அன்புள்ள ஆசிரியருக்கு,
தாங்கள் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களில் ஒருவராகிய சோ.தர்மன் அவர்கள் எழுதிய “சூல்” வாசிக்கக் கிடைத்தது. தொடக்கத்தில் இருந்த குதூகலமும் பரவச உணர்வுகளும் நூலின் முடிவில் அப்படியே மாறி நிலைகொள்ள முடியா தவிப்பையும் படபடப்பையும் கொண்டுவந்துவிட்டது அந்நாவல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உருளைக்குடி கிராமத்தில் எப்படி அரண்மனை ராஜா காலத்திலிருந்து அதிகாரம் இன்றைய அரசாங்கத்து அதிகாரமாகியது என்ற வரலாற்றை கிராமத்து பாஷையில் அவர் கூறிக்கொண்டே வருகையில் அங்கு நான் நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே எழவில்லை. உருளைக்குடி கிராமத்து மனுஷியாகவே மாறிப்போனேன். இந்நாவலின் கதாநாயகி நிறைசூலியான கண்மாய்தான். கதாநாயகன் நீர்ப்பாய்ச்சி. நாவல் நெடுக நிறைந்தவர்கள். என் மனதிலும் நீங்கா இடம்பெற்றுவிட்டார்கள். நிறைசூலியாய் கெத்கெத்தென்று மங்களகரமாய் விளங்கியவள் கிடைக்கக்கூடாதவர்கள் கைகளில் இன்று அகப்பட்டு பாலையாய் மூளியாய் குரலெழாமல் மௌனமாய் அழுதுகொண்டிருப்பதைத்தான் மனம் தாங்கிக்கொள்ள மறுக்கிறது.
எட்டையபுரத்து மகாராஜா உத்தரவு பெற்று கரம்பைமண் அடித்து குப்பைக்குமி சிதறி கண்மாய்க்கரை வழிமூடி விதைப்புக்கு தயார்படுத்துகிற வேலையை ஆரம்பிப்பதிலிருந்து நெல் நாற்று பாவுவது, கரும்பு நடுவது, வாழைக்கு வரப்பு கட்டுவது, வெற்றிலைக்கொடிக்கால் வளர்க்க அகத்தி வரிச்சிகளை தூர் தோண்டி எடுப்பது, மழைக்காக காத்திருப்பது, வஞ்சகமில்லாத வர்ண பகவான் என சித்திரங்கள்
வெண்கலக் கும்பாவை சுத்தமாக விளக்கி வைத்ததுபோல் சுத்தமாக்கப்பட்டு தயாராக இருக்கும் ஓடைகளையும் ஊருணிகளையும் கண்மாய்களையும் நிறைய வைப்பது, கெத்கெத்தென்று தேங்காய்ப்பாலாய் வெயிலில் பளபளக்கும் தண்ணீரை நீர்ப்பாய்ச்சி கொண்டு சம்சாரிகள் கண்ணெட்டும் தூரம் வரை கலைத்துப்போட்ட சீட்டுக்கட்டாய் கிடக்கும் தங்கள் வயக்காடுகளிலும் வெறறிலைக்கொடிக்கால்களிலும் பாயவிட்டு வெள்ளாமை வேலையை முடித்து தானியத்தால் களம் நிறைத்து வீடுகளில் உள்ள குலுக்கைகளில் நிறைக்கும்வரை எல்லாமே காட்சிகள். உருளைக்குடி கிராமத்தில் கண்மாயைச் சுற்றிக் குடியிருக்கும் கொக்குகளின் உள்ளான்களின் சிறகிகளின் மீன்கொத்திகளின் கெச்சட்டமும், கண்மாய்க்குள் குடியிருக்கும் நாட்டுக்கெண்டை மீன்களின் கிட்டிக்குச்சுத் துள்ளொலியும்தான் காதுகளில் ரீங்காரமாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறது.
கரிச்சான் குருவி குரல் காதில் ஒலித்ததும் அவரவர்க்கான உழைப்பின் ஆயுதங்களை மண்வெட்டி, கடப்பாரை, ஏர் கலப்பையை எடுத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் உருளைக்குடியில் சக்கிலியர், நாயக்கர், முதலியார், வேளார், ஆசாரி, வண்ணான், பனையேறி,நாடார், கவுண்டர், தேவர், பிள்ளை, ரெட்டியார், ராவுத்தர், பகடை, பள்ளர், ஆண்டி, பண்டாரம், பரதேசி, பெரியவர், சிறியவர், இளவட்டம், குமரி என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்மாயையும் வயக்காட்டையும் கொடிக்காலையும் ஜாதிபேதம் பாராமல் முறை வைத்து மராமத்து செய்துவிட்டுத்தான் மற்ற அவரவரின் தொழிலுக்கு செல்லும் ஒற்றுமை என்னைக் கனாக்காண வைத்துவிட்டது.
உருளைக்குடி கிராமத்து சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மனிதர்களையும் சத்தியம் தவறாத ஊர்க்குடும்பனின் தீர்ப்பையும் கேள்விப்பட்டு எட்டையபுரம் மன்னரே வியந்து போகிறார். அங்கு உலா வந்து உருளைக்குடி கிராமத்து மனிதர்களின் மனத்தில் இடம்பிடித்த, மலடி எனப்பேரெடுத்து அப்பெயர் வைத்தவர்களின் தாகத்தையே தன் குழந்தைகளாய் எண்ணி வளர்த்த எருமைகளின் பாலினால் மோரினால் தீர்த்த தொப்புளாயியாகட்டும் அழியாத ஓவியங்கள்.
எட்டையபுரம் அரண்மனையே வியந்த, கிராம அதிகார காலத்திலும் அதற்கு பிறகு அதன் நீட்சியாக தொடர்ந்த பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் சுதந்திரம் பெற்ற அன்றிலிருந்தே கிடைக்கக்கூடாதவர்கள் கையில் அதிகாரம் கிடைத்து அதனால் உருளைக்குடி கிராமத்துக்கு அதன் கதாநாயகியாய் நீராதாரமாய் வீற்றிருந்த நிறைசூலியான கண்மாய்க்கு நேரவிருக்கும் ஆபத்தைக் காணச்சகியாமல் , அதை எடுத்துச்சொல்லியும் கேளாமல், பணத்திற்கும் அதிகாரத்திற்கும் வெளித்தோற்ற பளபளப்பிற்கும் மகுடிக்கு சர்ப்பங்களாய் மயங்கி இலவசங்களுக்கு ஆசைப்பட்டு , நாட்டுக் கருவேலமரங்களையும் கண்மாயைக் காப்பாற்றும் சங்கஞ்செடிப்புதர்களையும் வேரோடு கருவறுக்கப்போகிறது என்ற விவரமறியாமல் இலவசமாய் அரசாங்கம் தரும் சீமைக்கருவேல மரவிதைகளையும் ஆரா, உளுவை, கெண்டை, பாம்புக்கெண்டை, கூனக்கெண்டை, அயிரை, கெளுறு, கொரவை, விலாங்கு, விரால், ஊளி, தேழி போன்ற நாட்டு மீன்களையே கருவறுத்து கண்மாயையே பாழாக்கப்போகிறது என்ற விவரமறியாமல் வரிசையில் முண்டியடித்து நின்று சிலேபிக் குஞ்சுமீன்களையும் வாங்கிவரும் தன் ஆட்டுமந்தை கிராம மக்களைப் பார்த்து கண்ணீர்விட்டு அந்தக் கிராமத்தில் அதற்குமேலும் வாழப் பிடிக்காமல் உயிருடன் இருக்கும்போதே தனக்கென சமாதி கட்டிக்கொள்கிறார் குப்பாண்டி பண்டாரம்.
தொழில் கற்றுக்கொள்வதற்காக பொய்கூறி மனசாட்சி உறுத்தலோடே மறைந்து போய் வயக்காடுகளுக்கு காவல்தெய்வமாகிப்போன மகாலிங்கம்பிள்ளை. கண்மாயில் அடைப்பு ஏற்பட்டு நீர்வெளியேறாமல் போய்விட தன் உயிரைக் கொடுத்து அடைப்பை எடுத்துவிட்டு கண்மாய்க்கு காவல்தெய்வமாகிப் போன மடைக்குடும்பன். அத்தனை கதாபாத்திரங்கள் இறந்தாலும் அவர்களின் மனங்கள் என்றும் அழியாமல் வாழும். இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதையும் பதறச்செய்யும்.
மகாராஜா தொட்டுக்கொடுத்த கடப்பாரையையும் மண்வெட்டியையும் அய்யனார் முன் நீர்ப்பாய்ச்சி புலம்பியபடியே ஒப்படைக்கும்போது என் கண்களும் கலங்கிவிட்டன.
மழை எப்போது வரும் அதற்கான அறிகுறிகள் என்னென்ன என வானைப் பார்த்து தூக்கணாங்குருவிக்கூட்டைப் பார்த்து ஆட்டுமந்தையைப் பார்த்து சர்வசாதாரணமாக சரியாக முத்துவீரன் அண்ணன் சொல்வதும் கிழமையை வைத்து பௌர்ணமியை கணக்கிடுவதும் ஏன் மாடப்புறா அரைகுறையாய்க் கூடுகட்டுகிறது என்றும் காகம் ஏன் குயிலின் முட்டையையும் சேர்த்து அடைகாத்து குஞ்சு பொரித்து வளர்த்து பின் விரட்டிவிடுகிறது என்றும் வேலைபார்த்துக்கொண்டே இயல்பான அவர்களின் பேச்சுக்களினூடாக நகைச்சுவையான கதைகளினூடாக கிராம பெரியவர்களின் வாழ்க்கையோடிணைந்த அனுபவங்களை தேடியலைந்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு மிக சுவாரஸ்யமாக இந்நாவலில் தர்மன் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.
ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது என்பது பழைய திரைப்படங்களில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொலவடை. உருளைக்குடி கிராமத்தில் ஆசாரிப்பட்டறை, குயவன் வீட்டு முற்றம், பனைமரத்தடி நிழல், ஆலமரத்தடி என எங்கு இரண்டு மூன்று பேர் அஞ்ஞைகளாகட்டும் அய்யாக்களாகட்டும் எளவட்டங்களாகட்டும் தொழில் சம்பந்தமாகவோ ஓய்வெடுக்கவோ கூடிவிட்டால் அங்கு நடக்கும் குலுங்கிக்குலுங்கிச் சிரிக்க வைக்கும் சிரிப்பாணிப்பேச்சுகளாகட்டும் உருளைக்குடி கிராமத்து பிரியமான வேகாரிகளான மொன்னையன், மூக்கன், கூனன், சப்பான் அடிக்கும் கூத்துகளாகட்டும் சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது.
இந்நாவலில் வரும் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியே சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் ஆசிரியர் சோ.தர்மனின் மொழிநடையில் வாசித்து ஒவ்வொருவரும் பரவசமடையவேண்டும். எனவே அதை நான் இங்கு சொல்லப் போவதில்லை. ஆனால் இத்தனை பரவசங்களினூடேயும் குதூகலங்களினூடேயும் ஆசிரியர் இன்றைய நாட்டுநடப்பைப் பற்றிய தகவல்களை என் கண்முன்னே நிறுத்துகையில் அனைத்தும் கைமீறிப்போய்விட்டனவோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. தன் தூத்துக்குடி மாவட்டத்தின் கோயில்பட்டி கிராமத்தைப் பதிவு செய்திருக்கும் அவர் அதன் அருகில் உருளைக்குடி கிராமம் போன்று எத்தனையோ கிராமங்கள் நீராதாரத்தை சொந்த சுகவாழ்க்கையின்மேல் மோகங்கொண்டு சென்னாத்துரை மூக்காண்டி போன்ற வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி மனிதர்களால் அழிக்கப்படுவது தெரிந்தும் வாளாவிருந்து வாய்மூடிக்கொண்டு அதிகாரத்துக்குப் பயந்து கொண்டு விலகி நடக்கும் மனிதர்களையும் பற்றி்யும் துணிச்சலாகப் பேசுகிறார். இது ஒன்றே எனக்கு கடைசி நேர நம்பிக்கையைத் தருகிறது.
இந்த நூல் கண்டிப்பாக ஒவ்வொரு குடிமகனும் தமிழ் வாசிக்கத் தெரிந்த அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோம் இந்நிலைக்கு எவ்வாறு தள்ளப்பட்டோம் என அரண்மனைக்கால மன்னர்கள் காலத்திலிருந்து இன்றைய மத்திய சர்க்கார் ஆதிக்கக்காலம் வரை மக்களோடு மக்களாக இழைந்து பண்பாடு, கலாச்சாரம், தெய்வ நம்பிக்கை, பேய், முனி, குறி கேட்டு நடப்பது, காவு வாங்குதல், புதையலைக் கண்டுபிடிப்பது, மூடநம்பிக்கை, சித்து வேலைகள், செய்த பாவத்திற்கு எவ்வாறு பரிகாரம் செய்வது என பல தளங்களுக்கும் நம்மைக் கொண்டு போவது இந்நாவலின் சிறப்பு.
நிச்சயமாக என்னைப்போல இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரையும் நீர்வளம், கனிமவளம், வனவளம் பற்றி சிந்திக்க வைக்கும். அதற்கு எதிராகச் செயல்படும், சாமானிய மக்களின் உரிமைகளைச் சுரண்டும், கரைவேட்டி மனிதருக்கு எதிராக தைரியமாகக் குரலெடுக்கவும் வைக்கும்
அன்புடன்
கிறிஸ்டி.
சோ.தர்மன்
இரு படைப்பாளிகள்
சோ.தர்மன் பேட்டி
சோ.தர்மன் நாவல் முன்னோட்டம்
அடமானம் சொ தருமன் ஒரு சிறுகதை
சோ. தர்மனின் “கூகை”