அப்துல் சமத் சமதானி

Abdu_samad_samadani

அன்புள்ள ஜெ,

நலம். நலம் தானே.

ஜான் பால் மாஷ் ஸஃபாரி என்கிற மலையாள சேனலில் (இந்த சேனல் ஒரு அற்புதம். தமிழில் இது போல் எப்போதாவது வருமா ) வந்து 70களின், 80 களின் மலையாள திரைப்பட வரலாற்றை அழகான சொல்லாட்சியுடன், தேர்ந்த கதை சொல்லியின் லாவகத்துடன் சரளமாக விவரித்துப் போவது கலை வரலாறும்  கலையாகும் தருணம்.

கந்தர்வக்ஷேத்ரம் திரைப்படத்தில் பரதன் போட்ட முதல் செட் கதையை நீங்கள் குவைத்தில் சொன்னது ஞாபகம் உள்ளது. இன்னும் உப்பு, காரத்துடன்.

பின் அப்துஸ் ஸமத் ஸமதானியின் சில நினைவுப் பகிர்தல்களைக் காணக் கிடைத்தது வேறெங்கு, ஸஃபாரியில் தான். ஈயாள் ஒரு சம்பவம் தன்னே. குரு நித்ய சைதன்ய யதியிடம் நெருங்கிப் பழகியிருக்கிறார். உபநிடதங்கள், கீத கோவிந்தம், சங்கரர், கணாதர், ரூமி என்று பயின்றிருக்கிறார். பார்லிமெண்ட்  உறுப்பினரான பின்பும் கடிதப் போக்குவரவு இருந்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் ஒரு ஆளுமை. அருகி வரும் ஒரு உயிரினம்.

இவரைப் பற்றி  நீங்கள் எழுதியதாக நினைவில்லை. சந்தித்ததுண்டா.

அன்புடன்,

ஜெயகாந்த்.

அபுதாபி.

ஜெயகாந்த்

அன்புள்ள ஜெயகாந்த்

அப்துல் சமத் சமதானி ஒரு முக்கியமான கேரள ஆளுமை. முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். ஆனால் மதங்களை ஒன்றுடன் ஒன்று இணைந்து மெய்மையைத் தேடுவன என நினைப்பவர். மோதல்போக்கு அற்றவர். நித்யாவின் அணுக்கமான நண்பர்களில் ஒருவர். அவர்களிடையே தொடர் உரையாடல் எப்போதுமிருந்தது.

1959 ஜனவரி ஒன்றாம் தேதி கோட்டக்கல் அருகே குற்றிப்புறம் என்னும் ஊரில் பிறந்தவர் அப்துல் சமத் சமதானி. தந்தை எம்.பி. அப்துல் ஹமீது மௌல்வி. அன்னை ஒற்றகத்து ஸைனபா. கோழிக்கோடு ஃபாரூக் கல்லூரியில் எம்.ஏ பட்டம் பெற்றார்.

ஸிமி [மாணவர் இஸ்லாமிய அமைப்பு] கோழிக்கோடு கிளையின் தலைவராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். கோழிக்கோடு ஃபருக் கல்லூரியின் மாணவர்தலைவராக இருந்தார். இக்காலகட்டத்தில்தான் நித்ய சைதன்ய யதியுடன் தொடர்பும் உரையாடலும் ஏற்பட்டது.

ஸிமியில் இருந்து விலகி முஸ்லீம் லீக்கின் மாணவர் அமைப்பான எம்.எஸ்.எஃப்பின் தலைவரானார்.  பின்னர் யூத் லீக் பொருளாளர் ஆனார். இஸ்லாமியர் நலன் என்பது பிறசமூகங்களுடனான தொடர்பாலும் உரையாடலாலும் நிகழ்வதாகவே இருக்கமுடியும் என்பதை ஆணித்தரமாக முன்வைப்பவராக மேடைகளில் பேசினார். கேரளத்தில் உருவாகி வந்த இஸ்லாமிய தனிமைப்படுத்தல் , தூய்மையாக்கல் போக்குகளுக்கு எதிரானவர் என்பதனால் மிக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்.

அப்துல் சமத் சமதானி ஃபாரூக் கல்லூரியிலும் வாளஞ்சேரி மர்கஸுதர்பியத்தில் இஸ்லாமிய ஆகியவற்றிலும் தத்துவ, மத ஆசிரியராகப் பணியாற்றினார். இம்மானுவேல் காண்ட் முகமது இக்பால் ஆகியோரின் தரிசனங்களை ஒப்பிட்டு ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.

1994  மே மாதம் குருவாயூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் முஸ்லீம்லீக் உறுப்பினராக டெல்லி மேல்சபைக்குத் தேர்வானார். இப்போது முஸ்லீம் லீகின் அகில இந்திய செயலராகப் பணியாற்றுகிறார். 2011 ல் நடந்த தேர்தலில் மலர்ப்புறம் மாவட்டம் கோட்டைக்கல் தொகுதியின் சட்டச்சபை உறுப்பினராகத் தேர்வானார்.

சமதானி உருதுமொழி வல்லுநர். கேரள இக்பால் கமிட்டியை நிறுவியவர். மதினாவுக்கான பாதை என்னும் இவரது பேருரைத்தொடர் கேரளப் பண்பாட்டின் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

1994ல் ஒருமுறை சந்தித்து வணங்கியிருக்கிறேன். என்னை அவர் நினைவில் கொண்டிருக்க வாய்ப்பில்லை. மீண்டும் சந்திக்கவேண்டும் என நினைத்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. அவரைப்பற்றி எழுதவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைஅனல்காற்று விமர்சனம் .
அடுத்த கட்டுரைஇஸ்லாம் அச்சம்