செல்பவர்கள், கண்டடைபவர்கள். பல்லாயிரமாண்டுகளாக இந்தியா அவர்களை நம்பியே தன்னை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. கிராம்ஷி அறிவுஜீவிகளைப் பகுத்த முறைமையை கடைப்பிடிப்போம் என்றால் ஆசாரத்துறவிகள் நிலைச்சக்திகள், அனாசாரத்துறவிகளே உயிர்ச்சக்திகள். ஆசாரத்துறவிகள் உலகியளார்களுக்குரியவர்கள். அனாசாரத் துறவிகள் உயிர்ச்சக்திகளான எழுத்தாளர்கள், கலைஞர்கள், மாற்றுச்சமூக அமைப்பைக் கனவுகாண்பவர்கள், மீறிச்செல்பவர்களுக்கு மட்டும் உரியவர்கள்.

2

எல்லா சமூகத்திற்கும் இந்த அனாசாரவாதிகளே முன்னோக்கி இழுத்துச்செல்லும் விசை .நிலைபெறுதல், ஒட்ட ஒழுகுதல் என இயங்கும் மனம்கொண்டவர்களுக்கானவை அல்ல கலையும் சிந்தனையும் ஆன்மிக மீட்பும்.நிலைகொண்டவர்கள் அமைப்பின் சமநிலையை காப்பாற்றுகிறார்கள். அவர்களின் பங்களிப்பு குறைவுடையதல்ல. ஆனால் கட்டற்றவர்களால்தான் அவ்வமைப்பு தன்னை உடைத்து வார்க்கிறது. மறுபரிசீலனை செய்கிறது. தன்னை இடம்பெயர்த்துக்கொண்டு முன்னகர்கிறது.

அமெரிக்காவின் ஃபீட் தலைமுறை, ஹிப்பி இயக்கம் அப்படிப்பட்டது. கிறுக்கர்களும் பொறுக்கிகளும் படைப்பெழுச்சி மிக்கவர்களும் மனிதாபிமானிகளும் ஓருலகக் கனவுகொண்டவர்களும் கலகக்காரர்களுமான அவர்களால் உருவானதே இன்றைய அமெரிக்காவின் மதம்சாராத ஆன்மிகம் இன்றும் அவ்வியக்கத்தின் நீட்சியான மனிதர்களை அமெரிக்காவில் பார்க்கமுடிகிறது. இன்று சூழியல் சார்ந்து, மாற்றுவாழ்க்கைமுறை சார்ந்து அவர்களின் அடையாளங்கள் விரிந்துள்ளன.

அவர்களின் முன்னோடிகள் போருக்கு முந்தைய ஐரோப்பாவில் வாழ்ந்த குவாக்கர்கள் முதலிய சிறிய மதக்குழுவினர், சீர்திருத்தவாதிகள், மாற்று மருத்துவர்கள், அரசியல்கலகக்காரர்கள், அரசின்மைவாதிகள் போன்றவர்கள். அவர்கள் அனைவருடனும் காந்திக்குத் தொடர்பிருந்தது. புகழ்பெற்ற பல ஐரோப்பியக் காந்தியர்கள் குவாக்கர் இயக்கத்திலிருந்து காந்தியை நோக்கி வந்தவர்கள். அவர்கள்தான் பிரம்மஞானசங்கம் போன்றவற்றினூடாக இந்தியாவின் துறவியரை தேடிவந்துகொண்டிருந்தனர்.

ஹிப்பி இயக்கமும் இந்தியாவின் துறவியரைத் தேடிவந்தது. அறுபது எழுபதுகளில் இங்கிருந்த அலையும் துறவியருடன் சமானமாகவே ஹிப்பிகளும் இருந்தனர். மகேஷ் யோகி, ஓஷோ, சிவானந்தர் போன்றவர்களுக்கு அவர்களுடன் நெருக்கமான உறவு இருந்தது. இன்றும்கூட இந்திய அனாசாரத் துறவிகளுடன் ஹிப்பிகளும் சுற்றிக்கொண்டிருப்பதை காசியிலும் ரிஷிகேஷிலும் சாதாரணமாகக் காணமுடிகிறது.

நடராஜகுரு சார்போனிலும் சுவிட்ஸர்லாந்திலும் கற்கும் காலம் முதலே ’மறு’ ஐரோப்பாவுக்கு நெருக்கமானவர். குவாக்கர்களின் கல்விநிலைகளில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ஐரோப்பிய இயற்கைவாத இயக்கம், அரசின்மைவாதிகள், மதக்குழுக்கள் ஆகியோருடன் தொடர்பிலிருந்தவர். அவருடைய நண்பர்களும் பின்னாளின் மாணவர்களுமான ஜான் ஸ்பியர்ஸ், குரு ஃப்ரெடி, காரி டேவிஸ் போன்றவர்கள் அவ்வுலகிலிருந்து வந்தவர்கள்.

அறுபதுகளில் நடராஜகுரு அமெரிக்க ஹிப்பி இயக்கத்தினருக்கு நெருக்கமானவராக ஆனார். அவருடைய சிறந்த மாணவர்களில் பலர் அங்கிருந்து வந்தவர்கள். அவர்களின் கட்டற்றதன்மையும் பித்தும் எப்போதும் ஊட்டி குருகுலத்தில் உண்டு. சிற்பிகள் பாடகர்கள் இசைக்கலைஞர்கள் எவரேனும் அங்கு இருந்துகொண்டிருப்பார்கள். பலரை வயதான காலத்தில் ஊட்டி குருகுலத்தில் பார்த்திருக்கிறேன். லண்டனில் இருந்து கால்நடையாகவே சிங்கப்பூர் வரைச் சென்ற ஒருவரை ஒருமுறை சந்தித்தேன் [புகைப்படத்தில்.துண்டு கட்டிக்கொண்டு நடராஜகுருவின் பின்னால் நடப்பவர் என நினைக்கிறேன்.நித்யாவும் பின்னால் நடந்துகொண்டிருக்கிறார். ஒன்பதாண்டுகள் அப்பயணம் நீடித்தது. நான் பார்த்தபோது காளான் போதையில் இருந்தார்.

நடராஜகுருவின் பழைய காலைநடைப் புகைப்படம் அந்த காலகட்டத்தையே கண்முன் நிறுத்துகிறது.ஊட்டி குருகுலத்திற்கு வந்தவர்களுக்கு நடராஜகுரு நடக்கும் இந்தப்பாதை குருகுலத்திலிருந்து லவ்டேல் பள்ளியின் காடு நோக்கி செல்லும் அச்சாலை என்பது நினைவுவரலாம். நாம் பலமுறை நடந்திருக்கிறோம். அச்சாலையில் ஒரு கனவுநிறைந்த காலகட்டம் ஒழுகிச்சென்றிருக்கிறது.

ஓருலகம் குறித்த கனவு, மாற்று சமூக அமைப்புகள் பற்றிய திட்டங்கள், மானுட உறவுகளின் விடுதலைபற்றிய உணவுக்கொந்தளிப்புகள் எல்லாம் நிறைந்துவழிந்த எழுபதுகள். ஜான் லென்னானும் , பாப் மார்லியும், கஸந் ஸகீஸும், சாலிங்கரும், ரிச்சர்ட் பாகும், சார்ல்ஸ் பாதலேரும், ஆர்தர் ரிம்போவும் மல்லார்மேயும், பால் காகினும், செகாலும் ஆண்ட அந்த காலகட்டம். இன்றிருக்கும் கனவுகள் எல்லாம் அக்காலகட்டத்தின் பின் தூற ல்கள் மட்டும்தான்.

நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் அக்காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது ஊட்டி குருகுலத்திற்குச் சென்று நூலகத்தின் நூல்களை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய ஏக்கம் வந்து நெஞ்சை நிறைத்தது. நொறுங்குமென்றாலும் எஞ்சாதவை என்றாலும் கனவுகளைப்போல வாழ்க்கையை நிறைப்பவை வேறில்லை. கனவுகளைச் சிறகாக்கி பறந்தெழுகிறது இப்புவி.

இது சிறகுகள் உதிரும் காலகட்டம். இந்த யுகம் எழுபதுகள் வரை உலகை ஆட்டுவித்த பெருங்கனவுகளை விட்டுவிட்டு எரிச்சலுடனும், தன்னைத்தானே பழிவாங்கிக் கொள்ளும் வெறியுடனும் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் இந்தப்புகைப்படங்கள். நான் இந்தக்காலகட்டத்தவன் அல்ல, பழையவன். நடராஜகுருவின் நித்யாவின் காலகட்டத்தில் வாழ்பவன்

***

நடராஜகுரு நூல்கள்

குருகுலமும் கல்வியும்

நித்யாகுருகுலம் பற்றி…

நாரயணகுருகுல துறவியர்

நாராயண குரு எனும் இயக்கம்-2

நாராயண குரு எனும் இயக்கம் -1

முகம்சூடுதல்

நித்ய சைதன்ய யதி

ஆண்மையின் தனிமை

நவீன துரோணர்

தன்னை விலக்கி அறியும் கலை

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி

உலகம் யாவையும் [சிறுகதை] 2

உலகம் யாவையும் [சிறுகதை] 1

அந்த தாடியும் காவியும்…

யோகம்,ஞானம்

ஒளியும் விழியும்

ஞானியர், இரு கேள்விகள்

 

 

முந்தைய கட்டுரைவிளாஞ்சோலைப்பிள்ளை
அடுத்த கட்டுரைவெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்