ஊட்டி சந்திப்பு -நன்றிகள்

IMG-20170430-WA0013

ஊட்டி குருநித்யா காவிய அரங்கு சென்ற ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆம் தேதி நடந்துமுடிந்தது. இம்முறை முக்கால்வாசிப்பேர் புதியவர்கள். சென்ற புதியவாசகர் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள். வழக்கமான நண்பர்கள் அனைவரும் உண்டு. இம்முறை 80 பேர் கலந்துகொண்டார்கள். ஊட்டி குருகுல நூலக அறையில் போதிய இடமிருக்குமா என நிர்மால்யா சந்தேகப்பட்டார். நூலக அடுக்குகளை இடம் மாற்றியபோது இடம் மீந்தது. நாளுக்கு 15000 ரூ வாடகையில் அருகே ஒரு பங்களாவை பார்த்தோம். அங்கே இருபத்தைந்துபேர் தங்கினார்கள். ஆகவே இதுவரை நிகழ்ந்தவற்றிலேயே பெரியதாக இச்சந்திப்பு அமைந்தது.

ஊட்டியில் நல்ல பருவநிலை. தமிழகத்தில் ஊட்டி தவிர அனைத்து கோடைத்தங்குமிடங்களிலும் அனல் பறக்கிறது என்றார்கள். ஊட்டியிலேயே வழக்கமான குளிர் இல்லை. ஒற்றைக் கம்பிளியுடன் தூங்கமுடிந்தது. முந்தையநாளே இருபதுபேர் வரை சென்று குருகுலத்தில் தங்கியிருந்தனர். மறுநாள் காலை 8 மணிக்கு நான் செல்லும்போது நான் தான் கடைசி விருந்தினர்.

நிர்மால்யா

நாஞ்சில்நாடனின் கம்பராமாயண அரங்கு வழக்கம்போல. இம்முறை இரு அமர்வுகளிலாக சுந்தர காண்டம். தேவதேவன், க.மோகனரங்கன், கே.ஜே.அசோக்குமார் போன்ற எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். இம்முறை சந்திப்பின் சிறப்பு விருந்தினர் சு.சுவாமிநாதன். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தியின் தம்பி அவர்.  இந்தியச் கலைமரபு, இந்தியச் சிற்பக்கலை, இந்திய சிந்தனைமுறை குறித்து மூன்று அமர்வுகளை அவர் நடத்தினார். காணொளியுடன்

முதல் அரங்கு அசோகமித்திரனுக்கான அஞ்சலி. அசோகமித்திரன் பற்றி க.மோகனரங்கன் பேசினார். தொடர்ந்து வழக்கம்போல சிறுகதை, கவிதை அரங்குகள். பிரசாத் பருவமழையைப் பின்தொடர்தல் குறித்த பயணக்கட்டுரை ஒன்றை பற்றி பேசினார். சுரேஷ் பாபு ஸேப்பியன்ஸ் என்னும் நூலை அறிமுகம்செய்து பேசினார். எல்லா அரங்குகளுமே உற்சாகமான உரையாடல்களுடன் அமைந்திருந்தன

IMG-20170501-WA0003
விஷால்ராஜா பேசுகிறார்

 

சென்னை கலாக்‌ஷேத்ரா இசைமாணவர் ஜெயக்குமாரின் பாடல்களுடன் அமர்வுகள் ஆரம்பித்தன. இரவில் அவர் இரு முழுஇசைக்கச்சேரிகளையே நடத்தினார்.  வழக்கம்போல காலை மாலை நடைகள். அரட்டைகள்பேரா.சு.சுவாமிநாதன் நாஞ்சில்நாடன், தேவதேவன், க.மோகனரங்கன், ஆகியோருக்கு நன்றி

1994 முதல் சென்ற இருபதாண்டுகளாக ஊட்டியில் இச்சந்திப்பு நிகழ்கிறது. உண்மையில் இத்தனை ஆண்டுகளாக இதை நடத்துபவர் ஒரு தனிமனிதர். நிர்மால்யா. என் நண்பர்கள் பலநூறுபேர். நான் என் நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் உயிர்நண்பர்கள் என்று, ஒவ்வொரு தருணத்திலும் உணர்வெழுச்சியுடன் மட்டுமே நினைத்துக்கொள்பவர்கள் என்று, சிலரையே சொல்லமுடியும். நிர்மால்யா அவர்களில் ஒருவர்.

இத்தனை ஆண்டுகளில் நாங்கள் பேசிக்கொண்டது குறைவு. ஆனால் எப்போதும் அணுக்கமாக இருந்துகொண்டிருக்கிறோம். இத்தனைபெரிய நிகழ்வை ஒற்றைநபராக நிர்மால்யா ஒருங்கிணைத்து நடத்தி முடித்தார். ஒருவாரகாலமாக அவர் இதற்காக அரும்பாடுபட்டிருக்கிறார். நிர்மால்யாவின் தனிப்பட்ட சாதனை என்று அவரது மொழியாக்கங்களுடன் [அதற்காக அவர் சாகித்ய அக்காதமி விருது வென்றிருக்கிறார்] இந்த சந்திப்பு நிகழ்ச்சிகளையும் சொல்வேன்.

nirmalyaa

தமிழில் இத்தனை நீண்ட ஆண்டுகள் இத்தனை அர்ப்பணிப்புடன் இலக்கியத்திற்காக பின்னணியில் நின்று உழைத்தவர்கள் என மிகச்சிலரையே சொல்லமுடியும். இலக்கியவீதி இனியவன், காஞ்சீபுரம் வெ.நாராயணன் போல.

இந்நிகழ்ச்சியை வீட்டுக்குவந்து தொகுத்துக்கொள்கையில் நிர்மால்யாவுக்கு நானும் நண்பர்களும் தமிழிலக்கியமும் எவ்வளவு கடன்பட்டுள்ள்ளோம் என நினைத்துக்கொண்டேன். நன்றி சொல்வது சற்று விலகிச்செல்வதுபோல. அவரை மீண்டும் நெஞ்சுடன் அணைத்துக்கொள்கிறேன்.

நிர்மால்யாவுக்கு விருது

 

முந்தைய கட்டுரைஷண்முகவேல் -ஒரு திருட்டு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–92